நூல் :
இதயம்
தொட்ட
எழுதுகோல்
பிரதம ஆசிரியர்:
கவிஞர் எம்.எஸ்.வேல்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
எழுதுகோலால்
எழுதி இதயம் தொட முடியும். ஆனால், ‘இதயம் தொட்ட எழுதுகோல்’ என்று
வித்தியாசமாக பெயர் சூட்டி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் எம்.எஸ். வேல்,
இந்த நூலை மாற்றுத் திறனாளி-களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு.
பாராட்டுக்கள். தாரை கவிதாசன் அவர்களின் வரவேற்புத் தோரணவாயில் நன்று.
பொருத்தமான படங்கள் நேர்த்தியான அச்சு அட்டைப்பட வடிவமைப்பு யாவும் மிக
நன்று. பாராட்டுக்கள்.
மழை விட்ட பின்
இலைகள் உதிர்க்கின்றன
நீர்த்துளிகளை
சிறு வெளிச்சத்தை
சுமந்தபடி !
இக்கவிதை படிக்கும் போது மழையும் மரமும் அதிலிருந்து விழும் இலையும் நம்
கண் முன் வந்து விடுகின்றன. கடைசி வரை முத்தாய்ப்பு. வெளிச்சத்தை
சுமந்தபடி. இது தான் படைப்பாளியின் வெற்றி.
சோலையில் மட்டுமல்ல
சேலையிலும் அழகு தான்
பூக்கள்!
காதலியை மனைவியை மலராகப் பார்க்கும் பார்வை நன்று.
பாரதியின் புகழ்பெற்ற வரிகளைக் கொண்டு வடித்த கவிதை நன்று.
ஓடி விளையாடு பாப்பா
கற்பிக்க மனமில்லை
போலியோ குழந்தைகள் !
கடைசி வரி நெகிழ்ச்சி. ஆம் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓடி
விளையாடுவது கடினம் தான். ‘ஓடி விளையாடு’ என்பது ‘ஓடி விளயாடு’ உள்ளது.
அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.
நேர்மையாய் அதிகாரி
விரைவில் கிடைத்து
பணியிட மாற்றம் !
உண்மை தான். நேர்மையாக இருந்தால் அதிக நாட்கள் ஒரே இடத்தில் விட்டு
வைப்பதில்லை. இந்தக் கவிதை படித்த போது திரு. சகாயம் இ.ஆ.ப. அவர்கள்
தந்த நேர்முகம் நினைவிற்கு வந்தது. ஒன்று படிக்கும் போது அதனுடன்
தொடர்புடைய மற்றொன்று நினைவிற்கு வருவது படைப்பாளியின் வெற்றி.
பகுத்தறிவுக் கட்டுரை
தொடங்கப்பட்டது
பிள்ளையார் சுழி !
பகுத்தறிவாளர்கள் யாரும் பிள்ளையார் சுழி எழுதி தொடங்குவதில்லை. அப்படி
தொடங்கினால் அவர் பகுத்தறிவாளர் அன்று. பழைய காலத்தில் பனைஓலையில்
எழுதினார்கள். அப்போது எழுதும் பக்குவத்தில் அந்த ஓலை உள்ளதா ? என்பதைச்
சோதிக்க தலைப்பில் சோதனைக்காக சுழி இட்டுப் பார்ப்பார்கள். அதுவே
பின்நாளில் பிள்ளையார் சுழி என்ற பெயரில் தொடர்ந்து என்பது வரலாறு.
பிரிந்த கணவன்
சேர வேண்டி
கெடா வெட்டு
துணையிழந்தது ஆடு.!
நல்ல கற்பனை இரண்டு இணைகள் இணைய வேண்டிய வேண்டுதலால் பலியானது ஒரு ஆடு,
துணை இழந்தது ஒரு ஆடு.
வரதட்சணை பற்றி பலரும் கவிதைகள் எழுதி உள்ளனர். இவர் வித்தியாசமாக ஒரு
கவிதை எழுது உள்ளார்.
கற்பிக்கும் கலைக்கு
கேட்கலாம் குருதட்சணை
நோயற்ற கலவிக்கு
ஏனடா வருதட்சணை
கரும்பு தின்ன கூலியா?
கேள்வி கேட்கிறாய்
மறுதாயைப் பெற
ஏனோ
கூலி பெறுகிறாய் ?
மனைவியை மறு தாய் என்று சொல்லி இருப்பது நல்ல சொல்லாட்சி. பழைய
காலத்தில் மணமகன் தான் பரிசம் போட்டு மணமகலைக் கரம் பிடித்த வரலாறுகள்
நமக்கு உண்டு. வரதட்சணை ஒழிந்து பழைய நிலை தொடர வேண்டும்.
நிலவு பற்றி அனேகமாக எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதி விடுவார்கள்.
இவரும் எழுதி உள்ளார். ஆனால் மிக வித்தியாசமாக சிந்தித்து உள்ளார்.
இவரது கோணத்தில் இதுவரை யாரும் சிந்திக்கவில்லை எனலாம். புதிய சிந்தனை.
ரசனை மிக்க சிந்தனை.
நிர்வாணமாய் நிலவு
மானங்காத்திட விரைந்திடும் மேகங்கள் !
காதலர்களுக்கு கண்கள் தான் ஆயுதம். கண் வழியே காதலர்களுக்கு காதல்
தொடங்கும். விதிவிலக்காக பார்வையற்றவர்-களுக்கு கண்ணால் வருவதல்ல காதல்.
குணத்தால் வரும். பெரும்பாலான பார்வையுள்ள அனைவருக்கும் காதலின்
முன்னுரை கண்கள் வழியே எழுதுகின்றனர் என்பது இயல்பு.
தூண்டிலில் மீனாய்
உன் காந்தப் பார்வையில்
வசியப்பட்ட நான் !
வித்தியாசமாக கவிதைகள் வடித்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் எம்.எஸ். வேல்
அவர்களுக்கு பாராட்டுகள்.
கடலுக்குள்
செல்கிறான் மீனவன்
குடும்பத்தைக் கரை சேர்க்க !
கடலை நம்பித் தான் மீனவர்கள் வாழ்க்கை. அவர்களின் வாழ்வாதாரம் கடல் தான்.
தமிழக மீனவர்கள் திரும்பினால் தான் உறுதி. திரும்பாமல் போவதும் உண்டு.
குறிப்பாக இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக சுடுவதும் படகுகளைப்
பறிப்பதும் வலைகளை அறுத்து எறிவதும் என அடாவடித்தனம் செய்து வருகிறான்.
அவனை ஏன் என்று தட்டிக் கேட்க நாதி இல்லை. மீனவர்களின் நிலைமை மிக
மோசமாகவே உள்ளது. கடலுக்குச் சென்ற மீனவன் கரை வருவது உறுதி இல்லை
என்றானது.
தலைப்பில் உருவான கவிதை இதோ!
இதயம் தொட்ட எழுதுகோல் !
உன்னால் முடியும் உன்னால் முடியும்
உன்னாலன்றி எவரால் கூடும்.
என்றே நீயும் உறுதியோடு உழைத்தால்
உலகப்பற்று உன் காலடியில் !
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளன. பாராட்டுக்கள்.
படைப்பாளிகளுக்கு இயற்கை நேசம் இருக்கும். இயற்கையை உற்று நோக்கும் போது
அரிய படைப்புகள் உருவாகும்.
சற்றுமுன் நான் கண்ட
பெருத்த யானை
மாறியிருந்தது
அழகிய தோகை
விரித்தாடும் மயிலாய்
அசையும் மேகங்கள் !
யானை மயிலாக மாறியதா? எப்படி என்று வியப்பில் ஆழ்ந்து படித்தால்
மேகங்களின் உருவத்தைக் குறிப்பிட்டது அறிந்து மனதில் மகிழ்ச்சி.
படைப்பாளி உணர்ந்த உணர்வை வாசகர்களுக்கும் தருவதே நல்ல படைப்பு.
நூலாசிரியர் கவிஞர் எம்.எஸ். வேல் அவர்களுக்கு பாராட்டுகள்.
சபரிமதி வெளியீடு, அருணாசலம்
புதூர், தாரமங்கலம் (அ),
சேலம் (மா) – 636 502. பேச: 9544 44113
பக்கம் : 80, விலை : ரூ. 50.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|