நூல் : பட்டம் பறக்கும் பட்டம்
நூல் ஆசிரியர் :   கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி


தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள்


நூலாசிரியர் கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. அவர்கள் பொறியியல் பட்டம் பெற்றவர். தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இயற்கை ஆர்வலர், இந்நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.

எழுத்தாளர் பா.வெங்கட்ராமன், காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, இளசை கிருஷ்ணமூர்த்தி, கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் அணிந்துரை, வாழ்த்துரை, பதிப்புரை வழங்கி உள்ளனர். நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளன.

இக்கால குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் குழந்தை மொழியிலேயே கேள்வி பதில் போல, கற்பித்தல் போல அறிவை விரிவு செய்வது போல பாடல்கள் எழுதி உள்ளார். மொழி அறிவு தாய்மொழி அறிவு வளர்க்கும் விதமாக பாடல்கள் உள்ளன. பாராட்டுகள்.

தினசரி பழக்கங்கள்!

ஆதவன் உதிக்குமுன் எழுந்திடுவோம்
காலைக் கடன்களை முடித்திடுவோம்
உடற்பயிற்சிகள் செய்திடுவோம்
குளிர்ந்த நீரில் குளித்திடுவோம்
காலைக் கதிரவனை வணங்கிடுவோம்!

ஆதவன் உதிக்குமுன் எழுந்திருக்காவிட்டாலும், ஆதவன் உதித்த பின்னராவது காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பிஞ்சு நெஞ்சங்களில் பதியும் வண்ணம் பாடல்கள் புனைந்துள்ளார். வாழ்த்துகள்.

தேசிய சின்னங்கள்!

தேசிய பறவை என்ன? மயில். தேசிய மலர் என்ன? தாமரை. தேசிய மரம் என்ன? ஆலமரம். தேசிய கனி என்ன? மாம்பழம். தேசிய சின்னம் என்ன? அசோக சக்கரம். தேசிய விலங்கு என்ன? புலி.

இப்படி கேள்விக்கு விடை சொல்லும் விதமாக பொது அறிவு வளர்க்கும் விதமாக சில பாடல்கள் உள்ளன. நன்று.

கைபேசி!

கதிர்வீச்சு இருப்பதால்/ கவனமாக பேசலாம்
மின்கலம் தீர்ந்துவிட்டால் /  மீண்டும் மின் ஊட்டலாம்

சார்ஜ் போடுதல் என்று பழக்கத்தில் உள்ள தமிங்கிலப் பேச்சிற்கு விடை தரும் விதமாக் 'மின் ஊட்டலாம்' என்ற தமிழ்ச்சொல்லை அறிமுகம் செய்து பாடல் வடித்து, குழந்தையின் தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டிய யுத்தி நன்று.

வானூர்தி!

வானில் பறக்கும் ஊர்தி! / அதன் பெயரிலேயே வானூர்தி
கண்டம் விட்டு கண்டம் / தாண்டி செல்லும் வானூர்தி
குறைந்த நேரம் எடுக்குமாம் / சரக்குகள் உடன் ஏற்றுமாம்
பறவை போலவே வானில் / உலகை சுற்றி வரலாம்.

பழக்கத்தில் உள்ள விமானம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தாமல் 'வானூர்தி' என்ற நல்ல தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தி வானூர்தியின் சிறப்பை, பயனை குழந்தைகளுக்கு புரியும்வண்ணம் மிக எளிமையாகவும், இனிமையாகவும் வடித்த பாடல் நன்று.

இருப்பூர்தி!

இருப்புப் பாதையில் ஊர்தி
அதிக பெட்டிகள் கொண்ட ஊர்தி
இரயில் வண்டிக்கு மறுபெயராம்
தண்டவாளத்தில் செல்லுமாம்
மின்சாரத்தில் இயங்குமாம்!

'இருப்பூர்தி' என்ற சொல்லிற்கு இணையாக எளிமையாக 'தொடரி' என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. 'ரயில்' என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் 'இருப்பூர்தி', 'தொடரி' என்ற நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்திட குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் முன்வர வேண்டும். தமிழ்க்கொலை நடக்கும் தமிங்கில கரைக்கு முடிவு கட்டிட வேண்டும். தமிழை தமிழாகப் பேசி காத்திட வேண்டும் என்ற உணர்வை ஊட்டும் விதமாகப் பாடல்கள் எழுதி உள்ளார்.

திருக்குறள்!

இரண்டே வரிகள் குறளாம் / திரண்ட பொருள் உள்ளதாம்
அறம் பொருள் இன்பம் / மூன்று பகுதிகள் உள்ளதாம்
நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் /
அதிகாரத்திற்கு பத்து குறள்கள்
அதன்பெயர் திருக்குறளாம் / இயற்றியவர் திருவள்ளுவராம்.

உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம், எளிமையான பாட்டால் விளக்கியது அருமை. பாராட்டுகள். குறைவான வரிகளில் நிறைவான பொருள்படும்படி எழுதியது சிறப்பு.

கணினி!

இணையதளத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்
இணையம்வழி தொலைக்காட்சி பார்க்கலாம்
அதன் அறிவு விரைவில் வளர
உலகை இயக்குமாம் கணினி!

கணினி பற்றிய பாடல் இயற்றி கீழே கணினி தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களையும் பாடலுக்குக் கீழே பதிவு செய்தது நன்று. கணினி தொடர்பாக தாய்மொழி அறிவு குழந்தைகளுக்கு வளர்ந்திட உதவும்.

எண் வரிசை, கணிதம், ஐந்து பூதங்கள் இப்படி எல்லாமே எளிமையான பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் பாடல்கள் வடித்துள்ளார்.

பட்டம்!

காற்றின் விசை கொண்டு
எதிர் திசையில் எழும்பும்
நூல் தீரும் வரைக்கும்
உயர உயர பறக்கும்!

பட்டம் பறக்கும் பட்டம் என்ற நூலின் தலைப்பில் அமைந்த பாடல்இ பட்டம் எப்படி? எதனால்? பறக்கின்றது என்பதை விளக்கும் விதமாக வடித்திட்ட பாடல் நன்று. சிறப்பு.

நிலா!

வட்டமான நிலா / வானில் வரும் உலா
பூமியை சுற்றி வரும் /  சூரியனில் ஒளி பெறும்
பால் நிற நிலா நிலா

நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய காலம் மலையேறி விட்டது, வழக்கொழிந்து விட்டது. அடுக்கக வீடுகளில் நிலாவைக் காட்டிட கூட வாய்ப்பு இல்லை. நிலா பற்றிய அறிமுகத்தை அறிவியல் கருத்துக்களுடன் பாடலாக வடித்தது சிறப்பு. மொத்தத்தில் இக்கால குழந்தைகளுக்கு தாய்மொழியில் சிந்தித்திட உதவிடும் உயர்ந்த நூல். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்...





பூவரசு வெளியீடு,
30/8, கன்னிக்கோயில் பள்ளம்,
அபிராமபுரம் முதல் தெரு,
சென்னை –
600 018.
பக்கங்கள் :
80.
விலை : ரூ.
70


                                            


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்