நூல் : க்ளிக்-2  (புதுக்கவிதைகள்) 
நூல் ஆசிரியர் :   கவிஞர் மதுரை முரளி
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா.இரவி

திரைப்படம் வெற்றிப் பெற்றதும் இரண்டு, மூன்று என்று வருவது போலவே கிளிக் என்ற புதுக்கவிதை நூல் பாராட்டுப் பெற்றதும் நூல் ஆசிரியர் உடனடியாக கிளிக்-2 என்று எழுதி வெளியிட்டு விட்டார். பாராட்டுக்கள். 

எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், கவிஞர் பாஸ்கர், முன்னணி வழக்கறிஞர் கு. சாமிதுரை, செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி ஆகியோர் அணிந்துரை நல்கி சிறப்பித்து உள்ளனர். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளார்.

அகில இந்திய வானொலியில் கதை நாடகம் எழுதிய எழுத்தாளர், தொடர்வண்டித்துறையின் பொறியாளர் புதுக்கவிதையிலும் தடம் பதித்து உள்ளார். மதுரைக்கு பெருமை சேர்த்து வருவதால் தன் பெயருடன் மதுரையையும் இணைத்துக் கொண்டார். பாராட்டுகள். 

க்ளிக் / பல்லாங்குழி / பச்சைக்குதிரை
பாண்டியாட்டம்
/ கள்ளன் காப்பான் / கோலிகுண்டு
உடலும்
மனசும் / ஒருசேர மகிழ்ந்த
விளையாட்டுக்கள்
.... விடைபெற்றன !

கையடக்க அலைபேசி / அழை(ழி)ப்பான்
களால்
ஆக்கம் ... அழிவு / இயற்கையின்
இருபாடங்கள்
/ படிக்கவில்லை ... நாம்!

 உண்மை தான், உடலுக்கும் மனதிற்கும் உண்மையான விளையாட்டுகளை மறந்து விட்டு அலைபேசியில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே விளையாடி உடலுக்கும், மனதிற்கும் கேடுகளை வரவழைத்துக் கொள்கிறோம். சிறிய குழந்தைக்குக் கூட அழுகை நிறுத்திட அலைபேசியால் கெடுத்து வருகிறோம். அலைபேசியால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. நன்மைக்கு மட்டும், நல்லவைக்கு மட்டும் பயன்படுத்திடும் கட்டுப்பாடு வர வேண்டும். விழிப்புணர்வு விதைக்கும் கவிதை நன்று.!

 உன் பாதம் / பதித்த சுவடுகளில் / புதைய ஆசை
புதையலாய்
மேலே / நீ நிற்பதால் / எனக்கு

 காதல் கவிதைக்கு பொய் அழகு. எல்லோரும் ரசிப்பதும் உண்டு. காதலியின் பாதம் பதிந்த இடத்தில் புதையவும் விருப்பமாம். காரணம் மேலே அவள் புதையலாய் நிற்பதால். இக்கவிதையை காதலி மட்டுமல்ல, படிக்கும் மற்றவர்களும் ரசிப்பார்கள் என்பது உண்மை.

பேராசிரியர்கள் / பெயர்கள் / தினசரி
செய்திகளில் / சேதாரமாய் / ஆதாரத்துடன்

அவலம் .... ஆரம்பம் ! தொடர்?

 ஆசிரியப்பணி, அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி!’ என்பார்கள்.  முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி இராதா-கிருஷ்ணன், மாமனிதர் அப்துல் கலாம் இருவரும் ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்தவர்கள். ஆனால் இன்று ஒரு சில பேராசிரியர்களின் அற்பமான செயலால் மதிப்பிழந்து வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்கு பேராசிரியர்கள் காரணமாக இருந்தது நாட்டில் நடந்த அவலம். அதனை நினைவூட்டியது கவிதை.

புகழ், போதை / இறங்க மறுக்கும்
ஏறினால்
/ தலையில் வீழும் வரை!

 தலையில் வீழும் வரை என்றால் கொட்டு விழும் வரை என்று கொள்ளலாம். அல்லது தரையில் வீழும் வரை என்றும் பொருள் கொள்ளலாம்.  புகழையும் போதையையும் ஒப்பிட்டது சிறப்பு. இரண்டுமே போதை தான். இதனால் திறமையை இழந்து வீழ்ந்தவர்கள் பலர்.

கோடிகள் / கொடுத்த அங்கிகள்
திவால்
/ வாங்கியவன் / வானூர்தியில்
வாயில்
லார்ஜ் உடன் / ஊத்திக்கிச்சு

உண்மை!

 கோடிகள் கொள்ளையடித்த கொள்ளைக்காரனை வெளிநாட்டிற்கு கைகாட்டி அனுப்பி வைத்துவிட்டு அவன் ஓடியபின் அய்யோ, அய்யோ என்று அலறி நாடகமாடி வருகின்றனர். குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடியவில்லை. குற்றவாளி அவனோ, மட்டை விளையாட்டை உலக நாடுகளில் பார்த்து மகிழ்ந்து வருகிறான். உழவன் ஓராயிரம் கட்டத் தவறினால் கெடுபிடி காட்டும் வங்கிகள், பல்லாயிரம் கோடித் திருடர்களை உடன் பிடித்திட முன்வர வேண்டும். இப்படி பல சிந்தனை விதைத்தது கவிதை!

உன் நினைவு / இல்லாத நான்!
என்
நினைவு நாள் / காதலின் வலி
காதில்
ஒலியாய்!

 காதலியை தினமும் நினைத்து வருகிறான் காதலன். காதலியை நினைக்காத நாள் காதலன் இறந்த நாளாக இருக்கும், அன்று நினைவு நாளாகி விடும் என்கிறார்.

உண்மை தான். உண்மையான காதலனுக்கு காதலி நினைவு என்றும் நிலைத்து இருக்கும்.

தனக்கு வரும் வரை / எல்லாம் வேடிக்கை தான்
ஆற்றில்
மூழ்கி / அவலக்குரல் கொடுத்தவனை
வீடியோ
எடுத்து / வைரல் ஆக்கியவன்
அடிபட்டுப்
போனான் / அடுத்த முயற்சியில்
சுற்றிலும்
கூட்டம் / வேடிக்கை கூட்டம்
வாடிக்கை
கூட்டம்!

‘கூட்டம் கூட்டம், கூட்டம் பார்க்கக் கூட்டம் என்று கவிஞர் மீரா எழுதி; கவிதை நினைவிற்கு வந்தது.

 உண்மை தான். ஆபத்தில் இருப்பவரை உடனடியாகக் காப்பாற்றிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டது. அலைபேசி மோகம் தலைவிரித்து ஆடுகின்றது. உதவுவதை விட ஆபத்தை காட்சியாக்கி படம் பிடிக்கும் ஆர்வம் பெருகி விட்டது. மொத்தத்தில் மனிதநேயம் மறந்து வரும் அவலத்தைக் கதையில் சுட்டி உள்ளார், பாராட்டுக்கள்.

 கவிதை அழகா? படம் அழகா? என்று பட்டிமன்றம் நடத்தி கவிதையே அழகு என் தீர்ப்பு வழங்கி முடிக்கின்றேன். நூல் ஆசிரியர் கவிஞர் மதுரை முரளிக்கு பாராட்டுகள். அடுத்த நூலிற்கு க்ளிக்-3 என்று பெயர் வைக்காமல் நல்ல தமிழ்ப்பெயர் சூட்டுங்கள். ‘அம்மா என்ற சிறுகதை சிறப்பு.




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்