நூல் :  எனக்கும் உனக்குமான உலகம் (கவிதைத் தொகுதி)
நூல் ஆசிரியர் :  சிலாவத்துறை ஏ.ஆர். அஸீம்
நூல் அறிமுகம்:  வெலிகம ரிம்ஸா முஹம்மத்

'எனக்கும் உனக்குமான உலகம் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் சிலாவத்துறை ஏ.ஆர்.அஸீம். இவர் சிறந்த மேடைப் பேச்சாளரான சமூகஜோதி ரபீக் அவர்களின் புதல்வர். மழைமேகம் என்ற கவிதைத் தொகுதியையும், விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் (மாணவர் வழிகாட்டல்) நூலையும் இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது வைத்திய கலாநிதியாக இருக்கும் இவர் இலக்கிய கலை நதியாகவும் இருப்பது சிறப்பம்சமாகும்.

ஈரம் சொட்டச் சொட்ட காதல் மழையில் நனைய விரும்புபவர்களுக்கு உனக்கும் எனக்குமான உலகம் என்ற இந்தத் தொகுதி மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தன் மனதில் உருவாகிய காதலை வார்த்தைகளால் செதுக்கிச் செதுக்கி ஒரு சிற்பமாக இப்புத்தகத்தை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். அதுபோல இளைஞர்களுக்கான அறிவுரைகளையும் அவர் இந்நூலில் திறம்பட வழங்கியிருக்கின்றார். வாழ்க்கை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அந்த அறிவுரைகள் காணப்படுகின்றன. நூலாசிரியர் கையாண்டிருக்கும் சொற்களும் உவமைகளும் மனதைக் கவர்ந்து பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

இன்னுமா ஒரு தேடல் (பக்கம்
07) என்ற கவிதை காதலியின் ஞாபகங்கள் கொண்டு வடிக்கப்பட்டிருக்கின்றது. காதலின் பசுமையான நினைவுகள் நெஞ்சைவிட்டு என்றும் அகலாதவை.. காதலித்த கணங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் இன்பங்களை சுமந்தவை.. காதலிப்பவர்களுக்காக மாத்திரமே இந்த உலகம் படைக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு மெய் மயக்கம்.. இந்த ஆனந்த அவஸ்தையையெல்லாம் இரசிக்கும் ஒரு இளம் காதலனின் வரிகள் இதோ:-

அந்த
மின்மினிச் சிரிப்புக்காக
கண்மணி தவமிருக்கிறது..

உன் கன்னக்குழியில்
வண்ணக் கிளியின் வதனம்...

வைகறைப் பனித்துளிகூட – எனக்கு
வாழ்த்துச் சொல்லும்
உன்னைப் பார்க்கும் போது...

என் சோகங்களை ராகங்களாக்கிவிட்டு
அந்த சோலைவனம் எங்கே சென்றது?


வயது வந்தவர்களுக்கு மட்டும் (பக்கம்
23) என்ற தலைப்பில் அமைந்த கவிதை வாழ்க்கை மீது வெறுப்புற்று துவண்டு போனவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரிகளாக அமைந்துள்ளன. இன்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் வாழ்க்கையை வெறுத்து நடைப்பிணமாக வாழும் பலர் ஆறதலுக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள். ஒரு கவிஞன் தன் படைப்புக்களினூடாக வாழ்க்கையின் அர்த்தங்களைச் சொல்லி அவர்களை எல்லாம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறான்.

...உங்கள் வயது புயல் போன்றது
தெளிவான சிந்தனைகளால்
அதனை தென்றலாக மாற்றுங்கள்..

புன்னகைப் பூக்களைப் புண்படுத்திவிடாமல்
கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி பண்படுத்துங்கள்..

காலத்தை அரட்டையால் அழித்து விடாதீர்கள்
நேரத்தை குறட்டையால் குறைத்து விடாதீர்கள்..


மாட்டேனா என்ன? (பக்கம்
26) இல் அமைந்துள்ள காதல் கவிதை சிறந்த சொல்வளத்துடனும் ஓசைநயத்துடனும் கூடிய கவிதையாக அமைந்திருக்கின்றது. மனங்கவர்ந்த காதலிக்கு காதலன் எழுதும் அன்பு மடலாக இந்தக் கவிதை நோக்கத்தக்கது. காதலன், தன்னை வர்ணிக்கும் போது ஒரு காதலியின் மனவோட்டம் எப்படியிருக்குமோ அந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்துகின்றன கீழுள்ள வரிகள்..

தேன் சிந்தும் விழிகளிலே
நான் சேர மாட்டேனா?
மான் போன்ற மேனியாளின்
மடி வீழ மாட்டேனா?

நதிபோன்ற அதரங்களில்
அமுதெடுக்க மாட்டேனா?
புதிதான புன்னகையில்
பூப் பறிக்க மாட்டேனா?


வானம் தொட்டுவிடும் தூரம் (பக்கம்
28) என்ற கவிதை இயற்கை காட்சிகள் பற்றிய பதிவாக அமைந்திருக்கின்றது. இயற்கையை இரசிக்காத கலைஞன் (கவிஞன்) இல்லை. இக் கவிஞனின் மனம் இயற்கையோடு கலந்துறவாடுகிறது.

பகலவனின் பார்வைபட ஒளிபெறுமே உலகம்
பாட்டுதனை பாடும்உழவர் பைந்தமிழின் அழகும்
அகலவரும் அருவிநீரின் மழலை மொழிச்சத்தம்
அணுதினமும் செவிகளிலே கேட்குமது நித்தம்

இயற்கையிலே நிறைந்துகிடக்கு ரசிப்பதற்கு அழகு
இதயம் திறந்து நீயும்பார்த்து மனிதனாகப் பழகு
செயற்கையான கருத்தையெல்லாம் தூரஎறிந்து வீசி
செந்தமிழால் ஆன இந்த கவிதையினை வாசி


அன்பே என் அன்பே (பக்கம்
60) என்ற கவிதை உலகத்தில் பல்வேறு விடயங்களுக்காக புகழ்பெற்றவர் சிலரையும், புகழ்பெற்ற இடங்கள் சிலவற்றையும் காதல் கவிதையூடாக அறிமுகப்படுத்தும் புதிய பாணியைக் கையாண்டிருக்கின்றார் நூலாசிரியர்.

புதுவெளிச்சம் காட்டும்
உன் புன்னகையை
எங்கே சென்று புதுப்பித்தாய்?
நீ என்ன
எடிசன் மகளா?

கண்களிலே காந்தம் வைத்து
என்னைக் கவர்ந்திழுக்கும் வித்தை
எங்கே சென்று கற்றாய்
நீ என்ன
நியூட்டன் உறவா?

மரீனாக் கடல்
சமாதானம் பேச சம்மதம்
உன் இதயத்தின் ஆழம்
அது அறிந்தது எப்படி?

செவ்வாயில் இடம் தேடும் பணி
நேற்றோடு இடைநிறுத்தம்
உன் செவ்வாயில்
விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!


நேற்றைய காற்று (பக்கம்
94) எனும் கவிதை பால்ய வயது ஞாபகங்களை வரிசையாக ஞாபகமூட்டிப் போகின்றது. இக்கவிதையில் வரும் பல்வேறு சம்பவங்கள் அநேகமாக எல்லோர் வாழ்விலும் நடந்தேறியிருக்கும். இதில் இல்லாத பல ஞாபகங்களும் இக்கவிதையை வாசிக்கையில் நம்மை வந்து தாலாட்டும். இன்றைய சிறுவர்கள் கணிணிக்குள்ளும், கைத்தொலைபேசிக்குள்ளும் தமது குழந்தைப் பருவத்தை தொலைத்துவிட்டனர். ஆனாலும் தமது குழந்தைப் பருவத்தை வயலோடும் வரப்போடும், குருவியோடும் கூட்டோடும், ஆற்றோடும் கரையோடும் மிக மகிழ்ச்சியாகக்கழித்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். நூலாசிரியரின் கவிதையும் அந்த அதிர்ஷ்டசாலிகள் பற்றியே ஞாபகப்படுத்திப் பேசுகிறது.

சிட்டுக் குருவி சிறகு வாங்கி
சிரித்துப் பறந்த ஞாபகம்
பட்டுப்பூச்சி வண்ணம்தனை
தொட்டு வியந்த ஞாபகம்

சுடச் சுடவே தேநீர் வேண்டி
அடம்பிடித்த ஞாபகம்
சுட்ட பின்பும் ஊதி ஊதி
சுவைத்துக் குடித்த ஞாபகம்

அலைகடலில் கால் கழுவ
ஆசைகொண்ட ஞாபகம்
அலையதுதான் பாய்ந்துவர
ஓட்டம்விட்ட ஞாபகம்


சொற்களை இலாவகமாகப் பயன்படுத்தி கவி யாத்திருக்கும் கவிஞர் அஸீம் இன்னும் பல கவிதை நூல்களை வெளியிட்டு வாசகரை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!.
 



நூலின் பெயர் - உனக்கும் எனக்குமான உலகம்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - சிலாவத்துறை ஏ.ஆர். அஸீம்
விலை
- 250 ரூபாய்