நூல் :  அர்த்தமுள்ள அனுபவங்கள்
நூல் ஆசிரியர் :
 தெ.ஈஸ்வரன்
நூல் அறிமுகம்:  வெலிகம ரிம்ஸா முஹம்மத்

திரு.ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.

இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது.

முயற்சி திருவினையாக்கும் (பக்கம்
19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது.

அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.

என்னைத் திருத்திய ஆசிரியர்கள் என்று அவர் தனது ஆசிரியர்கள் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆசிரியர்கள்தான் நம் வாழ்க்கையின் படிக்கட்டுக்கள். அவர்கள் போட்ட பாதையில்தான் நாம் நம் வாழ்வைக் கடந்து கொண்டிருக்கின்றோம். நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் இன்னொரு பெற்றோருக்கு ஒப்பாவார்கள். இதில் வ.இராசையா மாஸ்டர் பற்றி நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'இராசையா மாஸ்டர் பிரம்பினைத் தொட்டதில்லை. வெண் கட்டியையும் பேனாவையும் மட்டுமே அவர் கைகள் பிடித்தன. பாடம் எழுதாத போதுகூட அழப் பண்ணும் வார்த்தைகளை அவர் சொன்னதில்லை. பள்ளிப் படிப்பை முடித்து பற்பல ஆண்டுகள் கடந்த பிறகும் அவரோடு எனக்கு தொடர்பு இருந்து வந்தது. இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்நாள் முழுதும் எங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டினார்'.

நட்பு என்பது நம்மை ஆறுதல் படுத்தும் சிறந்த உறவாகும். இந்த உறவு பொய்யாகிப் போகின்ற போது வாழ்க்கையே கசந்து விடுகின்றது. உண்மையான அன்பு எப்போதும் நிலைத்திருக்கும். முகம் காணாவிட்டாலும் கூட அகத்தில் நின்று நிலைக்கும் அன்பு சக்தி மிக்கது. சில கால நட்பாக இருந்தாலும், தொடர்புகள் அறுந்துவிட்டாலும் நண்பன் எங்கே இருக்கிறானோ எப்படி இருக்கிறானோ என்று எண்ணுவதே சிறந்த நட்பு என ஈஸ்வரன் அவர்கள் தன் நண்பர்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நண்பர்களோடு கூடித் திரிந்த இளமைக்காலத்தில் ஒரு சிறுவனிடம் தான் ஏமாந்துவிட்டதான ஒரு அனுபவத்தையும் நூலாசிரியர் இதில் குறிப்பிடுகின்றார். தன் கையில் இருந்த காசை சிலர் பிடுங்கிக்கொண்டு போய்விட்டதாகக் கூறி ஒரு சிறுவன் ஈஸ்வரன் அவர்களிடம் உதவி கேட்கின்றான். இவரும் தாராள மனம் படைத்தவர் ஆதலால் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுகின்றார். நண்பர்கள் சிறுவன் அவரை ஏமாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றார்கள். நண்பர்களிடமும் அவமானம். ஒரு சிறுவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற வெட்கம் மறுபக்கம்.

இப்படியிருக்க ஈஸ்வரன் அவர்களின் தந்தையின் அழைப்பின் பேரில் ஒரு சுவிஸ் நாட்டு சாமியார் அவர்களது வீட்டுக்கு விருந்துக்கு வருகின்றார். அவரிடம் தன் மனக் கிலேசங்களை முன்வைத்த போது துறவி கூறிய கீழுள்ள அறிவுரை யாவருக்கும் பொருந்துவதாகக் காணப்படுகின்றது.

'மற்றவர்களை வெளித் தோற்றத்தைக் கொண்டு நீ போடும் கணக்கு உத்தேசமானதுதான். அதுவே முடிவு என்று சொல்லிவிட முடியாது. முதலில் செய்ய வேண்டும் என்று நினைத்தாய். உன் மனதில் கருணை சுரந்தது. இறைவன் தோன்றினான். கொடுத்தாய். அத்தோடு உன் கடமை முடிந்தது. சிறுவன் உண்மையிலேயே பணத்தைத் தொலைத்தானா? உன்னை ஏமாற்றினானா? பொய் சொன்னானா? வஞ்சித்தானா? என்று நினைத்து உன்னை நீயே குழப்பிக்கொள்ளாதே. எப்போது கொடுக்க வேண்டுமென்று தோன்றியதோ, நீ கொடுத்தாயோ அந்த எண்ணத்தையும் வினையையும் இறைவன் அறிவான். உன்னை ஆசீர்வதிப்பான். கொடுத்ததை மறந்து விடு'

முயற்சி திருவினையாக்கும், துள்ளித் திரிகின்ற காலத்தே, எந்தையும் தாயும், தம்பியுடையான், மனைவி மாணிக்கம், பயணங்கள் தந்த பாடங்கள், நகுதற் பொருட்டன்று நட்டல், இறைவனைத் தேடி ஆகிய
08 தலைப்புக்களில் நூலாசிரியர் தனது அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அனுபவங்களை எழுதுவதென்பது சுவாரஷ்யமான விடயம். தத்தமது அனுபவங்களில் பிறரும் பயனடைய வேண்டும். அத்தகைய தனது அனுபவங்களை நூலாசிரியர் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றார். ஈஸ்வரனின் சிறுகதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். இறைபக்தி நிறைந்த இவரது எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

நூல் - அர்த்தமுள்ள அனுபவங்கள்
நூலின் வகை - அனுபவங்கள்
நூலாசிரியர் - தெ. ஈஸ்வரன்
வெளியீடு - காந்தளகம் வெளியீடு
விலை
- 500 ரூபாய்