நூல் : எந்தையும் தாயும்!
நூல்ஆசிரியர்கள்கலைமாமணி.கு.ஞானசம்பந்தன்                                          திருமதி அமுதா சம்பந்தன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

நாடறிந்த பட்டிமன்ற நடுவர், திரைப்பட நடிகர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்கள், அவரது தந்தை நல்லாசிரியர், பண்டித வித்துவான் திரு. கு. குருநாதன் அவர்களின் வடிவமைப்பு சொல்லி அவரது வாழ்க்கை வரலாற்றை, நூலாக வடித்துள்ளார்.  

தந்தைக்கு மகுடம் சூட்டி உள்ளார். தந்தையுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் அவரது வரலாற்றை இவர் பிறக்குமுன் நடந்த பல நிகழ்வுகளை தந்தையின் வாய்மொழியாக கேட்டு, அறிந்து, ஆவணப்படுத்தி விட்டார். 

தந்தையாருடன் பிறந்தவர்கள் விபரம், எங்கிருந்து வந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்ற விபரம் முழுவதும் நூலில் உள்ளன. மைனர் பாண்டியர் அவர்களின் கோடைக்கால அரண்மனையின் ஒரு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று தொடங்கப்பட்டிருந்திருக்கிறது. அங்கு தான் கலைமாமணி கு. ஞானசம்பந்தரின் தந்தையார் ஆரம்பக்கல்வி படித்து இருக்கிறார். பின்னர் மதுரைக்கு வந்து நான்காம் தமிழ்ச்சங்கத்தில், நுழைவுத்  தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று விட்டால், கல்வி உதவித் தொகை ரூபாய் பத்து கிடைக்கும் என்று சொன்னவுடன், நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். 

கிராமத்திலிருந்து நூறு மைல் தொலைவில் இருக்கும் மதுரைக்கு வருவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். ஊரில் சொத்து, நிலம், வீடு எல்லாம் இருந்தபோதும் அவற்றை எல்லாம் மறந்து, கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக மதுரைக்கு வந்து மிகவும் சிரமப்பட்டு உள்ளார். கோயிலில் கிடைக்கும் பிரசாதத்தை உண்டு, வைகை தண்ணீர் குடித்து, கல்வி கற்று இருக்கிறார். உதவித்தொகை ரூபாய் பத்து வரவும், அதிலும் மிச்சம் பிடித்து, வேட்டி-துண்டு வாங்கி, எண்ணெய் தேய்த்து குளித்து வாழ்ந்து வந்துள்ளார். 

காந்தியடிகளின் சத்தியசோதனையில், எப்படி எதையும் மறைக்காமல் அப்படியே எழுதினாரோ, அதுபோலவே கலைமாமணி தன் தந்தை கு. குருநாதன் அவர்களின் வரலாற்றை எதையும் மறைக்காமல் அப்படியே பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். சோழவந்தான் எங்கள் சொந்த ஊர் என்று எழுதி சோழவந்தானுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம், ஏழு மணிக்கே காலை உணவை முடித்து விடல், பூசையின் போது தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைப் பாடல்கள், திருமுருகாற்றுப்படை போன்ற பாடல்களை பாடுவாராம். அதனைக் கேட்டுக் கேட்டு கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களுக்கு மனதில் பதிந்து மனப்பாடமாக இன்று வரை நினைவில் நிற்கின்றதாம். பல நல்ல குணங்களை கற்பித்த ஆசானாக அவரது தந்தை இருந்த காரணத்தால் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களின் திறமைகள் யாவும் அவரது தந்தையார் போட்ட உரம் என்பது நன்கு விளங்குகின்றது. 

இலக்கியச் சொற்பொழிவு ஆற்றும் வித்தகராக திரு. கு. குருநாதன் அவர்கள் இருந்துள்ளார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் (முன்னவர்), மதுரை ஆதினம் (முன்னவர்), கிருபானந்த வாரியார், யாழ்ப்பாணம் சுவாமிநாதத் தம்பிரான், நா. கிரிதாரி பிரசாத் போன்ற பெருமக்களை எல்லாம் சோழவந்தானில் செயல்பட்டு வந்த திருமுறைக் கழகத்திற்கு அழைத்து பேச வைத்த பெருமை கலைமாமணி அவர்களின் தந்தையையே சாரும். இந்த நிகழ்வுகளும் கலைமாமணிக்கு பயிற்சியாகவே அமைந்து இருக்கும்.

அந்தக் காலத்திலும் இந்தக்காலம் போலவே அரசியல் இருந்து இருக்கிறது. திரு. கு. குருநாதன் அவர்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்த இரா. நெடுஞ்செழியன் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டியதன் காரணமாக சோழவந்தானிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். அதன்பின்னர் திருமங்கலம் மாற்றலாகி உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட குழந்தைகளை அவரது தாயாரே தனியாக கவனித்து நோயால் நலிவுற்றும் இருக்கிறார்.

 1962 முதல் 1965 வரை திருமங்கலத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். கலைமாமணி அய்யா ஆரம்பக் கல்வியை சோழவந்தானிலும், திருமங்கலத்திலும் தான் கற்று உள்ளார். பின்னர் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் என்ற ஊருக்கு மாறுதல் கிடைத்ததும், குடும்பத்துடன் சோழவந்தானில் வாழ்ந்து உள்ளனர்.

ஆடம்பரம், சிக்கனம், கஞ்சத்தனம் மூன்றுக்கும் திரு. கு. குருநாதன் அவர்கள் தந்துள்ள விளக்கம் அருமை. சோழவந்தானிலிருந்து மதுரைக்கு (25 மைல்) காரில் தான் செல்லுவோம் என்றால் அது ஆடம்பரம், நடந்தே செல்வோம் என்றால் அது கஞ்சத்தனம், பேருந்திலோ, இரயிலிலோ செல்வோம் என்றால் அதுவே சிக்கனம். 

கலைமாமணியின் தாயாரின் மறைவின் போது அவர் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கலைமாமணியின் தாயார் இறந்தபின் தந்தையார் சமைக்கும்போது உடன் உதவி உள்ளார். தியாகராசர் கல்லூரியில் படித்துக்கொண்டே விவசாயமும் பார்த்து உள்ளார். மொத்தத்தில் திரு. கு. குருநாதன் அவர்கள், அவரது மகன் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களை சகலகலா வல்லவனாக வளர்த்து உள்ளார். அப்படி வளர்த்திட்ட தந்தைக்கு மறக்காமல் நினைவில் கொண்டு வந்து புகழ் மகுடம் சூட்டி உள்ளார்.  

நூலில் திரு. கு. குருநாதன் அவர்கள் இயற்றிய ஸ்ரீ சுந்தர விநாயகர் கோத்திரப் பாமாலை, ஸ்ரீ ஷண்முகப் பஞ்சரத்தினம், கந்தர் சந்தச் சதகம் பாடல்கள் உள்ளன. சொற்களின் சுரங்கமாக உள்ளன. சொக்க வைக்கின்றன. 

வெளியீடு : அமுதம் பதிப்பகம்,
155,
டெபுடி கலெக்டர் காலனி,
3ஆவது தெரு, 80 அடிச் சாலை, கே.கே. நகர்,
மதுரை
-625 020.

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்