நூல் : கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள்)
நூல் ஆசிரியர் :   கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா.இரவி  
 

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி அவர்கள் பரபரப்பான காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே பைந்தமிழ் துறையில் பைந்தமிழ்துறையான கவிதைத் துறையிலும் தடம் பதித்து வருகிறார்.
 

உழைப்பை விதைத்து விதைத்து நட்டத்தை மட்டுமே
அறுவடை
செய்து கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு

நூலை காணிக்கையாக்கி உள்ளார். நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. 

இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய், கவிஞர் மு. முருகேஷ் ஆகியோர் அணிந்துரை நல்கி சிறப்பித்து உள்ளனர். 

முதல் கவிதையின் முடிப்பில் மூன்றே வரிகளில் நெகிழ வைத்துள்ளார். 

பட்டினிச் சாவறியாய் பரதேசிகள்
கைக்கழுவி
விடுகிறார்கள்
தட்டுச்
சோற்றில்!` 

உழவன் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த உலகில் பட்டினிச் சாவுகளும் தொடர்கதையாகி வருகின்றது. உழவனின் உழைப்பை உணராது தட்டில் சோறு உள்ளபோதே கைகழுவி விடும் நபர்களின் கன்னத்தில் கவிதையால்  அறைந்து உள்ளார். 

மனிதன் மனிதனைக் கொல்லும்
வெறியாட்டங்
கண்டு
அஞ்சியோடின
மிருகங்கள்
புலம்
பெயர்ந்தன மிருகங்கள்! 

விலங்குகளே மனிதனைக் கண்டு அஞ்சி ஓடும் அளவிற்கு மனிதன் விலக்கிற்கும் கீழ்நிலையிலிருந்து மோதி வீழும் கொடுமையை கவிதை வரிகளின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார். மனிதனுக்கு மனிதநேயம் வேண்டும்.என்பதை வலியுறுத்தி உள்ளார் .பாராட்டுக்கள். 

கொத்தடிமை கணக்கா
 
அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்டு
 
என்னத்த பெரிய வேலை
 
போலீஸ் வேலை! 

உண்மை தான். காவலர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருகின்றது. பணிச்சுமை காரணமாக மனஇறுக்கம், விடுப்பு விண்ணப்பம்  மறுக்கப்படும் நிலை, எதிர்த்து எதிர்கேள்வி கேட்க முடியாத கொத்தடிமைத்தனம் காவலர்களுக்கு சங்கம் கிடையாது. காவலரின் நிலை உணர்ந்து வடித்த கவிதை நன்று. 

பொய்யல்ல
அப்படி
என்ன தான்
வீட்டிற்குள்
இருக்கிறதென
பூட்டிய
பூட்டை
இழுத்து
இழுத்து பார்க்கிறாள்
உன்
அன்னை!
நீயே
வெளியில் நிற்கிறாய்
என்
வைரச் சிலையே!
 
நீயே வெளியில் நிற்கிறாய்! 

தன்னவளை வைரச்சிலை என்று புகழ்கின்றார். விலைமதிப்பற்ற வைரச்சிலை வெளியே நிற்கும் போது உள்ளே அப்படி என்ன மதிப்பு மிக்க பொருள் இருந்து விடப் போகிறது என்கிறார். நல்ல கற்பனை. காதல் கவிதைக்கு பொய்யும் ,மெய்யாகவே அழகுதான். 

காத்தல் தொழில்! 

மக்கள் ஒன்று கூடி
கவனம்
கவனமாய்
காத்து
வருகிறார்கள்
சாமி
சிலையையும்
உண்டியலையும்
! 

கடவுளே காப்பாற்று என கடவுளிடம் வேண்டுகின்றனர் பக்தர்கள். ஆனால் அப்படிப்பட்ட கடவுளையே பூட்டும் காவலரும் தான் காக்க வேண்டிய நிலை. காவல் காத்தபோதும் கண்ணில் மண் தூவிவிட்டு கடவுள் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்று பணம் பார்த்து விடுகின்றனர் சிலர். 

தமிழனைச் சீண்டியவனை
அடி
மேல் அடி
உரத்துச்
சொன்னது கீழடி! 

முதல் மனிதன் தமிழன் என்பதையும்   ,முதல் மொழி தமிழ் என்பதையும் பன்மொழி அறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அன்றே ஆராய்ந்து மொழிந்தார். அதனை ஏற்காமல் கேலியும் கிண்டலும் பேசியவர்களின் தலையில் கொட்டும் வண்ணம் கீழடி ஆய்வுகள் பாவாணர் கூற்று மெய்ப்பித்து வருகின்றன. 

காக்கிப் பொம்மைகளின் கடிகாரம்! 

பூட்டுகள் ஏது?
காவல்
நிலையத்திற்கு
காவலர்களை
விடுவிக்க
சாவி
தான் ஏது?
அற்புத
வாழ்வை
பலி
கொடுத்த
அப்பாவிகளும்
நாங்களே!
எங்கள் துப்பாக்கிகளுக்கு
இரையாகும்
எதிரிகளை விட
மன
அலைச்சலில் மாய்த்துக் கொண்ட
காவலர்கள்
அமோகம்! 

நூலாசிரியர் கவிஞர் துளசி அவர்கள் காவலராகப் பணிபுரிந்து வருவதால் காவலர் பணியில் உள்ள இன்னல்களை உற்றுநோக்கி உணர்ந்து வடித்த கவிதை நன்று. 

தீர்ப்பு!

கண்கட்டிய
நீதிதேவதையின்
கையில்
தராசு
தட்டுகள்
கண்ணைத்
திறந்தால் தான்
சரியான
எடையோ? 

உறவுக்காரர், வேண்டியவர், நண்பர் என்று பாராமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே நீதிதேவதையின் கண்களை கருப்புத்துணியில் கட்டி வைத்தார்கள். கண்களைக் கட்டி வைத்து விட்டால் தராசின் எடையை எப்படி அறிய முடியும் என்று கதிர்கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார். சில தீர்ப்புகளைப் பார்க்கும்போது நீதிதேவதையின் கண்களை திறந்து வைப்பதே சிறப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. 

சுகமான காதல் கவிதைகள் உள்ளன. சிந்திக்க வைக்கும் சிந்தனைக் கவிதைகளும் உள்ளன. பல்சுவை விருந்தாக வைத்துள்ளார், பாராட்டுக்கள்! 

மரம் வெட்டுபவனைக்
கொலைக்குற்றம்
காட்டு
தேனீக்களுக்கு
சரணாலயம் அமை
பஞ்சபூதங்களின்
ஆரோக்கியம்
பேண்
பூமியின்
ஜீவநாடி
அதுவென
உணர்! 

பஞ்சபூதங்களைச் சிதைக்கும் பெரியபூதமாக மனிதன் உள்ளான். இயற்கையைச் சிதைத்து வருகிறான். இயற்கை சினம் கொண்டு சீற்றம் கொண்டால் தாங்க மாட்டாய் என மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து உள்ளார். 

உழைத்திடு உயர்ந்திடுவாய்! (சிறுவர் பாடல்) 

கல்வி நன்றாய் சுற்றிடு
அறிவுக்
கண்ணை திறந்திடு
பொதுஅறிவை
நாளும் வளர்ந்திடு
வேலை
ஒன்றை பெற்றிடு! 

இது சிறுவர் பாடல் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும் பாடல் தான்.  நூலாசிரியர் கவிஞர் துளசி அவர்களுக்கு பாராட்டுக்கள். இந்த நூல் துளசி போலவே மணக்கின்றது. மருத்துவ குணம் கொண்ட துளசி போலவே நோய் நீக்கும் மருந்தாக உங்கள் கவிதைகள் உள்ளன. சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக வடித்த கவிதைகள் நன்று. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள். அடுத்த நூலும் விரைவில் வரட்டும். அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொற்களை நீக்கி விட்டு தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தி பதிவிடுங்கள்.

வெளியீடு : அகறி வெளியீடு,
3,
பாட்சாலை தெரு,

அம்மையப்பட்டு
, வந்தவாசி – 604 408. 

பக்கம்
: ரூ.80,

விலை
: ரூ. 70



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்