நூல் : குழந்தை வரைந்த காகிதம்.
நூல் ஆசிரியர் :   ஆசிரியர் இளவல் ஹரிஹரன்
நூல் அறிமுகம்:   கவிஞர் மருத்துவர். செல்லம் ரகு


மிழில் ஆவணமாகியுள்ள முதல் தன்முனைக் கவிதை நூலான "குழந்தை வரைந்த காகிதத்தை" வாசிப்பவனாகவும், ரசிப்பவனாகவும் இருப்பதில் நான் பெருமகிழ்வு அடைகிறேன். தெலுங்கு மொழி கீர்த்தனங்கள், பாடல்கள், சொல்லாடல்கள் என அனைத்துமே அழகானவை ! மனதைக் கொள்ளை கொள்பவை ! சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வரக் கனவு கண்டவர் நம் பாரதி.

நம் மக்களின் மனங்கள் போல் இல்லை... மொழிகள் ! அவை வேறுபாடறியாதவை, ஒன்றோடொன்று இயைந்து, தங்களுக்குள் நிலவும் அழகியலை சேர்ந்திசையாய்ப் பாடுபவை. ஒன்றோடொன்று கலந்து, இந்த பிரபஞ்சத்தை பாசச் சங்கிலியால் கோர்ப்பவை. ஒன்றோடொன்று துணை நின்று, சமுதாய மேன்மையை இத்தரணியில் சாதகம் செய்பவை.

அப்படிப்பட்ட தெலுங்கிலிருந்து நமக்கு அறிமுகமானது தான் "நானிலு" வகைக் கவிதைகள். அதாவது 3 அடி ஹைக்கூவில் இருந்து சற்று வளர்ந்து நான்கு அடிகளாகி, ஹைக்கூப் படிமங்கள் கொண்டிருந்த ஜென்ஸ் சார்ந்த சிந்தனைகளைக் கடந்த வடிவம் இந்த நானிலு.

நானிலு உற்பத்தி மூலம் டாக்டர் என். கோபி, தமிழில் சாந்தா தத். அங்கீகாரப் பதிவுகளாக மகாகவி இதழ்கள்.... இதனை வரவேற்று இதழ்களில் விருந்து படைத்தவர் தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா. முதல் அமுதூட்டியவர் க.நா. கல்யாணசுந்தரம். சீராட்டிப் பாராட்டி வளர்த்து வருவது நம் கவிஞர் இளவல் ஹரிஹரன். என நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சுந்தரத் தெலுங்குக் கவி தமிழில் தன்முனைக் கவியாக வளர்ந்து வருகிறது எனில் அதன் பெருமைக்கு மேலுள்ளவர்களே பிரம்மாக்கள் !

கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்களின் குழந்தை வரைந்த காகிதம் கவிதை தொகுப்பில், கண்முன்னே நிகழும் அவலங்கள் மனிதனை சினமுறச் செய்கின்றன. சமுதாயத்தின் எதிர்வினையை அச்சமுடன் பார்க்க வைக்கின்றன. பரிவு, பாசம் பேசும் கவிதைகள் மனதை வாஞ்சையுறச் செய்கின்றன. காதலைப் பாடும் போது, நம்மை வெட்கமுறச் செய்கின்றன. எதார்த்தங்களைப் பற்றிப்பேசும் போது, நம்மை அவர் கவிதைகள் மேல் காதல் கொள்ள வைக்கின்றன !

கவிஞர் இளவல் ஹரிஹரன், இலக்கியப் பெருவெளியில் தனித்தடம் பதித்து வருகின்ற ஒரு கந்தர்வக் கவிஞர் என்ற இனிய உதயம் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் கூற்று மிகவும் பொருத்தமானது என்றே நான் கருதுகிறேன்.

காதலியைக் காணும் போதெல்லாம்
கண்களில் விழும் தூசி...
அருகில் அவள்
கணவர் கண்டு !

காதல் நம்மில் எத்தனை பேருக்கு இனித்திருக்கிறது..?. நம்மில் எத்தனை பேருக்கு அது வரம் ? எத்தனை பேருக்கு அது சாபம் ? எத்தனை பேருக்கு அது எட்டாக்கனி ?. மனதும், உடலும் சீர்கெட்டு சிந்தை கரைந்தவர்கள் எத்தனை பேர் ? விடை அறியா வினாக்களுக்கு விளக்கம் கூறுவது யார் ? கவிஞரின் கவியில் எட்டாக்கனியான காதல் கண்ணீரைப் பெருக்குகிறது. தூசி விழுந்ததாக உருவகப்படுத்திக் கொள்கிறது. ஆராக் கண்ணீரை ஆற்றுப்படுத்த இயலாமல் தவிக்கிறது அருகில் அவள் கணவனைக் கண்டு ! எவ்வளவு கொடியது காதல் இழந்த வாழ்க்கை.

தெய்வங்களைப் பற்றி தன்முனைக் கவிதையாய் கவிஞர் எழுதும் போது, தனித்தனி தெய்வங்களாக குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை அப்படி பேச விளைந்தால் எத்தனை தெய்வங்களை வரையறுப்பது ? விரல் விட்டு எண்ண இயலுமா என்ன ? சமயோஜிதமாய் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாமல் தப்பிக்க எண்ணி எழுதிய வரிகள் ஒரு மிகச்சிறந்த கவிதையானது மகிழ்வு தான்.

அழுமுன்னர் நினைத்து
தனமேந்தி அமுதூட்டும்
தாயவள் தான்
தனிப் பெருந்தெய்வம் ! -
என்கிறார்...

நினைத்தவுடன் நினைத்த படி நிஜமாய் நம் கண்களுக்கு முன் நிற்கும் தெய்வம் தாய்தானே ! பசிக்கிறது என்று கூடச் சொல்லவேண்டிய அவசியமில்லை குழந்தையாகட்டும், குமரியாகட்டும், மூப்பராகட்டும், குறிப்பறிந்து பசியாற்றும் தெய்வம் தாயின்றி வேறு யாராவது இருக்கிறார்களா என்ன ? அதனாலேயே அவள் தனிப்பெரும் தெய்வம் என்கிறார் கவிஞர் உண்மைதானே இதில் மறுக்க என்ன இருக்கிறது ?

மாணவர்களைப் பற்றிச் சொல்லும் போது, அவர்களை ஒரு மதிப்பெண் உருவாக்கும் எந்திரமாகத்தான் கையாளுகிறோம். ஒரு போதும் அவர்களை சுயமாய்ச் சிந்திக்க விடுவதில்லை. டாக்டர் கனவுகளையும், இன்ஜினியர் ஆசைகளையும், கணினி சிப்புகளையும் அவர்கள் மேல் திணித்து, அவைகளை உற்பத்தி செய்ய, அவைகளாகவே மாறப் படைக்கப்பட்ட, ஒரு நடமாடும், பணம் சம்பாதிக்கும் உயிரியாகத்தான் வளர்க்கிறோம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கடைசி வரை தனித் திறமையையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வகுப்புகள் நடந்ததாக சரித்திரமே இல்லை எனலாம். இதைத்தான் கவிஞரும்,

ஒருபோதும் மதிப்பெண்கள்
உதவுவதே இல்லை
கடைசி வரை உதவும்
தனித்திறனும், தன்னம்பிக்கையும் !


என வேதனையுடன் அறிவுறுத்துகிறார்.

இப்போதெல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாகத்தான் நம் வாழ்வும், நடவடிக்கையும் உள்ளன என்பது மறுக்க இயலாத கூற்று. இதனையே கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் நம் கண்முன் கவிதை ஆக்குகிறார்

நிழல் தரும் மரம்
வெட்டப்பட்ட இடத்தில்
கட்டப்படுகிறது
பயணிகள் நிழல் குடை.


என்ன ஒரு வழுவமைதி பாருங்கள் ! மெல்ல அசைந்து தென்றலையும், நிழலையும், காய், கனிகளையும் தரும் மரத்தை வெட்டி விட்டு நிழற்குடை அமைக்கிறோம் ! இரண்டும் ஒரே பயன் தான் தரும். ஆனால் நிழற்குடை ஒரு ஆடிக்காற்றில் அசையும். பிறகு அதுவே இருக்காது. அந்தக் காற்றிலேயே காணாமல் போகும். இயற்கையை அழித்து செயற்கையில் நாம் சாதிப்பது ஒன்றுமில்லை ! இதை என்று புரிந்து கொள்கிறோமோ அதுவரை வாழ்க்கையும் இல்லை.

சர்க்கரையை உருட்டிக்
கொண்டு போகும் எறும்புகள்
வியந்தபடி பார்க்கிறேன்
சர்க்கரை நோயாளி.


இனிப்புண்ண இயலாத ஆதங்கம் அவர் வரிகளில் தெரிகிறது. என்ன செய்ய ? முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி தானே இதுவும். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது சர்க்கரையை உருட்டும் அந்த எறும்புக்கு சர்க்கரை நோய் உள்ளதா ? இருக்காது என்பதே என் எண்ணம். ! ஏனெனில் அது தன் பயணங்கள், உணவுத் தேடல்கள், இட மாறுதல்கள், புற்று வனைதல் என அனைத்தையும் நடப்பதிலேயே சாத்தியப்படுத்துகிறது. காரோ, பைக்கோ எதுவும் தேவையில்லை அதற்கு ! நாமும் நடந்தால் எந்த சுகரும் நமக்கு துயர் தராது. எறும்பிற்கு நடப்பதே வாழ்க்கை. நம் வாழ்க்கையில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கூட நடப்பதற்கு நாம் செலவிடுவதில்லை. பிறகு எப்படி நம் வாழ்க்கையை சுகர் சுருட்டாமல் இருக்கும் ?

முடிவாக பேரம் பேசி
ஆட்கள் கூடி, முடிவாக
அறிவிக்கப்பட்டது
விருதாளர் பெயர்.


வருந்தக் கூடிய, நாணக்கூடிய, அவமானப்படக் கூடிய, ஒரு உண்மை ! பணம் கொடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்டது இப்போதெல்லாம் ! அதுவும் பேரம் பேசி உடன்பாடு கிட்டினால் போதும் விருது கிடைத்து விடும். மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூட ஒரு முறை விருது கிடைக்காததால் ஆதங்கத்தில் இருந்த ஒரு கவிஞரிடம் உங்கள் நூலுக்கு விருது கிடைக்கவில்லையே என கவலைப்படாதீர். என் கைகளில் அது தவழ்கிறதல்லவா ? இதுவே உங்கள் நூலுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக கருதுங்கள் என்றாராம். அதுபோல விருதின் மதிப்பை கலைஞர்களே கெடுத்துக் கொள்கிறார்கள். நேர்மையான, உண்மையான, உழைப்பிற்குப் பெறுவது போய் பணத்திற்கு விருது என்பது ஒரு வெட்கப்படவேண்டிய, சமுதாயச் சீர்கேடு என்றே கொள்ளலாம்.

புத்தாண்டு பிறப்பில்
மறந்து போயின
பழைய ஆண்டில்
எடுத்த உறுதிகள்.

இக்கவிதை நம்மில் எத்தனை பேருக்கு பொருந்தும் ? என விரல் விட்டுச் சொல்லி விடலாம். புத்தாண்டு கொண்டாடி அடுத்த நாள் தூங்கி எழுந்தவுடன், முந்தைய நாளையும், உறுதியெடுத்த செயல்களையும், இன்னும் ஏன், பேசியதையே கூட மறந்து விடுவது தானே நம் பழக்கம். இதைத்தான் கவிஞர் மறைமுகமாக இடித்துரைக்கிறார்.

தேதி கிழிக்கும்
கைகளுக்கு சொன்னது
ஆறுதலாய்
மற்றொரு தேதித்தாள்.


இறைவன் நமக்கு ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தை, நம் ஒவ்வொருவர் கையிலும் திணித்து மகிழ்கிறார். அது முடிந்து மீண்டும் ஒரு 24 மணி நேரங்கள் காத்துக் கொண்டுள்ளன அடுத்தநாள் எனும் பெயரில். நாம் சோர்ந்து விடாமல் சாதிக்க ; துன்பங்களில் துவண்டுவிடாமல் துணிந்து நிற்க ; கவலைகளில் கரைந்து விடாமல், மீண்டெழ ; ஆசைகளை அணி சேர்க்காமல் ; சுகித்து மகிழ, வெற்றிக்குப்பின் வெறுமை கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற... என அனைத்திற்கும் தேவையான அவகாசங்கள் நம் கரங்களில் உள்ளன. நாம்தான் அதனை உபயோகிக்க தவறி விடுகிறோம். காலங்களை உதறிவிட்டு சிற்றின்பங்களில் மூழ்கி விடுகிறோம். நம் கவிஞரும் நமக்குச் சொல்ல வருவது இதைத்தான். இன்று போனாலென்ன நாளை நமதே என்ற தாரக மந்திரம் தான் அது.

கோயிலுக்குச் சென்று வந்த
மன அழுத்தம்
உடனே குறைந்தது
தாய் முகம் கண்டு !


தாயிற் சிறந்த கோயில் எது ?
தாயை வணங்க வாழ்வில் துன்பம் ஏது ?
மன அழுத்தம் ஏது ?
அடுத்த கவியாக....

மனதில் பூட்டி வைத்த
மகிழ்ச்சி தேடி
வாடுகிறோம்
வெளியில் அலைந்து...


உண்மைதானே, கனியிருப்ப காய் கவர்ந்தற்று மாதிரி நிம்மதி நமக்குள் இருக்க மகிழ்ச்சி தேடி காடு, மலை எல்லாம் சுற்றுகிறோம். ஒரு கவிஞனின் தீர்க்க தரிசனத்தை நாம் புரிந்து கொள்வது எப்போது ?

மேலும் இன்னொரு கவிதையில் நாம் பெண்ணாக பார்க்கும் அனைத்து விஷயங்களிலும் ஒரு மென்மைத்தன்மை இருக்கும். வீடு ஆணா ? பெண்ணா ? இது குழப்பமான கேள்வி தான். அஃறிணை ஆயிற்றே வீடு ! எப்படி சொல்ல ! ஆனால், நம் இளவல், வீட்டையும் பெண்ணாகத்தான் பார்க்கிறார். கவிஞரின் கூற்றுப்படி

வீடு
தாய்மை அடைகிறது...
அட்டை பெட்டிக்குள்
குருவி கட்டும் கூடு !


எவ்வளவு அழகு இந்த கவிதை. அஃறிணையும், ஐந்தறிவும் சேர்ந்து ஒரு இல்லம் உருவாக்குகிறது. இந்தச் சமுதாயத்தில் ஒரு சந்ததியைக்
கூட்டுகிறது. கவிஞரின் இந்தத் தாயுள்ளத்தை நான் மெச்சுகிறேன்.

இப்படி, இன்னும் படித்து மகிழ எவ்வளவோ கவிதைகள் வரிசைகட்டி நிற்கின்றன. நூலினை வாசகராகிய நீங்கள் அனைவரும் படிக்கும் பொருட்டு இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

என் பேனாவின் மை இளவல் ஹரிஹரன் அவர்களின் கவிதைகளை எழுத, எழுத, ஊற்றாக பிரவாகம் எடுக்கிறது. அனைத்தும் நான்கு வரி நானிலுவாய், தன்முனைப் கவிதைகளாய், எண்ணற்ற பொருள் தரும்படி இயற்றிய கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் - அன்பும் ! நூலினை வாங்கிப் படியுங்கள். நம் துன்பங்களை சிறிது தள்ளி வைத்துவிட்டு கவிதைத் தேரேறி இன்பவான வீதியில் உலா வரலாம்.

இது போல் நிறைய எழுத வேண்டும் என்பது என் ஆசை.... இளவல் ஹரிஹரன் அவர்களின் கவி நேசனாக வைக்கும் வேண்டுதலும் கூட ! ஆசைகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் ஐயா.
 




கவிஞர் மருத்துவர். செல்லம் ரகு.
பேச : 94437 75974



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்