நூல் :
வல்லூறின் வானம்
நூல்
ஆசிரியர் : மருதூர் ஜமால்தீன்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
பல
நூற்களுக்குச் சொந்தக்காரரான மருதூர் ஜமால்தீன் 'வல்லூறின் வானம்' எனும்
கவிதைத் தொகுப்பிற்கும் இப்போது சொந்தமாகிவிட்டார். நூலாசிரியரின் 10
ஆவது நூலாகவே இந்த நூல் வெளிவந்துள்ளது. ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட
இவர் தடயங்கள், தாலாட்டு, வலிகள் சுமந்த தேசம், தீ நிலம் போன்ற கவிதை
நூல்களையும் ரமழான் ஸலவாத், கிழக்கின் பெருவெள்ளக் காவியம், முஹம்மத் (ஸல்)
புகழ் மாலை, இஸ்லாமிய கீதங்கள், பத்ர் யுத்தம் (ஸலவாத் மாலை) போன்ற
படைப்புக்களையும் ஏற்கனவே இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார்.
அண்மையில் வெளிவந்துள்ள 'வல்லூறின் வானம்' எனும் கவிதைத் தொகுப்புப்
பற்றி கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் குறிப்பிடுகையில், ''இறை சிந்தனையில்,
இலங்கும் கவிஞர் சமூகப் பிரச்சினைகள் கண்டு, சங்கடங்கள் கொண்டு
உள்ளக்கிடக்கைகள் கொட்டி, சமூக விளிப்புணர்வைத்தட்டி, உள்ளது உள்ளபடியே
கண்ணாடியாய் நின்று முன்னாடி நடக்கின்ற அநியாயங்களை, அத்துமீறல்களை,
அரசியல் நாடகங்களை, அடாவடித்தனங்களை குத்திக்காட்டும் குத்தீட்டியாய்,
வெட்டிவிட நினைக்கும் வீர வாளாய்த் தனது வரிகளை வடிவமைத்திருக்கிறார்|
எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ஷஒவ்வொரு இஸ்லாமியனுக்கும்
இருக்க வேண்டிய சமய சமூக ரீதியிலான பற்றுதலும் பிடிமானமும், அநீதி கண்டு
பொங்கியெழும் ஆழ்ந்த பார்வையும் கவிஞரிடத்தில் அபரிமிதமாகவே
காணப்படுகிறது'' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது சமூகப் பற்று நன்கு
புலனாகின்றது.
வல்லூறின் வானம் என்ற இந்தக் கவிதை நூலானது சமூகத்தில் நிலவும் இனவாதச்
செயல்களை சுட்டிக் காட்டுவதாகவும் தட்டிக் கேட்பதாகவும் அமைந்துள்ளது.
மேலும் இனப் பகையைக் கலைந்து ஒற்றுமையை நிலைநிறுத்த தனது கவிதைகள் மூலம்
மருதூர் ஜமால்தீன் அவர்கள் அரும்பாடுபடுகின்றார். மரபு வடிவில் அமைந்த
நூலாசிரியரின் இந்தக் கவிதைகள் நூலில் பல தலைப்புக்களில் அமைந்துள்ளன.
'எவர் கண்பட்டதோ?' என்ற கவிதையில், எத்தனை எத்தனையோ இழப்புக்கள்,
சோதனைகள் எம் தாய்த்திரு நாட்டில் வந்திருந்தும் அத்தனை அவலங்களையும்
தீர்த்துக்கொண்டு வருகின்றவேளை இன்னுமொரு இனத்தீ புகைத்திட வேண்டுமா
எனக் கேட்கின்ற இவர் பின்வருமாறு தனது ஆதங்கத்தை இறைவனிடம் கூறி
நிற்கின்றார் கவிஞர் மருதூர் ஜமால்தீன் அவர்கள்.
ஒற்றுமையென்ற உயர்கொடியை
உயர்த்திப் பிடிக்கும் நிலைதவறி
பற்றுக்கள் வளரா பகை விளைத்து
பரிதவித்திடவே வினை தூவும்
புற்றுள நெஞ்சோர் வன்முறையை
புதிதாய் விதைக்கும் முறையென்ன
இற்றரை மீதில் மீண்டுமொரு
இனவன்செயலா இறையோனே!
'மனிதம் வாழ வேண்டும்' என்ற கவிதையில் சமூகத்தில் தீய செயல்களை விதைக்க
வேண்டும் என்று முனைப்புடன் செயற்படுவோரை உள்ளம் மாசடைந்து கெட்டுப்
போனவர்களாகக் குறிப்பிடும் இவர், அவர்கள் உண்மையான நேர்வழியில்
முட்களைத் தூவி அதில் பயணிப்போரை இடர்படுத்துவதாக விபரிக்கும் இவர் அதன்
ஈற்றில் மனிதாபிமானத்தையும் மனித நேசத்தையும் கொண்ட மனிதர்களை,
பின்வருமாறு போற்றுகின்றார்.
மக்கள் வாழவுழைத்திங்கு
மனிதம் வாழ பதிசெழிக்க
தக்கோர் உறவில் கரம்கோர்த்து
தன்மைத் தூய மனங்கொண்டு
மிக்கோர் பணிகள் புரிவதுவே
முனையும் நன்மைச் செயலாகும்
இக்காலையாம் சிந்திப்போம்
இனிய மனிதம் போற்றிடுவோம்!
'ஒன்று சேர்வோம்' என்ற பின்வரும் கவிதையின் மூலம் சமூக ஒற்றுமைக்கு
பாலமிடுகிறார் கவிஞர்.
இத்தரை வாழ்ந்திடும் பல்லினத்தோர்
இன்புற்று வாழ்ந்தி;டவும் ஒற்றுமைக்கு
சுத்தான விதை தூவி நல்லதோர் வழியை
சாதி மத குலப் பகையைத் தூர வீசி
புத்தியில் நல்லறிவோடு கருத்தைச் சிந்தி
புதியதொரு சமூக நல்லெழுச்சிக்காய்
நித்தமும் உழைத்திடக் கரங்கள் சேர்த்து
நலம் நாடு பெற்றிட ஒன்று சேர்வோம்!
விரிசல் அடைந்துள்ள இன ஒற்றுமையை மறுசீரமைக்க இவ்வாறான கவிதைகள்
காலத்தின் தேவையாக அமைந்துள்ளன. தலைவிரித்தாடும் இனப் பிரச்சினைக்கு
முற்றுப்புள்ளி வைப்பதே கவிஞரின் தலையாய நோக்கமாகும், இதனையே மேற்படி
கவிதை வரிகள் பறைசாற்றுகின்றன.
பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு, இறுதி வெற்றி என்பன இறைவனிடமிருந்து
மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்த இவர், இறுதியாக ஷதுஆ ஏற்பாய்| என்ற
கவிதையில் பகைவனிடமிருந்து காத்திடுமாறு படைத்தவனையே பின்வருமாறு வேண்டி
நிற்கிறார்.
கொலை, கொள்ளை, பாதகங்கள்
கொழுந்துவிட்டுக் குளிர்காய
சிலைவாழ்வில் பயணிக்கும்
சிந்தையிலாத் தீயோரின்
நிலையற்ற வன்செயலால்
நிம்மதியைக் கெடுத்தெம்மைக்
கலைத்துவிடத் துடிக்கின்றார்
காத்திடுவாய் ரஹ்மானே!
மருதூர் ஜமால்தீன் தனது இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து மேலும்
காத்திரமான நூல்களை வெளியிட வாழ்த்துகிறேன்.
நூல் - வல்லூறின் வானம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதூர் ஜமால்தீன்
விலை - 100 ரூபாய்
தொலைபேசி - 0775590611
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|