நூல்: கொள்கைக் குறள் (ஆய்வுக் கட்டுரைகள்)
நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி தமிழியக்கன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி
 

 

நூல் ஆசிரியர் தமிழ்மாமணி தமிழியக்கன் அவர்கள் பெயருக்கு ஏற்றபடி தமிழுக்காகவே இயங்கி வரும் படைப்பாளி. படிப்பாளி, புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். புதுவை அரசில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து மாநில தேசிய நல்லாசிரியர் விருதுகள் பெற்றவர். புதுவை அரசின் தமிழ்மாமணி விருது பெற்றவர். தனித்தமிழ் ஆர்வலர். இந்த நூல் உள்பட பத்து நூல்களை சென்னையில் நடந்த பொதிகை மின்னல் ஆண்டு விழாவில் வழன்ங்கினார். 

உணர்ச்சி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் நூலினை மிகச் சிறப்பாக பதிப்பித்து பதிப்புரை வழங்கி சிறப்பித்துள்ளார். ஓரெதுகை நேரிசை வெண்பாவில் கொள்கைக் குறள் மாலை வழங்கி உள்ளார். அதிலிருந்து பதச்சோறாக ஒரு பாடல் மட்டும் உங்கள் பார்வைக்கு. 

 

என்று நம் தொல்லினம் ஈண்டெழுந் தோங்கியதோ

அன்றுநம் வாழ்முறை ஆள்முறை ஒன்றிய

தொன்று துலங்கு துறையிவைமாண்புற

நின்று துலங்கும் குறள்! 

 

திருக்குறளின் அருமை பெருமையை 20 வெண்பா மூலம் மரபுக்கவியில் பாடி திருக்குறளுக்கு புகழ்மகுடம் சூட்டி உள்ளார். நூலின் தொடக்கமே திருக்குறளின் சிறப்பை நன்கு உணர்த்தி வருகின்றது.  

ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார். 13 முத்தான கட்டுரைகள் உள்ளன.  

கட்டுரைகளை பிறமொழிச் சொல் ஒன்று கூட இன்றி அழகு தமிழில் தெளிந்த நீரோடை போன்ற நடையில் வடித்துள்ளார்.  

அன்பின் வழியது உயர் நிலை என்பது திருவள்ளுவரின் கொள்கை என்று உரைத்துள்ளார். அன்பில்லாதவர்கள் எலும்பு தோல் போர்த்திய வெறும் உடம்பு தான் மனிதனே அல்ல என்பதை திருவள்ளுவர் 80வது திருக்குறளில் உள்ளதை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை நன்று.

 

மக்கள் பண்பு கட்டுரையில் பழிக்கு அஞ்சுதல், பொது ஒழுக்கம் போனால் தீய பழக்கத்தை ஒழித்தல் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் எடுத்து இயம்பி உள்ளார்.

 

இல்லற வாழ்வே ஏற்ற வாழ்வு இல்லறமே நல்லறம் அன்பும் அறவாழ்வும் விருந்தோம்பல் எனும் வியத்தகு பண்பு, மனைவியும் மக்களும், ஈகை என்னும் ஈடில்லாப் பண்பு, புகழே மாந்த வாழ்வுக்கு அடையாளம் உயிர்க்கு ஊதியம் இல்லை. இப்படி திருக்குறளில் உள்ள நல்ல பல கருத்துக்களை எளிதில் புரியும் வண்ணம் நல்ல தமிழில் விளக்கி உள்ளார்.

 

திருக்குறளில் உள்ள கருத்துக்கள்நீதிநெறி விளக்கம் நூலில் உள்ளனவற்றையும் மேற்கோள் காட்டி உள்ளார். சங்க இலக்கியமான புறனூற்றில் உள்ள பாடல்களையும் மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். நூலாசிரியரின் தமிழ்ப்பற்றும், தமிழ்ப்புலமையும் வியப்பில் ஆழ்த்துகின்றது. 

 

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.   திருக்குறள் 955 

 

இதே கருத்து நாலடியாரில் உள்ளதை மேற்கோள் காட்டி உள்ளார். ஒப்பிலக்கிய நூல் போல பொருத்தமான பிற பாடல்களையும் குறிப்பிட்டு கட்டுரை வடித்துள்ளார். 

 

மன்னன்  எப்படி இருக்க வேண்டும், அவன் குணம் என்ன? மக்கலை எப்படி காக்க வேண்டும்? என்பது பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் சொன்ன கருத்துக்களை விளக்கமாக எடுத்து இயம்பு உள்ளார். 

கருமஞ் சிதையாமல் கடமை செய்வார்க்கு இவ்வுலகமே உரிமை உடையதாம் என்பதால், குடி செய்வார்க்க்கு இல்லை பருவம் என்பதை வாழ்முறை நெறியாய்க் கொள்ளலே நல்ல குடிமகனுக்கு அழகாகும். என்பதோர்ந்து குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்லாமே!

 

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்.                             திருக்குறள் 1028 

 

மேற்கோள் காட்டி எழுதிய விளக்கம் சிறப்பு. 

 

முயன்று மேலும் மேலும் கற்க வேண்டும். நல்லனவற்றை, வாழ்விற்கு வேண்டியவற்றை கற்க வேண்டும், கற்பவற்றை ஆய்ந்து அறிவு பெருகப் பிழையறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபின்னர், வாழ்வாங்கு வாழக் கற்றவை காட்டும் வழியிலேயே தமிழ்மரபு பிறழா வகையில், தமிழ்ப்பண்பாடு, நாகரிகம், இனம், மொழி, நாடு முன்னேறும் நோக்கில் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டு மிடுக்குடன் நடையிட வேண்டும் என்பவற்றிற்கு நெறிகாட்டுதல் என்க. “கற்க கசடற திருக்குறளுக்கான விளக்கம் மிக நன்று. 

 

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை கட்டுரையில் தலைவன், தலைவி எப்படி இருக்க வேண்டும்? இல்வாழ்க்கை எப்படி நடத்த வேண்டும் என்று திருக்குறளில் உள்ள கருத்துக்களை விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி நன்கு உணர்த்தி உள்ளார்.  

வாழ்வாங்கு வாழ்வதற்கு திருவள்ளுவர் காட்டிடும் வழிகள் என்ன என்பதை சிறப்பாக எடுத்து எழுதி உள்ளார். தேடிப்பார்த்தாலும் ஒரு சொல் கூட பிறசொல், வடசொல் இல்லை. நல்ல தமிழில் நல்ல கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சொற்களஞ்சியமாக உள்ளது. ஒரு கட்டுரை எப்படி, எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறிடும் விதமாக கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன. 

குறள் காட்டும் பகுத்தறிவு கட்டுரையில் திருக்குறளின் சிறப்பை ஔவையார், இடைக்காடர், வள்ளுவனார் ஆகியோர் பாடிய பாடல்களை மேற்கோள் காட்டி உள்ளார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் பெருமைக்குரிய குறளையும் கணியன் பூங்குன்றனாரின்யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பாடலும் கருத்து ஒற்றுமை உள்ளது என்பதை அழகாக மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். 

 

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த்து ஒழித்து விடின்.     திருக்குறள் 280. 

 

திருக்குறளில் மொட்டை அடிக்கவும் வேண்டாம், தாடி வளர்க்கவும் வேண்டாம், ஒழுக்கநெறியுடன் வாழ்வாங்கு வாழ வழிசொல்லும் திருக்குறள் சிறப்பை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திடச் செய்திடும் நூல் இது. பாராட்டுக்கள்.


வெளியீடு : தமிழ்மொழிப் பதிப்பகம், அறிவாளன் அகம்

1, முருகன் கோவில் தெரு, சண்முகாபுரம்,
புதுச்சேரி
– 605 009.

பக்கங்கள் : 132,
விலை
: ரூ.150/-




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்