நூல் :
அயலகக் கவிதைக்
குயில்கள்
நூல் ஆசிரியர் :
தமிழ்த் தேனீ முனைவர்
பேராசிரியர் இரா.மோகன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி.
புலம்
பெயர்ந்தவர்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம். அதன் வெளிப்பாடு அவர்களது
படைப்புகளிலும் வெளிப்படும். நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பார்கள் அதுபோல தமிழகம் விடுத்து பிற இடங்களில் வாழும் போது தமிழின்
அருமை, பெருமை உணர்ந்து அற்புதமாக படைத்து வரும் அயலகக் கவிதைக்
குயில்கள் சிங்கப்பூரில் 7 கவிஞர்கள், மலேசியாவில் 2 கவிஞர்கள், இலங்கை
2 கவிஞர்கள், கனடா 1 கவிஞர், ஆஸ்திரேலியா 1 கவிஞர், சவூதிஅரேபியா 1
கவிஞர், இங்கிலாந்து 1 கவிஞர் என்று மொத்தம் 14 கவிஞர்களின்
படைப்-பாற்றலை எடுத்து இயம்பி உள்ள நூல். சர்வதேச படைப்பாளிகளின்
படைப்பாற்றலை உயர்த்தி பிடித்துள்ள நூல்.
மறைந்த எழுத்தாளர்
வல்லிக்கண்ணன் அவர்கள் சொல்வார்கள் விமர்சனம் என்பது மயிலிறகால்
வருடுவது போல இருக்க வேண்டும்.படைப்பாளியை குத்தி, கிழித்து
காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. அவரது இலக்கணத்திற்கேற்பவே நூல்
ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், அன்னப்பறவை தண்ணீர்
விடுத்து, பால் அருந்துவது போல, அல்லவை விடுத்து, நல்லவை மட்டுமே
எடுத்து மேற்கோள் காட்டி படைப்பாளியைப் பாராட்டி வரும் திறனாய்வாளர்
ஆவர்.
கனடா டொரண்டோ பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் முனைவர்
சு.பசுபதி அவர்களின் அணிந்துரை அழகுரை. அவருடைய அணிந்துரையில் இருந்து
சிறு துளிகள் இதோ.
"சிறுவயதில் மேஜிக் நிபுணர் ஒரு கருப்புத் தொப்பியைத் தம்
மந்திரக்கோலால் தட்டிப் புறாக்களை வெளியில் கொணர்வதைப்
பார்த்திருக்கிறேன். இங்கோ, மோகன் தம் தமிழ்ப்புலமை மந்திரக்கோலால்
வெள்ளை தாள்களிலிருந்து கவிதைக் குயில்களைப் பறக்க விடுகிறார்.
அந்தக்குயில்களும், நம் மன அரங்கிலேயே சுழன்று சுழன்று குயில் பாட்டுகள்
பாடுகின்றன ".
14 கவிஞர்களின் கவிதைகளை அலசி ஆராய்ந்து மேற்கோள் காட்டி பாராட்டி
வடித்துள்ள பெட்டகம் இந்நூல். வானதி பதிப்பகம் நூலை மிகத்தரமாக
அச்சிட்டுள்ளனர். அட்டைப்பட வடிவமைப்பு நூல் கட்டமைப்பு யாவும் மிக
நேரத்தியாக உள்ளன. 260 பக்கங்கள் கொண்ட நூல் விலை ரூ 150 தான். விலையும்
குறைவுதான்.
சுத்தத்திற்கு பெயர் பெற்ற சிங்கப்பூர் சிங்கார சிங்கப்பூர். அங்கே
ஆட்சி மொழியாக இருப்பது அன்னைத்தமிழ். அதனை உணர்த்திடும் வண்ணம்
சிங்கப்பூர் தேசியக் கவிஞர் அமலதாசன் எழுதிய வைர வரிகளை நூலாசிரியர்
தமிழ்த்தேனீ அழகுற மேற்கோள் காட்டி உள்ளார்கள்.
கவிஞர் போற்றும் சிங்கைத் திருநாட்டின் மாண்பு !
சிறியது தான் சிங்கப்பூர்!
கீர்த்தியிலோ மிகப் பெரியதோ!
அரியணையில் தமிழையுமே!
அமர்த்திய நன்னோடு இதுவே!
தமிழர் தலைவர் தமிழ்வேள்!
நூல் ஆசிரியர் இரா. மோகன் அவர்கள் தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு
முற்றிலும் பொருத்தமானவர். உலகளாவிய கவிஞர்களின் படைப்புகளைத்
தேடிப்பிடித்து, வாங்கிப் படித்து, திறனாய்வு செய்து அறியாத பல
கவிஞர்களையும், இலக்கிய உலகம் அறியுடன் வண்ணம் உயர்த்திப் பிடிக்கும்
நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
புகழ் பெற்ற வரிகளோடு ஒரு வரியை மாற்றிப் போட்டால் வாசகர் மனதில் நன்கு
பதியும். கவிஞர் ஆண்டியப்பன் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
வரிகளோடு மாற்றி எழுதிய யுத்தி நன்று.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் இந்தச்
சிங்கப்பூர்,
உப்பு நீரின் நடுவில் மிதக்கும் உயர்தர வைரம் சிங்கப்பூர்
செப்பிடு வித்தை செய்யாமலேயே சிறப்புடன் வாழும் சிங்கப்பூர்."
சிங்கப்பூர் நகரை திரைப்படத்தில் பார்த்து இருக்கிறோம். சிலர் நேரிலும்
பார்த்து இருப்பர். நம் மனக்கண்முன் சிங்கப்பூரை கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றனர்.
உணர்ச்சிக் கவிஞர் என்ற அடைமொழிக்கும் சொந்தக்கார்ர் கவிஞர் காசி
ஆனந்தன். அவரது கவிதைகளில் உள்ளபடியே தமிழ் உணர்ச்சி இருக்கும், வீரம்
இருக்கும், தமிழ்ப்பற்று இருக்கும். அவற்றை மேற்கோள் காட்டி எழுதிய
கட்டுரை மிக நன்று. வல்லிக்கண்ணன் அவர்களின் மேற்கோளுடன் கட்டுரையைத்
தொடங்கியது சிறப்பு.
“கவிஞரின் நறுக்குகள் பேருண்மைகளை உள்ளடக்கிய குறள் வடிவங்களாக
ஒளிர்கின்றன. வல்லிக் கண்ணன் !
ஒரு சில கவிஞர்கள் கவிதையைப் படித்து விட்டு அழகியல் இல்லை என்று
அலுத்துக் கொள்வதுண்டு அவர்களுக்கான விடையை காசி ஆனந்தன் எழுதி உள்ளார்.
பாருங்கள்.
"களத்தில் நிற்கிறேன்!
என் இலக்கியத்தில்
அழகில்லை என்கிறார்.
தோரணம் கட்டும்
தொழிலோ எனக்கு!
வானில் அழகு தேடாதே
கூர்மை பார்." ( ப. 17 ).
இன்றைக்கு பல எழுத்தாளர்கள் மேற்கோள் காட்டும் போது எழுதியது யார் என்று
எழுதாமலே, தான் எழுதுவது போல எழுதி விடுகின்றனர். பேச்சாளர்களும் தன்
கருத்து போல, பேசியும் விடுகின்றனர். ஆனால் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ
இரா. மோகன் அவர்கள் எழுதும் போதும், பேசும்போதும் படைத்த படைப்பாளியின்
பெயரை மறக்காமல் குறிப்பிடுவார் .அறிவுநாணயம் உள்ளவர்.ஒரு கட்டுரை
எழுதும் போது, நூலின் பெயர், ஆசிரியர், மட்டுமல்ல பக்க எண் வரை
நுட்பமாக பதிவு செய்யும் மாமனிதர். பாராட்டுகள்.
உலகமெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டாடும் கவிஞர் வி.கந்தவனம். இவரது
கவிதைகள் பற்றி இலண்டனில் உள்ள எனது இனிய நண்பர் அய்யா பொன் பாலசுந்தரம்
அவர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன் .இந்த நூல் படித்ததும் அவரது
கவித்திறன் பற்றி நன்கு அறிய முடிந்தது.
"கனடா நாட்டின் முதுபெருங்கவிஞர் வி.கந்தவனம் இளமை மாறா
இலக்கியப்படைப்பாளி தமிழன் எழுதுகோலானவர்."
(மறவன்புலவு சச்சிதானந்தன். )
ஒரு கட்டுரை எழுதும் போது எந்தக் கவிஞர் பற்றி பிற அறிஞர்கள் எழுதிய
மேற்கோளோடு தொடங்கும் நல்ல யுத்திக்கு பாராட்டுகள்.
"அமுது எங்கே சுவை அங்கே!
சுவை எங்கே தமிழ் அங்கே!
தமிழ் எங்கே நான்அங்கே!
நான் எங்கே தமிழ் அங்கே! "
தமிழ் இருக்கும் இடமெல்லாம் நான் இருப்பேன்.என்று தமிழ்ப் பற்றோடு
எழுதிய கவிதை வரிகளோடு கட்டுரை தொடக்கம் நன்று.
திரைப்பட நடிகர் எனது முகநூல் நண்பர் ஆடுகளம் படத்தில் தனி முத்திரைப்
பதித்த நடிகர் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் பற்றிய கட்டுரை மிக நன்று. அவரது
கவிதை ஒன்று.
"எல்லைகள் நூறு தாண்டினாலும்
என்னைச் சூழ எரிகிறதே யாழ் நூலகம்." ( ப. 82 )
ஆம் யாழ் நூலக எரிப்பை இன்று நினைத்தாலும் மனதில் கோபக்கனல் வருவது
உண்மைதான். காட்டுமிராண்டி சிங்களரின் கொடிய செயல். மன்னிக்க முடியாத,
மறக்க முடியாத குற்றம். நெஞ்சில் வடுவாக என்றும் இருக்கும் .
சவுதி அரேபியாவில் வாழும் இனிய முகநூல் தோழி விஜயலெட்சுமி மாசிலமணி
பற்றிய கட்டுரை மிகநன்று .சமீபத்தில் தமிழகம் மதுரை வந்து சென்றார்கள்
.தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .
"இனியொரு விதி செய்!
உன்னுள் உன்னைத் தேடு
தேடலில் விடியல் மலரும்!"
எனப் பெண்ணினம் விழித்தெழவும் வழிகாட்டுகின்றார். அவரது கவித்திறனும்
உலகறிய வைத்துள்ளார். நூல் ஆசிரியர்.
இனிய நண்பர் புதுயுகன். இவர் இங்கிலாந்தில் உள்ள கல்லூரியில்
கல்வித்துறைத் தலைவராக விளங்கி வருபவர். என்னுடைய புத்தகம் போற்றுதும்
நூலிற்கும் ,நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா.மோகன் அவர்களின் நூலிற்கும்
அணிந்துரை எழுதியவர். அவரைப்பற்றிய கட்டுரையும் நன்று. சாகித்ய அகாடமி
விருதாளர் கவிஞர் சிற்பி அவர்களின் மேற்கோளோடு தொடங்கி உள்ளார்.
"நிலவில் குளித்து எழுந்தது போலவே!
நிலவும் இன்ப நினைவே கவிதை !"
இந்த இரண்டு வரிகள் போதும் கவிதையின் சிறப்பை நன்கு உணர்த்துகிறார்.
“கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்” நூலிற்கு நான் இணையத்தில் எழுதிய
மதிப்புரை சுருக்கமும் நூலில் இடம் பெற்றுள்ளது. கண்டு மனம் மகிழ்ந்தேன்.
இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் கவிதை உறவு இதழில் படித்து இருந்த போதும்
மொத்தமாக நூலாகப் படிக்கும் போது சுவையாக இருந்தது இலக்கிய விருந்தாக
இருந்தது. பாராட்டுகள்.
நூல் ஆசிரியர்: தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன்
சங்க இலக்கியம் தொடங்கி சம கால இலக்கியம் மட்டுமல்ல, பிரபல வார இதழ்கள்
வரை படித்து தன்னை புதுப்பித்துக் கொண்டே வருவதால், அவரால் தொடர்ந்து
பல ஆய்வு நூல்களை இலக்கிய உலகிற்கு தந்து கொண்டே இருக்க முடிகின்றது.
வாசிப்பை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும், நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ
முனைவர் பேராசிரியர் இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுகள்.

வானதி பதிப்பகம்,
23 தீன தயாளு தெரு, தியாகராசர் நகர்,
சென்னை, 600 017. 044-24342810 / 24310769
பக்கங்கள்
260, விலை ரூ.150
|