நூல் :
மனசெல்லாம்
…
நூல் ஆசிரியர் : கா.ந.கல்யாணசுந்தரம்
நூல் ஆய்வு:
சுப்ரா வே.சுப்பிரமணியன்
ஹைக்கூ
கவிதை வடிவத்தின் பாதிப்பில் மூன்று அடிகளில், குறைவான சொற்களைப்
பிரயோகித்து , வாசிப்பவனின் பசிக்குத் தீனி போடும் கவிதைகள் அடங்கிய
தொகுப்பு இது . இயற்கை நமக்களிக்கும் காட்சிப் படிமங்களுக்கு தன் கற்பனை
வளத்தின் மூலம் செறிவூட்டியுள்ள கவிதைகளோடு, சமூக சிந்தனை, ஆன்மீகம்,
தத்துவ விசாரம் , குழந்தைகளின் கள்ளமில்லா உலகம், நம்பிக்கையூட்டும்
சிந்தனைகள் …. என பரந்து விரிந்த வானிற்கு வாசிப்பவனை இட்டுச் செல்லும்
பல கவிதைகள் தொகுப்பு முழுவதும் நிறைந்து கிடக்கின்றன.
கூழாங்கற்கள் என்ற ஒற்றைப் பொருளில், முற்றிலும் வேறுபட்ட இரு பார்வைகளை
நமக்களிக்கின்றன கீழே கண்ட இரு கவிதைகளும்.
நதி வருடிய கைகளின்
வலியறியாமல்
கூழாங்கற்கள்
நதிகளின் பயணத்தை
அறிந்திருந்தன
அலைவருடிய கூழாங்கற்கள்
இரு கவிதைகளிலுமே பொதிந்திருக்கும் உட்பொருள் வாசிக்கையில் நம்மை , நதி
தன் போக்கில் இழுத்துச் செல்லும் அல்லது விட்டுச் செல்லும்
கூழாங்கற்களாக மாற்றி விடுகின்றன.
அருவிக் கரையில் தவறாது காணும் காட்சி ஒன்றில் கவிஞரது கற்பனை மேகங்களை
அழகாகப் புதைத்து வைக்கின்றன.
கொட்டும் அருவிக்குள்
முகம் புதைக்கின்றன
மேகங்கள் .
தவளைக்கு இடமளித்து
குளத்தில் குதித்தன …..
தாமரையிலை நீர்த்துளிகள் !
என்ற வரிகளை வெறும் காட்சிப் படிமமாகப் பார்க்காமல் , வாழ்க்கையில்
ஒட்டாமல் வாழும் வாழ்க்கை சிலரை வாழ்விலிருந்து தள்ளி விடுவதை காட்சிப்
படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். தவளை எதுவென்பது அவரவர் அனுபவம்
பொறுத்தது.
இலக்கியத்தின் அத்தனை வகைகளிலும் மீண்டும் மீண்டும் எழுதித் தீர்க்கப்
பட்டது “மத நல்லிணக்கம்“ கவிஞரும் விதிவிலக்கல்ல. சற்று
வித்தியாசமான பார்வையில் எழுதிக் கொண்டு போகிறார் …..
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
இக்பாலுடன் இனிய பயணம்
காசிக்கு .
மழலைச் சொல்லினும்
குழலினிது என்றன
மூங்கில்கள்.
மாற்றி யோசித்தல் கவிதைக்கழகு. குழலை, மூங்கில்களின் குழந்தையாக உருவகப்
படுத்தியுள்ள விதம் அழகு.
அன்றாடம் கண்ணில்படும் காட்சிகள் கவிஞரின் பார்வையில் நம்மை
பிரமிப்புக்குள்ளாக்குகின்றன நிறைய கவிதைகளில்.
வைகறையில் சூரியனை
பங்கு போட்டன
தென்னங்கீற்றுகள் .
வளையல் துண்டுகள்
புழுவானது எப்போது ?
கொத்தும் கோழிகள்
தமிழ் சொற்களின் வலிமையால் வார்த்தை விளையாட்டு நடத்தும் கவிதைகள் பல .
அதில் ஒன்று ….
காலையிலே
மாலையானது
மல்லிகையும் முல்லையும்
தொகுப்பில் நகைச் சுவைக்கும் பஞ்சமில்லை -
வல்லாரைக் கீரை விற்றவன்
மறந்தே போனான்
காசு வாங்க
வாசிக்கையில் வெறும் காட்சிப் படிமங்களாகத் தோன்றும் சில கவிதைகளில் சம
கால வாழ்வின் அவலங்களைப் பொதிந்து தருகிறார் . மீன்களின் நிலையில்தானே
நாம் பல சமயங்களில்.
கொக்கும் தூண்டிலும்
அருகருகே
தடுமாறும் மீன்கள்
நிறையக் கவிதைகளில் வாழ்வின் பொருளை தத்துவப் பார்வையில் தருகிறார் .
கீழே கண்ட வரிகள் எத்தனை கனமான பொருளைத் தன்னுள் ஒளித்து
வைத்திருக்கின்றன !
நிரந்தர முகவரியும்
தற்காலிகமே
மானுட வாழ்வில்
மூன்றடி வடிவத்தில் சுருக்கமான வார்த்தைப் பிரயோகங்களோடு வாசிப்பவருக்கு
பரந்துபட்ட அனுபவத்தைத் தரும் தொகுப்பு.
மனசெல்லாம் … [கவிதைத் தொகுப்பு]
ஆசிரியர் – கா . ந . கல்யாணசுந்தரம் .
வெளியீடு – வாசவன் பதிப்பகம் , சேலம் .
விலை – ரூ . 80 /
நூல் பெற – 98429 74697 , 94432 59288
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|