நூல் :
குற்றங்களே நடைமுறைகளாய்
தொகுப்பாசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
நூலாசிரியர் ப.திருமலை அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், புகழ் பெற்ற இதழ்களில் பணிபுரிந்தவர். வணிக இதழ்களின் சமரசத்திற்கு உடன்படாமல் வெளியேறி, மனதில் பட்டதை துணிவுடன் எழுதி வரும் எழுத்தாளர். அவருடைய எழுத்தில் வலிமை உண்டு. ஆனால், ஓங்கிப் பேசாத பண்பாளர், எளிமையானவர். இனிமையானவர். பெரிய எழுத்தாளன் என்ற கர்வம் இல்லாதவர். மகாகவி பாரதியின் கோபத்துடன், அறச்சீற்றத்துடன் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் எழுதுகோலால் மவுன யுத்தம் நடத்தி வரும் தனிநபர் இராணுவம். இந்நூலுக்கு சாகித்ய அகதெமி விருதாளர் பொன்னீலன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை பொன்னாலான மகுடமாக ஒளிர்கின்றது. இனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை சிந்திக்க வைத்தது. சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல நூலை பதிப்பித்தமைக்கு பாராட்டுகள். விரைவில் பதிப்பிக்க உள்ளோம் என்பதை அலைபேசியில் முன்பே தெரிவித்து இருந்தார். நூலாசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் என்னுரையில் குறிப்பிட்டதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “நான் சார்ந்திருக்கும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் என்னால் என்ன செய்துவிட முடியும்? என்ற வினாவும் எனக்குள் எழாமல் இல்லை. அப்போதுதான் எழுத்து என்னும் ஆயுதம் என்னுள் இருப்பதை நண்பர்கள் உணர்த்தினார்கள். இந்த மண்ணும் மக்களும் பயனுற ஏதாவது எழுதியாக வேண்டும் என்ற உந்துதலே “குற்றங்களே நடைமுறைகளாய் என்னும் தலைப்பிலான இந்த நூலிலுள்ள 25கட்டுரைகள் உருவாவதற்குக் காரணமாயிற்று” தினமலர், குங்குமம், பாவையர் மலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இதழ்கள் வந்த போது கட்டுரைகளாகவே படித்து இருக்கிறேன். அலைபேசியில் அழைத்துப் பாராட்டியும் இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததும் இனிமையான அனுபவம். படித்துவிட்டு மறந்துவிடும் சராசரி நூல் அல்ல இது. படித்தால் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நூல் இது. நூல் ஆசிரியருக்குப் பாராட்டுகள். கல்வி குறித்து 6 கட்டுரைகள், குழந்தை பற்றி 3 கட்டுரைகள், பெண்கள் பற்றி 2 கட்டுரைகள், சமூகம் பற்றி 7 கட்டுரைகள், வேளாண்மை பற்றி 3 கட்டுரைகள், நீர் பற்றி 2 கட்டுரைகள், சுற்றுச்சூழல் பற்றி 2 கட்டுரைகள், மொத்தம் 25 கட்டுரைகள். தேசப்பிதா காந்தியடிகள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தினார். ஆனால் இன்று தமிழ்வழிக் கல்விக்கு மூடு விழா நடத்தி வரும் அவலத்தை விளக்கி உள்ளார். “குழந்தைகளுக்குத் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்றும், தாய்மொழி வழிக் கல்வியின் வழியாக மட்டுமே ஒரு குழந்தையின் சிந்திக்கும் திறன் சீரிய முறையில் வளர இயலும்”. முற்றிலும் உண்மை. அக்னி சிறகுகள் விரித்த, அப்துல் கலாம் தொடங்கி, இளைய கலாம் சந்திரயான் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை வரை தமிழ்வழியில் ஆரம்பக் கல்வி பயின்று வென்றார்கள் என்பதை சமுதாயம் உணர வேண்டும். தனியார் பள்ளிகளின் தரம் பற்றியும் ஒரு கட்டுரையில் விளக்கி உள்ளார். ஆங்கிலக் கல்வி மோகம் அழிந்து தாய்தமிழ்க் கல்வி பரவ வேண்டும் என்பதற்காக பல புள்ளிவிபரங்- களுடன் அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் பற்றி விளக்கியும் கட்டுரை வடித்துள்ளார். நூலாசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக எழுத மாட்டார். எழுத வேண்டிய தலைப்பு தொடர்பான புள்ளி விபரங்கள், ஆய்வு முடிவுகள், வினளவுகள், சாதனைகள், இழப்புகள் என அனைத்தையும் திரட்டி வைத்துக் கொண்டு சான்றுகளுடன் கட்டுரை வடிப்பார். படிக்கும் வாசகர்கள் மறுப்பு ஏதும் சொல்ல முடியாத அளவிற்கு கட்டுரையில் உண்மைத்தன்மை வெளிச்சமாக இருக்கும். கல்வி தொடர்பான 6 கட்டுரைகளும் கல்வித்துறைக்கு அறிவொளி விளக்கு ஏற்றும் விதமாக உள்ளது. தமிழகத்தில் அரசு நடத்த வேண்டிய கல்வித்துறை தனியாரிடமும், தனியார் நடத்த வேண்டிய மதுக்கடை அரசிடமும் இருக்கும் அவலத்தையும், தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் அளவில்லாக் கொள்ளை பற்றியும் மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார். குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணம் என்ன? ஏன் ஆகக் கூடாது எனத் தீர்வும் எழுதி உள்ளார். பிரச்சனைகளை எழுதுவதோடு நின்று விடாமல் அதற்கான தீர்வையும் எழுதுவார். அந்தத்துறை தொடர்பான வல்லுநர்களின் கருத்தை அறிந்து அதையும் மேற்கோள் காட்டி மிக நுட்பமாக ஒவ்வொரு கட்டுரையும் வடித்துள்ளார். கூர்நோக்கு இல்லங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை என்று அது பற்றிய விளக்கமான கட்டுரை உள்ளன. செய்தித்தாளைத் திறந்தால் தினமும் மாணவ, மாணவியர் தற்கொலை. அதுபற்றிய கட்டுரை விழிப்புணர்வு விதைக்கின்றது. சிறைவாசிகளின் பின்னாலும் குடும்பம் இருக்கிறது என்ற கட்டுரையில் மனிதாபிமானத்துடன் சிறையில் நடக்கும் மரணங்கள் பற்றியும் விளக்கி உள்ளார். இறந்து போன மனைவியை தோளில் தூக்கிச் சென்று இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு பற்றியும், மனித நேயமா? அப்படின்னா? கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஈழத்தமிழர்களின் சோகம் தீர்ந்தபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் வரவே இல்லை. அகதி முகாம்களில் அடையும் துன்பம் குறித்து விளக்கி உள்ளார். “ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் துவங்கினால், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குக் குறைந்த செலவில் செல்ல முடியும்” உண்மைதான் விரைவில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிட அரசுகள் முன்வர வேண்டும். சென்னையில் மழையின் காரணமாக ஏற்பட்ட பெருந்துன்பம் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. “மழை நீர் சேகரிப்பு மன்னன் இராஜராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்தில் தஞ்சையில் துவங்கியது” ஒவ்வொரு கட்டுரையிலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டி, அதற்கான தீர்வுகளையும் எடுத்து இயம்பி, படிக்கும் வாசகர் மனதில் விழிப்புணர்வை விதைத்து உள்ளார். நெஞ்சில் உரத்துடன் நேர்மை திறத்துடன் வடித்திட்ட முத்தான கட்டுரைகள். இந்நூலில் புனைவுகள், கற்பனைகள் ஏதுமில்லை. நடந்த நிகழ்வுகளை வைத்து வடிக்கப்பட்ட நூல். பாராட்டுகள். வாழ்த்துகள். வாசகன் பதிப்பகம் 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் 636 007. பேச 98429 74697. 224 பக்கங்கள் விலை ரூ. 150.
|