நூல் : அச்சம் தவிர்!
நூல் ஆசிரியர் :
முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி.

ச்சம் தவிர்! மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின் வைர வரி.  இந்த வரியின்  தலைப்பில்  மாணவர்களின் அச்சம் போக்கும் விதமாக முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் வடித்துள்ள அற்புத நூல்.

“எந்த ஒரு பணியையும் கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு செய்தால் இனிமையாக இருக்கும் என்பாரகள்.  அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக எளிமையாக நன்கு விளக்கி உள்ளார்கள்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த நூலை பாட நூலாக வைக்கலாம்.  பல மாணவர்கள் பதட்டம், பயம் காரணமாகவே தேர்வில் தோல்வி அடைகின்றனர். தோல்வியின் காரணமாக தற்கொலையும் செய்து வருகின்றனர்.  தேர்வு முடிவு வந்த மறுநாளில் தற்கொலைச் செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.  அதற்கு முடிவு கட்ட உதவிடும் நல்ல நூல்.

கல்வி ஆண்டு தொடக்கத்தில் இருந்து தினந்தோறும் திட்டமிட்டு படித்து வந்தால், அன்றைய பாடத்தை அன்றே படித்து முடித்தால், எதையும் புரிந்து படித்தால் தேர்வில் வெல்லலாம் என்ற யுத்தியை பல்வேறு நிகழ்வுகள், சிறிய கதைகள் மூலம் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக எழுதி உள்ளார்.

இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் பயன்படும்.  ஏன் பெற்றோர்களுக்கும் பயன்படும்.  கல்வி பற்றிய புரிதலை எல்லோருக்கும் உண்டாக்கும் உன்னத நூல். 

“நிறைய மாணவர்கள் நன்றாகப் படித்தாலும் அச்சம் ஏற்படுகிற போது படித்தவற்றை மறந்து சாலையின் நடுவே நின்று விடும் வாகனமாய் தேர்வு அறையில் தடுமாறி விடுகிறார்கள்.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பது முற்றிலும் உண்மை.  நன்கு படித்து இருந்தும் பதட்டம், பயம், மறதி காரணமாக தோல்வி அடைந்த வரலாறுகளும் உண்டு.  இந்த நூலின் தலைப்பிற்கு ஏற்றபடி மாணவர்களின் தேர்வு அச்சம் நீக்கும் தவிர்க்கும் நூல்.

முத்தான முப்பது மாணவர்கள் என்று தேர்ந்தெடுத்து திறமையான ஆசிரியர்கள் மூவரை தேர்ந்தெடுத்து ஒப்படைக்கின்றனர்.  அவர்கள் கடுமையாக நன்கு உழைக்கின்றனர். மாநில முதல் மதிப்பெண்களும் பெறுகின்றனர்.  பெற்ற பின்பு சொல்கிறார்கள், குலுக்குச்சீட்டு போட்டு தேர்ந்தெடுத்த மாணவர்கள், ஆசிரியர்கள் தான் நீங்கள் என்கிறீர்கள். ஆக திறமையானவர்கள் என்ற நேர்முக சிந்தனையே அவர்கள் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு முயன்றால் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என்பது உண்மை.

சேவகன், எஜமான் சண்டையில் சேவகன் முயன்று எஜமானை வென்ற கதை நன்று.  இப்படி சிறு சிறு கதைகள் மூலம் மாணவர்கள் சிந்தையில் நம்பிக்கை நாற்றை நடவு செய்து, திறமை, ஆற்றல் விளைவிக்கும் வித்தை பயிற்றுவிக்கும் நூல்.  புரியாமல் எதையும் மனப்பாடம் செய்வது விடுத்து, எதையும் நன்கு புரிந்து படித்தால் மனதில் பதியும்.  ‘காட்சிப்படுத்தி படிக்கத் தொடங்கினால் மறதிக்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்தி உள்ளார்.

“கடைசி நேரத் தயாரிப்பு பயத்தையே ஏற்படுத்தும், அவசர அவசரமாகப் படிப்பது அச்சத்தையும், அதன் விளைவாக மறதியையும் ஏற்படுத்தும்.

மாணவர்களுக்குப் பயன்படும் வைர வரிகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன.

ஆங்கிலம் என்றால் அச்சம் கொள்ளும் மாணவர்கள் இன்றும் பலர் உள்ளனர்.  அவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்பது எப்படி என்ற வழிமுறைகள் நூலில் உள்ளன. 

ஆங்கிலத்தில் செய்தித்தாள் வாசித்தல், ஆங்கிலத்திலேயே சிந்தித்து பழகுதல், ஆங்கிலத்தில் வாசித்தல், ஆங்கில உரைகளைக் கேட்டல், அடுத்தவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுதல் இவற்றை நடைமுறைப்படுத்தினால் ஆங்கில மொழி என்பது எளிதாக வரும் என்ற உண்மையை நன்கு உணர்த்தி உள்ளார், பாராட்டுகள்.
   

நேர மேலாண்மை குறித்து நன்கு விளக்கி உள்ளார். நீண்ட நேரம், குறைந்த நேரம், முடிவு நேரம் என பிரித்து எப்படி படிக்க வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார்.
 

1.  அன்றைய பாடங்களை வகுப்பில் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வது.

2.  வகுப்பில் நடந்த பாடங்களை அன்றே படித்து நீண்ட கால நினைவாற்றலுக்குக் கொண்டு செல்வது.

3.  இதுவரை நடந்த பாடங்களையும் திருப்புவதற்கு அட்டவணையைத் தயாரித்து அதற்கேற்றவாறு அனுசரணையாக நம் படிப்பு முறையை அமைத்துக் கொள்வது.

  
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சக மாணவனுடன் பேசுவது, அரட்டை அடிப்பது விடுத்து கூர்ந்து கவனித்து வந்தால், பாடம் மனதில் நன்கு பதியும் என்பது முற்றிலும் உண்மை.
  


என் வாழ்விலும் நடந்தது, நான் 10ம் வகுப்பு படிக்கும் போது அதிக சேட்டை, வகுப்பை கவனிப்பது இல்லை.
  விளைவு தேர்வில் தோல்வி, பின்னர் 10ம் வகுப்பு வெற்றி பெற்று, மேல்நிலை இரண்டு ஆண்டுகள் வகுப்பில் கவனித்து வந்தேன்.  மேல்நிலையில் 857 மதிப்பெண்கள் பெற்றேன்.  அப்படி இருந்த நான், இப்படி ஆனதற்குக் காரணம் வகுப்பறையில் நன்கு கவனித்தது தான்.
  

எப்போதும் படிப்பு, படிப்பு என்று படித்து உடலை வருத்திக் கொள்வதும் தவறு. நோய்ப்பட நேரிடும், தேர்விற்கு செல்ல முடியாத நிலை வரும்.
  எனவே, அவ்வப்போது ஓய்வும் மன மகிழ்ச்சி தரும், இசை கேட்டல், விரும்பிய செயல்களிலும் ஈடுபட்டு, திட்டமிட்டு நேர நிர்வாகம் செய்து, படிப்பதற்கும் நேரம் ஒதுக்கி படித்தால் வெற்றி  பெறலாம் என்பதை நூல் முழுவதும் நன்கு விளக்கி உள்ளார்.   நூலிலிருந்து சில துளிகள் இதோ!.
  

“குறுகிய காலமே நேரமிருந்தாலும், நாம் தொடர்ந்து படிப்பது பயன் தராது. நம் அட்டவணையில் ஓய்வெடுக்கவும், நம்மைத் தளர்த்திக் கொள்ளவும் நேரம் ஒதுக்குவது அவசியம்
.
  

மாணவர்களின் மனம் பற்றி விளக்கி எப்படி மனதில் நினைவாற்றலை பதிக்கும் வண்ணம் படிப்பது என்பது போன்ற யுத்திகள் உள்ளன.


“நம்மிடம் மேல்மனம், ஆழ்மனம் என்ற இரண்டு இருக்கிறது. மேல்மனம் என்பது பனிமலையின் நுனி மட்டுமே.
  ஆழ்மனம், மேல்மனம் போலப் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.  நாம் படிப்பவற்றை ஆழ்மனத்திற்கு அனுப்புவது தான் நீண்டகால நினைவாற்றல்.  அழ்மனதிற்கு அனுப்புவது ஒருபோதும் மறக்காது.

உண்மை தான்.  இந்த நூலினை நாம் பலமுறை வாசித்து, எனது ஆழ்மனதில் பதித்துக் கொண்டேன்.  இனி இந்த நூலில் உள்ள கருத்தை மாணவர்களுக்கு என்னால் எடுத்து இயம்பும் அளவிற்கு என் அழ்மனதில் பதிந்தது இந்த நூல்.


நூல்: அச்சம் தவிர்!
நூல் ஆசிரியர்: முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.
பப்ளிகேஷன்ஸ்
: ஸ்ரீ துர்கா பப்ளிகேஷன்ஸ், 22, எம்.ஜே,பி. தெரு, திருவல்லிக்கேணி, சென்னை  600 005. 
பக்கம் 82,

விலை ரூ.60