நூல் : நட்பெனும் நந்தவனம்
நூல் ஆசிரியர் :   முதுமுனைவர் வெ. இறையன்பு, ...
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா.இரவி  

 

நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு ...  அவர்கள் பேச்சு, எழுத்து என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து  வருபவர் . ‘நட்பெனும் நந்தவனம் என்ற நூலின் மூலம் நட்பிற்கு மகுடம் சூட்டியுள்ளார்.நட்பின் மேன்மை விளக்கிடும் நூல்.

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சொல்வார். “உப்பு இல்லாமல் இருந்திடலாம், நட்பு இல்லாமல் இருக்க முடியாது என்று. அதுபோல நட்பின் பயனை, நன்மையை, சிறப்பை, புகழை மிக விளக்கமாக எழுதி உள்ளார்.

ஆசிரியர் நுழைவாயிலில் குறிப்பிட்ட வரிகள்நண்பர்களை இன்னும் நெருக்கமாக தங்கள் தோள்களோடு இறுக்கிக் கொண்டால் அதுவே இந்த நூலுக்குக் கிடைக்கும் வெற்றியாக் இருக்கும்.

உண்மை. இந்த நூல் படித்து முடித்தவுடன் வாசகர் மனதில்நட்பின் முக்கியத்துவத்தை விதைத்து விடுகிறது. நண்பர்களின் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது. நூல் பற்றி  எடுத்து இயம்பிட சொற்கள் கிடைக்கவில்லை எனக்கு . பல எழுத்துக்கள் பொன்மொழிகள் போல உள்ளன .கவித்துவமாக சொற்கள் வந்து விழுந்து உள்ளன .

பலரின் சாதனைக்கு, புகழுக்கு, மேன்மைக்கு, வளர்ச்சிக்கு, உச்சத்திற்கு, மன அமைதிக்கு, உடல்நலனுக்கு, வளத்திற்கு அனைத்திற்கும் நட்பே அடித்தளமாக இருக்கும் என்பதை நூல் நன்கு உணர்த்துகின்றது. நட்பெனும் நந்தவனம் நூல் படிக்கும் போது நந்தவனத்தில் நடந்து செல்லும் உணர்வு வருகின்றது. காரணப் பெயராகி விட்டது.

70 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரை தொடங்கும் போது நட்பு குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகளுடன் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்!

நட்பு குறித்து முனைவர் பட்டம் ஆய்வு போல நிகழ்த்தி உள்ளார். நூல் முழுவதும் நட்பு நட்பு நட்பு தவிர வேறு ஏதுமில்லை எனும் அளவிற்கு நட்பு குறித்தே எழுதி உள்ளார். நூலின் கடைசிப் பக்கத்தில் ஆய்வுக்கு துணைநின்ற நூல்களின் பட்டியலில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன. அதனைப் படித்தாலே இத்தனை நூல்களின் பழச்சாறே இந்த நூல் என்பதை அறிய முடியும்.

மூன்று ஆண்டுகள் தவம் செய்து ஆய்வுசெய்து தனக்கு நண்பர்களுடன் ஏற்பட்ட சொந்த அனுபவங்களையும் சேர்த்து வடித்துள்ளார். ‘நட்பு பற்றி இவ்வளவு விரிவாக இதுவரை எந்த நூலும் வரவில்லை, இனி வரப்போவதும் இல்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

நண்பனுக்குச் செய்த உதவியை அன்றே மறந்துவிட வேண்டும், அதனை சொல்லிக் காட்டுவது நட்புக்கு அழகல்ல். ஆனால் நண்பனிடம் நாம் பெற்ற உதவியை மறக்காமல் நன்றியோடு நினைவில் கொள்வது நல்லது என்பதை மிக அழகாக விளக்கி உள்ளார்.

எழுதியது மட்டுமல்ல நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்களின் இயல்பும் அதுதான். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத உண்மை மாமனிதர். எனக்கு நேரடியாக அவருடன் அந்த அனுபவம் உண்டு. அவர் எனக்குச் செய்த உதவிகளை அன்றே மறந்து விட்டார். ஆனால் அவருக்கு நான் செய்த சிறு உதவியை மறக்காமல் பாக்யா இதழில் எழுதி பாராட்டினார்.

உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவரில் தொடங்கி சீன ஞானி கன்பூசியஸ், மேல்நாட்டு அறிஞர்கள், கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ல நட்பு குறித்த பாடல்கள் விளக்கங்கள் யாவும் உள்ளன.

நமக்குள் மனமாற்றத்தை விதைத்து விடுகின்றது. நண்பர்களை நாம் பார்க்கும் பார்வையே செம்மையாக்கி விடுகிறது. முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள் தற்போது சென்னையில் வாழ்ந்தாலும் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் சங்கிலியை இன்றுவரை அறுந்துவிடாமல் வைத்து இருப்பவர்.

மதுரைக்கு வந்துவிட்டால் மதுரை நண்பர்கள் அனைவருக்கும் தகவல் தந்து வரவழைத்து கலந்து பேசி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார். தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி விருந்தோம்பல் செய்வார். அவரது நண்பர்களுக்குள்  நட்பை உருவாக்கி விடுவார். சென்னையில் இருந்து கொண்டே அவரது நண்பரான மதுரையில் உள்ள கவிஞர் ஆத்மார்த்தியை எனக்கு அறிமுகம் செய்து வைத்து எங்களை நண்பர்களாக்கினார். அவர் என்னுடைய இரண்டாயிரம் ஹைக்கூ கவிதைகளில் இருத்து,முத்துக்கள் போல நூறு தேர்ந்தெடுத்து வழங்கி உள்ளார். விரைவில் நூலாக உள்ளது.

நண்பர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான உதவிகளை நன்மைகளை பலருக்கும் செய்து வருகிறார். ஆனால் அது பற்றி எழுதவும் மாட்டார், பேசவும் மாட்டார், இரவு 9.00 மணிக்கு மேல் அவரிடம் ஆலோசனைகள் பெற்றுஇந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்ற  ஆட்சியர்கள் பட்டியல் நீளும். ஆனால் அவற்றை சொல்ல மாட்டார். நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர். அன்பு காட்டுவதில் வள்ளல் என்றே சொல்ல வேண்டும். அவருடையமூளைக்குள் சுற்றுலா என்ற 100வது நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மாநாடு போல கூட்டம் கூடியது. அன்பால் நட்பால் கூடிய கூட்டம் அது.

கட்டுரைகளின் தலைப்புகளே நட்பின் சிறப்பை உணர்த்துகின்றன. நட்பின் மகத்துவம், உயிர் காப்பான் தோழன், ஆளுமையும் நட்பும், நிபந்தனையற்ற நட்பு, நல்ல நண்பர்கள் இப்படி நட்பின் வகைகள், நட்பு பற்றி சேக்சுபியர் தொடங்கி மேல்நாட்டு அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல படிக்கப் படிக்க நட்பின் மேன்மை வரும் நூல் இது.

நூலின் நிறைவுரை, பதச்சோறாக.

புதிய நண்பர்களை சம்பாதித்தாலும் பழைய நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வது பேராற்றல். அதைச் செய்து வருகின்ற சில நண்பர்களையும் அறிவேன். நட்புக்கு நாம் நெடுந்தூரம் செல்ல சித்தமாய இருக்க வேண்டும். என் பழைய நண்பர்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு மீண்டும் பல் மூளைக்குத் தொடங்குகிறது.

இந்த உலகத்தில் நம்மைச் சூளும் நன்மையை நட்பால் நிரப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது!

நட்பால உலகை ஆளலாம், நட்பால் எதையும் சாதிக்கலாம், நட்பால் வானமும் வசப்படும் என்பதை உணர்த்திடும் உன்னத நூல்.

புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் பழைய நண்பர்களை புதுப்பித்துக் கொள்ளவும் வழிசெய்யும் வழிகாட்டி நூல்.

நூலில் நட்பு குறித்து கல்வெட்டுப் போல சில வரிகள் உள்ளன .மனதில் பதித்துக் கொண்டால் நட்பால் உலகை ஆளலாம் .

உண்மையான நட்பு என்றால் என்ன ? எது நட்பு ? நட்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் .இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக நூல் வந்துள்ளது .

நட்பு குறித்து சரியான புரிதல் இல்லாத இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.  

நூல் ஆசிரியர்  முதுமுனைவர் வெ. இறையன்பு, ... எழுதிய நூல்களின் எண்னிக்கை விரைவில் நூற்றி ஐம்பதை தொட உள்ளன இந்த நூல் அவரது புகழ் மகுடத்தில்  பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது .பாராட்டுக்கள் .

வெளியீடு : கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரர் தெரு,
தியாகராயர்
நகர், சென்னை – 600 017.



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்