நூல் :
கற்பனை
வரங்கள் !
நூல்
ஆசிரியர்:
கவிஞர் சுரா
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
'கற்பனை
வரங்கள் ' நூலின் தலைப்பே கவித்துவம். நூல் ஆசிரியர் சு.இராமச்சந்திரன்
என்ற இயற்பெயரை சுருக்கு 'சுரா' என்று வைத்துக் கொண்டவர். இவரை 'சுரா'
என்றே அனைவரும் அறிவர். கவிஞர் மீராவின் பெயரை நினைவூட்டும் வண்ணம் சுரா
உள்ளது. கவிதையின் சுரா மீன் என்றும் பொருள் கொள்ளலாம்.
தமிழ்க்கடல் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அணிந்துரை, முனைவர் பொற்கோ
சிறப்புரை, முனைவர் சோ.விசயராகவன் வாழ்த்துரை, முனைவர் க.சிவனேசன்
வாழ்த்துரை, முனைவர் மி.சி. தியாகராஜன் வாழ்த்துரை என் நூலிற்கு
வரவேற்பு தோரணங்களாக உள்ளன. நூலில் உள்ள கவிதைகள் பதச்சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு :
காடு!
முன்னர்ப் பல்லோர்
வாழ்ந்து முடிந்ததும்
இக்காடு
பின்னர்ப் பல்லோர்
வாழ்ந்து புதைவதும்
இக்காடு
மன்னர்ப் பரம்பரை
மண்ணாண்டு மடிந்ததும்
இக்காடு !
நூலாசிரியர் மதுரையின் பெருமைகளில் ஒன்றான செந்தமிழ்க் கல்லூரியில்
பயின்றவர். மரபு கற்றவர் என்ற காரணத்தால் கவிதையில் சொல்லாட்சி, ஓசைநயம்,
எதுகை, மோனை, இயைபு என கவி விருந்தாக உள்ளன. பாராட்டுக்கள்.
கவித்துவத்துடன் கருத்துக்களும் இருப்பதே கவிதைக்கு அழகு.
கி.பி.2000
ஆண்டில் எழுதிய கவிதை 17
ஆண்டுகள் ஆனபின்னும் இன்றும்
பொருந்துவதாக அமைந்துள்ளது சிறப்பு.
வானவில் பேசுகிறது.
நான்
வண்ணங்களின் தாய்
வானப் பெண்ணிற்கு
வளைகாப்பு
இயற்கை வரையும்
சுவரில்லா ஓவியம்
காற்று மண்டலத்தை
நிரூபிக்கும் காட்சி
வண்ணங்கள் எடுக்கும்
மழைக்கால
அவதாரம் !
இப்படி வானவில்லே பேசுவது போல கவிதை வடித்த யுத்தி நன்று. பாராட்டுக்கள்.
பூமியின் புலம்பல் !
தேவைக்காக இல்லாமல்
தேவைக்கும் மேல்
என்னை ஆழ்ந்தீர்!
நீங்கள் படைத்த சாதனை
மக்கட் பெருக்கம் தானே!
விஞ்ஞானம்
என்ற பெயரில்
எதிர்கால
உயிர்களுக்கு
இன்றே முடிவுரை எழுதுகிறீர்!
நெகிழி வேண்டாம், வேண்டாம் என்று சொன்ன போது கேட்கவில்லை. மஞ்சப் பைகலை
மறந்து விட்ட, நெகிழிப் பைகளை ஏந்தினோம். ஆடு, மாடு, உயிரினங்கள்
நெகிழியால் மடிந்தன. இன்று மனிதனுக்கும் தீங்கு செய்யும் விதமாக
நெகிழியில் அரிசி வந்து மக்களை பயத்தில் ஆட்டி வைத்து வருகின்றது.
ஈழத்தமிழன் எழுதுகிறான் !
நாங்கள் போராடுகிறோம்
அமைதியாய் வாழ!
நாங்கள் போராடுகிறோம்
உரிமையாய் வாழ !
நாங்கள் போராடுகிறோம்
தமிழர்களாய் வாழ !
நாங்கள் போராடுகிறோம்
மனிதர்களாய் வாழ !
யுத்தத்தில் எல்லாவற்றையும்
இழந்து விட்டோம் !
ஆம். இலங்கையில் ஆளும் அரசு, தமிழர்களுக்கு சம உரிமை தந்து, மதித்து
நடந்திருந்தால் அங்கு போராட்டமே வந்து இருக்காது. தன்னைப் போல பிறரை
நேசி என்று சிங்களரைப் போலவே தமிழரையும் நடத்தி இருந்தால் அங்கு
போராட்டமே வந்து இருக்காது. இன்னும் ஈழத்தமிழர்-களுக்கு வாழ்வு
விடியவில்லை என்பதே உண்மை.
பத்திரிகை !
பத்திரிகை வெறும் காகிதமல்ல
எழுத்துத் தோட்டாக்கள்
நிரப்பி வரும்
சத்தமில்லா துப்பாக்கி
பத்திரிகை
பண மூட்டத்தில்
குளிர்காயும்
பதுக்கல்காரர்களுக்கு
சாமரம் வீசாமல்
பாமரனையும்
எழுப்ப வேண்டும் !
சமுதாயத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகை பற்றி எழுதியது சிறப்பு.
பத்திரிகை என்ற சொல்லிற்கு பதிலாக இதழ்கள் என்ற சொல்லை பயன்படுத்தி
இருக்கலாம். அடுத்த பதிப்பில் இதழ்கள் என்று ஆகட்டும்.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா, சல்லிக்கட்டு போராட்டத்தின்
போது உலகம் முழுவதும் அறியப்பட்ட இடமானது. மெரினா பற்றிய கவிதை நன்று.
நூலாசிரியர் கவிஞர் சுரா அவர்கள் இயற்கை ரசிகர் என்பதைப் பறைசாற்றும்
விதமாக கவிதை உள்ளது. சுரா மீன் கடலைப் பாடாமல் இருக்குமா?
மெரினா!
இது
இயற்கையின்
செவ்வகச் சொர்க்கம்!
கிழக்குக் கடலில்
மேற்குத் தலையணை!
தங்கத் துகள்கள்
கொட்டிய குப்பை!
காற்றுக் குளியலின்
கற்பனை விருந்து!
தடையில்லா
நடைப்பயிற்சியின்
வெட்டவெளிப் பொட்டல் !
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்'' என்ற கவிதையில் எள்ளல் சுவையுடன்
அரசியல்வாதிகளை நையாண்டி செய்துள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்!
விண்ணைத் தாண்டும்
விலைவாசி உயர்வு!
மீள முடியாத மின் தடை
ஆலைகள்
ஆயிரம் இருந்தும்
வேலையின்மை!
அவசியப் பொருட்கள்
அனைத்துமே பதுக்கல்!
மக்கள் உறுப்பினர்
மன்னர் போல் பவனி!
எங்கும் ஊழல்
எதிலும் ஊழல்
தட்டிக் கேட்டால் தடியடி !
இப்படியே நீள்கிறது கவிதை. சிந்திக்க வைத்துள்ளார். பாராட்டுக்கள். மரம்
பற்றி பலரும் கவிதைகள் எழுது உள்ளனர். நூலாசிரியர் சுரா, ஆலமரம் பற்றி
வித்தியாசமாக எழுதி உள்ளார். பாருங்கள்.
ஆலமரம்!
இது
நாடோடிகளின்
இயற்கை வீடு!
வழிப்போக்கர்க்கு
சாரலைத் தாங்கும்
உறவினர்கள் !
குழந்தைகளின் குதூகலத்திற்கு
உயர்ரக ஊஞ்சல்!
பறவைகளின் அரண்மனை !
இயற்கையைப் பார்த்தல், சராசரி இயற்கையை ரசித்தல் கவித்துவம். ரசிக்க
ரசிக்க படைப்புகள் பிறக்கும். கற்பனை சிறக்கும். கதைகள் உதிக்கும்.
மேகங்கள்!
வெட்டவெளியில்
வெடித்துக் கிடக்கும்
பருத்திக் காடோ!
வெப்பக்கனல்
பூமியைத்
தாங்காமல் இருக்க
தற்காலிக
நிழற்குடைகளோ?
மாபெரும்
சக்திகள் திரட்டிய
மாநாடோ !
நூலாசிரியர் கவிஞர் சுரா அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.
நூல் ஆசிரியர் : கவிஞர் சுரா
செந்தமிழ்
அறக்கட்டளை, 38/1,
ராஜீவ் காந்தி நகர்,
நான்காம் மேற்குத் தெரு, திருவில்லிபுத்தூர்
– 626 135.
பக்கம் : 144,
விலை : ரூ.100.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|