நூல் : விழித்தெழுக என் தேசம்
நூல் ஆசிரியர் :  திரு. ஜெயபாரதன்
நூல் அறிமுகம்:  
கவிஞர் வித்யாசாகர்

பூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வை.

லகின் வெவ்வேறு நிலங்களில் விழும் மழைத்துளிகளைப் போல, ஆங்காங்கே அந்தந்த நிலத்தின் நீதிக்கேற்ப ஒரு புரட்சியும், அந்தப் புரட்சியை நிலமெங்கும் பரப்பி வெற்றியை நாட்ட ஒரு கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு கண்ணியம் மிக்க ஒரு தலைவனும், அந்தத் தலைவனிலிருந்து தொண்டன் வரை போராட உந்துசக்தியைப் பாய்ச்சும் பல உணர்வுப்பூர்வமான படைப்பாளிகளும், அந்த படைப்பாளிகளின் எழுத்திலிருந்து நெருப்புக்குஞ்சாக எழுந்துநின்று உண்மைதனை உறக்கக் கத்திச்சொல்ல ஒரு சில சொற்களும், சொல்லுள் நின்று இந்த சமுதாயத்தையே புரட்டிப்போட சில எழுத்துக்களும், எழுத்துக்களை ஆயுதமாய் ஏந்தியே தனது வாழ்நாட்களை இந்த மண்ணிற்காகவும் தனது மக்களுக்காகவும் வாழ்ந்தது தீர்க்கும் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் காலங்காலமாய் நமக்காக பிறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தென்பது விதைநெல்லை போன்றது. ஆலமரத்தின் ஆயிரம் விழுதுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறு விதையினைப் போலத்தான் எழுத்தும் தனக்குள்ளே பல வீரிய வெற்றி மரங்களையும், காடுகளையும், எத்தனைப் பேர் வந்து திறந்தாலும் தீர்ந்திடாத பல மர்மங்களையும் உள்ளடக்கிகொண்டுள்ளது.

எழுத்தை வெறும் ஒரு புத்தகமாக கடந்துப்போதல் தீது. அறிவின் பொக்கிஷம் புத்தகம் என்ற்றிதல் வேண்டும். உணர்வின் மொத்த கலைவடிவமாகவும் இலக்கிய வெளித்தோன்றல்களாகவுமே புத்தகங்களைப் பார்க்கவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக எழுத்தென்பது அனுபவங்களின் கூட்டுச் சோறு. நடந்த வரலாற்றின் சுவடுகள் பதிந்ததும் நடக்கவிருக்கும் எதிர்காலத்து கற்பனையுமாய் நமக்கு கிடைக்குமொரு அரிய பொக்கிஷம் தான் ஒவ்வொரு புத்தகமும் எனும் மதிப்பு நமக்குள் மேலோங்கி நிற்கவேண்டும்.

அவ்விதத்தில், இதுவரை இங்கிருந்து ஒருவர் வந்துவிடமாட்டாரா எனும் நம் போன்றோர்களின் ஏக்கத்தை ஒட்டுமொத்தமாய் தீர்க்கும் பொருட்டு தமிழிலக்கியத்தின் வரப்பிரசாதமாக வந்தவொரு படைப்புதான் இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் ஐயா திரு. ஜெயபாரதனின் கவிதைத் தொகுப்பு.

நிலா என்பதைப் பெண்ணாகவும், நதி என்பதை காதலியாகவும், மழை என்பதை கதைகளோடும் கண்ட நமக்கு, மழையை மழையாகவும் நிலவை நிலவாகவுமே அறிவியல் கண்கொண்டுப் பார்க்கும் ஒருவரின் சிந்தனைக்கு தமிழால் வாரித்தந்த பரிசுக் குவியல்கள் தான் இப்படைப்பு. எரிமலையை கவிதையினால் குடையும் சக்தியும், அதன் மூலத்தை தேடும் அறிவும், கடகரேகை மகரரேகைகளை காதல் போலவும் காதலியினுடைய முத்தத்தின் இனிப்பினோடும் பார்க்கும் தெளிவு இப்படைப்பின் அதிகார உச்சமாகும்.

இணையங்களில் கவிஞர் திரு. ஜெயபரதன் அவ்வப்பொழுது அறிவியல் பற்றிய ஏதோவொரு படைப்பைக் கொண்டுவந்து “இது நியுட்ரின்” “அது பாஸ்டரின்” “இது மூலக்கோடு” “அது முதல்சுற்று” “இங்கே பூமி இப்படி இருக்கும்” “அங்கே நட்சத்திரங்கள் அப்படி இயங்கும்” என்றெல்லாம் அறிவியல் சார்ந்த புதிரான பல கட்டுரைகளை கவிதைகளை பதிவிடும்போதெல்லாம் எங்கோ நீரின்றி பாலைவனங்களில் திரிபவனுக்கு திடீரென வானம் பிளந்து மழை சோவெனப் பெய்ததைப் போலவொரு ஆதிமொழியின் அறிவியல் வளங்கண்ட பெருமை மனதுள் நிறைவதுண்டு. அப்படிப்பட்ட அவருடைய இப்படைப்பிற்கு அணிந்துரை எழுதுவது என்பதே ஆங்கிலம் பயின்ற யானையிடம் சென்று தமிழில் உன் பெயரென்ன என்று கேட்பதற்குச் சமம் தான். என்றாலும், அத்தனை அறிவிற்கு வலிக்காமல், மிக எளிமையாகப் படித்து நகர்ந்துகொள்ள, சீராக அறிவியல் கூறுகளைப் பற்றி புரிந்துக்கொள்ள ஏதுவாகவே எண்ணற்ற கவிதைகள் அமைந்துள்ளது என்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.

அணு ஆயுதம் சக்தி, தேய்பிறை கோலம், அக்கினிப்பூக்கள், தொடுவானம், அழகின் விளிப்பு என கவிதைகளின் தலைப்புக்களை மிக அழகாக தேர்ந்தெடுத்துள்ளார் கவிஞர் திரு. ஜெயபாரதன். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் தான் தேடிய விஞ்ஞான அறிவை குளோப்ஜாமூனுள் கரைந்த இனிப்பாக கரைத்துள்ளார் என்பதும் மிகையில்லை.

ஷேக்ஸ்பியர், ரூமி, வால்ட் விட்மன், பாப்லோ, உமர் காயம், அன்னை தெரசா மீராவின் கவிதைகள் என நீண்டு இரவீந்திர நாத் தாகூர் வரை ஒரு கவிதைப் பயணத்தையே மேற்கொண்டிருக்கிறார் கவிஞர். பேராசையிலிருந்து விடுப்பு, நிரந்தரமாய் கண்மூடும் நேரம், வாழ்வியல் கட்டுப்பாடு என பல தத்துவார்த்த கவிதைகளும் புத்தகத்திற்கு பலம் சேர்கிறது.

"பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக்களாகி, அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகி,

துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகி பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகி
சீராகி சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என் அன்னை"


என்று முடிக்குமாறு கவிதை இந்தப் பிரபஞ்சத்தின் சூழ்ச்சுமத்தை தனக்கானதொரு அறிவின்படி சொல்வதாய் அமைந்துள்ளது. அதுபோல, இன்னொரு கவிதையில் பொங்கல் விழாவைப் பற்றிச் சொல்கிறார் பாருங்கள், இவர் உண்மையிலேயே தமிழ்மண்ணின் வாசம் மறக்காத ஆங்கில தேசத்து அற்புத விஞ்ஞானி என்பதற்கு இந்த கவிதை தான் சான்று,

"பொங்கல் வைப்போம்
புத்தரிசிப்
பொங்கல் வைப்போம்
சர்க்கரைப்
பொங்கல் வைப்போம்
வீட்டு முற்றத்தில்
மாட்டுப்
பொங்கல் வைப்போம்
முன் வாசலில்
கோல மிட்டு, பெண்டிர்
கும்மி அடித்து
செங்கரும்புப் பந்த லிட்டு
சீராய்த் தோரணம்
கட்டிப் பால்
பொங்கல்வைப்போம் !"


அதுபோல், இன்னொரு கவிதையில் -

"ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெலாம் பரவும்
கரும்புகைச் சாம்பல் !

துருவப் பனிமலைகள்
உருகி
உப்பு நீர்க் கடல் உயரும்!

பருவக் கால நிலை
தாளம் மாறி
வேளை தவறிக் காலம் மாறும்,
கோடை காலம் நீடிக்கும்,
அல்லது
குளிர்காலம் குறுகும் பனிமலைகள்
வளராமல்
சிறுத்துப் போகும்
துருவ முனைகளில் !

நிலப்பகுதி நீர்மய மாகும்
நீர்ப்பகுதி நிலமாகிப் போகும்
உணவுப் பயிர்கள் சேத மாகும்
மனித நாகரீகம் நாசமடைந்து
புனித வாழ்வு வாசமிழந்து
வெறிபிடித் தாடும்
வெப்ப யுகப் பிரளயம்"

என உலக அழிவு பற்றி கூறுகிறார். பல கவிதைகள் வசனக் கவிதைகளாக இருப்பினும், உள்ளிருக்கும் விளக்கங்கள் யாவும் வேறொருவர் சொல்ல இயலாதவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வீட்டு விளக்கில் நாட்டுக்கெனப் படித்த பல விஞ்ஞானிகள் நம்மில் இருப்பினும், கோள்கள் பற்றியும், கொதிநீர் ஆழத்தின் சூழல் குறித்தும் பேசும் எண்ணற்ற கவிதைகளின் வழியே இப்படைப்பு தனியிடத்தைப் பெற்றுக் கொள்கிறது.

பொதுவாக எழுதுபவர்கள் அத்தனைப் பெரும் கண்ணதாசனாகவே இருக்கவேண்டும் என்று நம் தமிழன்னை விரும்பியிருப்பின் அவருக்குப் பின்னொரு வாலியும், வைரமுத்துவும், அறிவுமதியும், பழனிபாரதியுமென, யுகபாரதி வரை பல பாவலர்களை இம்மண் இன்று காலத்திற்கு நிகராகப் பெற்றிருக்காது.

வெளியே புகழ்மணக்க இருக்கும் பல கவிஞர்களை இலகுவாய் சொல்லமுடிகிற நமக்கு, ஐயா இலந்தை சு ராமசாமி போலவும், சந்தர் சுப்பிரமணியத்தைப் போலவும், புலவர் ராமமூர்த்தி போலவும், புலவர்கள் மா வரதராசன், அழகர் சன்முகமென ஒரு பெரிய பட்டியல் நீண்டு கவிஞர் வள்ளிமுத்து வரை, கவிஞர் இசாக், கவிஞர் அலியார், கவிஞர் சேவியர், கவிஞர் சாதிக், கவிஞர்கள் விக்டர் தாஸ், ருத்ரா, வரையென தமிழ் உலகெங்கும் பரவியிருக்கும் எண்ணற்ற அரிய பல கவிஞர்களை அறியமுடியாமல் தானே ஒரு சூழல் நம்மண்ணில் இன்றும் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றுவோம். எழுதும் புனிதர்களை மனதுள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்போம். என்றோ குப்பைகளை குவித்த ஒரு கிறுக்கனின் அறிவிலிருந்து தான் பல புரட்சிகளை உடைத்த விடுதலையின் குரல்கட்டுகள் அவிழ்கின்றன.

அங்ஙனம், இப்பேரண்டமும் ஒரு நாள் நல்ல பல சிந்தனைகளால் விழித்துக்கொண்டு, அறிவு பெருகி, மனது விசாலமடைந்து, இருப்போர் இல்லார்க்கு விட்டுக்கொடுத்து, அன்பினால் அனைவரும் கட்டியணைத்து, ஏற்றத்தாழ்வில்லா ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொள்ளுமென்று நம்புவோம். அதற்கு துணையாயிருக்கும் அத்தனைப் படைப்பாளிகளோடு' ஐயா அணுவிஞ்ஞானிக் கவிஞர் திரு.ஜெயபாரதன் அவர்களின் புகழும் நிலைத்து நிற்கட்டுமென வாழ்த்தி, இந்த "விழித்தெழுக என் தேசம்" எனும் கவிதைத் தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கானதொரு அரிய இடத்தை பெற்றுக்கொண்டு, அடுத்தடுத்து பல நல்ல படைப்புக்களை தர மூல விதையாக அமையட்டுமென்று வேண்டி விடைகொள்கிறேன். நன்றி. வணக்கம்.




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்