நூல்:  சிறகு முளைத்த சிந்துகள்
நூல்  ஆசிரியர்: அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
நூல் அறிமுகம்:  வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வெளிவந்திருக்கிறது மூத்த எழுத்தாளர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களின் ''சிறகு முளைத்த சிந்துகள்'' எனும் பாடல்களடங்கிய தொகுதி. 98 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 87 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலானது அப்துல் குத்தூஸ் அவர்களின் ஐந்தாவது நூல் வெளியீடாகும். ஏற்கனவே ஸ்ருதி தேடும் சந்தங்கள் (பாடல்) 1999, சம்மதமில்லாத மௌனம் (கவிதை) 2000, தேறாத தேர்வு நாடி (கவிதை) 2001, வெற்றுக் கண் (கவிதை) 2016 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

''சிறகு முளைத்த சிந்துகள்'' நூலானது பாடல் துறையில் ஆர்வங்காட்டும் பாடலாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உள்நாட்டுப் பாடலாசிரியர்களின் பாடல்களுக்கு முக்கியங்கொடுத்துவந்த
1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலிலிருந்து இலங்கை வானொலியில் இந்த நூலாசிரியரின் பல பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு பிரபல இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டு வௌ;வேறு முன்னணிப் பாடகர்களால் பாடப்பட்டுள்ளன. இசையை இரசிக்காத உள்ளங்கள் இல்லை என்று சொல்லலாம். இசைப் பாடல்கள் இரசிகர்களின் மனதைக் கட்டிப்போடக் கூடியவை. ஏனைய துறைப் படைப்புகளைவிட இசைப் பாடல்களே வாசகர்களின் அல்லது நேயர்களின் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சில பாடல்கள் காலத்தால் அழியாதவையாக நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.

நூலாசிரியர் தனதுரையில் ''தூரமாகிப் போன நம் இடைவெளியை ஓரமாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இந்நூல். இதுவரையில் வானலை வழியே வந்து, உங்கள் வாசற் கதவுகளைத் திறந்து, செவிகளை ஊடறுத்து, இதயங்களை ஈர்த்த எனது பாடல்களைக் கோவையாக்கி சிறகு முளைத்த சிந்துகளாய் உங்கள் வாசிப்புக்காக இத்தால் வழங்கி வைக்கின்றேன். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்பதாக என் கற்பனைக்கு முளைத்த சிறகுகள், கன்னித் தமிழைப் புணர்ந்தபோது கருத்தரித்த கவிதைகள் இலங்கை வானொலி, இலங்கை ரூபவாஹினி வழங்கிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு உங்கள் வாழ்விடம் தேடி வலம் வந்திருக்கின்றன பல தடவைகள். அதற்காக அடியேன் நான் தாண்ட வேண்டியிருந்தது பல கடவைகள். ஆம். அது நம் நாட்டுக் கலையகங்களின் பண்பாட்டோடு சம்பந்தப்பட்ட சமாச்சாரம், இசைப் பாடல்களை நூலாக்கும் முயற்சி எமது நாட்டைப் பொறுத்தவரையில் இன்னும் வளர்ச்சியடையாத வாய்ப்பாடாகவே இருந்துகொண்டிருக்கிறது. இலக்கியத் துறையின் ஏனைய வடிவங்களான சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், விமர்சனம் சார்ந்த நூற்களோடு ஒப்பிடும் போது இசைப் பாடல் நூற்களின் வெளியீடானது விசையோடு பேசக்கூடிய விடயமாக இல்லை'' என்று பாடல்கள் நூல் வெளியீட்டின் சிரமம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், சிறுவர் படைப்புக்கள் போன்ற ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பாடல்களடங்கிய நூல்களின் வெளியீடு மிகவும் குறைவே. இளந் தலைமுறைப் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ''மெல்லிசைத் தூறல்கள்'' என்ற பாடல்களடங்கிய நூல்
2015 இல் வெளிவந்துள்ளது என்ற தகவல் நினைவுக்கு வருகிறது. அத்துடன் மர்கூம் இசைக்கோ நூர்தீன் அவர்களின் ''வானலைகளில் தேன் துளிகள்'', மருதூர் ஜமால்தீனின் ''இஸ்லாமிய கீதங்கள்'', மலரன்பனின் ''மாவலியே மாநதியே'' இப்படியாக வெளிவந்துள்ள ஒரு சில பாடல்களடங்கிய தொகுதியானது புதிதாக பாடல் துறைக்குள் வருபவர்களுக்கு நிச்சயமாக பெரும் துணை புரியும்.

இசைப் பாடல் நூல் வரிசையில் நூலாசிரியரின் ''சிறகு முளைத்த சிந்துகள்'' என்ற இரண்டாவது நூலே ஸ்ருதி சேர்க்கப்பட்ட சந்தங்களாக இருப்பது அவதானிக்கத்தக்கது. இந்த நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அரங்கேற்றம், மெல்லிசைப் பாடல்கள், சந்தனமேடை, ஒலிமஞ்சரி நம் நாட்டுப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கலையரங்கம், காதம்பரி, உதயகீதம், மின்னும் தாரகை போன்ற நிகழ்ச்சிகளிலும், உள்ளுர் வீடியோ திரைப் படங்களான அன்புள்ள அவள், முதல் வார்த்தை, மலரே மௌனமா போன்ற திரைப்படங்களிலும் ஒலி, ஒளிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. ''சிறகு முளைத்த சிந்துகள்'' நூலில் அன்பு, காதல், சோகம், தாய்மை, தத்துவம், மழலை, நட்பு, இயற்கை போன்ற பல கருப்பொருட்களை மையப்படுத்தியதாகவே பாடல்கள் பாடலாசிரியர் அப்துல் குத்தூஸ் அவர்களினால் யாக்கப்பட்டுள்ள பாடல்களே உள்ளடங்கியுள்ளது. வாசகர்களின் இரசனைக்காக சில பாடல்களை இங்கு எடுத்து நோக்குவோம்.

இசையமைப்பாளர் ஆர். முத்;துசாமி என்பவரால் இசையமைக்கப்பட்டு ரோகினி சகோதரிகளால் பாடப்பட்ட இறை துதி (பக்கம்
12) என்ற பாடல் இறைவன் துதி பாடும் பாடலாக அமைந்திருக்கின்றது. நமக்குள் இருக்கும் ஆற்றல், திறமை எல்லாம் தந்தது இறைவன். இறைவனின் அருள் கொண்டு ஒரு சிறந்த படைப்பாளியாகத் திகழும் நூலாசிரியர் இறைவனை எண்ணி எழுதியிருக்கும் பாடலில் அவரது மார்க்கப் பற்றையும் அவதானிக்க முடிகின்றது. எதுவுமே தானாகக் கிடைப்பதில்லை. கடவுளின் கடாட்சமே தலையாயது என்பதை இப்பாடல் மூலம் உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர்.

கவிபாடக் குரல் தந்த இறைவா - உனை
துதி பாட நான் வந்தேன் தலைவா
கலை வாழ்விலே புகழ் கோடியே
புகழ் யாவும் நீ செய்த அருள் கூடியே

தினந்தோறு முன் துணை வேண்டினேன்
இசை பாடினேன் ஓர் இடம் தேடினேன் - அவ்
இடம் என்றும் எனக்கில்லை உனக்காகுமே
கலை வாழ்விலே புகழ் கோடியே
புகழ் யாவும் நீ செய்த அருள் கோடியே


கண்ணன் நேசம் என்ற இசையமைப்பாளரினால் இசையமைக்கப்பட்டு திலக நாயகம் போல் என்ற பாடகரால் பாடப்பட்ட தாயே உனக்காக... (பக்கம் 15) என்ற பாடல் தாயின் பெருமையை உணர்த்தி நிற்கின்றது. பாசம் என்ற சொல்லுக்கு பாத்திரமானவள் தாய்தான். தாயின் அன்பும் அரவணைப்பும் இன்றி ஒருவன் தரணியில் மிக நல்லவனாக இருக்க முடியாது. தாயின் நிழலில் வளரும் குழந்தை மென் மனது படைத்தாக இருக்கும். கவிஞரின் மெல்லிய மனதை இப்பாடலினூடாக இனங் காணலாம்.

என் தாயே உனக்காக நான் பாடுவேன்
என்னாளும் உனை எண்ணி நான் வாழுவேன்
தந்தாயே எனக்காக உன் வாழ்வையே
தவித்தாயே எனைக் காக்க தினம் நீயுமே

கண்ணாகக் காப்பாயே எனை நாளுமே
காணாமல் துடிப்பாயே மனம் வாடியே
பொன்னாக நினைத்தாயே எனை நீயுமே
புகழ் சேர வளர்த்தாயே புவி மீதிலே


பயாஸ் ரட்ணம் என்ற இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்டு எம்.ஜே. அன்சார் என்ற பாடகரால் பாடப்பட்ட காற்றின் காதல் (பக்கம்
19) என்ற பாடல் ரசிக்கத் தக்கதாக அமைந்திருக்கின்றது. சொற் சேர்க்கைகள் புதுமை சேர்க்கின்றன. இப்பாடலை செவி வழி கேட்காவிட்டாலும் வார்த்தைகளின் வர்ண ஜாலத்தில் நமக்கே ஒரு மெட்டு பிறந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. தென்றல் உண்ண வேண்டும் என்று பூவானது தேனைச் சிந்துகிறதோ? என்ற கற்பனை அபாரமானது.

கன்னிப் பூவைப்
பின்னிக் கொள்ள
காற்று வந்ததோ - பூங்
காற்று வந்ததோ

காதின் ஓரம்
வந்து காதல்
சேதி தந்ததோ - புது
சேதி தந்ததோ

தென்றல் தொட்ட போது பூவும்
நாணம் கொண்டதோ - அதை
வானம் கண்டதோ
தென்றல் உண்ண வேண்டு மென்று
தேனைச் சிந்துதோ - பூ
தேனைச் சிந்துதோ


ஆர். முத்துசாமியால் இசையமைக்கப்பட்டு கமலோஜினி என்ற பாடகியால் பாடப்பட்ட செல்லக் குழந்தை (பக்கம்
29) என்ற பாடல் அருகிலேயே சிறு குழந்தை ஒன்றை பார்க்கும் பிரமையை ஏற்படுத்துகின்றது. குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகளோடு இருப்பவர்களும் ஒரு குழந்தையாக மாறித் தம் கவலைகளை மறந்து விடுவார்கள். குழந்தையின் மென் கன்னங்கள் உலகிலுள்ள அனைத்தையும் விட அழகானதல்லவா? பிரிதொரு பாடலில் கூட குழந்தையின் கன்னத்தை சீன நகரப் பட்டே என்று பாடலாசிரியர் வர்ணித்திருக்கும் கற்பனை பிரமாதம். அந்தப் பிஞ்சுக் குழந்தை பற்றிக் கவிஞனின் பார்வை கீழுள்ள வரிகளில் இவ்வாறு அமைந்திருக்கின்றது.

செல்லக் குழந்தை ஒன்று
மெல்லத் தவழ்ந்து வந்து
என்னை அணைத்துக் கொள்ளுதே
சொல்லத் தெரியாமல்
சொல்லிப் புரியாமல்
கண்ணைச் சிமிட்டுகின்றதே

முத்துச் சிரிப்போடு நித்தம் துடிப்போடும்
முத்தம் எனக்குத் தருகுதே
கொஞ்சும் கிளி போலும் கூவும் குயில் போலும்
பிஞ்சாய் மழலை சொல்லுதே
சொல்லித் தெரியாமல்
சொல்லப் புரியாமல்
கண்ணைச் சிமிட்டுகின்றதே


இசையமைப்பாளர் ஆர். முத்துசாமியால் இசையமைக்கப்பட்டு பாடகி உதயராணியால் பாடப்பட்ட சிறகில்லாப் பறவை (பக்கம் 65) என்ற பாடல் காதல் பிரிவை எடுத்துக் கூறுகின்றது. காதல் என்ற ஒன்றால்தான் உலகம் இயங்குகின்றது. மானிடம் தழைக்கின்றது. பார்வைகள் மோதி இதயங்கள் பரிமாறப்படும் போது காதல் பிறக்கிறது. அவ்வாறு பிறந்த காதல் பிரிந்து போனால் ஏற்படும் ஏக்கம், கலக்கம், துயரம் எல்லாவற்றையும் இப் பாடல் கொண்டுள்ளமை அவதானிப்புக்குரியது.

பறவை போல சிறகிருக்கும்
பிறவியாக நான் இருந்தால்
உறவை நாளும் வளர்த்திருப்பேன்
பிரிவை நானும் மறந்திருப்பேன்
தூதனுப்ப ஆளுமின்றி
காதிரெண்டில் சேதியின்றி
மாது நானும் மயங்குகிறேன் இங்கே - என்
மன்னவனும் போன இடம் எங்கே

நீயில்லாது வாழும் மங்கை
நீரில்லாத ஓடம் இங்கே
வேரில்லாத மரம் எனக்கு
வேண்டியவன் இல்லை இங்கே
தூதனுப்ப ஆளுமின்றி
காதிரெண்டில் சேதியின்றி
மாது நானும் மயங்குகிறேன் இங்கே - என்
மன்னவனும் போன இடம் எங்கே


பாடல் என்பது, நினைத்த மாத்திரத்தில் எழுத முடியாது. சூழ்நிலைகளை, சந்தங்களை, இசையை மனதிலிருத்தி அதற்கேற்ற விதத்தில் புதுமையைப் புகுத்தி, காலத்துக்கேற்றாற் போல் எழுத வேண்டும் என்பதே அதற்கான காரணம். அதனால் நிறைய மினக்கெட்டே எழுத வேண்டியிருக்கிறது. அவ்வாறான முயற்சியில் நூலாசிரியர் பெரும் வெற்றி பெற்றதாகவே உணர்கிறேன். கவிதைகள் மீது அதீத ஈடுபாடு உடைய கவிஞருக்கு பாடல்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டமை ஒன்றும் வியப்பல்ல. அவ்வாறு அவர் எழுதிய பாடல்கள் இசையமைக்கப்பட்டிருப்பதானது அவரது எழுத்துக்குக் கிடைத்த அங்கீகரமாகும். இவரது ஷஷசம்மதமில்லாத மௌனம்|| என்ற சந்தக் கவிதை நூலை அந்நாட்களில் வாசித்த நான் எனது கவித்திறனை வளர்த்துக்கொள்ள அந்த நூல் பெரும் வாய்ப்பாக அமைந்தது என்று முழு சம்மதத்துடன் சொல்லியே ஆகவேண்டும். மென்மேலும் அவரது முயற்சிகள் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!.
 



நூல் - சிறகு முளைத்த சிந்துகள்
நூலின் வகை - பாடல்
நூலாசிரியர் - அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
வெளியீடு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
தொலைபேசி - 0772040919

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்