நூல் :
உளியின்
யுத்தம் (லிமரைக்கூ கவிதைகள்)
நூல் ஆசிரியர் :
கவிஞர் பல்லவி குமார்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
நூலாசிரியர்
பல்லவி குமார் அவர்கள் நாடறிந்த ஹைக்கூ கவிஞர். பல்லாண்டுகளாக ஹைக்கூ
உலகத்தில் பயணிப்பவர். தடம் பதித்தவர். 22 நூல்கள் எழுதியவர். முதுகலை
வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கியப்பணியும் ஆற்றிவரும்
இனியவர்.
முதல் வரியின் கடைசி எழுத்தும், மூன்றாம் வரி கடைசி எழுத்தும் ஒன்றி
வருவதே லிமரைக்கூ. இயைபு ஒன்றியிருக்க வேண்டும். இதுதான் எளிமையான
இலக்கணம். இந்த நூல் முழுவதும் லிமரைக்கூ கவிதையால் சிந்திக்க
வைத்துள்ளார். நூலின் ஆரம்பத்தில் பலர் எழுதிய லிமரைக்கூ மேற்கோள்
காட்டி விளக்கியிருப்பது சிறப்பு. லிமரைக்கூ எழுதுவோர் பட்டியலில்
என்பெயரும் இடம்பெறச் செய்தமைக்கு நன்றி.
நூலினை வடிவமைத்த மின்மினி ஆசிரியர், இனிய நண்பர் கன்னிக்கோவில் இராசா
வாழ்த்துரை வழங்கி உள்ளார். தோரண வாயிலாக உள்ளது.
கால வெள்ளத்தில் அனல்
கரையேறி அமோக விற்பனை ஆகிறது
ஆற்றில் உள்ள மணல்!
வருங்கால சந்ததிகளுக்கு வேட்டு வைக்கும் மணல் கொள்ளையர், மணல்
கொள்ளைதடுப்போரை ஏற்றிக் கொன்று விட்டு மணல் கடத்தி வரும் அவலத்தை
உணர்த்தும் வண்ணம் வடித்திட்ட லிமரைக்கூ நன்று.
நாடெங்கும் தண்ணீர் பஞ்சம்
தண்ணியில்ல காட்டுக்கு மாறுதல்
தர முடியாதென மகிழும் நெஞ்சம்!
நேர்மையான அலுவலர்களை அரசியல்வாதிகள் தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி
விடுவேன் என்று மிரட்டுவது உண்டு. ஆனால் இன்று எங்கும் தண்ணீர் பஞ்சம்.
எங்கு மாற்றினால் எனக்கென்ன? என்று சொல்லும் விதமாக நாடு மாறி விட்டது.
உண்மை தான்.
சாதி மதம் சாக்கடை
சரித்திரம் மாறிட நமக்குள் வேண்டும்
அன்பு என்னும் பூக்கடை.
இன்று உலகம் முழுவதும் மதத்தின் பெயராலும் நமது மாநிலத்தில் சாதியின்
பெயராலும் அடிக்கடி சண்டை. அமைதியை இழந்து வருகிறோம். காரணம் அன்பு
என்றால் என்னவென்று அறியாத காரணமே.
தண்ணீரில் மிதக்கும் ஈழம்
கண்ணீரில் தமிழரைத் தவிக்க விட்டால்
கடலில் மூழ்கி விழும்!
ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையவே இல்லை. கொன்று வைத்த கொடூரன்
திரும்பவும் பதவிக்கு வர துடிக்கிறான்.
குடி தான் குடியைக் கெடுக்கும்
மது விற்பனை உயரும் போக்கால்
மனிதம் சிதைத்து படுக்கும்!
அரசாங்கமே குறியீடுகள் வைத்து மது விற்பனை செய்து, குறியீடு அடைந்து
விட்டதாக அகமகிழும் அவலம் தமிழகம் தவிர வேறு எங்கும் இல்லை. குடியால்
மூழ்கி வருகிறது தமிழகம்.
மாணவர் களிடையே சாதித் தீ
மூளை மழுக்கி முளை விடுகிறது
மனமதில் ஏற்றனும் நீதித் தீ
படிக்கின்ற வயதில் சாதிவெறி எதற்கு? இன்றைக்கு சில மாணவர்கள்
சாதிவெறியுடன் கல்விக்கூடங்களில் வலம் வருவதையும் மோதல்களையும்
ஊடகங்களில் பார்த்து மனம் வருந்துகிறோம். அவர்களுக்கு நீதி கற்பித்து
உள்ளார்.
கல்லில் உளியின் யுத்தம்
கண்கவர் சிலையாகி நின்றது
காண்பவர் பாராட்டும் சத்தம்!
இந்த நூலின் தலைப்பான ‘உளியின் யுத்தம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ள
லிமரைக்கூ சிந்திக்க வைத்தது. யுத்தம் சத்தம் என சொல் விளையாட்டு
விளையாடி சொக்க வைத்துள்ளார்.
அடுப்பில் எரியாத நெருப்பு
அடி வயிற்றில் தீயாய் சுட்டது
துடிக்கும் வறுமையில் வெறுப்பு
இந்தியாவில் பலகோடிப்பேர் வறுமையில் வாடி வருகின்றனர். ஒருவேளை உணவு
கூட கிடைக்காதோர் கோடி. வறுமையை ஒழிக்காமல், வானுயர் சிலை வைத்து
மூவாயிரம் கோடியை விரயம் செய்வோர் உணர வேண்டிய லிமரைக்கூ இது.
மாத வருமானம் தாண்டி
மருத்துவ செலவுகள் நீண்டு வளருது
நகரவாசிகள் இனி ஆண்டி!
தரமான மருத்துவத்தை மக்களுக்கே வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால்
மருத்துவம் இன்று தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு பகல் கொள்ளையடித்து
வருகின்றனர். மக்களை ஆண்டியாக்கி வருவது உண்மை தான்.
பாவத்தின் சம்பளம் மரணம்
ஊழல்வாதிகளின் மனதிலே
ஒவ்வொரு நாளுமிது வரணும்!
அரசியல்வாதிகள் அஞ்சுவது போல தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல்
புரிந்து வருகின்றனர். திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை
ஒழிக்க முடியாது. பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள் நினைவிற்கு வந்தன.
குளத்தின் மேலே நிலா
குவிந்து கிடக்கும் ஆகாயத் தாமரைகள்
கோவத்தில் சென்றது உலா!
சப்பானிய கவிஞர்கள் போல இயற்கையைப் பாடுவதிலும் தமிழகக் கவிஞர்கள்
சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையயும் பல்வேறு
லிமரைக்கூவில் பாடி உள்ளார். பாராட்டுக்கள்.
லிமரைக்கூ என்ற புதிய வடிவத்தில் சிந்தனைகளை சிறகடிக்க விட்டு
சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பல்வேறு
சிந்தனைச் சிதறல்களை விதைத்து உள்ளார். கவிதை மின்னல்களை வெட்டி உள்ளார்.
ஒரு எழுத்தாளன் கடமை என்பது சமுதாயத்தை சீர்படுத்துவதே. அந்த வகையில்
சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் பகுத்தறிவை விதைக்கும் வகையில்
லிமரைக்கூ வடித்துள்ளார். ஆசிரியப்பணி அறப்பணி அதோடு சேர்ந்த நற்பணியாக
இந்நூல் வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
நிவேதிதா பதிப்பகம், 22/105, எண். 2, பாசுகர் காலனி 3வது தெரு,
விருகம்பாக்கம், சென்னை – 600 092.
பக்கம் : 80, விலை : ரூ. 70
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|