நூல்:
அயலகக்
கவிதைக்குயில்கள்
நூல்
ஆசிரியர்:
பேராசிரியர் இரா.மோகன்
நூல் ஆய்வு:
பேராசிரியர் இராம குருநாதன்
தமிழில்
எழுதிவரும் அயலக த்தமிழ்க்கவிஞர்களை அறிமுகப்படுத்தி நூல்கள் சில
வந்துள்ளன. எனினும் முனைவர் இரா.மோகன் எழுதியுள்ள இந்நூல் வித்தியாமானது.
'அங்கங்கே தேறும் அறிவன்' என்று பழைய கவிச்சொல் ஒன்று உண்டு. இது
மோகனுக்கு மிகவும் பொருந்தும் வரிகளாகும். நூல் சோலைக்குள் புகுந்தும்,
குடைந்தும், துழாவியும் தேன்மாந்தியும் பவனி வரும் தமிழ்த்தேனீ மோகன்
அயல்நாட்டில் வாழ் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் பற்றி எழுதியிருக்கும்
இந்நூலில், பல்வேறுபட்ட அயலகக் கவிஞர்களின் கவிதைகளை ஆழ்ந்து
இரசித்துள்ளார் மோகன். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, சவூதி
அரேபியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ்க் கவிஞர்களின் கவிதை
நூல்களைத் திறனாய்ந்து அவர்தம் கவிமனத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறார்
இரா.மோகன். இரா.மோகனிடம் ஆழ்ந்திருக்கும் கவிதை உள்ளம், திறனாய்வு
வாயில் வழி நமக்குப் புலனாகிறது. மோகனிடம் எப்போதுமே ஒரு படைப்பின்
மூலவேரைக் கிள்ளி வந்து நமக்குக் காட்டிவிடுபவர். அதன் மூலமே நம்மை
படைப்பின் ஆளுமையைப் புரியவைக்கும் திறத்தர்.
சிங்கப்பூர் அமலதாசனின் கவிதைகள் எளிமையும் இனிமையும் கொண்டவை. அவற்றில்
அமர்ந்து தாம் ருசித்த கவித்தேனை அள்ளிவந்து நாமும் பருகத்
தந்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. சிங்கையை அமலதாசன்
காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகுடையது.
'அலைபாடும் கடலும் அணியாடும் கலமும்
அரசோச்சும் எழில்தங்கத் தீவு'
என்று கூறுவதில் சிங்கை மனத்தில் சிக்கெனப் பற்றிக்கொள்கிறது.
தமிழ்மொழியைப்பாடாத கவிஞர்களே இல்லை என்னும் அளவிற்கு
அயலகத்தமிழ்க்கவிஞர்கள் தாய்மொழிப் பற்றினை மறவார். அமலதாசனும் தம்
பங்கிற்கு, இந்தத் தரணியில் பிறிதொன்று தமிழினும் வல்லதோ? என்று
கேட்கிறார் கவிஞர். நா. ஆண்டியப்பன் சிங்கையில் தமிழர் வாழ்வினைப்
பாரதிதாசனின் தாக்கம் கொண்டு பாடுகிறார்.எங்கள் வாழ்வும் வளமும் என்றும்
இந்தச் சிங்கப்பூர்' உப்பு நீரின் நடுவில் மிதக்கும் உயர்தர வைரம்
சிங்கப்பூர்' என்ற வரிகளில் அழகுறச்சிங்கப்பூரைச்
சுட்டிக்காட்டியுள்ளார் ஆண்டியப்பன்.
புதுமைத்தேனீ மா. அன்பழகனின் படைப்புலகம் தனித்துவமானது. பன்முக
இலக்கிய ஆளுமை கொண்டிருக்கும் அவரது இலக்கிய உலகம் பரந்துபட்டது. அவர்
கவிஞராகவும் உலாவருவதனை மோகன் நயமுற எடுத்துக்காட்டியுள்ளார். ''சேய்நலம்
காக்காத தாயெதற்குழ சேர்ந்துவாழாத சீரெதற்கு? தாய்மொழி காக்காத
தலையெதற்கு? தாழ்மொழி விலக்காத அரசெதற்கு? என்று அவர் கேட்கும் கேள்வி
நியாமானது. அவர் சிங்கப்பூர் வாழும் தமிழர் குறித்த வெண்பா மிக மிக
பொருள் ஆழமுடையது என்பதனை,
ஊர்விட்டு ஊர்வந்து ஒன்றாகிப் போனவர்கள்
பேர்விளங்க மாறவேண்டும் பெற்ற மண்ணை ஈர்த்தவாறே
நட்டமரம் வேர்விட்டு நாளடைவில் பூப்பூக்கும்
கட்டான சிங்கப்பூர் காண்
என்ற பாடல் மிக அழகியது. புரிதல் என்ற அவரது கவிதை, அருமையான வார்த்தை
விளையாட்டு மட்டும் அன்று. பொருட்புலப்பாட்டை அழகுறத் தெரிவிக்கும்
கவிதை. பிச்சினிக்காடு இளங்கோ நல்ல கவிஞர். அவரது படைப்புகளே அதற்கு
அங்கீகாரம். பேனாவைக் கைந்நா என்று புதுமையாகச்சொல்லிப் பலரது
பாராட்டைப் பெற்றவர். இலக்கியத்தை மெளனத்தின் வெளிச்சம் என்று சொல்லும்
அவரது திறம் வியக்கற்பாலது. மோகன் இவற்றைச் 'சுண்டைக்காய்ச்சிய மொழி'
என்று வியப்பான சொல்லால் பாராட்டுவது தகும். ரஜித்தின் கவிதைகள் யாவும்
மிகவும் ரசிக்கத்தக்கவை. அழகிய படிமம் நிறைந்த அவரது சொல்லாட்சிகள்
சுவையூட்டக்கூடியன. ஒட்டாத ஸ்டிக்கரையும் ( நான் ஸ்டிக்கர்) சமையலை
ஒட்டாத உறவுகளோடு ஒப்பிட்டுரைக்கும் பெண்கவிஞர் மலர்விழி இளங்கோவன்
கவிதைகள் கற்பனை வளம் என்பதை முன்னிறுத்தாமல் அன்றாடக் காட்சிகளைச்
சமூகத்திற்குச் சொல்லும் சிறப்பின. இவரது ஒரு வரிக்க்கவிதைகள்
மிகச்சிறப்புடையவை. திருப்பமான பார்வையில் புதுமையாகக் கவிதை வடிக்கும்
நெப்போலியன் கவிதைகள் யாவும் ஆழமான அர்த்தம் தருவன. ஆனால் எளிமையன.
மரணம் பற்றிய அவரது கவிதை பொருளாழம் மிக்கது. நறுக்கு இலக்கியத்தை மிக
அதிக அளவில் அறிமுகப்படுத்தியிருக்கும் காசி ஆனந்தனின் கவிதைகளை மோகன்
எடுத்தாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. செருப்பைப் பார்க்கையில்
நீங்கள் அணிந்திருக்கிறவனின் காலைப்பார்க்கிறீர்கள், நான் செய்தவனின்
கையைப் பார்க்கிறேன் என்ற அவரது கவிதைகளில் முரண் மட்டுமா
வெளிப்படுகிறது? பலவற்றோடும் இணைத்துக்காட்ட முயல்கிறது அக்கவிதை.
வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள், காசி ஆனந்தனின் கவிதைகள் போலத் தமிழகத்தில்
பரவலாக அறியப்பட்டுள்ளன.
எல்லைகள் நூறு தாண்டினாலும்
என்னைச் சூழ எரிகிறதே
யாழ் நூலகம்
என்ற ஒரு கவிதை போதும். அவர் எப்படிப்பட்ட உணர்வினர் என்பதற்கு.
கனடாத் தமிழ்க் கவிஞர் கந்தவனம் எளிமையான கவிதைகளால் இதயத்தை
ஈர்க்கிறார். ஆன்மிகமும் தன்னம்பிக்கையும் இவரது கவிதைக்கான
கையிருப்புகள். ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்க்கவிஞர், கவிஞர்களையும்,
கலைஞர்களையும் பாராட்டியுள்ள கவித்திறத்தால் தம்மைக் கவிஞராக அடையாளம்
காட்டியுள்ளார்.
விசயலக்குமி மாசிலாமணி தன்னம்பிக்கையைப் பறைசாற்றும் கவிஞர் என்பதைத்
தம் கவிதைகளால் தனித்த அடையாளத்தைப் பெற்றவர். 'சிற்பியின் உளி சிலை
செதுக்க, சிந்தனைத் துளியோ கவி உலுக்க', என்ற கருத்தமைந்த பாடல் வரி,
அவர் கவிஞர் என்பதை உணர்த்தும். புதுயுகன் கவிதைக்கு வரைவிலக்கணம் தரும்
போது, 'நிலவில் குளித்து எழுந்தது போலே, நிலவும் இன்ப நினைவே கவிதை
என்ற வரிகளில் தாம் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதை மெய்த்துள்ளார்.
குழந்தையை தரைவந்த சூரியன், குடிசை வீட்டுப் பொக்கிசம், உசிரில் பழுத்த
பனிக்கனி என்று அடுக்கிச்சொல்லியிருப்பது அருமையுடையது. வாழு அல்லது
வாழ விடு என்ற கவிதையில்,
வாழ்க்கை உன்னைக் கசக்கிப் போட்டாலும்
மனதை அழகாக மடித்து வை-
நாளைய பட்டுத்துணி நீயாகலாம்
என்ற வரிகளில் கவிஞர் உயர்ந்து நிற்கிறார்.
அயல் நாட்டுக்கவிஞர்கள் என்றாலும் அவர்கள் கவிதையில் காலூன்றி நிற்பது
தாய்மொழியில்தான் எத்தனை பார்வைகள் அவர்களிடம் உலா வருகின்றன.
அத்தனையிலும் அவர்களின் அகமும் புறமும் தமிழாகத்தான் தெரிகிறது.
புதுமையில் பொலிவு தோன்றக் கவிதை செய்துள்ளமையை நோக்க அவர்களின்
உள்ளத்துணர்ச்சி கவிதையில் தோய்ந்திருப்பதைப்பார்க்க முடிகிறது.
அவர்களுக்குப் பாராட்டுப் பூக்களை அள்ளித்தரலாம்.
இந்நூலில், நூலாசிரியரின் நடுநிலை நோக்கும், அழகுணர்ச்சியும், நுண்மாண்
நுழைபுலமிக்கத் திறனாய்வின் தோய்வும காணக்கிடைக்கின்றன. அயலகத்
தமிழக்குயில்களைச் செறிவாக அறிமுகப்படுத்தியுள்ள நூலாசிரியரைப் பாராட்டி
மகிழலாம்.
வானதி பதிகப்பகம்,
23, தீனதயாளு தெரு. தி. நகர்,
சென்னை. 17
முதல் பதிப்பு 2016.
விலை 150.
பேராசிரியர் இராம குருநாதன்
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|