நூல் :
பாரதியார் பதில்கள் நூறு
நூல் ஆசிரியர் :
ஔவைஅருள்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி.
‘புலிக்குப்
பிறந்தது பூனையாகாது’ என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் ஔவை நடராசன்
என்ற தமிழறிஞரின் மகன் ஔவை அருள் எழுதியுள்ள அற்புத நூல் இது.
தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் இந்த அரிய நூலை அனுப்பி வைத்தார்கள்.
நூலாசிரியர் என்னுரையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஓய்வு
பெற்ற பெரும் பேராசிரியர் இரா.மோகன் வினா-விடைப் போக்கில் இந்த நூலை
வடிவாக்க வேண்டுமென்று கூறி இந்த முயற்சிக்கு அவர் எழுதிய நூல் மூல
நூலாகும்”.
கவியரசர் பாரதியார் பற்றிய தகவல் களஞ்சியமாக வந்துள்ளது நூல். பாரதியார்
படம் பார்ப்பது போன்ற உணர்வையும் பாரதியாரைப் பார்த்திராத
இளையதலைமுறையினருக்கு அவருடன் பேசுவது போன்ற உணர்வைத் தந்துள்ளது
இந்நூல்.
கேள்வி-பதில் என்ற முறையில் வடிவமைத்தது முதல் சிறப்பு. பதில்களை
பாரதியாரின் கவிதை வரிகள் கட்டுரைகள் பாரதியார் பற்றி மற்ற அறிஞர்கள்
குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டு நூல் ஆசிரியர்
ஔவை அருள் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.
பாரதியாரைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள நூல்.
இந்த நூலினை வெளியிட்ட ஸ்ரீ ராம் பாரதி கலை இலக்கியக் கழகத்திற்கு
பாராட்டுக்கள். இந்நூலிற்கு குறைந்தபட்ச விலையிட்டு விற்பனைக்கு
அனுப்பிட வேண்டுகிறேன். பலரும் வாங்கிப் படிக்க வாய்ப்பாக அமையும்.
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும்
என்று காந்தியடிகளுக்குச் சொன்ன இலக்கணம் கவியரசர் பாரதியாருக்கும்
பொருந்தும். கவிதையாகவே வாழ்ந்துள்ளார். பாரதியார் பற்றிய மதிப்பீடை
மேலும் உயர்த்துவதாக நூல் உள்ளது.
பாரதியார் பற்றி 102 கேள்விகள் கேட்டு பாரதியார் படைப்புகளை வைத்தே
பதிலும் சொல்லியுள்ள யுத்தி மிகச்சிறப்பு. முதல்கேள்வியில் பாரதியாரின்
வரலாற்றுச்சுருக்கம் வந்து விடுகின்றது. காந்திமதிநாதன் தந்த பாரதி
சின்னப்பயல் ஈற்றடி நிகழ்வு உள்ளது. பாரதியாரின் தமிழ்ப்பற்று பற்றி
விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி உள்ளார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரிகளை வைத்தும் விளக்கி உள்ளார்.
“என்னென்று சொல்வேன் / தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்”
பன்மொழி அறிஞர் பாரதியார் பாடிய பாடலான
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”
இப்படி பாரதியார் பாடல்களில் உள்ள தமிழின் மேன்மை பற்றிய பாடல்களை
பட்டியலிட்டு உள்ளார். கவிதையில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் தமிழ்ப்பற்றை
விதைத்தவர் பாரதி. கடிதத்திலும் செல்லம்மாளை கவலை கொள்ளாமல் தமிழ்
படிப்பதில் கவனம் செலுத்து என்று எழுதி உள்ளார். தம்பிக்கு எழுதிய
கடிதத்தில் இனிமேல் ஆங்கிலத்தில் எனக்கு மடல் எழுதாதே. கொச்சையாக
இருந்தாலும் தமிழிலேயே எழுது என்று மடல் எழுதி உள்ளார்.
பாரதியாரின் தம்பி என்று அழைக்கப்பட்ட பரலி. சு. நெல்லியப்பருக்கு
எழுதிய மடலில் தமிழ்நாடு வாழ்க என்று எழுது தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான்
உண்டு. அதன் பெயர் தமிழ்ச்சாதி என்று மடல் எழுதி உள்ளார்.
இப்படி நூல் முழுவதும் கவியரசர் பாரதியார் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
பல புதிய தகவல்களை நூலில் எழுதி உள்ளார்.
பாரதியார் பற்றி வெளிவந்துள்ள பல நூல்களையும் ஆழ்ந்து படித்து
பாரதியாரின் படைப்புகளை கவிதை, கதை, கட்டுரை மடல் என்று அனைத்தையும்
உள்வாங்கி வடித்துள்ள ஆகச்சிறந்த நூல்.
கவியரசர் பாரதியாரின் பற்றாளர்கள் கையில் இருக்க வேண்டிய பயனுள்ள நூல்
இது. இந்த நூல் எழுதியமைக்காக நூலாசிரியர் ஔவை அருள் அவர்களுக்கு
பரிசும் பாராட்டும் வந்து சேரும்.
பாரதியாரின் படைப்பாற்றல் ஆளுமையை கவிதை, சிறுகதை, கட்டுரை அனைத்தையும்
உரிய இடங்களில் மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.
நூலை கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைப்போம்.
அந்த அளவிற்கு விறுவிறுப்பாக உள்ளது. மன்னர் வந்தபோது எழுந்து
நிற்காததற்காக வேலை போனது மன்னிப்புக் கேட்டால் திரும்ப சேர்ப்பார்கள்
என்று சொல்ல மன்னிப்பு கேட்க மறுத்தல். காந்தியடிகளை கூட்டத்திற்கு
அழைத்த நிகழ்வு. பாரதியார் கவிஞர் செல்லியை நேசித்தார். வெள்ளையர்
ஆட்சியை வெறுத்தார். ஆனால் கவிஞர் வெள்ளையர் செல்லியை வெறுக்கவில்லை.
செல்லிதாசன்ன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டார். இப்படி பல தகவல்கள்
நூலில் உள்ளன.
பெண்விடுதலை பற்றி கவியரசர் கட்டுரையில் அன்று எழுதியவை தான் இன்று
படிப்படியாக நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. பெண்குழந்தைத் திருமண
முறை ஒழிக்கப்பட வேண்டும். விருப்பம் இல்லாத மணமகனுடன் மணமுடிக்கக்
கூடாது.
பெண்ணிற்கு மணவிலக்கு உரிமை வேண்டும். பெண்களுக்கு சொத்தில் பங்கு
வேண்டும். மறுமணம் தடுக்கக் கூடாது. திருமணம் விரும்பாத பெண்களை
கட்டாயப்படுத்தக் கூடாது. பெண்களுக்கு கல்வி வேண்டும். பதவியில்
ஆட்சியில் பங்கு தர வேண்டும்.
பாரதியார் தொலைநோக்கு சிந்தனையாளர், பெண்ணடிமை சமுதாயத்தை மீட்ட பெருமை
பெண்ணுரிமை பெறுவதற்கு அன்றே முழக்கமிட்ட பெருமை அவரையே சாரும்.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. பாரதியார் தன் கவிதைகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பாரதியார் உடலால் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் தான். ஆனால் அவரது
படைப்புகளால் நூற்றாண்டு கடந்து வாழ்கின்றார். இன்னும் பல நூற்றாண்டு
கடந்தும் வாழ்வார். கவியரசர் பாரதியாருக்கு புகழ்மாலை சூட்டியுள்ள நூல்.
ஆசிரியர் ஔவை அருள் அவர்களுக்கு பாராட்டுகள்.
குறிப்பு : அடுத்த பதிப்பில் சில இடங்களிலுள்ள எழுத்துப்பிழைகளை நீக்கி
வெளியிடுங்கள்.
நூல்:
பாரதியார் பதில்கள் நூறு
நூல் ஆசிரியர் : ஔவைஅருள்
ஸ்ரீ ராம் கலை இலக்கியக் கழகம்,
12/6, போயசு சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி : 044 4341700
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|