நூல் :
உலக முதல்மொழிக்
கோட்பாடு
நூல்
ஆசிரியர் : முனைவர் க.விஜயகாந்த்
நூல் அறிமுகம்:
ஜெ.மதிவேந்தன்
(முனைவர் பட்ட ஆய்வாளர்)
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மன்னுலகப் பேரரசே!
என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் அடிகளுக்கேற்ப, உலக
மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூத்தமொழியாகவும் விளங்குவது
தமிழ்மொழியாகும். இதனைப் பல்வேறு ஆய்வின்வழி உறுதிபடுத்தியுள்ளனர். உலக
மொழியியல் வரலாற்றில், பல்வேறு தன்மைகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
அந்த அடிப்படையில் தமிழில் மொழி, மொழியியல் பற்றிய ஆய்வுகளை, அண்ணாமலைப்
பல்கலைக்கழக மொழியியல் துறை சிறப்பாகச் செய்துள்ளது. தமிழில், மொழி
பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் ஐரோப்பிய அறிஞர்கள்
(பாதிரிமார்கள்). கிறித்துவச் சமயப் பரப்பல் என்பதே, அவர்களின் முதன்மை
நோக்கம். எனினும் அப்பணியோடு நின்றுவிடாமல் கல்விப்புலம், மொழிப்புலம்
என்ற அறிவுத் துறைகளின் ஆய்விலும் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தமிழில்
நூல்கள், அகராதிகள், இதழ்கள், பாடநூல்கள் போன்றவை வெளிந்தன. அந்தவகையில்
எல்லீஸ், கால்டுவெல் தொடங்கி, வீரமாமுனிவர் வரையிலான பலரும்
தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியுள்ளனர்.
டாக்டர் கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (1856)
என்னும் நூல் தமிழில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கியது.
குறிப்பாக, தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
ஆகிய நான்கு மொழிகள் பற்றிய ஆய்வினை முதன்மையாக முன்னெடுத்தது.
கால்டுவெல் பல்வேறு அனுபவங்களினூடாகப் பன்மொழிப் புலமையும் பல்துறை
அறிவும் அனுபவமும் பெற்றிருந்தார். அதனால், பலமொழிகளின் உண்மைத்
தன்மைகளைக் வெளிக்கொணர்ந்தார். தமிழ்மொழியினை மற்ற மொழிகளுக்கெல்லாம்
மூத்தமொழி எனக் கூறத் துணிந்தனர். இந்த வரிசையில்,
‘உலக முதல்மொழிக் கோட்பாடு’ எனும் நூல், முனைவர் க.விஜயகாந்த் (வெற்றி
வேந்தன்) அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நெய்தல் பதிப்பகத்தின்
வாயிலாக, 2016ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்தது. தமிழக அரசின், தமிழ்
வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் வெளியீட்டின் மூலமாக வெளியிடப்பெற்ற
இந்நூலில், தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு வேளையில் (1916 - 2016)
வெளிவந்தது பெரும் மகிழ்ச்சிக்குரியது.
கல்விப் புலத்தில் பலரும் ஆய்வு மேற்கொள்ளத் துணியாத, ‘மொழியியல்’
துறையில் இந்நூலினைப் படைத்துள்ளார். தமிழ்மொழியினை முதன்மையாகக் கொண்டு
குறிப்பாக, ‘உலக முதல்மொழி’ என்னும் கோட்பாட்டு வரையறைக்குள் நின்று
இவ்வாய்வு நூல் பயணிக்கிறது. இவ்வாய்வு நூலினை, மொத்தம் ஐந்து
பகுப்புகளாக அமைத்துள்ளார் நூலாசிரியர்.
‘உலக முதல்மொழி அறிஞர்கள்’ என்னும் பகுப்பில், தமிழ்மொழியியல் ஆய்வுக்கு
வித்திட்ட கால்டுவெல் தொடங்கி, தமிழின் மொழித்துறைசார் அறிஞர்களான
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், முகம்மது ஹீனிபா, ம.சோ. விக்டர்
போன்ற அறிஞர்களின் மொழியியல் கருத்துகளும் முடிவுகளும் இவ்வியலினுள்
ஆராயப்பட்டுள்ளது.
‘உலக முதல்மொழியில் மாறுபட்ட கருத்துக்கள்’ என்ற இப்பகுப்பினுள், உலக
மொழிகளில் காணப்படும் வேற்றுமை, ஒற்றுமைக் கூறுகளும் மொழிநூல்
அறிஞர்களின் கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, பாவாணரின்
மொழித்தோற்றக் கொள்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
உலகச் செவ்வியல் மொழிகளும் முதல்மொழிக் கோட்பாட்டும் எனும் பகுப்பினுள்,
உலக மொழிகளில் செவ்வியல் தன்மையுள்ள மொழிகளைப் பற்றி கல்வெட்டு,
இலக்கியச் செய்திகளைக் கொண்டு விரிவாக ஆராய்ந்துள்ளார். ‘உலக முதல்மொழி’
என்னும் கோட்பாட்டுக்குட்பட்ட வரையறையில் தமிழ்மொழி மட்டுமே அடங்குகிறது
என்ற கருத்தினை பாவாணர் துணைகொண்டு நிறுவுகிறார்.
உலகச் செவ்வியல் மொழிகளும் தமிழும் என்ற பகுப்பில், உலகமொழிகளுடன் தமிழ்
பெறும் இடம் குறிப்பாகக் கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, சீனம் ஆகிய
மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது. இதில் பெயர், வினை, உறவு, எண்,
இடம் சார்ந்த பெயர்ச்சொற்களின் துணையுடன் தமிழ்மொழியைப் பிறவற்றுடன்
ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.
உலக முதல்மொழிக் கோட்பாட்டு - ஆய்வின் வன்மை மென்மைகள் என்ற இறுதிப்
பகுப்பினுள், உலக மொழிகள் குறித்து இதுவரை நிகழ்ந்துள்ள ஆய்வுகள்
குறித்து, ஆழமான விமர்சனங்களும் ஆய்வு முன்னெடுப்புகளும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலக்கம், நாவாய், மாது, மாதர், காண், அம்மா
- அன்னை போன்ற சொற்கள் சார்ந்த உலக மொழிப் பயன்பாட்டினை
எடுத்துக்காட்டுகிறார். அதோடு வினைச்சொற்கள், மூவிடப் பெயர்கள்,
முன்னிலைப் பெயர்கள், படர்க்கைப் பெயர்கள் குறித்தும் இந்நூல்
ஆராய்கிறது.
ஒவ்வொரு பகுப்பின் இறுதியிலும் ஆய்வுத் தொகுப்புரையையும் ஐந்து
பகுப்பினுள் கண்டறிந்தவற்றை முடிவுரையாகவும் தொகுத்தளித்துள்ளார்.
ஆய்விற்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலினைத் தமிழ் நூல்கள், ஆங்கில
நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் எனப் பகுத்துத் தந்துள்ளார்.
பிற்சேர்க்கையாக, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையின் மேனாள்
துறைத்தலைவர் பேரா. ந. தெய்வசுந்தரம் அவர்களின் நேர்காணலை
இணைத்திருப்பது இவ்வாய்வு நூலுக்கு மேலும் கூடுதல் விளக்கத்தைச்
சேர்த்துள்ளது. அதனையடுத்து, சொல் ஒப்பீடுகள் என்ற பகுதியும்
அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுள், தமிழில் வழங்கும் சொற்களுக்குக்
கிரேக்கம், சீனம், இலத்தீன் போன்ற மொழிச் சொற்களுடன் ஓப்பீட்டு
ஆய்வினைத் தந்துள்ளார்.
இந்நூலுக்கு, சென்னைக் கிறித்தவக் கல்லூரி, தமிழ்த்துறையின் பேராசிரியர்
முனைவர் கு. அரசேந்திரன் அவர்களின் ஆய்வு அணிந்துரையும் சென்னைப்
பல்கலைக்கழக அழிநிலை மொழிகள் நடுவத்தின் துறைத்தலைவர் பொறுப்பினை
வகிக்கும் முனைவர் கோ.பழனி அவர்களின் மதிப்பீட்டுரையும் நூல் பற்றி
அறிந்துகொள்ள மேலும் துணைபுரிகின்றன.
தமிழ் மொழியியல் ஆய்வு வரலாற்றில், பாவாணருக்குத் தனித்த இடமுண்டு. மொழி,
மொழிநூல் ஆய்வு, மொழியியல் ஆய்வுகள் எனப் பல தளங்களில் சிறந்து
விளங்கியவர். அந்தவகையில் தமிழில் மொழித்தூய்மை, மொழியியல் ஆய்வு,
மொழிச்சிந்தனை எனப் பலவற்றிற்கும் அடிகோலியவர்கள் தனித்தமிழ் இயக்க
அறிஞர்கள் என்பதினை எவரும் மறுக்க இயலாது. அவர்களுள் பரிதிமாற் கலைஞர்,
மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் பின்னாட்களில் ப. அருளி, கு.
அரசேந்திரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு, உலக / தமிழ் மொழியியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளும்
நூல்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன. உலக முதல் மொழி எது? என்பது குறித்த
நிரந்தரமான முடிபு இன்னும் எட்டப்படவில்லை. இதுவும் கூட மொழியியலின்
பல்வேறு ஆய்வுக்கு வழிவகுக்கும். மொழிகளின் பல்வேறு தன்மைகளின்
அடிப்படையில் இன்று ‘செம்மொழி’ தகுதிப்பாடு என்பது மொழிகளுக்கு
வழங்கப்படுகின்றன. ஒரு மொழியினை உயர்த்தியும் பிற மொழியினைத்
தாழ்த்தியும் கூறும் மனநிலை மாற வேண்டும். உலகமொழிகளை ஒருங்கே இணைத்து
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே, உலக மொழியியல் வரலாற்றில்
சிறந்த காலமாக விளங்கும்.
நூல் மதிப்புரை செய்தவர்:
ஜெ.மதிவேந்தன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை - 600 005.
தொடர்பு எண்: 9677090519.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|