நூல் :
திருக்குறள் நடைமுறை
உரை
நூல்
ஆசிரியர்:
பேராசிரியர் இராம.குருநாதன்
நூல்
ஆய்வு:
முனைவர்
இரா.மோகன்
உலகப்
பொதுமறையாம் திருக்குறளுக்குப் பழங்காலத்தில் பரிமேலழகர், மனக்குடவர்
உள்ளிட்ட பதின்மர் உரை கண்டுள்ளனர். இருபதாம் நூற்றாண்டிலும் 'தெளிவுரை'
(மு.வ., வ.சுப.மாணிக்கம்), 'விரிவுரை' (திரு.வி.க.), 'மரபுரை' (பாவாணர்),
'விளக்கத் தெளிவுரை' (ம.ரா.போ.குருசாமி), 'நுண்பொருள் உரை' (தமிழண்ணல்),
'எளிய தெளிவுரை' (சி.இலக்குவனார்), 'பன்முக உரை' (பிரதாப்), 'மக்கள் உரை'
(கு.மோகனராசு), 'மெய்யுரை' (கு.வெ.பாலசுப்பிரமணியன்), 'புதிய உரை' (சுஜாதா),
'எளிய உரை' (சுந்தர ஆவுடையப்பன்) என்றாற் போல் பல்வேறு பெயர்களில்
திருக்குறளுக்கு உரைகள் எழுந்துள்ளன. இருத்தியோராம் நூற்றாண்டில் இவ்
வரிசையில் பேராசிரியர் இராம.குருநாதன் திருக்குறளுக்கு 'நடைமுறை உரை'
வரைந்துள்ளார். இதன் அமைப்பும் அழகும் குறித்து ஈண்டு சுருங்கக் காணலாம்.
நடைமுறை உரையின் தனிச்சிறப்பு
நடைமுறையில் – புழக்கத்தில் – மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில்
பயின்று வரும் எளிய சொற்களைக் கையாண்டு தெளிவான முறையில் திருக்குறளின்
கருத்துக்களை விளக்கிச் சென்றிருப்பது நடைமுறை உரையின் தனிச்சிறப்பு
ஆகும். ஓர் எடுத்துக்காட்டு:
திருக்குறளின் 62-ஆம் அதிகாரம் 'ஆள்வினையுடைமை'. இதற்கு 'இடைவிடா
முயற்சி' என எளிமையான சொற்களில் விளக்கம் தரும் பேராசிரியர்
இராம.குருநாதன்,
'பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி' (618)
என வரும் இவ்வதிகாரத்தில் எட்டாம் குறட்பாவுக்கு வரைந்திருக்கும்
நடைமுறை உரை வருமாறு.
'மாற்றுத் திறனாளியாக இருப்பது எவர்க்கும் பழி ஆகாது; அறியத்தக்கன-வற்றை
அறிந்து முயற்சி மேற்கொள்ளாமையே பழியாகும்.'
இங்கே 'பொறியின்மை' என்பதற்கு 'மாற்றுத் திறனாளியாக இருப்பது' எனப்
பேச்சு வழக்கில் உள்ள தொடரினைக் கையாண்டு பேராசிரியர் இராம.குருநாதன்
வரைந்திருக்கும் உரை விளக்கம் குறிப்பிடத்தக்கது.
நடைமுறையில் வழங்கும் சொற்களையும்
தொடர்களையும் ஆளல்
'நடைமுறை உரை' என்னும் பெயருக்கு ஏற்ப, 'வானின்று உலகம் வழங்கி வருதலால,
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று' (11) என்ற குறட்பாவிற்கு பேராசிரியர்
இராம.குருநாதன் எழுதியுள்ள உரை விளக்கம் வருமாறு.
'உலக உயிர்களுக்கு வாழ்வாதாரம் வான்மழை; எனவே அதனை அமிழ்தமாய் உணர
வேண்டும்.'
இங்கே 'உலக உயிர்களுக்கு வாழ்வாதாரம்' என்னும் நடைமுறை வழக்கில் உள்ள
உயிர்ப்பான தொடரால் வான்மழையைப் பேராசிரியர் இராம.குருநாதன்
சுட்டியிருப்பது அருமை; அழகு.
'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு' (1076)
என்பது 'கயமை' அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் ஏழாவது குறட்பா.
இதற்குப் பேராசிரியர் இராம.குருநாதன் தந்துள்ள நடைமுறை உரை விளக்கம்
வருமாறு:
'கையை முறுக்கிக் கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கும்
வன்முறையாளர்க்கன்றி மற்றவர்களுக்குக் கயவர் எச்சிற் கையைக்கூட உதற
மாட்டார்கள்'. இவ்வுரை விளக்கம் புழக்கத்தில் வழங்கும் எளிய சொற்களில்
அமைந்து குறளின் கருத்தினைத் தெளிவுற மொழிந்திருப்பது கண்கூடு.
அதிகாரப் பெயர்களுக்கான தெள்ளிய விளக்கங்கள்
நடைமுறைக் கண்ணோட்டத்தில் திருக்குறள் அதிகாரப் பெயர்களுக்குப்
பேராசிரியர் இராம.குருநாதன் எளிமையும் தெளிவும் விளங்க எழுதிச்
சென்றிருக்கும் விளக்கங்கள் சுவை மிக்கவை; புலப்பாட்டுத் திறம்
பொருந்தியவை. இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில சான்றுகள்
வருமாறு:
1. 'ஈகை' (23): 'பொருள் இல்லாதவர்களுக்கு உதவுதல்'.
2. 'அருளுடைமை' (25): 'அனைத்து உயிரிடத்தும் பரிவு காட்டுதல்'.
3. 'பெரியாரைத் துணைக்கோடல்' (45): 'அனுபவம் முதிர்ந்த பெரியவர்-களைத்
துணையாகக் கொள்ளல்'.
4. 'வினைத் திட்பம்' (67): 'செயலுக்கான மன உரம்'.
5. 'மருந்து' (95): 'உடல் நலம் காத்தல்'.
6. 'காதற் சிறப்புரைத்தல்' (113): 'காதலின் நுண்ணிய சிறப்பு'.
7. 'உறுப்பு நலனழிதல்' (124): 'மேனி அழகு கெடுதல்'
சுருங்க கூறி விளங்க வைத்தல்
சுருங்கக் கூறி விளங்க வைப்பது நடைமுறை உரையின் பிறிதொரு சிறப்புப்
பண்பு ஆகும். சான்றாக, 'நிலையாமை' அதிகாரத்தில் வரும்இ 'உறங்குவது
போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' (339) என்னும்
குறட்பாவுக்குப் பேராசிரியர் இராம.குருநாதன் எழுதியிருக்கும்
சுருக்கமான உரை விளக்கத்தினை இங்கே சுட்டிக்காட்டலாம்:
'இறத்தல் தூக்கம் போன்றது; பிறத்தல் விழித்தல் போன்றது'. ஆறே ஆறு
சொற்களில் இரத்தினச் சுருக்கமான முறையில் இவ்வுரை விளக்கம்
அமைந்திருப்பது சிறப்பு.
காமத்துப்பால் 'தகையணங்குறுத்தல்' அதிகாரத்தில் வரும், 'ஒண்ணுதற் கோஒ
உடைந்ததே ஞாட்பினுள், நண்ணாரும் உட்கும்என் பீடு' (1088) என்னும் அழகிய
குறட்பாவுக்குப் இராம.குருநாதன் தீட்டியிருக்கும் நடைமுறை உரை வருமாறு:
'போர்க்களத்தில் என்னை வெற்றி கொள்ள முடியாத எனது வீரமிக்க பேராற்றல்,
ஒளிபொருந்திய இவளது நெற்றியைக் கண்ட அளவிலேயே சுக்குநூறாக உடைந்து
தோற்றுப் போனதே!' இவ்வுரை விளக்கத்தில் இடம்-பெற்றிருக்கும் 'சுக்குநூறாக'
என்னும் நடைமுறைச் சொல்லால் தலைவியின் அழகு தலைவனை வருத்தும் பாங்கினைத்
திறம்பட உணர்த்தி இருப்பது நோக்கத்தக்கது.
நிறைவாக, பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் குறிப்பிடுவது போல், 'இவ்வுரை
எளிமைக் கோலத்தில் இனிமை தந்து (படிப்பவர்) நெஞ்சைக் கவர்வதாய்
அமைந்துள்ளது' (அணிந்துரை, திருக்குறள் நடைமுறை உரை, ப.8) எனலாம்.
நூல் :
திருக்குறள்
நடைமுறை உரை
நூல்
ஆசிரியர்:
பேராசிரியர் இராம.குருநாதன்
டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை.
விலை ரூ. 100.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|