நூல் : வியர்வைக்கு வெகுமதி!
நூல் ஆசிரியர் :  முதுமுனைவர் வெ. இறையன்பு ...
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

வியர்வைக்கு வெகுமதி நூலின் தலைப்பே உழைப்பிற்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள் எழுத்து, பேச்சு என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்கள். 

நூலின் அட்டையில் உழைப்பாளர்கள் சிலை வியர்வைத் துளிகள் சிறப்பாக உள்ளன. பதிப்புலகில் புகழ்பெற்றுள்ள விஜயா பதிப்பகம் நூலை மிக நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர். 

30 தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 30 தலைப்புகளும் உழைப்பின் உயர்வை மேன்மையை உணர்த்தும் விதமாகவும் கவித்துவமாகவும் உள்ளன. நூலிலிருந்து பதச்சோறாக சில துளிகள். 

வியர்வை சிந்துபவனுக்கு வியாதிகள் வருவதில்லை; உழைத்துக் களைத்தவன் உறங்குவதற்கு மாத்திரைகள் தேவையில்லை. அவன் கைகளே தலைக்கடியில் தலையணையாகிறது. வீசுகிற தென்றலே அவனை விசிறிவிடப் போதுமானது இந்த வைர வரிகளை பதிப்புரையில் விஜயா பதிப்பகம் விஜயா மு.வேலாயுதம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். 

உழைப்பு சுருங்கியதன் காரணமாகவே நோய்கள், பெருகிவிட்டது என்பது கண் கண்ட உண்மை. 

சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும்.  இன்றைக்கு சில இளைஞர்கள் என் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை, அதனால் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று சொல்பவர்கள் உண்டு. நினைத்த வேலை கிடைக்கும் வரை கிடைத்த வேலையை செய்வதற்கு முன்வர வேண்டும். அப்படிப்பட்ட இளைஞர்கள் இந்நூல் படித்தால் உழைப்பின் உன்னதத்தை உணர்ந்து வேலைக்கு செல்வார்கள் என்பது உண்மை. 

ஒருவருடைய பண்பாட்டை அவர்கள் பணியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தூய்மையுடையவரா, வாய்மையுடையவரா என்பதை அவர் செய்யும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பணியை கடனுக்காகச் செய்பவர்களும் உண்டு.  கடமைக்காகச் செய்பவர்களும் உண்டு. 

நாம் செய்யும் செயலே நம்மை யார் என்று காட்டி விடும். விருப்பத்துடன் ஈடுபாட்டுடன் வேலை செய்தால் அதன் பலனும் உயர்வாகவே இருக்கும் என்பதை பல்வேறு விளக்கங்களுடன் விளக்கி உள்ளார். 

ஒரு திரையரங்கை தினமும் மிக சுத்தமாக பெருக்கி, அங்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் பெருக்கி, பொறுப்புணர்வுடன் கடமை உணர்வுடன் ஈடுபாட்டோடு வேலை பார்த்ததைப் பார்த்து, உரிமையாளர் அவரின் செயலைப் பார்த்து, மேலாளர் பதவி வழங்கியதாக எழுதி உள்ளார்கள். நேர்மையான நல்ல உழைப்பிற்கு என்றும் மதிப்பு உண்டு. இந்த நிகழ்வை நூலில் படித்ததும் மதுரையில் நடந்த உண்மை நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. 

மதுரை மீனாட்சி மிஷன் மருத்தவமனை மருத்துவர் சேதுராமன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு, சிறிய மருத்துவமனை எங்கள் பகுதியில் வடக்குமாசி வீதியில் வைத்து இருந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த இனிய நண்பர் பாண்டியராஜன் (கம்பவுண்டராக) செவிலியராக இருந்தார். தற்போது மிகப்பெரிய மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். 

நேசித்த பணியைப் பெறுபவனும், பெற்ற பணியை நேசிப்பவனும் ஒருபோதும் களைப்படைவதில்லை, சீனப் பேரறிஞர் கன்பூசியஸ்

நீ விரும்பும் பணியை தேர்ந்தெடு. நீ ஒரு நாள் கூட உழைக்க வேண்டிய அவசியமிருக்காது என்றார். 

விரும்பிய பணி கிடைத்து விட்டால் மனமகிழ்ச்சியில் வேலையை காதலிக்க ஆரம்பித்து விடுவோம். வேலை இயல்பாக நடந்து கொண்டே இருக்கும். சிரமம் இருப்பதாகத் தோன்றாது. விரும்பிய வேலை எல்லோருக்கும் அமைவதில்லை. விருப்பமில்லா வேலை கிடைத்தாலும் கிடைத்த வேலையை விரும்பி செய்தால் சிறக்கலாம், உயரலாம். 

அழகற்ற ஒருவரின் கையெழுத்து மிக அழகாக இருந்ததும், எப்படி என்று கேட்டதற்கு என்னை முகம் பார்த்து புறக்கணித்தவர்கள் என் எழுத்தை புறக்கணிக்கக் கூடாது என்று சபதம் எடுத்து எழுத்தை சிற்பமாக செதுக்கி அழகாக எழுதினேன் என்றாராம். நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். 

நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு ... அவர்களின் முகமும் அழகு, அகமும் அழகு அது மட்டுமல்ல அவரின் கையெழுத்தும் அழகு. அச்சடித்ததோ என்று அசந்துவிடும் அளவிற்கு மிக நேர்த்தியாக இருக்கும். 

பெண்களுக்கு வெளியில் பணியாற்றுவது நல்ல மாறுதல், அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், உலகத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கிறது.  இல்லத்து வேலையைச் செய்து முடித்து, பிள்ளைகளையும் தோள் உயரத்திற்கு வளர்த்த பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் பல்வேறு விதமான மன பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.” 

பெண்கள் வேலைக்கு செல்வதால் தன்னம்பிக்கை வளரும் என்பதை நன்கு குறிப்பிட்டுள்ளார்கள். 

வழியும் வியர்வை கொட்டட்டும்
உழைப்பு விண்ணை முட்டட்டும்
கனிவு கதவைத் தட்டட்டும்
உயர்வு யாவர்க்கும் கிட்டட்டும்! 

என்ற வைர வரிகளுடன் நூலை முடித்து உள்ளார்கள்.  அற்புதமான இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய பாரதியார் பல்கலைக்கழகம் மகேஸ்வரி அவர்களுக்கு நன்றி.




வெளியீடு : விஜயா பதிப்பகம்,
20,
ராஜ வீதி,
கோயம்புத்தூர்
– 641 001.

பக்கம் : 200
விலை
: ரூ. 140





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்