நூல் :
அணிந்துரை அணிவகுப்பு
நூல் ஆசிரியர் :
பேராசிரியர் இரா.மோகன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
‘அணிந்துரை அணிவகுப்பு’
நூலின் தலைப்பே அழகு. ‘எழுத்து வேந்தர்’ இந்திரா சௌந்தர்ராஜன்
வாழ்த்துரை வழங்கி உள்ளார். தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா.மோகன்
அவர்களுக்கு இது 145 ஆவது நூல். அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக்கி
வருகிறார். அணிந்துரைகள் தொகுப்பில் இது ஐந்தாவது நூல்.
இந்த நூலில் 30 முத்தாய்ப்பான நூல்களின் அணிந்துரைகள் உள்ளன. அணிந்துரை
மட்டுமல்ல, ஆய்வுரை என்றே சொல்லலாம். எந்த ஒரு நூலையும் நுனிப்புல்
மேயாமல் நூல் முழுவதையும் ஆழ்ந்து படித்து உள்வாங்கி
ஒப்பிலக்கியத்துறையின் தலைவராக இருந்த காரணத்தால் ஒப்புநோக்கி ஆய்வு
செய்து அணிந்துரை எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளார். 30 நூலில் 3 நூல்கள்
என்னுடைய நூல் என்பது எனக்குப் பெருமை. இறையன்பு கருவூலம், கவிச்சுவை,
ஹைக்கூ 500 மூன்று நூல்களின் அணிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. காரணம்
எழுத்து இமயம் மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை இரா.மோகன் தமிழ்த்தேனீ
இரா.மோகன் அவர்களின் செல்லலப்பிள்ளை, சீடன் கவிஞர் இரா.இரவி என்று
சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை.
தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யாவிடம் அணிந்துரை வாங்கினால் நூலாகி விடும்
என்பது தெரிந்த காரணத்தால் இனி அய்யாவிடம் அணிந்துரை வாங்கிட போட்டி
நிலவும் இருந்தாலும் எப்போதும் எனக்கு தட்டாமல் தந்து விடுவார்கள்.
அணிந்துரை எழுதும் முன் அணிந்துரைக்கு ஒரு தலைப்பு வைப்பார்கள். அந்த
தலைப்பு நூலாசிரியருக்கு வைக்கும் மணிமகுடம் போன்ற மகிழ்வைத் தரும்.
பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்கள் புதுகைத் தென்றல் மாத இதழில்
தொடராக தொடர்ந்து எழுதி வருவதை நூலாக்கி விடுவார்கள். சென்னையின்
இலக்கிய இணையர் என்றால் அது புதுகைத்தென்றல் இதழாசிரியர் தருமராசன் –
பேராசிரியர் பானுமதி தருமராசன் வரலாறு படைத்த வைரமங்கையர் என்ற இரண்டு
தொகுதிக்கும் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.
“புதுமைப்பெண், இளைய நங்கை, பெண்மைத் தெய்வம், செம்மை மாதர், உதயகன்னி,
வீரப்பெண் எனக் கவியரசர் பாரதியாரால் புகழாரம் சூட்டப்பெற்ற இருபது வைர
மங்கையர் இந்நூலில் அணிவகுத்து நிற்கின்றனர்”
அணிந்துரையின் தொடக்கமே மகாகவி பாரதியாரின் சொற்களுடன் மேற்கோள் காட்டி
இருப்பது சிறப்பு. கமலா கந்தசாமி அவர்களின் நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்.
– வரலாற்றுப் பெட்டகம். நூல் அணிந்துரையில் எம்.ஜி.ஆர். பற்றி வள்ளல்
கலைவாணர் சொன்ன சொல் மிக அருமை. “நான் என்னிடம் கேட்டால் கேட்டவர்க்குக்
கொடுப்பேன். ஆனால் எம்.ஜி.ஆர். தம்மிடம் கேட்காதவர்க்கும் கொடுப்பார்”.
திரு. க. ஹரி தியாகராஜன் தொகுத்துள்ள ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின்
உரைக்கோவை நூலிற்கான அணிந்துரையில் முடிவுரையாக இன்னும் ஏனைய
எழுத்துக்களும் பேச்சுக்களும் நூல் வடிவம் பெற வேண்டும் என்பது தமிழ்
கூறு நல்லுலகின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் கூட’ என்று முடித்து
அடுத்த நூல் தொகுத்திட ஆர்வம் கொடுத்துள்ளார்கள்.
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் வழிவந்த சாலை இளந்திரையன் அவர்களை ஆய்வு
செய்திட தலைப்பு வழங்கி நெறியாளராக இருந்து வி.ஜன்னத்தின் ஆய்வை
நூலாக்கிட ஆலோசனை வழங்கி அணிந்துரையும் நல்கி உள்ளார்.
பேராசிரியர் இரா.மோகன் அவர்கள், தான் நூல் எழுதுவது மட்டுமன்றி தன்னைச்
சார்ந்தவர்களும், நான் உள்பட பலரும் நூல் எழுதிட ஊக்கமும் ஆக்கமும்
அளித்து வரும் உயர்ந்த உள்ளத்திற்க்கு சொந்தக்காரர்.
இந்த நூலில் உள்ள 30 நூல்களின் ஆசிரியர்கள் 25 பேருக்கும்
அணிந்துரைகளின் மூலம் அளப்பரிய மகிழ்ச்சியை படைப்பாளிக்கு வழங்கியது
மட்டுமன்றி அந்த அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக வழங்கி மகிழ்ச்சிக்
கடலில் ஆழ்த்தி உள்ளார். நூலாசிரியர் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள்.
இலண்டனில் கல்லூரியில் துணைமுதல்வராக இருக்கும் இனிய நண்பர் கவிஞர்
புதுயுகன் அவர்களின் கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை என்ற நூலிற்கு
நீண்ட நெடிய ஆய்வுரையை பாராட்டுரையை அணிந்துரையாக வழங்கியது மட்டுமன்றி
அந்த நூலின் வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்திக் கொடுத்து
மகிழ்வித்தவர் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் முனைவர் பட்ட மாணவராக
இருந்தபோது முனைவர் இனியன் அ. கோவிந்தராஜூ அவர்களின் கண்டேன் கனடா
நூலிற்கு அற்புத அணிந்துரை நல்கி தொடர்ந்து அவர் நூல் எழுதிட ஊக்கம்
தந்து வெளியீட்டு விழாக்களையும் முன்நின்று நடத்தி உதவி வருகிறார்.
அவரது ‘வா நம் வசப்படும்’ நூலிற்கும் அணிந்துரை சிறப்பு. முனைவர் ப.
திருஞானசம்பந்தம் அவர்களின் பதினெண்கீழ்க்கணக்கு உழவரும் வரலாறும்
நூலிற்கு சங்க இலக்கியம் நன்கு அறிந்த காரணத்தால் நயத்தகு அணிந்துரையை
நயமாக வழங்கி உள்ளார்.
டாக்டர் ஆர். நடராஜ் நூல், பா. கலையரசியின் நூல், கவிஞர், கா. கருப்பையா
நூல், டி.ஆர். ஜவஹர்லால் நூல், அலசி மை. இராசா கிளைமாக்கம்,
கு.ரொ.மஞ்சுளா இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல். அருட்கவி முஹம்மது
தாஹாவின் நூல், முனைவர் ஈரோடு இனியவன் நூல், மகாதேவ ஐயர் ஜெயராம
சரமாவின் நூல், பேராசிரியர் கா. ஆபத்துக் காத்த பிள்ளையின் இரண்டு
நூல்கள், பெங்களூரில் வாழும் இனிய நண்பர் கே.ஜி. இராஜேந்திர பாபுவின்
நூல் முனைவர் ச. இராமமூர்த்தியின் நூல், முனைவர் மீனா சுந்தர் நூல்,
முனைவர் இரா. மனோகரன் நூல், கோ.சந்திரன் நூல், ஔவை நிர்மலாவின் நூல்,
இப்படி 30 நூல்களின் அணிந்துரை 30 நூல்கள் படித்த உணர்வைத் தருகின்றன.
படைப்பாளிகளுக்கு பாராட்டையும் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் வழங்கி
அற்புதமான அணிந்துரைகள் மூலம் அங்கீகாரம் வழங்கி வரும் தமிழ்த்தேனீ
இரா.மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை-600 017.
பேச : 044 24342810
பக்கம் : ரூ.240,
விலை : ரூ. 150.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|