நூல் : நம்பிக்கை வெளிச்சங்கள்
நூல் ஆசிரியர் :   கவிதாயினி மு. வாசுகி, மேலூர்.
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா.இரவி


மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டிகளில் வென்று பரிசுகள் பெற்றவர் நூல் ஆசிரியர் கவிதாயினி மு. வாசுகி அவர்கள். மதுரைக்கு அருகே உள்ள மேலூரில் வசிப்பதால் இவரால் மேலூர் பெருமை பெற்றுள்ளது. மேலூர் பலரும் அறியும் ஊராக அறியச்செய்த பெருமை நூலாசிரியரையே சாரும். ‘நம்பிக்கை வெளிச்சங்கள்’ நூல், நூலாசிரியரியருக்கு மூன்றாவது நூல், முத்தாய்ப்பான நூல். பெயருக்கு ஏற்றபடி படிக்கும் வாசகர்களுக்கு நம்பிக்கை வெளிச்சங்கள் தந்துள்ளார்.

சின்னச்சின்ன புதுக்கவிதைகள் படித்திட சுவையாக உள்ளன. வழிபாடு என்று தொடங்கி அதிர்ச்சி என்று முடித்துள்ளார். 163 தலைப்புகளில் புதுக்கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. பாராட்டுக்கள். இல்லத்தரசியாக இருந்து கொண்டே இலக்கியத்திலும் கொடிநாட்டி வருகிறார்.

‘அம்மா’

நிலவைக் காட்டித்தான் சோறூட்டுவார்கள் / ஆனால்
நிலவே சோறூட்டியது / எனக்கு மட்டும் தான்!


‘அம்மா’வை நிலவு என்று குழந்தை சொல்வது போன்று புதிய உத்தி நன்று. தன்னுடைய தாயையும் நிலவாகப் பார்த்த பார்வை நன்று.

தலைவர்கள்

உண்மையான தேசத் தலைவர்கலெல்லாம்
நாற்காலிகளில் இல்லை / புத்தக அலமாரிகளில்
இருக்கிறார்கள்!


இன்றைய அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உண்மையாக இல்லை. வேடமிடும் கபடதாரிகளாக உள்ளனர் என்பதை வித்தியாசமாக சிந்தித்து, எள்ளல் சுவையுடன் எழுதிய விதம் அருமை.

பணம்!

இப்போழுது நம்மிடமிருக்கும் ‘காந்தி’யை
‘கோட்சே’ சுடுவதில்லை / ‘விலைவாசி’ சுடுகிறது!


விலைவாசியைக் குறைப்போம் என்று சொல்லியதை மறந்து விடுகின்றனர். விலைவாசியோ விசம் போல ஏறி வருகின்றது. ஏழைகளோ போராட்ட வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது. இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டும் கவிதை நன்று!

அரசியல் தலைவர்கள்!

அன்று / சுதந்திரத்திற்காக / சிறையிலிருந்தார்கள்
இன்று / சிறையிலேயே / சுதந்திரமாக இருக்கிறார்கள்!


ஊழல் செய்துவிட்டு தண்டனை பெற்று சிறைக்குச் சென்றாலும் அங்கும் சர்வசுதந்திரமாக வலம் வருகிறார்கள் என்ற நாட்டு நடப்பை நன்கு உணர்த்தி உள்ளார். சொற்களை மாற்றிப் போட்டு சொல் விளையாட்டு விளையாடி உள்ளார்.

அன்பு!

கோடி ரூபாய் கொடுத்தாலும்
ஒருமுறை கூட வாலாட்டாது நாய்!
ஒரேயோரு முறை சோறிட்டுப் பார் / கோடி முறை
கூட வாலாட்டும் / அன்பு என்பது வெளியிலிருந்து
நடும் நாற்றல்ல / உள்ளிருந்து வரும் ஊற்று!


நாயை எடுத்துக்காட்டாக எழுதி, அன்பின் மேன்மையை மிக அழகாக உணர்த்தி உள்ளார். பணத்தால் முடியாத்து நல்ல குணத்தால், அன்பால் முடியும் என்பதை ‘நாற்று’ ‘ஊற்று’ என்ற சொல் விளையாட்டால் உணர்த்தியது சிறப்பு.

கருமை!

எல்லோரும் / தோலில் வெறுக்கிறார்கள்
தலையில் ஏற்கிறார்கள் / கருமை நிறத்தை!


ஆண்களின் மனநிலையை மிக அழகாக படம்பிடித்துக் காட்டி உள்ளார். ஆண்கள் மணமுடிக்க வெள்ளை நிறப் பெண்ணே வேண்டும் என்கின்றனர். கருப்பு நிறப்பெண்ணை வேண்டாம் என்கின்றனர். ஆனால் தலையிலும், மீசையிலும் மட்டும் வெள்ளையை அனுமதிக்காமல், கருப்பு மையை விரும்பி ஏற்கின்றனர்.

தரம்!

இளமையோடு / இருப்பதல்ல அழகு!
திறமையோடு இருப்பதே அழகு!


புற அழகு அழகல்ல, அக அழகே அழகு! என உணர்த்திய புதுக்கவிதை அழகு!

தாலி!

கட்டுவதற்காக குனிந்தேன்
நிமிரவே முடியவில்லை!

இன்றைய பல பெண்களின் நிலையை மிகச்சுருக்கமான சொற்களில் திறம்பட உணர்த்தி உள்ளார்.

வாழ்க்கை!

உன் செயலால் / பிறர் மனதில்
இடம்பிடிக்க முயற்சி செய்! / பிறர்
மனதுக்காக உன் செயலை / மாற்ற
முயற்சிக்காதே!

நம் செயலால் பிறர் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அச்செயல் நற்செயலாக இருந்தால் தான் மனதில் இடம் கிடைக்கும். பிறர் விரும்பும்படியான வாழ்க்கை வாழ்வது தான் சிறப்பு என்கிறார்.

மகாத்மா காந்தி!

சிலர் / துண்டு போட்டும்
சாதிக்க முடியாதவற்றை / சட்டையணியாமலே
சாதித்தவர் மகாத்மா காந்தி!

மதுரை மண்ணில் அரையாடை பூண்டவர், வட்டமேசை மாநாடு வரை அரையாடையோடே சென்று இறுதிமூச்சு உள்ளவரை அரை-யாடையோடே இருந்து சாதித்த சாதனையாளர். காந்தியடிகளுக்கு கவிதையின் மூலம் மகுடம் சூட்டி உள்ளார். துண்டு போட்ட அரசியல்வாதிகள் இன்று மதிப்பை இழந்தே வருகின்றனர். உண்மை, நேர்மை இல்லாத காரணத்தால்.

கண்ணாடி!

கோடிக்கணக்கானோர் பார்த்தாலும் /
எவரையுமே பதிவு செய்வதில்லை
முகம் பார்க்கும் கண்ணாடி!


எல்லோருமே கண்ணாடி பார்க்கிறோம். யாரையுமே கண்ணாடி பதிவு செய்வதில்லை. நூலாசிரியர் கவிதாயினி மேலூர் மு. வாசுகி அவர்கள் கண்ணாடியைப் பார்த்த பார்வை இதுவரை யாருமே பார்க்காத பார்வை பாராட்டுக்கள்!.

கனவு!

கனவு தான் / வென்றால் விதை / வீழ்ந்தால் கதை?

மாமனிதர் அப்துல்கலாம் சொன்னது போலவே ‘கனவு காணுங்கள்’ என்கிறார். நனவானால் விதை, நனவாகாவிட்டால் கதையாக வடித்துக் கொள் என்கிறார்.

நம்பிக்கை வெளிச்சங்கள் என்ற இந்த புதுக்கவிதை நூலின் மூலம் வாசக மனங்களில் நம்பிக்கை வெளிச்சங்கள் பாய்ச்சி வெற்றி பெற்றுள்ளார். மிகச் சுருக்கமான சொற்களுடன் மிகப்பெரிய கருத்துக்களை கல்வெட்டு போல கற்சிலை போல செதுக்கி சிந்தைக்கு விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.


வெளியீடு: மணிமேகலை பிரசுரம்.
7.தணிகாசலம் சாலை.தியாகராயர் நகர்.
சென்னை 600 017.
பக்கம்112.விலை
ரூபாய் 70.

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்