நூல் : சூனியத்தை நோக்கி.....
நூல் ஆசிரியர்
 :  ஜுனைதா ஷெரீப்
நூல் விமர்சனம் :
ஏ.பீர் முகம்மது

"போத்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணம் சின்னக்கடைப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் .பின்னர் ஒரு தடவை தென்மிருசுவிலில் இருந்து கலைக்கப்பட்டார்கள். ஒல்லாந்தர் ஆட்சியில் நல்லூர் கோயில் புனரமைப்பின்போதும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆனால் யாழ்ப்பாணம் முழுவதும் பரந்து வாழ்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே தடவையில் வெளியேற்றப்படுவது இதுதான் முதல் தடவை" என்ற வரலாற்றுத் தகவலைச் சுமந்த வண்ணம் வெளிவந்திருக்கிறது "சூனியத்தை நோக்கி......" என்ற நாவல் . பிரபல நாவலாசிரியர் ஜுனைதா ஷெரீப் 2017 அக்டோபரில் இதனை எழுதி வெளியிட்டுள்ளார்.

யாழ் மண்ணிலிருந்து 1990 இன் பிற்கூறில் முஸ்லிம் மக்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட அவலத்தை பலரும் தொட்டம் தொட்டமாகவும் தோதுப்பட்டவாறும் எழுத்தாக்கியிருந்தாலும் நிகழ்வு இடம்பெற்று கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் கடந்த நிலையில் இடப்பெயர்வு பிரசவித்த வலியின் ஒரு பின்னத்தை ஜுனைதா ஷெரீப் நாவல் வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளார். அதன் மூலம் முஸ்லிம் மக்களின் யாழ்வெளியேற்றத் துன்பியலை மையப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் என்ற அங்கீகாரத்தையும் அதற்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக மாநிலமெங்கும் தமிழ் மக்கள் அடிக்கடி இடப்பெயர்ந்து இன்னல்கள் பலவற்றை அநுபவித்தவர்கள். இந்த அவலங்களைப் பற்றிக் கண்ணீர்விட்ட பல பிரதிகள் நமது கைகளில் உள்ளன. அவற்றுள் இடப்பெயர்வை உள்ளீடாகக் கொண்டு செங்கை ஆழியான் தந்த "விடியலைத் தேடி " (2011) என்ற நாவல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. நந்திக்கடல் தாண்டுதல் , வெள்ளைக்கொடி விவகாரம் போன்ற சர்வதேச சமாச்சாரங்களையும் புலிகளின் உள்வீட்டுச் சமன்பாடுகளையும் நாவலுக்குள் கொண்டு வந்து போரிலக்கியத்தைப் புருவம் உயர்த்திப் பார்க்க வைத்தார். செங்கை ஆழியானைத் தொடர்ந்து ஜுனைதா ஷெரீப் இடப்பெயர்வை இலக்கியமாக்கியிருக்கிறார்.

ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜுனைதா ஷெரீப் நன்கு அறிமுகமானவர். தினகரன், வீரகேசரி போன்றவற்றில் தொடர் கதைகளை எழுதியவர். 'அவன் ஒன்று நினைக்க (1976) என்ற பெயரில் முதல் நாவலை வெளியிட்டார். இவ்வாக்கம் எழுதப்படும்பொழுது இன்றுவரை பதின்மூன்று நாவல்களை நூல்களாகத் தந்தவர். சாணைக்கூறை என்ற நாவலை எழுதியதன் மூலம் இளங்கீரனின் அரியாசனத்துக்குச் சரியாசனம் பெற்றவர். தனிப்பட்ட வாழ்விலும் உயர்நிர்வாகியாக இருந்த நிலையிலும் இனத்துவச் சித்து விளையாட்டை , பூச்சி அளவிலேனும் தன்னருகில் வைத்துக் கொள்ளாதவர். தேசிய விருதுகளும் பட்டங்களும் வென்றவர். இந்த நாவலை எழுதியதன் மூலம் தனது ஆற்றலை மீண்டும் புடம் போட்டுக் காட்டியிருக்கிறார்.


( 02 )

சோனகத் தெரு என்ற பகுதி யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களைச் சுமந்த மண். அங்குதான் சுல்தான் ஹாஜியாரின் குடும்பமும் அவரின் வியாபார முயற்சியும் வித்தானது. சுகயீனம் காரணமாகவும் மரணத்தின் பின்னரான காலத்தில் குடும்பம் மற்றும் தொழில் பராமரிப்புக்காகவும் தனது கடையில் வேலைக்கிருந்த சலீம் என்ற இளைஞரை நண்பனான சாவகச்சேரி பொன்னுத்துரையின் ஆலோசனையின் பேரில் மகளுக்கு மாப்பிள்ளையாக எடுத்தார். ஹாஜியாரின் மறைவின் பின்னர் மருமகன் சலீமும் சாவகச்சேரி பொன்னுத்துரையும் பத்து இலட்சம் முதலீடு போட்டு நகைக்கடை வியாபாரம் செய்ய ஏற்பாடுகள் செய்கின்றனர். இந்த நிலையில்தான் இரண்டு மணி நேர இடைவெளிக்குள் யாழ் மண்ணை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டுமென்ற புலிகளின் உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது.

சலீமின் தாய்வழிக் குடும்பம் சாவகச்சேரியில் இருந்தது . அந்தக் குடும்பமும் இடப்பெயர்வில் இணைந்து கொள்கின்றது.வருடக் கணக்கில் அகதிமுகாம் வாழ்க்கை .

இந்தக் காலத்தின்போது யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்திருந்த தமிழ், சிங்கள உறவுகளைச் சந்திக் கின்றனர்.அவர்களின் உதவிகள் ஒத்தாசைகள் கிடைக்கின்றன. உழைப்பு மீதான பக்தியினாலும் பலத்த முயற்சியினாலும் புதிய வாழ்வொன்று அகதி மண்ணிலே கட்டியெழுப்படுகின்றது.

ஆனாலும் சொந்த மண்ணுக்கு மீள வேண்டுமென்ற ஆசையும் அதன்மீது ஒட்டியிருக்கும் விடுபட முடியாத ஏக்கமும் சகோதர இனத்தாருடன் பின்னிப் பிணைந்து வாழ விரும்பும் அவர்களது எதிர்பார்ப்பும் என்றோ ஒருநாள் நிறைவேறும் என்ற கனவுகளுடன் வடபுல முஸ்லிம் அகதிகளின் காலம் கழிந்து கொண்டிருந்தது.



(03)

நாவல் இரண்டு பாகங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாம் பாகம் குடும்ப வாழ்வின் பின்னல்களையும் மறுபாகம் அகதி வாழ்வின் இன்னல்களையும் பேசுகின்றது.

சோனகத் தெருவில் தொடங்கும் கதையின் களம் வவுனியா, மாத்தளை, உக்குவளை , புத்தளம் என்று விரிந்து செல்கின்றது. பனை மரம், வடலி, துலாக்கோல், செம்பாட்டி மண் என்ற வழமையான யாழ்ப்பாணத்து படைப்பாக்க வரன்முறைகளிலிருந்து விலகி "கிணற்றைச் சுற்றி உயர்ந்து நின்ற பாக்கு மரங்களின் பூக்கள் சிதறிக் கிடந்தன. " என்று சோனகத் தெரு அறிமுகமாகின்றது. மறுபுறம் "முதல் நாள் இரவு பெய்த பெருமழை காரணமாக மலக்குழிக்குள் இருந்து வெளியேறிய அசிங்கங்கள் தொட்டம் தொட்டமாகக் கிடந்தன " என்று புத்தளத்து அகதிமுகாம் படம் பிடிக்கப்படுகின்றது. இது போன்ற எழுத்தாடல்கள் பிரதியாளனின் வல்லமையை ருசுப்படுத்துகின்றன.

இந்நாவலின் இன்னுமொரு சகாயம் அதன் கதை மாந்தர்கள் .அவர்கள் நாவலுக்குத் தோள் கொடுக்கிறார்கள்.

துயில் விட்டெழுந்து சுபுஹ் தொழுகைக்குத் தயாராகும் சுல்தான் ஹாஜியார்தான் நாவலில் நம்மைச் சந்திக்கும் முதல் மனிதர்.

"கிணற்றுத் துலாவில் நீர் மொண்டு சுட்டு விரலால் பல் துலக்கி நாக்கு வழித்து பலமாக இருமி காறித் துப்பி வயிற்றினுள் குடமுருட்டி காற்றை சத்தத்துடன் வெளியேற்றி வுளு செய்தார். கிணற்றுக் கொடியில் கிடந்த துவாயைப் பற்றி முகம் துடைத்தார் " என்று ஹாஜியாரின் அறிமுகம் எழுத்தாகியுள்ளது.எந்தவொரு வேலையையும் பாக்கி வைக்காமல் செய்து முடிக்கும் அவரின் பண்பு மட்டுமல்லாமல் நாவலாசிரியரின் பாத்திர வார்ப்பு வாண்மையும் இங்கு வெளிச்சமாகின்றது.

இவ்வாறே சலீம் முதலாளி , பொட்டணி வியாபாரி ஹனீபா , லெவ்வை சமது ஆகிய முஸ்லிம் பாத்திரங்களோடு சாவகச்சேரி பொன்னுத்துரை, மெக்கானிக் குணரத்ன ஆகிய தமிழ் , சிங்களக் கதாமாந்தர்களையும் நாவலில் உலாவவிட்டு சமகால சமூகத் தேவையின் குரலாகவும் அவர்களை அறிமுகப்படுத்தி கை தட்டுப் பெறுகிறார் ஜுனைதா ஷெரீப் .

ஏழைகளோடு இணக்கமில்லாத குணவியல்பு கொண்ட ஹாஜியாரின் மனைவி நபிஸா, மகள் மூமீனா ஆகியோருக்கு அகதி வாழ்க்கை மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இவர்களைப் பாத்திரமாக செதுக்கியதன் மூலம் வாழ்வின் இன்னுமொரு பக்கத்தை ஆசிரியர் நமக்கு நினைவூட்டியுள்ளார். வயதுக்கு மீறிய தியாகத்தின் மூலம் நாசர் என்ற பாத்திரம் மனதின் ஒரு மூலைக்குள் இடம் பிடித்துக் கொள்கிறது.

ஒன்றிலும் மற்றொன்று தூக்கலாக இல்லாத சமதிணிவுள்ள கதாபாத்திரங்கள் என்பது இந்நாவலின் விசேட குறிப்பாகும்.

நாவலின் மொழிபற்றியும் இங்கு பேசுதல் வேண்டும். புனைவு மொழி என்பது படைப்பாளியின் ஒலிபெருக்கியாக இல்லாமல் கதாபாத்திரத்தின் உணர்வுகளையே அது கொண்டு வரவேண்டும். இந்நாவல் அதனை நிறுவியுள்ளது.

யாழ் மண்ணை விட்டு வெளியேறுவதற்குச் சற்று முன்னதாக பள்ளிவாயலில் இறைவனிடம் கையேந்திப் பிரார்த்தனை செய்கிறான் சலீம் .

"ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு மேலாக உனக்கு வழிபடும் முஸ்லிம்களான நாங்க இந்தப் பகுதியிலே வசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்க எங்களின் சகோதர தமிழ் மக்களோட எப்படியெல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்பது உனக்குத் தெரியும். நாங்க அவங்களிடத்தில எதையுமே கேக்கல்ல. அவங்களுக்கு எந்தப் பாவமும் செய்யேல்ல. எந்தத் துரோகமும் செய்யேல்ல . அப்படித்தான் எவராவது செய்திருந்தா அவங்களை மட்டும் தண்டிக்காம எங்க முழுப்பேரையும் தண்டிக்கிறாங்க யாஅல்லாஹ்" கண்களில் வழிந்த கண்ணீரை விரல்களால் நீவி விட்டவாறே சலீம் பிரார்த்தனையைத் தொடர்ந்தான் .

இந்தப் பிரார்த்தனைக்குள் புனைவு மொழியின் ரீங்காரம் ஒலிப்பதைத் தெளிந்து கொள்ளலாம்.இதுவொரு சோற்றுப் பதம்தான். ஆரவாரமில்லாத புனைவு மொழி இந்நாவலுக்குப் பலம் சேர்க்கிறது.


(04)


குறிப்பொன்றை இங்கு பதிவிடுதலும் வேண்டும், நாவல் என்ற புனைவின் வரையறுக்கப்பட்ட அதன் எல்லைகளை மீறாதவகையில் இன்னும் சில விடயங்களும் பேசப்பட்டிருக்கலாம் . இன்றைய இலக்கியம் நாளைய வரலாற்றுக்குத் தீனியாகலாம். நாணயங்கள், கல்வெட்டுகளைப் போலவே இலக்கியங்களும் தொன்மையின் சாட்சியங்கள்.

அந்தவகையில் வெளியேற்றத்திற்கான காரணமும் நாவலுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் . அரசியல் , பொருளாதார, சமூக மோதல்கள் இருந்தனவா என்பது பற்றி எதுவும் பேசப்படவுமில்லை. இவை நாவலின் குறைபாடா ? இன்றைய இலக்கியமே அதனைத் தீர்மானிக்கும்.

விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம் இளைஞர்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்ற காரணத்தை முன்வைத்தே யாழ் முஸ்லிம்கள் ஆயுதக் குழுவொன்றினால் வெளியேற்றப்பட்டார்கள் என்று பரவலாக நாவலுக்கு வெளியே பேசப்பட்டது . தமிழ் இளைஞர்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்பதற்காக குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாத நிலையில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் வெளியேறும் தண்டனை. ? ஒரு சில தனிநபர்களின் காட்டிக் கொடுப்புக்காக முழுச் சமூகமும் தண்டிக்கப்பட்ட அகோரம் எந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் வருகிறது .? காட்டிக் கொடுப்பு நெருக்கடிகள் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்குமா ?

இது பற்றி நியாயம் தெரிந்த பக்கமெல்லாம் வாதங்களும் விவாதங்களும் இடம் பெற்றன. கால் நூற்றாண்டும் கழிந்த பின்னர் "யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையே " என்று தீர்ப்புச் சொல்லி இப்போதுதான் தமிழர் அரசியல் வாய் திறந்து பேச முன்வந்துள்ளது.

இதற்காகவே காத்திருந்ததைப்போல காலம் பார்த்து இருபத்தேழு வருடங்கள் கடந்த நிலையில் "சூனியத்தை நோக்கி ..... " என்ற நாவலைச் செப்பமாகத் தந்துள்ளார் ஜுனைதா ஷெரீப் .

யாழ் முஸ்லிம்களின் வாழ்வியல் கோலங்களையும் பண்பாட்டு அடையாளங்களையும் வர்த்தக சமூகத்தின் நகர்வுகளையும் மையப்பொருளுக்குச் சேதாரம் இல்லாமல் இந்நாவல் வெளிப்படுத்தியிருப்பது அதன் மேதமைக்கு மெருகூட்டுகின்றது. பெருமை யாருக்கு? நாவலுக்கா? ஆசிரியனுக்கா ? பனித்துளியைத் தாங்கி நிற்கும் புல் நுனியைப் போல .பனித் துளிக்கா? புல் நுனிக்கா பெருமை ?.

நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.
 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்