நூல் : நினைவுகள்!
நூல் ஆசிரியர் :  முனைவர் வெ.இறையன்பு
நூல் அறிமுகம்:  
கவிஞர் இரா.இரவி

துரை புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களில் ஒன்று.புதிதாக வந்துள்ளது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தரமான தாள்களில் அழகிய வண்ண புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் ‘நினைவுகள்’ என்ற இந்த நூலின் மூலம் படிக்கும் வாசகர்களின் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நூல் படிக்கும் போதே எனது பள்ளி நினைவுகளும் ஆசிரியர்கள், நண்பர்கள் நினைவுகள் வந்து போயின. “மனிதன் நினைவுகளின் தொகுப்பாக நிற்கிறான்”. அவனது எத்தனை செயல்பாடுகளையும் அவன் நினைவுகளே தீர்மானிக்கின்றன”.

உண்மை தான், தலைமைச் செயலகமான மூளையில் தான் நினைவுகள் இருக்கின்றன. நினைவுகள் இழந்து விட்டால் கோமா நிலை என்கிறோம். மூளைச்சாவு அடைந்து விட்டால் பிழைப்பது கடினம். உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். ஒரு மனிதன் உயிர் வாழத் தகுதி உயிர் வாழ்கிறான் என்பதற்கு உறுதி அவனது நினைவுகளே!.

சிலருக்கு நினைவாற்றல் வரம், சிலருக்கு நினைவாற்றல் சாபமாகவும் அமைவது உண்டு. மறக்க வேண்டியதை மறக்க முடியாமலும் நினைக்க வேண்டியதை நினைக்காமலும் பலர் வாழ்வில் அல்லல்படுவதைப் பார்த்து இருக்கிறோம்.

“நினைவுகள் வலிமையானவை, அவற்றை விதைத்தாலும் வளரும்; புதைத்தாலும் முளைக்கும். அறவே வெறுத்து தகாதவை என ஒதுக்கினாலும் அவை கனவுகளாக வந்து கதவுகளைத் தட்டும். அவற்றை அடக்கவோ அமுக்கவோ நம்மால் முடியாது. நாம் நினைவுகளின் கைகளில் நம்மை ஒப்படைத்த அடிமைகள் என்பது உண்மை”.

மிகவும் உணர்ந்து ஆராய்ந்து நினைவில் தோய்ந்து மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்கள். நினைவுகள் என்ற தலைப்பில் ஒரு நூல் வடிக்கும் அளவிற்கு நினைவுகள் பற்றிய நினைவுகள் நூல் ஆசிரியருக்கு இருந்துள்ளன.
காதலில் வென்றவர் குறைவு தோற்றவர் அதிகம், அப்படி தோற்ற பலருக்கும் கதை வாசிக்கும் போதும் திரைப்படம் பார்க்கும் போதும் தோல்வியடைந்த காதல் நினைவுகள் வந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. மலரும் நினைவுகளாக மனதில் வந்து போவதுண்டு. இந்த நூல் படித்த போதும் நினைவுகள் பல எனக்கு வந்தது உண்மை.

“நான் இமயமலைச் சாரலில் ஒருவித வித்தயாசமான வாசனையை நுகர் நேர்ந்தது. இப்போது எப்போது அதை முகர நேர்ந்தாலும், அந்த அழகான மலைச்சாரலும், அடுக்கடுக்காக வளர்ந்த பைன் மரங்களும் மிதமான குளிரும், முகத்தை முத்தமிட்டுச் சென்ற மேகங்களும் என் நினைவுக்கு வருகின்றன”.

நாம் நுகரும் வாசம் கூட அது தொடர்பான நினைவலைகளை உருவாக்கும் என்பதை கண்டு உணர்ந்து எழுதி உள்ளார்கள். நூலாசிரியர் உலக அதிசயமான தாஜ்மகாலை புகைப்படம் கூட எடுக்காமல் மெய்மறந்து நீண்ட நேரம் ரசித்து மகிழ்ந்துள்ளார். அந்த மகிழ்வு பசுமரத்து ஆணியாக உள்ளத்தில் பதிந்து விட்ட காரணத்தால் தாஜ்மகாலை மறுமுறை காண்பதற்கு கூட விரும்பவில்லை. ஒருமுறை கண்டுகளித்த இனிமையே இனிமை என்று எழுதி உள்ளார்.

“நம் நினைவுகளே நம் கடந்த காலத்துடன் நம்மைப் பிணைக்கும் பாலமாக இருக்கின்றன. நாம் சின்ன வயதில் படித்த பள்ளியைப் பார்க்கும் போது, அதை மற்றவர்கள் உச்சரிக்கும் போதும் நம்மையுமறியாமல் நமக்கு அங்கே நாம் சீருடையுடன் அமர்ந்திருந்த காட்சிகளும் தேர்வு எழுதிய நினைவுகளும் வகுப்பறைகளும் அமர்ந்த ஞாபகங்களும், நண்பர்களுடன் விளையாடிய நினைவுகளும், மரத்தடியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட காட்சிகளும் மனத்திரையில் வந்து போகின்றன”.

மகாகவி பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பயின்றவன் நான். பத்தாம் வகுப்பு தோல்வியுற்று பின் வெற்றி பெற்று பதினோராம் வகுப்பில் சேர் இடம் கேட்டு மறுத்து விட்டனர். இளங்கோ மாநகராட்சி பள்ளியில் +2 படித்து வென்றேன். எனக்கு இடம் மறுத்த அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய கவிதைப் போட்டிக்கு நடுவராக கலந்து கொண்டேன். நூல்கள் நூறு சேதுபதி பள்ளியின் நூலகத்திற்கு வழங்கினேன். அங்கே சென்ற போது ஆறு முதல் 10 வரை படித்த வகுப்பறை நினைவுகள் வந்து போயின. இந்நூல் படித்த போதும் இந்த நினைவுகள் வந்து மலர்ந்தன.

சிறுவயதில் ரசித்து திரைப்படம் பார்த்து மகிழ்ந்த நினைவுகள், பள்ளி வாசலில் உள்ள கடையில் மிட்டாய் வாங்கிய நினைவு, சிறுவனாக இருந்த போது நண்பர்களுடன் விளையாடிய விளையாட்டு நினைவுகள் என பல நினைவுகளைப் பகிர்ந்து உள்ளார்.

“முனியப்பன் கோயில் இரவு நேரத்தில் மோகினிப் பிசாசு நடமாடுவதாய் அவர்கள் கிளப்பிய வதந்தி நினைவில் இருக்கும். எனவே அவன் முனியப்பன் கோயில் வழியாகச் செல்லும் ஒவ்வொரு முறையும் நடுங்கிக் கொண்டே செல்வான். ஆனால் வெளியூர்க்காரனுக்கு இந்தப் பிரச்சனைகள் எதுவுமில்லை. அவன் முனியப்பன் கோயிலை கோயிலாகத் தான் பார்ப்பான். நம் பயங்கள் உண்மையானவை அல்ல. மற்றவர்கள் தொடர்ந்து ஏற்படுத்திய நினைவுகளின் தாக்கங்கள் தாம் என்பதே உண்மை.

பேய் என்பது உண்மை அல்ல வதந்தி கட்டுக்கதை என்பதை உணர்த்தி உள்ளார். இன்றைய பேய்ப்பட இயக்குனர்கள் இதனை உணர்ந்திட வேண்டும். மூடநம்பிக்கையான பேய் இருப்பது போல பரப்பி பணம் சம்பாதிக்கும் செயலை நிறுத்திட வேண்டும்.

“நாம் பழகிய ஒரு நிறுவனம் மூடப்படும் போது நமக்கு ஒரு வலி தோன்றுகிறது. நாம் புத்தகங்கள் வாங்கிய கடை திடீரென இழுத்து மூடப்படும் போது நமக்குள் ஒரு சின்ன மரணம் நிகழ்கிறது”.

நினைவுகள் சுகமானதும் உண்டு வலி மிகுந்தலும் உண்டு. நல்ல நினைவுகளை மீட்டெடுப்போம். கெட்ட நினைவுகளை மறக்கடிப்போம் என உறுதி எடுக்க வைக்கும் நூல். குற்றாலம், தாஜ்மகால், இயற்கைக் காட்சிகள், புகைப்படங்கள், ஓவியங்கள் இருப்பதால் நூலினைப் படிக்க இதமாகவும் இனிமையாகவும் உள்ளன. தரமாக அச்சிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்.
 

வெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,
41-பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600 098.
பேச : 044-26251968,
பக்கம் : 31, விலை : ரூ. 50




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்