நவீன
கவிதைக்காரர்களுக்கு தமிழ் இலக்கிய
வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது!
கவியரசு
நா.காமராசனுடன் ஒரு நேர்காணல்
ஆர்.சி.
ஜெயந்தன்
"தன்
கால்களில் ரத்தம் கசியக் கசிய, பழைய முட்பாதைகளில் முன்னேறி, முதலில்
புதுக்கவிதை உலகுக்கு புதுப்பாதை அமைத்தவர் நா.காமராசன்தான் என்பதை
மூர்ச்சை அடைந்தவன்கூட மறந்து விடக்கூடாது' என்று கவிப்பேரரசு
வைரமுத்துவால் புகழப்பட்டவர் கவியரசு நா. காமராசன்.
மாணவப் பருவத்திலேயே மரபுக்கவிதைகள்
எழுதத் தொடங்கிய இவர், அறுபதுகளின் இறுதியில் புதுக்கவிதையின்பால்
ஈர்க்கப்பட்டு, புதுக்கவிதையின் ஆசான் எனப் போற்றப்படும் அளவுக்கு
முத்திரை பதித்தவர். 1971-ல் நூல் வடிவம் பெற்ற "கருப்பு மலர்கள்' கவிதை
நூலில் தொடங்கி, "கிறுக்கன்', "நாவல்பழம்', "மகாகாவியம்', "சுதந்திர
தினத்தில் ஒரு கைதியின் டைரி', "தாஜ் மஹாலும் ரொட்டித்துண்டும்', "சூரியகாந்தி',
"சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', "ஆப்பிள் கனவு' உள்ளிட்ட இருபதுக்கும்
அதிகமான தொகுப்புகள் இவர் கவித்துவ வளமைக்குக் கட்டியம் கூறி
நிற்கின்றன.
திரைப்பாடலாசிரியராக
மாபெரும் வெற்றி பெற்ற நா. காமராசன் எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் அவரை
காதல் நாயகனாகவும் முன்னிறுத்திய பல அழகியல் பாடல்களை எழுதியவர்.
1965- ல் தீவிரம் கொண்ட இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில், முக்கிய மாணவர் தலைவர்களில் ஒருவராக உருப்பெற்று, சட்ட
எரிப்புக்காகச் சிறை சென்றவர். தற்போது அறுபதுகளின் அகவையிலும்,
எப்போதும் போல ஒவ்வொரு கேள்விக்கும் நறுக்குத்தனமான பதில்களைத் தரும்
நா.கா., "இனிய உதயம்' இதழுக்காக முதன்முறையாக விரிவாகப் பேசினார். அதில்
சாரமும் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை... இனி நா.க.வுடன் "இனிய உதயம்'
சந்திப்பு...
நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகனை நீங்கள் அறிவீர்களா என்று
எனக்குத் தெரியாது. அவர் தமது வலைத் தளத்தில் "புதுக்கவிதை சுருக்கமான
வரலாறு' என்ற தலைப்பின் கீழ், எழுத்து இயக்கத்தின் புதுக்கவிதை
பங்களிப்பைப் பெரிதும் ஏளனம் செய்திருக்கிறார். குறிப்பாக நீங்கள்
எழுதவந்த கால கட்டத்தின் புதுக்கவிதைகளை "கழுதை' என்பதாகக் கிண்டலடித்தி
ருக்கிறார். புதுக்கவிதையின் தொடக்கம் என்பது அத்தனை குப்பையாகவா
இருந்தது?
"ஜெயமோகனை எனக்குத் தெரியாது. அவர்
இளைஞரா முதியவரா நான் அறியேன். எனினும் அவர் புதுக் கவிதையை கழுதை என்று
சொல்லியிருந்தால் அவர் நிச்சயம் எழுத்தாள ராக இருக்க முடியாது. ஜெயமோகன்
என்பவர் முதலில் ஒரு நல்ல கவிதையை எழுதிவிட்டு பிறகு விமர்சிக்கட் டும்.
இருப்பினும், அதிரடியான விமர்சனம் மூலம் படைப்புத் துறையின் ஒரு
பிரிவுக்கு அவர் எழுச்சியூட்ட நினைத்திருக்கலாம். அதற்காக நாம் அவரை மன்
னித்துவிடுவோம். ஒருவகையில் எழுத்து இயக்கத்தின் தளகர்த்தர்
க.நா.சுவுடைய புதுக்கவிதைக்கான பங்களிப்பு என்பது, புதுக் கவிதைக்கு "புதுக்கவிதை'
என்று திருநாமம் தந்தது மட்டும்தான். மற்றபடி சென்னையின் பிரம்மச்
சாரிகள் மடமாயிருந்த திருவல்லிக் கேணி, ராயப்பேட்டை பகுதி களில்
முப்பத்தைந்து வயதைக் கடந்து, திருமணம் ஆகாமல், பெண் துணைக்கு திக்கற்று,
மணப்பிறழ்வில் வாழ்ந்து கொண் டிருந்த பல பிரம்மச்சாரிகளின் உளறல்களை "எழுத்து'
இதழில் புதுக்கவிதை என்பதாகப் பிரசுரித்து வந்தார். அதேசமயம் பல நல்ல
மொழி பெயர்ப்புக் கவிதைகளும் "எழுத்'தில் வெளி யானதை மறுப்பதற்கில்லை.
ஆனால் எழுத்துக்காரன்கள் கடைசிவரை புதுக்கவிதை என்கிற வஸ்து என்னவென்று
புரிந்து கொள்ளாத துரதிர்ஷ்டம். அதனால் வானம்பாடி களைப்போல எழுத்தர்
களும் பாக்ஸ் ஆஃபீஸ் பிளாப் ஆன எழுத்து மேதாவிகள்தான்.''
நீங்கள் குறிப்பிட்டதைப் போல வானம்பாடிகளையும் ஜெயமோகன் விட்டு வைக்க
வில்லை. முதிர்கன்னிகள், வண் ணத்துப்பூச்சிகள், தீக்குச்சிகள்,
அக்னிக்குஞ்சுகள் பற்றி கவிதை எழுதி வார்த்தைகளை விரயம் செய்தவர்கள்
என்றும் ஆ, ஏ, ஓ; போன்ற உயிரெழுத்துகளின் உணர்ச்சிக் கொந்தளிப்போடு
முடங்கிப் போனவர்கள் என்ப தாகவும் சொல்லியிருக்கிறார். நீங்களும்கூட
உயிரெழுத்துகளில் தொடங்கும் இதுபோன்ற கவிதைகளை எழுதியிருக்கிறீர் கள்
அல்லவா?
"ஜெயமோகன் என்பவர் யார்? தமிழ்
இலக்கியத்துக்கு ஏஜெண்டா என்ன? கவிதையின் மொழியாகப்பட்டது ஒவ்வொரு
காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.
இன்று படிமம், படிகாரம் என்றெல்லாம் செப்பித் திரிகிறார்களே- அது
உள்ளுறை உவமமாக நமது சங்கக் கவிதைகளில் நிறைந்து கிடக்கி றது. கவிதை
என்பதே உணர்ச்சிப் பிரவாகத்தின் வெளிப்பாடுதான். கவிதைகளில்
மிகையுணர்ச்சி, குறையுணர்ச்சி, உள்ளுறை, படிமம் என்று வகையறை கள்
பலவாறாக இருக்க லாம். ஆனால் அதை வாசித்து முடித்த பிற்பாடு அதைப்
படித்தவன் உணர்ச்சி பெறுவதும் உந்துதல் பெறுவதும் நடந்தால் அதுதான்
புதுக்கவிதையின் வெற்றி. அதுதான் புதுக்கவிதை யின் இயல்பு என்பதாக நான்
குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகி றேன். திருக்குறளுக்கு முன்பு
எழுதப்பட்டது என்றாலும், சரி- நாளைய தலைமுறைகள் எழுதப் போகிற கவிதைகள்
என்றாலும் சரி - கவிதை என்பது மானுடம் கண்டறிந்த எழுத்து வடிவிலான இசை.
அது நம் ஆத்மத்தோடு உறவாடுவது. ஆயிரம் பக்கம் எழுதப்பட்ட நோபல் பரிசு
பெற்ற ஒரு நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தை பத்து வரிகள் மட்டுமே கொண்ட ஒரு
சிறு கவிதை ஏற் படுத்திவிடும். வானம்பாடிகளும் பல நல்லகவிதைகளை எழுதி
இருக்கிறார்கள். என்றாலும் வானம்பாடிகள் தோற்றுப் போனதற்கு வார்த்தை
ஜாலம் முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தமது கவிதை களால்
சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று வானம்பாடிகள் பகல்
கனவு கண்டார்கள். கவிதை என்பதை ஆரவாரம் என்பதாகப் புரிந்து கொண்டதுதான்
அவர்கள் செய்த தவறாக எனக்குப் படுகிறது. இடையீடாக ஒன்று, வானம்பாடி
களில் கிளைத்த பல கவிஞர்கள் பின்னாட் களில் தங்களைத் தனித்து அடையாளம்
காட்டிக் கொள்ளும் விதமாகக் கவிதை படைத்திருக்கிறார்கள்.''
நீங்கள் வானம்பாடி கவிஞர் கிடையாதா?
"நல்லவேளையாக கேட்டுத் தெளிவுபடுத்திக்
கொண்டீர்கள். எனக்கும் வானம்பாடிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
எனக்கு முதலில் புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி
உதித்ததென்றால், அதற் குக் காரணகர்த்தாக்களாக டாக்டர் கலைஞர், இலங்கைத்
தமிழ் எழுத்தாளர்கள், விமர்சகர் கள், பிறகு தமிழில் கா.ஸ்ரீ. ஸ்ரீயால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காண்டேகரின் படைப்புக்கள்- இந்த மூன்றையும்
குறிப்பிட வேண்டும்.
டாக்டர் கலைஞர் "கவிதை நடைச் சொல்லோவியம்'
என்று எழுதினார். அதைப் படித்தபோது வசனகவிதை என்னைப் பெரிதாக ஈர்த்தது.
அதன் தாக்கத்தில் நான் முதலில் எழுதியதுகூட வசன கவிதைதான் என்றாலும்,
மரபுக் கவிதைமீதே எனக்குப் பற்று அதிகமாக இருந்தது. ஏழாம் வகுப்பு
படிக்கிறபோது முதன் முதலில் ஒரு கவிதை எழுதினேன். அதைப் பொற்றாமரைக்
குளத்தில் பிறந்த கவிதை என்று சொன்னால்கூட மிகச் சரியாக இருக்கும்.
எங்கள் ஊரில் என் பள்ளிக்கூடம் அருகே மிகப்பெரிய குளம் இருக் கிறது.
அந்தக் குளத்தின் படிக் கட்டுக்களில் அமர்ந்து என் முதல் கவிதையை
எழுதினேன். கவிதையை பத்துநிமிட நேரத்துக்குள் முழுமையாக நிறைவு செய்து
முடித்த பிறகே, அது என்னை விடுதலை செய்து பள்ளிக்கு அனுப்பியது.
பள்ளிக்குப் புறப் பட்டபோது அங்கே வெள்ளைத் துரை என்ற எனது நண்பன்
எதிர்ப்பட்டான். அவனிடம், "டேய் நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்.
கேட்கிறாயா?' என்றேன். "அய்யய்யோ... சினேகிதா என் உயிரைக் கேள்
தருகிறேன்... கவிதை கேள் என்று நீயும் கிளம்பிவிடாதே' என வேகமாக நடையைக்
கட்டினான். அவன் அப்படி மருண்டு போனதற்குக் காரணம் உள்ளூரில் பல உதவாக்
கரை கவிராயர்கள் கவிதையின் வழி வன்முறை செய்து கொண்டி ருந்தார்கள். நான்
வெள்ளைத் துரையிடம் சொன்னேன்... "என் கவிதையைக் கேட்டு, நீ துயரம்
கொண்டால் எனது இரண்டா வது கவிதையை எழுத மாட்டேன். இதுவே இறுதியாக
இருக்கட்டும், கேள்' என்றேன். அவனும் ஒப்புக்கொண்டு என் னோடு
குளப்படிக்கட் டில் அமர்ந்தான். என் முதல் கவிதையை அரங் கேற்றினேன்.
வெள்ளைத் துரை என் கவிதையைக் கேட்டு நெகிழ்ந்து போனான். அப்போதுதான்
கவிதை குறித்த உணர்ச்சி என் உடலெங்கும் பரவியது.
எனது தந்தையார் பெரிய பக்தர். கவித்துவம்
இல்லாவிட்டா லும், எதுகை, மோனைகள் நிறைந்த பாடல்களை எழுதிப் பாடுவார்.
நான் கேள்விப்பட்டு வந்து அப்பாவிடம் சொன்னால் எத்தனை விலையுள்ள
புத்தகம் என்றாலும் அதை வாங்கிக் கொடுத்துவிடுவார்.
காண்டேகரின் மொத்தப் படைப்புகளும்,
மொழிபெயர்ப் பாக எனக்கு அப்பா வாங்கிக் கொடுத்ததுதான். அவ்வகையில்
எனக்குள்ளிருந்த படைப்புத் திறனை கிளர்ந்து வெளிக் கொணர்ந்தது
காண்டேகர்தான். என்னுடைய இலக்கிய குரு என்றால் நான் காண்டேகர் என்றுதான்
சொல்வேன்.
நான் கல்லூரியை எட்டு வதற்கு முன்பு
நாராயணசாமி என்ற ஆசிரியர் எனக்கு நெருங் கிய நண்பரானார். அவர்
தி.மு.க.வைச் சேர்ந்தவர். நான் அப்போது சோசலிஸ்ட் கட்சியில் இருந்தேன்.
அப்போது நாராயணசாமியுடன் அடிக்கடி விவாதம் புரிவேன். ஒருமுறை சோசலிஸம்
பற்றி வாதம் செய்தோம். "நீங்கள் சோசலிஸம் உலகத்தில் பரவவேண்டும்
என்கிறீர்கள். தி.மு.க. தமிழ் நாட்டில் சோசலிஸம் வரவேண் டும் என்று
பாடுபடுகிறது. தி.மு.க. செயல்பாட்டு ரீதியாக சோசலிஸ்ட் கட்சி' என்பதாக
அவர் தெளிவாக நிறுவியபோது, நான் தி.மு.க. ஆதரவாளனாக மாறிப் போனேன்.
இந்த நண்பர் என் எழுத்தாற்றலைக் கண்டு எண்ணி றைந்த மொழிபெயர்ப்பு நூல்
களை எனக்கு வாங்கித் தந்தார். இதனால் மாணவப் பருவத்தி லேயே எனக்கு
தரமான வாசிப்பு அனுபவம் கிட்டியது. எனது கவித்துவம் வளமை பெற்றது.''
பிறகு புதுக்கவிதையின்பால் எப்போது உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது?
"போடிநாயக்கனூரில் அன்று காங்கிரஸ்
சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுப்புராஜ். கட்சி எல்லைக்கு
அப்பாற்பட்டு எல்லாருடைய அன்புக்கும் பாத்திரமானவராக அவர் இருந்தார்.
நான் கல்லூரி யில் சேர்ந்து பயில வேண்டும், மிகப்பெரிய தமிழறிஞனாக
வரவேண்டும் என்று விரும்பினார். என் கல்லூரிக் கல்விக்கு வள்ளல்
தன்மையோடு உதவிய வர். அவர் திடீரென்று காலமாகிவிட்டார். என்னால் அந்த
இறப்பை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. உடனே "கண்ணீர் நாள்' என்று
அவருக்கான இரங்கல் கவிதையை புதுக்கவிதையில் எழுதினேன். அந்தக் கவிதையை
போடியிலிருந்து வெளிவந்த "பூந்தொட்டி' என்ற சிறுபத்திரிகை பிரசுரம்
செய்தது. இந்தக் கவிதையைப் படித்த பலரும் என்னைத் தேடி கல்லூரிக்கு
வந்துவிட்டார்கள். நான் இதே போன்ற மொழியில் புதுக்கவிதை எழுத வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்கள். பலர் அடுத்த முறை சந்தித்தபோது "என்னய்யா
புதுக்கவிஞரே...' என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.
பிறகு கல்லூரிக்கு வந்த பிறகு என்
புதுக்கவிதை வானம் பாடிகளின் வார்த்தை விளை யாட்டுகளிலிருந்து வேறுபட்டு
இருந்ததற்குக் காரணம், இலங் கைத் தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும்தான்.
அங்கே எழுதி வந்த டோமினிக் ஜீவா, டேனியல்
போன்றவர்களின் படைப்புக் களைப் படித்தேன். மிக முக்கிய மாக
புதுக்கவிதைக்கு தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுதிய கைலாசபதியின்
எழுத்துகளைப் படித்தேன். புதுக்கவிதை பற்றிய தெளிவு வந்தது. மெல்ல
மெல்ல புதுக்கவிதையை எழுத ஆரம்பித்தேன். எழுதிய கவிதைகளை- இது ஈழத்துக்
கவிஞர் களின் புதுக்கவிதை என்பதாக கல்லூரித் தோழர்களிடம் காட்டுவேன்.
அற்புதம் என்று சொல்லுவார்கள். பிறகு சிரித்துக் கொண்டே நான் எழுதிய
கவிதை என்றதும் நம்ப முடியாமல் பாராட்டுவார்கள். இப்படியாக
படிப்படியாகப் புதுக் கவிதைக்குத் திரும்பினேன்.''
எழுபதுகளில் நீங்கள் தீவிரமாக எழுதத் தொடங்கு வதற்கு முன்பு, 1965-ல்
நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர்களின் பங்கேற்பால் எழுச்சியோடு
நடந்தது. இந்தப் போராட்டத்தில் மாணவர்களை வழிநடத்திய, கட்சி சாராத
மாணவத் தலைவர்களில் நீங்கள், கா. காளிமுத்து, பா. செயப் பிரகாசம்
போன்றவர்கள் முக்கியமானவர்களாக இருந்தி ருக்கிறீர்கள். உண்மையில் இந்தி
எதிர்ப்பு பற்றிய புரிதல் மாணவர் களிடம் இருந்ததா? அல்லது
தி.மு.க.வாலும் தமிழாசிரியர் களாலும் பேராசிரியர்களாலும் மூளைச்சலவை
செய்யப்பட் டார்களா?
"வெளிப்படையாகச் சொல்வதென்றால் அன்று
டெல்லி அரசு ஓர் ஏகாதி பத்தியமாக இருந்தது. தமிழ்நாடு வஞ்சிக்கப் பட்டது.
தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற உணர்வு தான் இந்தி எதிர்ப்பின்
பின்னணியில் மறைமுகக் காரணமாக இருந்தது. இதை நான் மறைக்கவில்லை. அதே
நேரம் இந்தித் திணிப்பு பற்றிய புரிதல் மாணவர்களிடம் தெளிவாகவே இருந்தது.
இந்தி என்பது இந்தியாவில், ஒருசில மாநிலங்களில் பேசப்படும் மொழி. தேசிய
மொழியாக அதைக் கொள்ள முடியுமா என்று பார்த்தால்கூட அதற்குரிய தகுதி
இந்தி மொழிக்குக் கிடையாது. அதுவும் தவிர, இலக்கணங்களோ, இலக்கியங்களோ
இல்லாத மொழி. இப்படி ஒரு பகுதி மக்கள் பேசும் மொழியை ஒட்டுமொத்த இந்தியா
முழுவதும் திணித்தல் என்பது பச்சை ஏகாதிபத்தியம் என்பதை மாணவர்கள்
புரிந்தே இருந்தார்கள்.
அப்போது தி.மு.க.வில் எழுச்சியுள்ள தலைமை
இருந்தது என்பதை மறுக்க முடியாது. அதுவும் டாக்டர் கலைஞர்,
தமிழுணர்ச்சியை ஊட்டிய முதல் தலைவர். பேராசிரியர் இலக்கு வனார்
என்றொருவர் இருந்தார். அவர் இந்தி எதிர்ப்பு உணர்ச் சியைத் தீவிரமாக
வளர்த்து விட்டவர். தி.மு.க. தலைமையின் ஆளுமையும் தமிழுணர்வும்
மாணவர்களை இந்தப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த முக்கியமான சக்தி யென்றால்,
தமிழாசிரியர் கள், தமிழ்ப்பேராசிரியர் களின் மொழிப்பற்று மற்றொரு
முக்கியமான சக்தியாக போராட்டத்தில் பங்குபெற்றது. சமஸ்கிருதம்,
வடமொழியின் ஆதிக்கம் தமிழின் சொற்கூட்டத்தை மாசுபடுத்தியதுபோல,
இந்தியும் தமிழை பாதிக்கும் என்று திடமாக நம்பினார்கள். இதனால் மொழிப்
போராட்டத்தை முன்னெடுத்த தி.மு.க.வின் ஆதரவாளர்களாகவே அன்று அவர்கள்
மாறிவிட்டார்கள். அவர்கள் மாணவர்களை மூளைச் சலவை செய்ய வேண்டிய அவசி யமே
இருக்கவில்லை. தமிழாசிரி யர்களும் பேராசிரியர்களும் மாணவர்களும்
இயற்கையாக உந்தப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். சிறை
செல்லவும், காவல் துறையிடம் அடிபடவும்- ஏன் உயிரையேகூட துச்சமாக மதித்து
மொழிப் போராட்டத்தை அதன் உச்சத் துக்குக் கொண்டு சென்றார்கள்.''
மொழிப் போராட்டத்தில் உங்களுடைய
பங்கேற்பு பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்.
"1965-ல் மொழிப்போர் தொடங்கியபோது, நான்
மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது
மதுரையில் தி.மு.க. மாணவரணி உருவாக்கப்பட்டது. அதில் நாங்கள் இருந் தோம்.
காளிமுத்துவும் நானும் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென்று
ஒருமனதாக முடிவு செய்தோம். சட்டத்தை எரிக்க மதுரையின் நடுநாயகமாக
இருந்த ராஜாஜி மைதானத்தைப் போராட்ட ஸ்தலமாகத் தேர்ந்தெடுத்தோம். இந்தச்
செய்தி உளவுத்துறை வழியே காங்கிரஸ் அரசாங்கத் தின் காதுகளுக்குச்
சென்றதும், போராட்டத்துக்கு முன்னதாகவே எங்களைக் கைது செய்து சிறையில்
அடைக்க திட்டமிட்டு விட்டார் கள். இந்தத் தகவலை உளவுத் துறையைச்
சேர்ந்த, தமிழுணர்வு கொண்ட சி.ஐ.டி. போலீஸ்காரர் வந்து எங்களிடம்
சொன்னார். உடனடியாக நானும் காளிமுத்து வும் காவல் துறையின் கைகளில்
சிக்கிவிடாமல் இருக்க கீழக்கரைக் குச் சென்று ஒளிந்து கொண் டோம்.
எங்களது கல்லூரியின் சக மாணவரான ஹசன்முகமது தன்னுடைய வீட்டில் தைரியமாக
எங்களுக்கு அடைக்கலம் கொடுத் தார். பிறகு திட்டமிட்டபடி மாணவர்களுடன்
ராஜாஜி திடல் நோக்கிப் போனபோது மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த
காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து பல தீய எண்ணங்களைக் கொண்ட தொண்டர்கள்
மாணவர்களை குண்டாந் தடிகளால் தாக்கியும், பலரை அரிவாளால் வெட்டியும்,
எங்கள் ஊர்வலத்தைக் கலைக்க கலவரம் செய்தார்கள். இத்தனை வன்கொடுமைகளைக்
கண்டு அஞ்சாத எங்கள் மாணவர் பட்டாளம் திட்டமிட்டபடி சட்ட எரிப்பு
செய்தது. நானும் காளிமுத்துவும் கைது செய்யப் பட்டு திருச்சி சிறையில்
அடைக் கப்பட்டோம். நாங்கள் சிறையில் மிகவும் கண்ணியமாக நடத்தப் பட்டோம்
என்றாலும், எங்க ளுக்கு கால் விலங்கு பூட்டப் பட்டிருந்தது.
மதுரை ஊர்வலத்தில் மாணவர்கள்
தாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடி களை
வெட்டிச் சாய்த்தார்கள். போராட்டம் இரண்டுமாத காலம் நீடித்தது. எல்லா
முக்கியமான ஊர்களிலும் மாணவதலைவர்கள் உருவாகி போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றார்கள். நாங்கள் சிறையிலிருந்து வந்த பிறகு
மீண்டும் போராட்டத்தில் குதித்தோம். போராட்டம் தீவிரம் பெற்று தீயாக
எரிந்து கொண்டி ருந்தபோது, தி.மு.கழகம் போராட்டத்தை தற்காலிகமாக
கைவிடுவதென்று முடிவெடுத்து அறிவித்தது. இதனால் போராட்டத்தைக் கைவிட்டு
வகுப்புகளுக்குச் செல்ல முடிவெடுத்தோம். ஆனால் விடுமுறை வந்து விட்டது.
விடுமுறை முடிந்து கல்லூரி தொடங் கும்போது மீண்டும் மொழிப் போரைத்
தொடங்குவதென்று முடிவெடுத்தோம். எங்கள் முடிவை அறிந்து கொண்ட அரசு,
தமிழகம் முழுவதும் மாணவ தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
மதுரையில் மீண்டும் நாங்கள் கைது செய்யப் பட்டோம்.''
இந்தி எதிர்ப்பு போராட் டத்தைத் தொடங்கி வைத்த தி.மு.க.வே, அதை
கைவிட்டது ஏன்? மாணவர்கள் தி.மு.க.வை நம்பாமல், போராட்டத்தை அவர்களே
கையிலெடுத்துக் கொண்டதுதானே காரணம்?
"அப்படிச் சொல்ல முடியாது! தி.மு.க.வின்
வழிகாட்டுதலும் ஊக்கமும் இருந்தவரை போராட் டம் தீவிரமாக இருந்தது.
மாணவர்களையும் காங்கிரஸ் அரசு மிக கவனமாகக் கையாண் டது. ஆனால் பல மாணவ
தலைவர்கள் தி.மு.க.வின் கட்டுப் பாட்டை விரும்பவில்லை. வன்முறை
வழிக்குச் செல்ல பலர் முனைந்தனர். தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க.
பின்வாங்குவ தாகப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் உண்மை அது வல்ல.''
உங்களது பதில் தி.மு.க. சார்புடையதாகத் தோன்றுகிறது! அஸ்ஸா மில்
மாணவர்களே சுயமாகப் போராடியதால், அது வொரு தேசிய இன எழுச்சியாக வெற்றி
பெற்றது. அதுபோன்ற தொரு போராட்டமாக மாறி விடுமோ என்ற தி.மு.க.வின்
அச்சம்தானே இந்தி எதிர்ப்பைக் கைவிடக் காரணம்? இந்தி எதிர்ப்புப்
போராட்டத்துக்கு முன்பே திராவிட நாடு கோரிக் கையை கைகழுவிய கழகம் தானே
தி.மு.க.?
"அஸ்ஸாம் மாணவர்களின் எழுச்சியைக் கண்டு
பெருமிதம் கொண்டவன் நான். அங்கே அப்படியொரு எழுச்சி ஏற்பட்ட தற்குக்
காரணம் அங்கே ஸ்திரமான தலைமை இல்லாததுதான். ஆனால், இங்கே அண்ணாவுக்குப்
பிறகு கலைஞர் எனும் லட்சியப் பிடிப்பு கொண்ட தலைமை தமிழினத்துக்கு
கிடைத்துவிட்ட பிறகே தமிழினம் தலை நிமிர்ந் தது. தமிழுணர்ச்சி என்பதைத்
தமிழர்களுக்கு ஊட்டி வளர்த்த ஒரே இயக்கம் தி.மு.க.தான். அதேபோல்,
தி.மு.க. போல ஒரு கொள்கைப் பிடிப்பு கொண்ட கட்சி இந்திய அளவில் எதுவு
மில்லை. அது தேர்தலுக்காக என்றைக்கும் மாறக்கூடிய கட்சியல்ல. திராவிட
நாடு என்ற கோரிக்கை அன்று கற்பனாவாத மாக முடிந்து போனது. நான்கு
மாநிலங்களைச் சேர்ப்பது அத்தனை சுலபமானதல்ல.''
மாநில சுயாட்சி கோரிக் கையையும் தி.மு.க. கிடப்பில் போட்டு விட்டது.
இப்போது கொத்தாக தமிழர்களைக் கொன்று குவிக்கும் ஈழத்துயரம் கண்டு
தி.மு.க. தேர்தல் நேரத்து கண்ணீர் வடிக்கிறதே தவிர, ஈழ மக்களை முற்றாகக்
கைவிட்டு விட்டதே?
"மாநில சுயாட்சியை இன்றைக்கும் கட்சியின்
முக்கிய கொள்கையாகக் கொண்டிருக்கக் கூடிய ஒரே கட்சி தி.மு.க.தான்.
முரசொலிமாறன் மாநில சுயாட்சி குறித்து தனிப் புத்தகமே எழுதி அதன்
முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இன்று முன்புபோல்
அரசியல் நிலை இல்லை. மாநிலக் கட்சி களுடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து
கொண்ட பிறகே தேசியக் கட்சிகளால் ஆட்சியமைக்க முடிகிறது. இனி மாநில
சுயாட்சி என்பதை வலியுறுத்த வேண்டிய அவசியமெல்லாம் போய்விட்டது. மாநில
சுயாட்சியை மாநிலங்களே எடுத்துக் கொள்ள வேண்டியது மட்டும்தான் பாக்கி.
அதேபோல ஈழப் பிரச் சினையில் தனி ஈழம்தான்
ஒரே தீர்வு என்று தி.மு.க. எப்போதோ சொல்லிவிட்டது. போர் நிறுத்தம்
செய்யவேண்டும் என்று மத்திய அரசையே சொல்ல வைத்திருக்கிறது. கலைஞர்
உயிரோடு இருக்கிறவரை சிங்க ளப் பேரினவாதம் வென்றுவிட முடியாது.
தி.மு.க.வும் கலைஞரும் தமிழர்களின் பாதுகாப்பு அரண் கள். இதைப் புரிந்து
கொள்ளாமல் தி.மு.க.வைப் புரிந்துகொள்ள முடியாது.''
இந்தி எதிர்ப்பு என்பதை மாபெரும் இயக்கமாக நடத்திக் காட்டி, இந்தித்
திணிப்பை தடுத்த தமிழர்கள், இன்று ஆங்கில எதிர்ப்பு என்பதைக் கைவிட்டு
ஆங்கிலத்தை ஆதரிப் பவர்களாக வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார் களே?
"ஒரு விஷயத்தை இந்த இடத்தில் நான்
தெளிவுபடுத்த விரும்புகிறேன். இன்று பெற்றோர் கள்தான் விரும்பி தங்கள்
பிள்ளை களை ஆங்கிலப் பள்ளியில் போடுகிறார்கள். ஆங்கிலத்தில்
உரையாடுவதைக் கௌரவப் பிரச்சினையாக பல படித்த தமிழர்கள் நினைக்கிறார்கள்.
இவையெல்லாம் தவறென்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் ஆங்கிலம் கற்றல்
அல்லது ஆங்கில வழிக் கற்றல் என்பது நமது சுய விருப்பத்தைப் பொறுத்தே
அமைகிறது. ஆனால் அன்று நிலைமை வேறு. அன்றைய காங்கிரஸ் அரசுக்கு
இந்திதான் தொடர்பு மொழியாக இருந்தது. இதனால் மத்திய அரசில் வேலை
வேண்டும் என்றால் அது எந்தக் கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இந்தி
படித்தால்தான் வேலை என்கிற நிலை இருந்தது. இந்தி பேசாத எல்லா மாநிலங்கள்
மீதும் இந்தி இப்படித்தான் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில்கூட பார்ப் பணப் பள்ளிகள்
எல்லாவற்றிலும் இந்தி சொல்லிக் கொடுத்தார்கள். இந்தி கற்றவர்கள் சுலபமா
அரசு வேலைக்குப் போனார்கள். தமிழ் படித்தவன் எவனுக்கும் வேலை
கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஆங்கிலம்தான் உலகின் ஒரே பொதுவான தொடர்பு
மொழியாக இருக்கிறது. அதைப் படிக்கிற தமிழன் உயராமல் இல்லை. ஆனால் அதே
நேரம் தமிழும் கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற நிலையை கலைஞர் அரசு
சட்டப்படி நிலைநாட்டியிருக்கிறது! தமிழன் இருக்கிறவரை தமிழ் வாழும். அது
அழிந்துபோகிற மொழி அல்ல. இப்போதைய ஆங்கில
மயமாக்கத்துக்காக நாம் அஞ்சத் தேவையில்லை.
மாறாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப் படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா
இருக்கக் கூடாது. அது காவிரித் தண்ணீர், முல்லைப் பெரியாறு பிரச்சினை
என்றாலும் சரி; ஈழப் பிரச்சினை என்றாலும் சரி- தமிழகத்தின் குரலை காது
கொடுத்துக் கேட்கவில்லை என்றால் இந்திய இறையாண் மைக்கே இழுக்கு ஏற்படும்.
மொழிவாரி மாநிலங்கள், ரஷ்யாவில் உடைந்து சிதைந்த தைப் போல தனித்தனியே
சிதறுண்டுப் போகும். தமிழ்நாடும் அப்படியொரு சூழல் தீவிர மடையும்போது
தனிநாடாக மாறிவிடும். அதில் ஈழம் இணைந்து கொள்ளும் நிலை வரலாம். எனவே
மத்தியில் காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லது இந்த இரு கட்சிகளின் கூட்டணி
அல்லாத இன்னொரு அணி ஆட்சிக்கு வந்தாலும் மாநிலங் களை எப்படி
கண்ணும்கருத்து மாகக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்த
வேண்டும். இதுதான் மத்தியில் அமரப் போகிற அரசுக்கு இனி தலைவலியாக
இருக்கும். தமிழர் கள் இனிமேலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க
மாட்டார்கள்.''
இந்தி எதிர்ப்பு போராட் டத்தில் தி.மு.க.வின் நிலைப் பாட்டை ஆதரித்துப்
பேசும் நீங்கள், அன்று இந்தி எதிர்ப்பைக் கை விட்டபோது, காளி
முத்துவுடன் சேர்ந்து தனி அரசியல் கட்சி தொடங்குகிற முயற்சி யில்
இறங்கியதாகத் தெரிகிறதே?
"தி.மு.க. பிரிவினையைக் கைவிட்டபோதும்,
பிறகு மொழிப் போராட்டத்தைக் கைவிட்ட போதும், எனக்கும் சக மாணவ
தலைவர்களுக்கும் ஒரு அதிருப்தி ஏற்படவே செய்தது. தி.மு.க. என்கிற
ஜனநாயக இயக்கம் தேசியத்தோடு உடன்பாடு செய்து கொள்ளுமோ என்ற சந்தேகம்
ஏற்பட்டது. இதனால் தி.மு.க.வை மிரட்டும் விதமாகவேனும், மாணவர்களாகிய
நாம் அனைவரும் இணைந்து ஒரு அரசியல் இயக்கம் காண்போம் என்று காளிமுத்துவை
வற்புறுத்தி னேன். ஆனால் காளிமுத்து நடுங் கிப்போய் அழுது விட்டார். "தலைவர்கள்
இருக்கிறபோது, நாம் செய்ய வேண்டிய வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்
அண்ணனே' என்று என்னைத் தடுத்துவிட்டார். அவர் சொன்ன தற்காக அல்லாமல்,
கலைஞரின் தலைமைமீது இருந்த நம்பிக்கை யின் காரணமாக தனிக்கட்சி
தொடங்குவதை விட்டுவிட்டோம்.
மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம்
முடிந்த பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. பள்ளிகளில் கட்டாயப்
பாடமாக இருந்த இந்தியை நீக்கி உத்தரவிட்டது. அதுவே நமக்குப் போதுமானதாக
இருந்தது. இந்தி அதன் பிறகு தமிழ்நாட்டில் தனது வாலை சுருட்டிக் கொண்டது.''
உங்களது கவிதைகளைப் பற்றிப் பேசுகிறபோது உருவகம் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கிறது. குறிப்பாக அழகியல் சார்ந்த உருவகங்களுக்கு உங்கள்
கவிதைகளில் தனியிடம் கொடுத் திருக்கிறீர்கள். இது எப்படி நிகழ்ந்தது?
"உருவகம் என்பது இன்றைக் கும்
புதுக்கவிதையில் தவிர்க்க முடியாத ஒரு கூறு. உருவகங் களின்மீது கட்டி
எழுப்பப்படும் ஒரு கவிதையை வாசித்து அனுபவம் பெறும்போது, அது நம் மனதில்
போய் உட்கார்ந்து கொள்கிறது. எனக்கு உருவகங் கள்மீது காதல் ஏற்படுவதற்கு
ஒரே காரணம் கேரளக் கவி வயலார் ராமவர்மாதான். அவன் ஒரு சிறந்த
திரைப்பாடலாசிரியனும் கூட. அவனைப்போல உருவகங் களைக் கையாளுவதிலும்,
அவற்றை உருவாக்குவதிலும் தனித்துவம் கொண்டவர்கள் என்று இந்திய மண்ணில்
யாருமில்லை. கம்யூனி ஸக் கருத்துகளை மாபெரும் உருவக வரைபடத்தில் அவன்
ஏற்றிச் சொன்னதை இப் போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
நான் உருவகங்களை அதிகம் பயன்படுத்திய
தற்கு ராமவர்மா முக்கிய பாதிப்பாக அமைந்து போனான். அதேபோல எங்களுக்கு
தமிழண் ணல் என்றொரு ஆசிரியர் இருந்தார். தமிழ் மரபுச்சொற்கள், பழமொழி
கள் போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் உருவகங்களைப் பற்றி எங்களுக்கு
பாடப் பகுதி என்றில் லாமல், தனிப்பட்ட முறையில் சொல்லிக் கொடுத்தார்.
எனது கவிதை மொழியின் வளர்ச்சியில் அவருக்கும் பங்குண்டு.''
புதுக்கவிதையில் சிலே டையை முயன்று பார்த்தவர் நீங்கள். ஆனால் இன்று
நவீனப் புதுக்கவிதையில் சிலேடையின் இடத்தை படிமம் எடுத்துக் கொண்டு
விட்டது. உண்மையில் சிலேடை புதுக்கவிதையோடு அல்லது நவீனக் கவிதையோடு
ஒட்டாத ஒரு விஷயமா?
"சிலேடை என்பது கவித் துவத்தின்
உச்சத்தில் தோன்றும் ஓர் உத்தி. சிலேடை எனும் இலக் கிய அலங்காரத்தை
நகைச்சுவை யின் ராணி என்றே சொல்லிவிடலாம். அதே நேரம் சிலே டையை மட்டும்
இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்துவிட முடியாது. இதுதான் சிலேடையின்
தனிச்சிறப்பு.
இடைக்கால இலக் கியத்தில் கவி காளமேகத்
தின் பங்களிப்பு இன்று வரை பிரமிப்பானது. பிறகு பல்வேறு கவிஞர் கள்
முயன்றிருக்கிறார்கள். இன்றைய நவீனயுகத்தில் எனக்குத் தெரிந்து அப்துல்
ரகுமான் சிலேடைக்கு முயன்றி ருக்கிறார். இவருக்கு முன்பு எழுதிய கி.வா.
ஜகநாதனும் எழுதியிருக்கிறார். எனது பங்கு என்பது மிகச் சிறியது. இன்றைய
இளைய தலைமுறைக்கு சுட்டுப் போட்டாலும் சிலேடை புனை வது சாத்தியமில்லை.''
இன்றைய நவீனத் தமிழ்க் கவிதையில் யாரை அறிந்திருக்கி றீர்கள்? புதிய
கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பதுண்டா?
"அப்துல்ரகுமான், இன் குலாப்
இரண்டுபேரையும் ஆளுமையான கவிஞர்கள் என்று ஏற்றுக் கொள்வேன். என்றாலும்
எனது சாதனைகளை அவர்கள் முறியடிக்கவில்லை. இன்று எழுதிக் கொண்டிருக்கிற
இளம் கவிஞர்கள் அனைவரும் அரை வேக்காடுகள். இரண்டாயிர மாண்டு தமிழ்க்
கவிதை நெடுங் கணக்கில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியாத
அரிச்சுவடி கவிஞர்கள்.
இவர்கள் எழுதுகிற கவிதை களால் அச்சகம்
நடத்துகிறவர் களுக்குத்தான் லாபமே தவிர, தமிழ் மொழிக்கோ கவிதையை
நேசித்து வாசிக் கத் துடிப்பவனுக்கோ அல்ல. குறிப்பாக நவீன கவிதை
என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. குழப்பம்தான் நவீன கவிதை. நவீன
கவிதைகளுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது
என்பது என் கணிப்பு. காலம் இதை உறுதி செய்யும். காமராசன் சரியாகச்
சொன்னான் என்று வரும் தலைமுறையினர் என்னைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.''
அப்படியானால் இன்றைய தமிழ்க்கவிதைத் துறைக்குத் தேவைப்படும் மாற்றம்
என்று எதைச் சொல்வீர்கள்?
"நாம் அடுத்து வரும் ஒரு நூற்றாண்டு
காலத்துக்கு மரபுக் கவிதையின் பக்கம் திரும்பி விடுவதன் மூலம் தமிழ்க்
கவிதைக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்று நினைக்கிறேன். காரணம்
கம்பனின் ஆளுமை இன்னும் உயிர்ப்புடன் இருப்பது அவன் படைத்த மரபில் தான்.
நானும் இப்போது மரபுக்குத் திரும்பியிருக்கிறேன். பெரியாரின் வாழ்க்கையை
"பெரியார் காவிய' மாக மரபுக்கவிதையில் புனைந்து முடித்து விட்டேன்.
விரைவில் வெளிவர இருக்கிறது.''
திரைப்பாடல் துறையில் உங்கள் பிரவேசம் நிகழ்ந்தது எப்போது?
"நான் அப்போது "சமநீதி தென்னகம்'
பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது என்
எழுத்தை கண்ட எம்.ஜி.ஆர். வீட்டுக்கு அழைத்து, "நீதிக்கு தலைவணங்கு'
படத்தில் எனக் காக ஒரு டூயட் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இப்படித்தான் என் திரைவாழ்வு தொடங்கியது. திரைப்பாடல் துறையில் எனது
சாதனைக்கு முழுமுற்றாக எம்.ஜி.ஆரே அடித் தளம் அமைத்துக் கொடுத்தார்.
திரைப்பாடல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர்.
அளவுக்குப் புத்திசாலியாக செயல்பட்டவர்கள் யாரும் கிடையாது.
திரைப்பாடல்கள் எம்.ஜி.ஆரால் இலக்கிய அந்தஸ்து பெற்றன என்றால் அது
மிகையில்லை.''
இப்படிச் சொல்லும் நீங்களே எம்.ஜி.ஆரிடம் பல வேண்டாத குணங்கள் இருந்த
தாகச் சொல்லியிருக்கிறீர்களே?
"இப்போதும் சொல்கிறேன். கொள்கை மனிதராக
எம்.ஜி.ஆரைப் பார்க்கிறபோது அவர் மோசமானவர். அவர் ஒரு அரசியல் நடிகர்.
அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றி என்பது
முட்டாள்தனமான வெற்றி. திரைப்படத்தை பார்த்து, கவர்ச்சியால் மக்கள்
அவரிடம் விழுந்தார்கள். லட்சிய ரீதியான வெற்றி என்று எம்.ஜி.ஆரின்
வெற்றியை மறந்தும் சொல்லிவிட முடியாது. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்
கழகம் தொடங்கினார் என்பதற்காக எம்.ஜி.ஆருக்கு தமிழ்ப்பற்று இருந்தது
என்று சொல்லிவிட முடியாது. அவருடன் எட்டு மணிநேரம்கூட இருந்திருக்
கிறேன். இவை எம்.ஜி. ஆர். பற்றி நான் கண்ட உண்மை.''
உங்களை உச்சத்துக்குக் கொண்டு சென்ற திரைப்பாடல் என்று எதைச்
சொல்வீர்கள். அது உங்கள் உள்ளத்துக்கும் நெருக்கமான பாடலா?
"போய்வா நதியலையே' என்ற பாடல்தான்
என்னைப் புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது. மாபெரும் வெற்றி பெற்ற
பாடல். மாறாக ஒரு தோல்வியடைந்த பாடல்தான் எனது உள்ளத்துக்கு நெருக்கமான
பாடல். "உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது! அதை உச்சரிக்கும்போது
நெஞ்சம் தித்திக்கின்றது' என்று "ஜேப்பி யார்' படத்துக்கு எழுதினேன்.
அந்தப் பாடலின் கவித்துவம் மட்டுமல்ல; அந்தப் பாடலின் உள்ளடக்கமும் என்
வாழ்வோடு தொடர்பு கொண்டது.''
இன்று திரைப் பாடல் துறையில் நீங்கள் ரசிக்கிற- பாராட்டுகிற
பாடலாசிரியர் என்று யாரைச் சொல்வீர்கள்?
"நா.முத்துக்குமார் ஒருவன்தான்
கவித்துவமாக எழுதிக் கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றுகிறது.
திரைப்பாடல் என்பது கண்ண தாசன் காலத்தில் இலக்கிய அந்தஸ்து பெற்றது.
பிறகு நான் எழுதியபோது மேலும் மதிப்பு கூடியது. நான் புதுக்கவிதையை
அப்படியே திரைப்பாடலாக எழுதினேன். என் பாடல்களில் ஒருசிலவற்றை இப்போது
கேட்டுப் பாருங்கள். அதில் புதுக்கவிதை இருப்பது புரியும். அதேபோல
முத்துக்குமாரும் கவிதையாக எழுதுகிறான். அவன் இன்னும் பெரிய உயரத்தைத்
தொடுவான் என்பது என் நம்பிக்கை. பொறுத்திருந்து பார்ப்போம்.''
வைரமுத்து உங்கள் பார்வையில்?
"வேண்டாம். வாயைக் கிளறாதீர்கள்.
வைரமுத்துவை நான் ஒரு கவிஞனாக ஒருபோதும் நினைப்பதில்லை.''
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
"பெரியார் காவியம்' எழுதி முடித்துவிட்டு,
"மிர்தாத்தின் புத்தகம்' என்ற மொழி பெயர்ப்பு நூலைப் படித்துக்
கொண்டிருக்கி றேன். நன்றாக இருக்கி றது. ஆன்மிகம் எனக்கு அவ்வளவாகப்
பிடிக் காது. ஆனால் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கத்தின் அமைப்பு முறை
ஒரு திரைக் கதைபோல உள்ளது. என்றா லும் பட்டினத்தார் பாடல்களில் இல்லாத
ஆன்மிகத்தையா சீனர் களும் ஜென் துறவிகளும் எழுதி விடப் போகிறார்கள்.
களரி பயிற்றுக் கலை இங்கிருந்து பௌத்தத் துறவிகள் வழியாக ஆசிய
நாடுகளுக்குச் சென்று கராத்தே கலையாக நமக்கே திரும்பி வந்ததைப்போல நமது
செவ்வியல் இலக்கியச் செல்வங் களும் எடுத்துச் செல்லப்பட்டு "மிர்தாத்
புத்தகம்' போல திரும்பி வருகின்றன. நம்மிடம் இல்லாதது எதுவுமில்லை.
நம்மைப்போல கல்வியிலும் கவிதையிலும் தேர்ந்தவர்களும் யாருமில்லை.''
(நன்றி - இனிய உதயம்)