நூல் : தமிழ் போலாகுமா?
நூல் ஆசிரியர்கள் :
 மரபுமாமணி சங்கை வீ.செயராமன்
நூல் அறிமுகம்:  
கவிஞர் இரா.இரவி

ங்கை வீ.செயராமன் அவர்கள் மாமதுரை கவிஞர் பேரவையின் கவியரங்கில் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் மாதாமாதம் கவிதை பாடி வருபவர். கவியரங்கில் பாடிய கவிதைகளையும் மற்ற கவிதைகளையும் நூலாக்கி உள்ளார். அரசுப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் ‘தமிழ் போலாகுமா?’ என்ற கேள்வியின் மூலம் இந்த நூலின் மூலம் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார்.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.

தமிழ் வாழ்க! (கொச்சக்க் கலிப்பா)

சொல்லாமலே இனிய தமிழ்!
சுவையிலே மிகுந்த தமிழ்!
செல்வாக்கு நிறைந்த தமிழ்!
சிறப்போடு வளர்ந்த தமிழ்!
எல்லோரும் வருதே தமிழ்!
எதிர்த்தவரும் புகழ்ந்த தமிழ்!
தொல்லுலகில் சிறந்த தமிழ்!
தொடர்தென்றும் வாழியவே!


இப்படி நூல் முழுவதும் உலகின் முதல் மொழியான தமிழின் சிறப்பை இலக்கணத்துடன் எடுத்து இயம்பி வாசகர்கள் மனதில் தமிழ்ப்பற்றை விதைத்து உள்ளார். பாராட்டுக்கள்.

தன்மானம் காக்கும் தமிழ்! (எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தன்னேரில் லாத்தமிழ் தமிழர் தம்மின்
தன்மானம் காத்திடவும் தலைநி மிர்ந்து
தன்மானத் துடன்வாழத் தக்க பாதை
தெளிவாக ஊட்டுவதும் நீயே ஆவாய்!


தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல பண்பாடு பயிற்றுவிக்கும். வீரம் கற்பிக்கும், ஒழுக்கம் ஓதிடும். தன்னம்பிக்கை விதைக்கும் தன்மானத்தோடு வாழ பயிற்றுவிக்கும் மொழி தமிழ்மொழி என்பதை அழகாகப் பதிவு செய்துள்ளார்.

வீறுகொண்டெழு தமிழா! (நெடிலடி ஆசிரிய விருத்தம்)

இன்று பலமொழி கற்பீர் என தினம் ஏய்ப்பாரே
வென்று புகழ்க்கொடி ஏற்றிப் பறந்திடும் நம் மொழியைக்
கொன்று புதைகுழிக் குள்ளே புதைத்திட நினைப்பாரை
நின்று எதிர்த்திடு வோமே உறுதியை ஏற்போமே!


புதுவைச் சிங்கம் பாவேந்தர் பாரதிதாசன் வழியில், தமிழை இகழ்ந்தவரை தாயே தடுத்தாலும் விடேன் என்ற வழியில், தமிழின் பகையை எதிர்க்க போர் முரசு கொட்டி உள்ளார். பிறமொழி படியுங்கள் என்று ஏமாற்றி தமிழை படிக்க விடாமல் செய்து வரும் அவலத்தைப் பாடி உள்ளார்.

தமிழகத்தில் மட்டும் தான் தமிழ்மொழி படிக்காமலே பட்டம் பெறும் அவல நிலை நிலவி வருகின்றது. மற்ற மாநிலங்களில் மட்டும் வாழ்ந்த தமிழ் இன்று அங்கும் மூடுவிழா நடத்தி ஆங்கில வழிக்கல்வி என்றானது.

தமிழ்வழிக் கல்வி!

அன்னை மொழியில் கற்றால் அறிவு
ஆணி வேராய் நிற்கும்!

என்றும் நிலையாய் நின்று வாழ்வில்
இன்பம் மேலும் சுரக்கும்!


தாய்மொழிக் கல்வியின் பயனை தேசப்பிதா காந்தியடிகள் தொடங்கி நோபல் நாயகன் இரவீந்திரநாத் தாகூர் வரை வலியுறுத்தி உள்ளனர். மாமனிதர் அறிவியல் புயல் அப்துல் கலாம் ஆரம்பக்கல்வி தமிழில் தான் பயின்றார். அதுவே அவருக்கு உரமானது. திருக்குறளை வாசித்தார், நேசித்தார், திருக்குறள் வழி வாழ்ந்தார். வையகம் போற்றிட வாழ்வில் சிறந்தார். தமிழ்வழிக்கல்வியின் பயனை, சிறப்பை தமிழர்கள் அறியாத்து வேதனை.

தமிழர் திருந்த வேண்டும் (கொச்சகக் கவிப்பா)

ஆழிவந்து அழித்திடனும்
அழியாத அருந்துவது தான்
ஊழியில் கடந்தாலும்
உயர்ந்து நிற்கும் தனிமொழி தான்!
பாழ்படுத்த முனைந்தற்றே
பாதகரை எதிர்த்து நின்று
வாழ்ந்துவரும் வளமிக்க
வளர்தமிழ தான் அறிவீரே!


சங்கம் வைத்து வளர்த்த தமிழ் – பல்லாயிரம் வயதான தமிழ். வேறு எந்த மொழியையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து வளர்த்த வரலாறு இல்லை. உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு மட்டுமே உண்டு. கடல் சீற்றங்களுக்கு பின்னும் நிலைத்து நின்ற தமிழ். பெருமைமிக்க தமிழை காக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

வேறெழுத்து நமக்கெதற்கு? எண்சீர் ஆசிரிய விருத்தம்.

எட்டுத் திக்கும் ஏத்துகின்ற
எந்தம் மொழியின் இடையில் வளர்
கொட்டுகின்ற கழிவைக் கொள்ளும்
குப்பைத் தொட்டியாம் வடவெழுத்தெதற்கு ?


எழுத்துக்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி. எழுத்துப்பஞ்சம் தமிழுக்கு எப்போதும் இல்லை. வளங்கள் பல பெற்ற தமிழுக்கு வடமொழி எழுத்து தேவை இல்லை. குப்பையைச் சேர்க்காதீர் எனப் பல கவிதைகளில் கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார்.

இலக்கணம் மாறாமல் ஒவ்வொரு கவிதையும் எந்த இலக்கணம் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டு இலக்கணப் பயிற்சியும் தந்துள்ளார்.

புயலே! புயலே! (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

மாரி வேண்டித் தவங்கிடந்தோம்
மாய வேலை ஏன் செய்தாய்
ஏரி நிறைய வேண்டி நின்றோம்
ஏன் தான் இந்தத் தாண்டவமே
பாரில் மக்கல் பரிதவிக்கும்
பண்பா டற்ர செயல் சரியோ
வாரிச் சுருட்டிப் போனாயே
வழிந்த கண்ணீர் நிற்கலையே!


பொதுவாக புயல் பற்றி வடித்த கவிதை இன்றைய கசா புயலுக்கும் பொருந்துவதாக உள்ளது. வாழை, தென்னை மட்டும் சவுக்கு, தேக்கு மரங்களையும் மண்ணில் சாய்த்தது. சில மணி நேரத்தில் பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது. மனிதநேய உதவிகள் குவிந்து மனிதம் காக்கப்பட்டுள்ளது.

அன்னை!

அன்னை ஆவாள் அன்புத் தெய்வம்
என்றும் அவளே காணும் தெய்வம்
பிள்ளை உண்டபின் உள்ளதை உண்டு
கொள்வாள் ஆறுதல் அன்முகம் கண்டு !


இக்கவிதையை ஏழைதாசன் மாத இதழில் படித்து இருந்தேன். உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் நிகரற்ற உறவு அன்னை பற்றிய கவிதை அழகு. மகாகவி பாரதியார் பற்றியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றியும் கவிதைகள் நூலில் உள்ளன. சொற்களஞ்சியமாக நூல் உள்ளது. வளரும் கவிஞர்கள் படிக்க வேண்டிய நூல். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
 

மணிமேகலை பிரசுரம், 7,
தணிகாசலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை-17. பக்கம் : 128,
விலை : ரூ. 75.


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்