நூல் : பயோமெட்ரிக் ஹைக்கூ கவிதைகள்
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி.


ல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கவிஞர் பரிமளம் சுந்தர் அவர்கள் இந்த நூலை தொகுத்து உள்ளார். அவருடன் பணியாற்றும் ஆசிரிய நண்பர்களும் மாணவிகளும் எழுதிய ஹைக்கூ கவிதைகளை நூலாக்கி உள்ளார். நல்ல முயற்சி பாராட்டுகள். சிறிய நூலாக இருந்தாலும் சீரிய நூலாக வந்துள்ளது.

முதல் ஹைக்கூ கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

அழகிய கவிதைகளையும்
அடித்து அடித்தே எழுதுகிறது
அந்த வானம்!
(பரிமளம் சுந்தர்)

ஜப்பானியக் கவிதைக்கு இணையக தமிழ்க் கவிஞர்களும் இயற்கை பற்றிய ஹைக்கூ எழுத முடியும் என்பதை மெய்ப்பிக்கும் விதமான ஹைக்கூ நன்று. வானத்தை நாம் பார்த்தால் தினமும் ஒரு மாதிரியாகவும், நேரத்திற்கு ஒரு மாதிரியாகவும் இருக்கும். நேற்று போல் இன்று இருப்பதில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உலக தத்துவத்தை உணர்த்திக் கொண்டு இருக்கும் வானம் பற்றிய ஹைக்கூ மிக நன்று பாராட்டுகள்.

கணினியுகத்தில் வளர்ச்சியை கொல் விளையாட்டாகவும் பொருள் பொதிந்த விதமாகவும் வடித்த ஹைக்கூ நன்று

விரல்விட்டு எண்ணிய காலம் போய்
விரல்களுக்குள் அடைக்கப்பட்டது
கணினி.
(மு.கீதா)

கவிதையை வித்தியாசமாக எழுதும் போது படிக்கும் வாசகர்கள் மனதில் தங்கி விடுகின்றது. பாராட்டும் பெறுகின்றது. இதோ வித்தியாசமான சிந்தனை ஹைக்கூ

பௌர்ணமி நிலவில்
ஒரு கல் வெட்டு
அவளின் முகப்பரு
(மு.பிரேமலதா)

இன்றைய நவீன உலகில் ஆண் பெண் நட்பு அவசியம். நட்பும் கண்ணியமாக இருத்தல் வேண்டும். நல்ல நட்பால் பல நல்லவைகள் சாத்தியாமாகும், சாதனையும் ஆகும். நட்பு பற்றிய ஹைக்கூ நன்று

ஆண்பால், பெண்பால்
பொதுவானது
நட்பால்.
(மு.சந்தியா)

இன்றைய இளைஞர்கள் பலர் மதுவுக்கும் சிகரட்டிற்கும் அடிமையாகி உடல் நலத்தைக் கெடுத்து, திறமையை சிதைத்து, சீரழிந்து வருகின்றனர். பெற்றோர் அறிவுரை சொன்னாலும் கேட்பது இல்லை. அவர்களுக்கான ஹைக்கூ நன்று.

புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய்
விட்டால் சிறப்பாய்!


மண்ணுக்குள் புதைக்கப்பட்ட விதை முட்டி மோதி வளர்ந்து மரமாக வளரும். இதனை முயற்சிக்கு வளர்ச்சிக்கு மனிதனும் பாடமாகக் கொள்ளலாம். குறியீடாக உணர்ர்த்துவது தான் கவிதை. அந்த வகையிலான ஹைக்கூ

விதைத்தவன்
தூங்குவான்
விதை?
 (மு.முருகேஸ்வரி)

இந்த ஹைக்கூ படித்த போது நான் எழுதிய ஹைக்கூக்கள் நினைவிற்கு வந்தது.

விழித்த
விதை
விருட்சம்!

----------
உறங்கிய
விதை
குப்பை!


விக்கல் எடுத்தால் அதற்கு விஞ்ஞானக் காரணம் வேறு. ஆனால் நம் பழக்கத்தில் யாரோ உன்னை நினைக்கிறார்கள். அதனால் தான் உனக்கு விக்கல் வருகிறது என்பார்கள். இது ஒரு மூட நம்பிக்கைதான். ஆனாலும் விக்கல் வராமலே காதலன் காதலி ஒருவரை ஒருவர் நினைப்பது இயல்பு தான்.

விக்கல் வரும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்
நீ என்னை நினைக்கிறாய் என்று
(பாண்டிமீனா)

பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் நட்பிடம் பகிர்ந்து கொள்வோம். இந்த உலகில் நட்புக்கு இணை என்பது நட்புதான். அந்த நட்பு பற்றி எளிமையான சொற்களின் மூலம் வலிமையான கருத்தை விதைக்கும் ஹைக்கூ நன்று

விண்ணுக்கு அழகு நிலவு
மண்ணுக்கு அழகு
நட்பு. 
(அருணாதேவி)

இயற்கை ரசிப்பு என்பது பலரிடம் இன்று இல்லாமலே போய் விட்டது. இயற்கையை நேரம் ஒதுக்கி ரசித்து மகிழ்ந்தால், கவலைகள் காணாமல் போகும். மனபாரம் இல்லாமல் போகும். இதயத்தை இதமாக்கும். மனதை பதமாக்கும். இயற்கையை இனியாவது ரசித்து வாழுங்கள் என அறிவுறுத்தும் ஹைக்கூ

விண்ணில் பல வண்ணங்கள்
மண்ணிலும் பல வண்ணங்கள்
நந்தவனத்தில் மலர்கள்
(மோகனப்பிரியா)

கவிஞர்கள் வழக்கமாக மானே தேனே என்று எழுதுவதை விடுத்து வித்தியாசமாக சிந்தித்து வித்தியாசமாக எழுதினால் வெற்றியே.

உன் முதல் சிரிப்பையும்
முதல் அழுகையும் ரசித்த முதல் ரசிகை
செவிலியர்!


இந்தக் கோணத்தில் இதுவரை யாரும் சிந்திக்க வில்லை என்றே சொல்லலாம். இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் சிந்தையில் சிறு மின்னலும் உதட்டில் சிறு புன்னகையும் ஏற்படும்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள், மூன்று வரிகள் இரண்டு காட்சிகள் ஒரு வியப்பு என்று ஹைக்கூ கவிதைக்கு ஒரு இலக்கணம் எழுதினார். அந்த இலக்கணப்படி அமைந்த ஹைக்கூ இதோ.

சிறுவர் பூங்கா
ஓய்வெடுக்கும்
பட்டாம் பூச்சிகள்
(மோ.ஜோதிகா)

இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் மனக்கண்ணில் அழகிய பூங்காவும் அற்புத வண்ணத்துப் பூச்சிகளும் தோன்றும் என்பது உண்மை. ஹைக்கூவிற்கு சிறப்பு தரும் இந்த நூலில் மொத்தம் 76 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. எல்லா ஹைக்கூக்களும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்.

மதிப்புரையில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. ஒரு சில ஹைக்கூக்கள், முந்தைய ஹைக்கூக்களை ஒட்டி, போலச் செய்தல் விதமாக உள்ளன. இனிவரும் காலங்களில் அவை தவிர்க்க வேண்டும்.

உதாரணம்,

அமாவாசை இரவிலும்
மொட்டை மாடியிலும் ரசிக்கிறேன்
எதிர்வீட்டு நிலவு !
(சௌமியா !)

பல வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஹைக்கூ !

அமாவாசையன்று
நிலவு
எதிர்வீட்டு சன்னலில் (
இரா. இரவி)


புதிய முயற்சிக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.




பயோமெட்ரிக் ஹைக்கூ கவிதைகள்
தமிழ்த்துறை வெளியீடு:
மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மதுரை.