நூல் :
மண் மூடிப் போகும்
மாண்புகள்
நூல் ஆசிரியர் :
‘எழுத்தாளர்’ ப. திருமலை
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி
நூலாசிரியர் எழுத்தாளர் ப.திருமலை
அவர்கள் அதிர்ந்து பேசாத பண்பாளர். ஆனால் அவரது எழுத்துக்கள் அதிரும்
பறையென முழங்குபவை. அறநெறி கருத்துக்களை வலியுறுத்துவார். அநீதி கண்டு
பொங்குவார். மனித உரிமை மீறல்களுக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்வார்.
வலிமை மிக்கது பேனா முனை என்பதை எழுத்தல் மெய்ப்பித்து வருபவர். இந்நூல்
நூலாசிரியரின் 29ஆவது நூல்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர ம.திருமலை
அணிந்துரை வழங்கி உள்ளார். இந்நூலில் உள்ள சில கட்டுரைகளை பாவையர் மலர்
மாத இதழில் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி.
பதிப்பாசிரியர் ம.வான்மதி பாவையர் மலர் ஆசிரியர் பதிப்புரை வழங்கி
உள்ளார்.
இந்த நூலில் 5 தலைப்புகளில் மொத்தம் 27 கட்டுரைகள் உள்ளன. ‘பெண்களும்
குழந்தைகளும்’ என்ற தலைப்பில் 6 கட்டுரைகளும் ‘நிராகரிக்கப்படுவோர்’
என்ற தலைப்பில் 7 கட்டுரைகளும், ‘கொலையும் தற்கொலையும்’ என்ற தலைப்பில்
3 கட்டுரைகளும், ‘அவலங்கள்’என்ற தலைப்பில் 6 கட்டுரைகளும்,
‘சீரழிவுகள்’ என்ற தலைப்பில் 5 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
காலத்தின் கண்ணாடியாக நூல் உள்ளது. ‘ஆளுமையின் அடையாளம் கிராமப் பெண்கள்’
என்ற கட்டுரையில் கல்வி, வேலை, விவசாயம், சுகாதாரம் பற்றி விளக்கிவிட்டு
இறுதியாக விவசாயம் பொய்த்துப் போன நிலையில் கட்டுமான வேலைகளுக்கும்
வீட்டு வேலைகளுக்கும் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரே வேலைக்கு ஒரே கூலி
தீவிரமாக நடைமுறைப்-படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.
சக மனுஷியாக மதிப்போம், கட்டுரையில் பெண்களுக்கு எதிரானவன் முறைகளை
பட்டியலிட்டு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆணாதிக்கச் சிந்தனை
விடுத்து ஆண்கள், பெண்களை பெண்களை போகப் பொருளாகக் கருதாமல்
உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதிப்பளிக்க வேண்டும் என்பதை நன்கு
வலியுறுத்தி உள்ளார்.
பெண்களுக்கு பணி செய்யும் இடங்களில் நடக்கும் பாலியில் சீண்டல்கள் பற்றி
குறிப்பிட்டு ஆண்களின் சபலப்புத்தி ஒழிய வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி
உள்ளார். நாட்டில் நடக்கும் பெண் குழந்தைகளைக் கண்ணியத்துடன்
காப்பாற்றுவோம் கட்டுரையில் பெண்கல்வியை வலியுறுத்தி உள்ளார். ஆண்
கற்றால் அவனுக்கு நன்மை. ஆனால் பெண் கற்றால் குடும்பத்திற்கே நன்மை
என்பது உண்மை.
இன்றைக்கும் சில இடங்களில் குழந்தைத் திருமணங்கள் நடந்து வருவதை,
நிறுத்தப்படுவதை ஊடகங்களில் பார்க்கிறோம். அதற்கான கண்டனத்தையும்
உரக்கப் பதிவு செய்துள்ளார். ஆசிட் ஊற்றி முகத்தை கோரமாக்கும்
கொடூரத்தைச் செய்திடும் மனித விலங்குகளைக் கண்டித்து உள்ளார்.
சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல நிரபராதிகளும் உண்டு.
மனம் திருந்தியவர்களும் உண்டு. அவர்கள் சிறைவாசிகள் என்றுதான் சொல்ல
வேண்டும். சிறையில் நடக்கும் மர்ம மரணங்களை புள்ளிவிபரங்களுடன்
குறிப்பிட்டு உள்ளார். நூலாசிரியர் திரு. ப. திருமலை அவர்கள் எந்தஒரு
கட்டுரையையும் மேம்போக்காக எழுத மாட்டார். கட்டுரை எழுதக்கூடிய பொருள்
குறித்த பல நூல்களைப் படித்து புள்ளிவிபரங்களை சேகரித்து களப்பணி ஆய்வு
செய்து யாரும் மறுக்கமுடியாத அளவிற்கு உண்மைகளைப் பதிவு செய்வதில்
வல்லவர், நல்லவர்.
சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள காரணத்தில் சமுதாயத்தில் நடக்கும்
சீரழிவுகளைச் சுட்டிக்காட்டி வருகின்றார். திருந்திட வழி சொல்கிறார்.
பிரச்சனைகளை மட்டும் எழுதாமல் அதற்கான தீர்வுகளையும் முடிவுரையில் எழுதி
விடுகிறார். திருநங்கைகள் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு உள்ள உரிமைகள் பற்றியும் எழுதி உள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக பேச மறுக்கப்பட்டவர்களின் குரலாக
கட்டுரைகளில் ஒலித்து வருகின்றார்.
உரத்த சிந்தனையுடன் சிந்தித்து மனிதநேயமுள்ள நல்ல சமுதாயம் மலர்ந்திட
நல்ல கருத்துக்களை வலியுறுத்தி உள்ளார். மதிப்பெண் குறைந்தால் தேர்வில்
தோற்றால் காதலில் தோற்றால் தற்கொலை செய்து கொள்ளும் இளையோருக்கு
பெற்றோர்கள் குழந்தையாக இருக்கும் போதே எதையும் தாங்கும் தன்னம்பிக்கையை
வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
சாக்கடை விஷ வாயு தாக்கி நடக்கும் மரணங்களும் கொலை தான் என்று குற்றம்
சாட்டி உள்ளார்.
வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வருபவர்கள்
கண்டுகொள்வதில்லை. நம் நாட்டில் வேலையின்மை தலைவிரித்து ஆடும் அவலத்தை
விளக்கி உள்ளார். மணல் கொள்ளையைத் தடுக்க தொடர்ந்து குரல் கொடுத்து
வருகிறார். முந்தைய நூலிலும் குறிப்பிட்டு இருந்தார்.
மதுவின் காரணமாக சமுதாயம் சீரழிந்து வருகின்றது. மதுவிலக்கு கொண்டு
வருவோம் என்று சொல்லிவிட்டு மறந்து விடுகின்றனர். மதுக்கடைகளை
படிப்படியாகக் குறைப்போம் என்று சொல்லிவிட்டு கூட்டியே வருகின்றனர்.
மதுவின் கொடுமையை கட்டுரையில் நன்கு எழுதி உள்ளார்.
மொத்தத்தில் சமூக அநீதிகளுக்கு மகாகவி பாரதியின் பாணியில் நெஞ்சு
பொறுக்கவில்லை என்று குமுறி உள்ளார், பாராட்டுக்கள்.


பாவை மதி வெளியீடு,
55, வ.உ.சி. நகர், மார்க்கெட் தெரு,
தண்டார்பேட்டை,
சென்னை – 81. பக்கம் :
176, விலை : ரூ.150
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|