நூல் :
சங்க இலக்கிய சால்பு
நூல் ஆசிரியர் :
தமிழ்த் தேனீ முனைவர்
பேராசிரியர் இரா.மோகன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி.
சங்க
இலக்கியம் எனும் பலாப்பழத்தை பதமாக உரித்து இனிக்கும் பலாச்சுளையாக
இலக்கிய விருந்து வைத்துள்ள நூலாசிரியர் முனைவர் தமிழ்த்தேனீ இரா. மோகன்
அவர்களுக்கு முதல் பாராட்டு. நூலை தரமாகவும் மிக நேர்த்தியாகவும்
அச்சிட்டு வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு அடுத்த பாராட்டு.
தமிழ்த்தேனீ இரா. மோகன் - வானதி பதிப்பகம் வெற்றி கூட்டணியில்
படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்து இலக்கிய உலகில் புதுமை செய்து
வருகின்றன. தமிழன்னைக்கு அழகு சேர்த்து வருகின்றன. நூலிலிருந்து
சிறுதுளிகள்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் (195)
உலகில் மனிதராய்ப் பிறந்த யாவரும் தம் நெஞ்சிலும் நினைவிலும்
கல்வெட்டுப் போலப் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பின்பற்றத் தக்க
பொன்னான அறிவுரை இது! "
அறநெறி கருத்துக்களின் தங்கச்சுரங்கம் சங்க இலக்கியம் அந்த தங்கங்களை
வெட்டி எடுத்து அழகிய அணிகலன்களாக வழங்கி உள்ளார். நூலில் 35 கட்டுரைகள்
உள்ளன. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என மூன்றும் முத்தாய்ப்பு.
பிறருக்கு கெடுதல் செய்து கிடப்பதே என் பணி என்று இருக்கும் தீயோருக்கு
அறிவுரை சொல்லும் அரிய கருத்துகள் நூலில் உள்ளன.
வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்வியல் நல்மந்திரங்கள் நூலில் உள்ளன. நல்லது
எண்ணி, நல்லது பேசி, நல்லது செய்து நல்லவராய் நலமாக வாழ வாழ்வியல்
யுத்திகள் சங்க இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில்
தேர்ந்தெடுத்த சில பாடல்களை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த விதம்
சிறப்பு. எல்லோருக்கும் சங்க இலக்கியம் சென்று அடைய உதவிடும் நல்ல நூல்.
தலைவனை இடித்துக் கூறும் பொழுது கூட, சொல் நாகரீகத்தினைப் பேணியவள் தோழி.
சண்டை போடும்போது கூட நாகரீகமான சொற்களையே பயன்படுத்த வேண்டுமேன்ற
கருத்தை சங்க இலக்கியம் வலியுறுத்தி உள்ளது. இன்றைய
அரசியல்வாதிகளுக்காக அன்றே கூறியது என்று தான் கூற வேண்டும்.
ஐவகை நிலங்களின் திணைப்பாட்டுகள் அனைத்தும் இலக்கிய விருந்து. நோய்
தீர்க்கும் மருந்து. இன்பம் பயக்கும் இனிய கருத்துச் சுரங்கம்.
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் சங்க இலக்கியம்
படிப்பதோடு நின்று விடுவதில்லை. சமகால இலக்கியங்களும் வாராந்திர
இதழ்களும் அனைத்தும் வாசிப்பவர்.
“ஆனந்தவிகடன் 27.04.2016 இதழில் கவிஞர் அ.நிலாதரன், நெய்தல் நிலத்தலைவி
! என்னும் தலைப்பில் படைத்துள்ள ஓர் உணர்ச்சிமிகு கவிதை இதோ,
கடலுக்குப் போன தலைவன்!
இன்னும் வீடு திரும்பவில்லை
கரைமீனாகத் தவிக்கும்!
தலைவியின் இதயத்தில் வெடிக்கிறது.
நிமிடத்திற்கு! 72 துப்பாக்கிகுண்டுகள்!
நவீன இலக்கியத்தையும் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு விளக்கும்
நுட்பத்திற்கு, திட்பத்திற்கு, திறமைக்கு பாராட்டுகள்.
வெள்ளிவீதியாரின் நற்றிணைப்பாடல் விளக்கம் மிக நன்று. தலைவியைப்
பிரிந்து வாடும் தலைவியின் நிலைமையை மிக நுட்பமாக பாடலில் வடித்த ஆற்றலை
நன்கு விளக்கி உள்ளார்.
இயந்திரமயமான உலகில் இன்றைய மனிதர்களுக்கு மனிதாபிமானம் என்பது மறந்து
வருகின்றனர். ஆனால் அன்றைக்கு தமிழர்கள் எவ்வளவு மனிதநேயத்துடன்
வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை விளக்கிடும் நல்ல நூல் இது.
“தலைவன் சிற்றுயிர்களான வண்டுகளின் இன்பத்திற்கும் இடையூறு செய்யாமல்
காத்திட எண்ணும் இரக்கமும் அருளும் உடையவன்”.
சங்க இலக்கியத்தில் உள்ள உவமைகள், வர்ணனைகள், கருத்துகள், ஒப்பீடுகள்,
குறியீடுகள் என பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து எளிமைப்படுத்தி, இனிமை
தடவி வழங்கி உள்ளார்கள்.
படிப்பதற்கு சுவையான மிக நல்ல நடை. தெளிந்த நீரோடை போன்று செல்லும் நடை.
நூலை எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் வைக்க முடியும்.
அந்த அளவிற்கு விறுவிறுப்பாக உள்ளது.
"பெண்களை காதலித்து விட்டு ஏமாற்றும் கயவர்கள் இன்று மட்டுமல்ல சங்க
காலத்திலும் இருந்து இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது. “கடுவன்
மன்னனாரின் அக நானூற்றுப் பாடலால்”. ஒன்று மட்டும் உறுதியாகின்றது.
காதலிப்பது போல் நடித்து ஓர் இளம் பெண்ணின் பெண்மை நலத்தினை
அனுபவித்துவிட்டு பின்னர் அவனை அறிவேன் என்று அறம் பிறழ்ந்து வாதிடும்
கயவர்கள் இன்று மட்டும் அல்ல, அன்றும் இருந்திருக்கிறார்கள்”.
நல்ல பல தீர்ப்புகள் வழங்கி வருபவர் நீதிபதி எஸ்.விமலா அவர்கள். எனது
நூலிற்கு மதிப்புரை நல்கியவர்கள். அவரது அருமையான தீர்ப்பை
மேற்கோள்காட்டி பொன்முடியால் பாடிய புகழ்பெற்ற கடமைப் பாடல் கட்டுரையை
வடித்து உள்ளார்கள்.
நீதிபதி எஸ். விமலா அவர்கள் வழங்கிய தீர்ப்பு “பிள்ளைகளிடம்
பராமரிப்புச் செலவு கேட்டு தாய் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்தது
துருதிருஷ்டமானது. பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்க வேண்டியது சட்டரீதியான,
அடிப்படை உரிமையாகும். இயற்கை தார்மீகம் மற்றும் மனித உரிமையும் ஆகும்.
இந்த உரிமைகளைப் பிள்ளைகள் வழங்க மறுக்க முடியாது. தர்மப்படி
பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். அந்த
கடமையில் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கில்
தாயின் கடமைகளைக் கூறும் மனுதாரர் அவரது கடமையை நினைத்துப்
பார்க்கவில்லை.
“சங்கச் சான்றோர் பொன்முடியாரே விமலா அம்மையாரின் வடிவில் நீதிமன்றம்
வந்து அருளும் அன்பும் அறமும் ஒருங்கே கொண்ட தீர்ப்பினை வழங்கி இருப்பரோ
என்று நினைக்கத் தூண்டுவது”.
இந்த வழக்கை ஒரு தாயிற்காகத் தொடுத்தவர் என் இனிய நண்பர் வழக்கறிஞர் கு
.சாமிதுரை அவர்கள்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ். விமலா அவர்கள் கூட இத்தீர்ப்பை மறந்து
இருப்பார்கள். ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள்
செய்தித்தாளில் படித்ததை நினைவில் வைத்து இருந்து மறக்காமல் சங்க
இலக்கிய பாடலோடு ஒப்பிட்டு எழுதிய கட்டுரை மிக நன்று.
குறுகத்தறித்த முல்லைப்பாட்டு கட்டுரை மிக நன்று. அதில் முடிவுரை
முத்தாய்ப்பு."ஒப்பூதனாரின் புலமைத்திறம் போற்றத்-தக்கதாகும். இது
போன்ற கட்டுக்கோப்பும் கலை நுட்பமும் பொருந்திய ஒரு புனைவினை உலக
இலக்கியக் களஞ்சியத்துள் வேறு எம்மொழியிலும் காண்பது என்பது அரிதினும்
அரிதே எனலாம்."
உண்மைதான் சங்க இலக்கிய நூல் மேன்மையை நன்கு உணர்த்தி உள்ளார்.
ஆங்கிலேயர்கள் நூறு ஆண்டு ஆன இலக்கியத்தை தலையில் வைத்து
கொண்டாடுகின்றனர். நாமோ ஆயிரமாண்டு இலக்கியங்களை அறியாமல் இருப்பது
முறையோ? சங்க இலக்கியத்தின் அருமை பெருமை உணர்த்திடும் இந்த நூல்
வாங்கிப்படியுங்கள்.
.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராசர் நகர்,
சென்னை 600 017. 216
பக்கங்கள் விலை ரூ.140.
|