நூல்: சமுதாய பார்வைகள்
நூல் ஆசிரியர்: கவிஞர் சிவசக்தி
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியரின் இயற்பெயர் L.P.தனஞ்செயன். புனைப் பெயர் சிவசக்தி. புதுவையில் வாழும் கவிக்குயில். முதுநிலை அறிவியல் பட்டதாரி. தமிழின் மீது பற்று வைத்து கவிதை வடித்து நூலாக்கி இருப்பது பாராட்டுக்குரிய நற்பணி.

அட்டை வடிவமைப்பு, உள் அச்சு, படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள். அலைபேசியில் எனது கவிதைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். பின் இந்த நூலை மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார்.

பல்வேறு தலைப்புகளில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார். நூலில் 54 தலைப்புகளில் கவிதை வடித்துள்ளார். புதுவை கவிதை வானில் நூல் ஆசிரியர் இனிய தோழி கலா விசு அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக உள்ளது.

உலகிற்கு சோறு போட்ட உழவினின் நிலை இன்று கவலைக்கு இடமாக உள்ளது. அதனை உணர்த்திடும் கவிதை நன்று.

விவசாயம் வெளுத்து போச்சு!
மழையே மண்வாசனை தருவாயா?
உழவனுக்கு உயிர் மூச்சு தொடர்வாயா?
விவசாயம் செத்துப் போச்சு
அவன் வாழ்வு முடிஞ்சு போச்சு
ஊடகம் எங்கும் இதே பேச்சு
விவசாயக் குடும்பம் என்ன ஆச்சு?


விவசாயத்தின் பால், விவசாயிகளின் பால் கவனம் செலுத்துங்கள் என கவன ஈர்ப்பு செய்துள்ளார்.
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியின் அருமை, பெருமை அறிந்து வடித்த கவிதை நன்று.

தமிழ் மொழியின் பெருமை !
தமிழ் மொழி அல்ல
ஒவ்வொரு தமிழனுக்கும் அதுவே உயிர்
தமிழன் உணர்வில் கலந்த
தீராத வீரம் என் தமிழ்
தமிழ் சங்கம் தந்தான் அகத்தியன்
தமிழை உலகறியச் செய்தான் வள்ளுவன்
தமிழ் செம்மொழியானது.


குடி, வீட்டிற்கும், நாட்டிற்கும், உடலுக்கும் கேடு என்பதை அறிந்தும் குடிக்கும் அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் இன்று. அவர்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக வடித்த கவிதை நன்று.

மதுக்கடை பேசியது!
நீ தான் மாற வேண்டும் நலம் பெற
நல்ல குடியில் பிறந்த உனக்கு
குடி தான் எதற்கு?
உன்னை நம்பி எதுவும் அறியாத
குடும்பம் தான் இருக்கு !
குடிக்கு விடை கொடு
குடும்பத்தின் கை கொடு!


ஆணாதிக்க சிந்தனை என்பது குழந்தையாக இருக்கும் போதே கற்பித்து விடுகின்றனர். பெரியவன் ஆனதும் மாறுவதில்லை. பெண்களை சமமாக மதிக்க ஆதிக்க உணர்வைத் தகர்த்திட வேண்டும். அதற்காக குரல் தந்து உள்ளார்.

பெண் சுதந்திரம்!
உலகாளப் பெண்ணுக்கு வாய்ப்பு வேண்டும்
பொறுமை எனும் கடலுக்கு சுதந்திரம் வேண்டும்
ஆணாதிக்கம் அதை யோசிக்க வேண்டும்.


உலகமே வியந்தது தமிழர்களின் ஒற்றுமையைக் கண்டு. ‘ஏறு தழுவுதல்’ தடையை போராடி உடைத்தது. ஜல்லிக்கட்டு பற்றியும் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காளைகள்!
முல்லைக்கு தேர் தந்தான் தமிழ்வேந்தன்.
காளைக்கு குரல் கொடுப்பவன் வீரத் தமிழன்
தமிழன் வீரம் வீழாதிருக்க
தமிழ் காளைகள் மிரளச் செய்வான்.


மாதா, பிதா, குரு, தெய்வம் என்றனர். தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தனர். இரண்டாம் பெற்றோரான குரு பற்றிய கவிதை நன்று.

குரு வணக்கம்!
கடல் போன்ற அன்பால்
வானமே அசைந்தாடும்
எல்லையில்லா கருணையால்
நம் வாழ்வே சிறந்தோடும்.


விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கின்றது. ஏழைகளின் வாழ்வில் இன்னல் கூடிக் கொண்டே இருக்கின்றது. இங்கிலாந்துக்காரன் நம்மை ஆண்ட போது உப்புக்கு வரியா? என்று உணர்ச்சி பொங்க போராடினார்கள். ஆனால் இன்று இந்தியர்கள் ஆளும் இந்தியாவில் குடிக்கும் காபிக்கு கூட வரி போட்டு வாட்டுகின்றனர். பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே இருக்கின்றது. விலை ஏற ஏற மனதில் தீ வருகிறது. விலைவாசி பற்றிய கவிதை நன்று.

விலைவாசியே!
விலைவாசியே ஏறாதே!
மக்களை உனக்கெதிராகத் தள்ளாதே!
விலை ஏறா நிலை கொள்!
பாமரனும் உனை அடைய
வாசம் கொள் விலையே!
நீ யோசித்து நில்!.


இளைஞர்களுக்கு தொடர்ந்து முயலுங்கள், வெற்றி அடையலாம். ஒரு முறை முயன்று விட்டு தோல்வி கண்டு துவளாதே என தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக வடித்த கவிதை நன்று.

இளைஞனே போராடு!
போராட்டத்தின்
விளைவு
வெற்றியின் திறவுகோல்
தோல்வியைத் தொடர்ந்து
வெற்றி தான் !
தோல்வியைக் கண்டு
மலைக்காதே!


கடன் வாங்கினால் கவலையில் மூழ்கிட நேரிடும். படுத்தால் தூக்கம் வராது. நிம்மதி இருக்காது. அதனால் தான் அன்றே சொன்னார்கள், ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று. கடன் இன்றி வாழ்வது சிறப்பு என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.

கடனில் கவனம்!
இது பெரிய சுமை
அனைவருக்கும்
தவிர்த்தால் வாழலாம்
வளமுடன்.
நாம் போதும்
என எண்ணும் போது
உன்னுடன் கடனும்
இருக்காது.


நூல் ஆசிரியர் கவிஞர் சிவசக்தி அவர்கள் சமுதாயப் பார்வையுடன் கவிதைகள் வடித்துள்ளார். இந்த நூலில் காதல் கவிதைகள் இல்லை . பாராட்டுக்கள். பொதுவாக கவிதைகள் பலரும் கவிதை நூல் என்றால் காதல் கவிதைகள் தான் நிறைந்து இருக்கும்.

சமுதாய உணர்வுடன் விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வடித்த கவிதைகள் நன்று. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். எழுத்துப்பிழைகள் சில உள்ளன. அடுத்த பதிப்பில் நீக்கி வெளியிடுங்கள்.
 



28, பிள்ளையார் கோவில் வீதி,
ஏம்பலம் அஞ்சல்,
புதுச்சேரி-605 106.
பக்கங்கள் : 112
விலை : ரூ. 120


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்