நூல்:
தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள்
நூல்
ஆசிரியர்:
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
சங்க
இலக்கியம் என்றால் தமிழ் அறிஞர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற
கருத்தை உடைக்கும் விதமாக சங்க இலக்கியத்தை சராசரி வாசகர்களும் உணர்ந்து
இன்புறலாம் என்ற விதமாக மிக எளிமையாகவும் இனிமையாகவும் சங்க இலக்கிய
விருந்து வைத்துள்ள நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்
அவர்களுக்கு முதல் பாராட்டு. சிறந்த நூலை வெளியிட்டு தமிழுக்கும் பெருமை
சேர்த்து வரும் சாகித்திய அகாதெமிக்கு அடுத்த பாராட்டு.
நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் 133
நூல்கள் எழுதி உள்ளார். இவர் உணவருத்துவதற்கு கையைப் பயன்படுத்தும்
நேரத்தை விட, எழுதுவதற்குப் பயன்படுத்திய நேரமே அதிகம். எழுதிக் கொண்டே
இருக்கிறார். அதோடு பேசிக் கொண்டும் இருக்கிறார். ‘எப்படி இவரால் எழுத
முடிகிறது இவ்வளவு நூல்கள்’ என்று வியப்பில் ஆழ்த்திடும் ஆளுமையாளர்.
எட்டுத் தொகை, பத்துப்பாட்டு மொத்தம் 18
இலக்கியத்திலும் பதச்சோறாக தேர்ந்தெடுத்த பாடல்களையும் எழுதியும்
அதற்கான சிறு விளக்கங்களையும் எழுதி தமிழ் விருந்து வைத்துள்ளார்.
ஐங்குறுநூறுவில் உள்ள ஐவகை நிலங்கள் பற்றி எடுத்து இயம்பும் விதமாக
ஒவ்வொரு நிலத்திலிருந்தும் பாடல்களை மேற்கோள் காட்டி உள்ளார்.
அருஞ்சொற்பொருள்-விளக்கம் ஒவ்வொரு பாடலுக்கும் உள்ளதால் எளிதாக புரிந்து
கொள்ள வாய்ப்பாக உள்ளன. தோழி கூற்று தலைவி கூற்று யாவும் இனிமை.
“தோழியைத் தலைவியும், தலைவியைத் தோழியும் அன்னை எனக் கூறுதல் மரபு.
இன்றைக்கும் ஒரு பெண்ணை ‘அம்மா’ எனக் கூறும் மரபு உள்ளது”. இதுபோன்று
பல கருத்துக்கள் நூலில் உள்ளன. குறுந்தொகை பற்றிய கட்டுரை மிக நன்று.
தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யார்ஆ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிவதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இலக்கிய மேடைகளில் பலராலும் மேற்கோள் காட்டப்பட்ட மிக்சசிறந்த பாடல்.
அன்று பாடிய இப்பாடல் இன்றைய காதலர்களுக்கும் பொருந்தும் விதமாக
இருப்பது தமிழின் தனிச்சிறப்பு ஆகும். நற்றிணை பற்றிய கட்டுரையும் நன்று.
தலைவி கூற்று
நின்ற சொல்லர் ; நீடுதோறு இனியர்
என்றும் என்தோள் பிரிவு அறி பலரே ;
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. இப்பாடலும் புகழ்பெற்ற
பாடலாகும்.
அகநானூறு தோழி கூற்று தலைவன் கூற்று பாடல்கள் உள்ளன. சங்க இலக்கியம்
முழுவதும் படிக்க முடியாதவர்கள் நேரம் இல்லாதவர்கள் இந்த நூல் வாங்கிப்
படித்தால் சங்க இலக்கியத்தின் கனிச்சாறாக வழங்கி உள்ளார்கள். வாங்கிப்
படித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு பாடலுக்கும் எழுதியுள்ள சுருக்கமான சிறப்புக் குறிப்பு பாடலின்
சிறப்பை குறிப்பாக உணர்த்தி விடுகின்றன.
கலித்தொகை இலக்கியத்தில் துறை, தரவு, தாழிசை, அருஞ்சொற்பொருள்,
சிறப்புக் குறிப்பு இப்படிப் பிரித்து எழுதி உள்ளார்கள். பாடலின்
சிறப்பும் நுட்பமும் வடிக்கும் வாசகர்களுக்கு நன்கு விளங்கும் விதமாக
உள்ளது.
புறநானூறு இலக்கியத்தில் உள்ள தேர்ந்தெடுத்த பாடல்கள் உள்ளன. அவற்றில்
நான் தேர்ந்தெடுத்த பாடல் புகழ்பெற்ற பாடல். கணியன் பூங்குன்றன் அவர்கள்
எழுதிய பாடல்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;
அமெரிக்காவில் உள்ள அய்நா மன்றத்தின் வாயிலில் இடம் பெற்றுள்ளன. இந்த
வைர வரி உலகிற்கே இலக்கியத்தை அள்ளி வழங்கிய ஒப்பற்ற சமுதாயம் தமிழ்ச்
சமுதாயம், ஆங்கில இலக்கியத்தில் கூட இவ்வளவு பரந்த விரிந்த பொதுமையான
கருத்து இல்லாத காரணத்தால் தான். தமிழ் இலக்கியத்தின் பொதுமைக் கருத்தை
புதுமையாக எழுதி வைத்துள்ளனர். தமிழராகப் பிறந்ததற்கு உலகத் தமிழர்
யாவரும் பெருமைப்பட இந்த ஒரு பாடல் போதும்.
பத்துப்பாட்டு எனப்படும் திருமுறுகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை,
சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்
காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம்
என பத்துவகைப் பாடல்களிலும் முக்கியமான பாடல்கள் பற்றி எடுத்து இயம்பி
உள்ளார்கள். நூலின் இறுதியில் பின் இணைப்பு 1ல்
நூலில் இடம்பெற்றுள்ள சங்கச் சான்றோர்களின் பெயர்ப்பட்டியல் உள்ளது.
பின் இணைப்பு 2ல் செய்யுள்
முதற்குறிப்பு அகராதி என பாடல்கள் இடம் பெற்றுள்ள பக்க எண்களும் உள்ளன.
அகர வரிசையில் உள்ளன. விருப்பமான பாடலை எடுத்து அந்தப் பக்கத்தில்
படித்துப் பயன்பெற வசதியாக உள்ளது.
இன்றைய இளையதலைமுறையினர் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல்.
சங்க இலக்கியம் படிப்பது கடினமல்ல எளிது என்பதை உணர்த்திடும் நூல்.
தமிழின் செழுமையும், அருமையும் உணர்த்திடும் நூல். தமிழர்கள் வாழ்வாங்கு
வாழ்ந்து படைத்த வாழ்வியல் இலக்கியத்தின் சிறப்பினை எடுத்து இயம்பிடும்
நூல்.
உலகின் முதல்மொழியான தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழிக்கும் இத்துணை
இலக்கிய இலக்கண நூல்கள் இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். ‘என்ன வளம்
இல்லை நம் தமிழ் மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்’ என்பதை
உணர்த்திடும் நூல். நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன்
அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரது படைப்புகள் எனும் மகுடத்தில் பதித்த
வைரக்கல் இந்நூல்.
சாகித்திய அகாதெமி,
குணா கட்டிடம்,
443,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-600 017.
பக்கம்
: 288, விலை : ரூ.
190
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|