நூல் :
தமிழ் இலக்கியத்தில்
உடன்பாட்டுச் சிந்தனை
நூல்
ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர்
நிர்மலா மோகன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
மதுரையில் இலக்கிய இணையர்
என்று போற்றப்படும் ஆளுமைகள் தமிழ்த் தேனீ இரா. மோகன், நிர்மலா மோகன்
அவர்கள். தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதியுள்ள 37ஆவது
நூலாகும். இந்நூலை தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி
உள்ளார். வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக உள்ளது. அட்டைப்பட
வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.
நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார்கள். ஒன்பதும்
ஒன்பது சுவை போல இலக்கிய விருந்தாக நூல் உள்ளது. படிக்கும் வாசகர்கள்
மனத்தில் எதிர்மறை சிந்தனைகளை அழித்து உடன்பாட்டுச் சிந்தனைகளை
விதைக்கும் விதமாக வந்துள்ளது நூல்.
ஒரு புத்தகம் என்ன செய்யும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக வந்துள்ள நூல்.
படிக்கும் முன் உள்ள மனநிலைக்கும், படித்த பின் உள்ள மனநிலைக்கும் உள்ள
முன்னேற்றமே நூலின் வெற்றியாகும். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற
திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து வந்துள்ள நூல். நல்லவை இருக்க
அல்லவை எதற்கு. கனி இருக்கும் போது காய் எதற்கு? கனி என்பது
உடன்பாட்டுச் சிந்தனை. காய் என்பது எதிர்மறையான சிந்தனை. எப்போதும்
நல்லவை சிந்திக்க, நல்லவை பேச, நல்லவை செய்திட வலியுறுத்திடும் நூல்.
தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிதைகள் வரை
கொட்டிக் கிடக்கும் உடன்பாட்டுச் சிந்தனைகளை மேற்கோள் காட்டி
எழுதியுள்ள நூல்.
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அறிஞர்கள் உடன்பாட்டுச் சிந்தனைகள்
குறித்துச் சொன்ன பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த்தேனீ இரா. மோகன்
அய்யா பாணியிலேயே தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும் கட்டுரைகள்
வடித்து இருப்பது சிறப்பு. முதல் கட்டுரையில் உடன்பாட்டுச் சிந்தனைகள்
குறித்த விளக்கம் மிக நன்று. அக்கட்டுரையிலிருந்து சில துளிகள் :
கவிப்பேரரசு வைரமுத்து கவிதை.
எதிர்மறை வார்த்தைகள் / உதிர்ந்து போகட்டும்!
உடன்பாட்டு மொழிகள் / உயிர் கொண்டெழட்டும்!
(பெய்யெனப் பெய்யும் மழை பக். 76-77)
மேற்கோள் காட்டும்போது எழுதியவர் பெயர், நூலின் பெயர் பக்க எண்கள்
குறிப்பிட்டு மிகத்துல்லியமாக எழுதி இருப்பது சிறப்பு. மேற்கோள்
காட்டப்பட்ட நூலை வாங்கிப் படித்திட தூண்டும் விதமாகவும் உள்ளது.
தொல்காப்பியரின் உடன்பாட்டுச் சிந்தனையில் தொடங்கி புறநானூறு,
திருக்குறள் பக்தி இலக்கியங்களில் உள்ள உடன்பாட்டுச் சிந்தனை
பாரதியாரின் பாடல்களில் உள்ள உடன்பாட்டுச் சிந்தனை இலக்கியக் கடலில்
மூழ்கி முத்தெடுத்து வாசகர்களுக்கு பரிசளித்து உள்ளார். அன்னப்பறவை
தண்ணீரை நீக்கி விட்டு பாலை மட்டும் அருந்தும் என்பார்கள். அதுபோல தமிழ்
இலக்கியத்தில் உள்ள பாலை மட்டும் எடுத்து எழுதி உள்ளார்.
எண்ணம் போல வாழ்க்கை என்பார்கள். அதுபோல உடன்பாட்டுச் சிந்தனை என்பது
நல்லது நினைப்பது. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். மனமது
செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பார்கள். அதுபோல நல்லதை
நினைத்து நல்லதைப் பேசி, நல்லதைச் செய்தால் வாழ்க்கை வளமாகும் என்பதை
உணர்த்திடும் நூல்.
கவியருவி தமிழன்பன் கவிதை உடன்பாட்டுச் சிந்தனையின் உச்சம் என்றே
சொல்லலாம். பல பட்டிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் கவிதையை
மேற்கொள் காட்டி உள்ளார்கள்.
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி. ஒன்பது
முறை எழுந்தவனல்லவா? நீ
சூரியப் பிறைகள் (ப.30)
நூல ஆசிரியர் வரலாற்று பெருமைமிக்க செந்தமிழ்க் கல்லூரியில்
பேராசிரியராக இருந்து பணிநிறைவு பெற்றவர். காந்தி கிராம பல்கலைக்
கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்பதால் சங்க
இலக்கியம் பற்றி வகுப்பறையில் பாடம் நடத்தி நடத்தி சங்க இலக்கியத்தில்
புலமை மிக்கவராக இருப்பதால், சங்க இலக்கியத்தில் உள்ள உடன்பாட்டுச்
சிந்தனைகளை மிக அழகாக தொகுத்து எடுத்தி இயம்பி உள்ளார்.
ஒருமுறை அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்த போது ஔவையார்
வாயிலோனை விளித்துப் பாடிய புறநானூற்று பாடலும் விளக்கமும் நன்று.
‘திருவள்ளுவர் ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக’ என்ற கட்டுரையில்
திருக்குறளில் உள்ள குறள் எண்கள் 50, 48, 49, 46, 56, 374, 426, 280,
596, 772, 621, 999, 1122, 338, 336, 339, 1, 1330 – இத்தனை
திருக்குறள்களை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை சிறப்பு. திருக்குறளின்
புகழை மேலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் கட்டுரை. நூலில் உள்ள
ஹைக்கூ கவிதைகள் சில :
ஆகாயமும் அழகு
பூமியும் அழகு - ஆம்
என் கையில் ரொட்டித் துண்டு
சாகும் தாய்
அருகில்
சிரிக்கும் குழந்தை!
பழைய இலக்கியமான சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய இனிய இலக்கியமான ஹைக்கூ
வரை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து தொகுத்து வகுத்து பகுத்து வழங்கிய
நூல்.
நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் தொடர்ந்து எழுதி
வரவேண்டும் என்ற என் வேண்டுகோளை வைத்து முடிக்கிறேன். தமிழ்த்தேனீ இரா.
மோகன் அய்யா போல நீங்களும் 150 நூல்களை எழுதிட வேண்டும்.
தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை!
நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன்
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 176, விலை : ரூ.180
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|