கவிஞர் மு.மேத்தா அவர்களுடன் ஒரு
நேர்காணல்:
அகில்
1)
உங்கள் முதல் கவிதை அனுபவம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
முதல்முதலில் பள்ளிமாணவனாக இருந்தபோது கவிதை என்ற பெயரில் எழுதத்
தொடங்கிவிட்டேன். இளம்வயதில் ஒன்பது வயதில் ஆரம்பித்த இந்த ஊர்வலம்
ஏறத்தாழ பதினாறு வயதில் ஒரு முழுமையான பக்குவத்திற்கு வந்து செம்மையான
கவிதைகளை எழுதினேன் என்று தோன்றுகிறது.
2)
கவிதை எழுதுகிற மனநிலை என்பது....?
கவிதை எழுதுவதற்கு என்று தனியாக ஒரு மனநிலையை நாம் தேடமுடியாது. அந்த
மனோநிலை நம்மைத் தேடி வந்தால் நாம் கவிதை எழுதலாம்.
3)
சமீபத்தில் நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்று
சொல்லுங்கள்?
எனக்குப் பிடித்தது என்று நான் சொல்லமுடியாது. எனது படைப்புக்களை
படிப்பவர்கள்தான் தங்களுக்குப் பிடித்தது எது என்று சொல்ல வேண்டும்.
4)
தங்களுக்கு கடந்த ஆண்டு இலக்கியச் சாதனையாளர் விருது கிடைத்ததாக
அறிந்தோம். அதுபற்றி.....?
இந்த ஆண்டும் இலக்கியச் சாதனையாளராகவே நான்
இருக்கிறேன். சில சமயங்களில் அறியப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான்.
5)
சமகால கவிஞர்களில் உங்களைப் பாதித்த
கவிஞர் யார்?
பாரதியும், பாரதிதாசனும் என்னை வழி நடத்தினார்கள். அப்துல் ரகுமான்,
மீரா ஆகியோருடைய கவிதைகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.
6)
இந்த நூற்றாண்டின் தமிழ்க் கவிதை
வரலாற்றில் சாதனை என்று எதைக் கருதுகின்றீர்கள்?
இயற்கையையும், இறைவனையும் பாடியதை விட்டு திசை திரும்பி தமிழ்க் கவிதை
மனிதர்களைப் பற்றி பாடத் தொடங்கியமை இந்த நூற்றாண்டின் கவிதைச் சாதனை.
7)
கவிதை என்பது உணர்ச்சியின் வெளிபாடு. எனவே ஒரு எழுத்தாளன் எப்படியும்
எழுதலாம் என்பது சரியா?
எழுதுபவனுக்கு ஒரு நோக்கம் வேண்டும். தன்னுடைய எழுத்து வாசிப்பவனுடைய
நிலையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். உயரமற்றவர்களுக்காக உயரத்தை
உண்டாக்குபவன்தான் எழுத்தாளன். உயரங்களை கிலாகித்துக்கொண்டிருப்பவன்
எழுத்தாளன் அல்ல.
8)
பல தசாப்தங்களாக கவிதை எழுதிவருகிறீர்கள். உங்களுடைய படைப்புக்களில்
உங்களுக்கு மனநிறைவைத் தந்த படைப்பு எது?
நான் எழுதிய படைப்புக்கள் எல்லாமே எனக்கு மனநிறைவைத் தந்தவைதான். ஆனால்
இன்றளவும், இப்பொழுதும் கண்ணீர்ப்பூக்களை உச்சியில் தூக்கிவைத்துக்
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் வாசகர்கள். அது முப்பதாவது பதிப்பாக
தற்போது வெளிவந்திருக்கிறது. வாசகர்களுக்கு மனநிறைவைத் தந்த அந்த
கண்ணீர்ப் பூக்கள் எனக்கும் நிறைவைத் தந்திருக்கிறது.
9)
கவிதை மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்று அதன்
வடிவங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. எதிர்காலத்தில் அதன் வடிவம்
எப்படியிருக்கும்?
நாளை பிறக்கப்போகும் குழந்தை எப்படியிருக்கும் என்று இன்றைக்கு நான்
உறுதி கூறமுடியாது. வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால்
கவிதையினுடைய உணர்ச்சியும், உத்திகளும் ஒன்றாகத் தான் எப்போதும்
இருக்கும்.
10)
நிறையக் கவிஞர்கள் கைக்கூ கவிதைகள் படைக்கிறார்கள். ஆனால் அவர்கள்
கைக்கூவிற்கான சரியான இலக்கணத்தை பின்பற்றுவதில்லை என்று ஒரு
குற்றச்சாட்டு நிலவுகிறது. இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீரகள்?
கைக்கூக் கவிதை என்று அழைப்பதே தவறு என்பது என்னுடைய கருத்து. காரணம்,
கைக்கூ என்பது ஒரு ஜப்பானிய கவிதை வடிவம். அந்த ஜப்பானிய கவிதை
வடிவத்திற்கு என்று உரிய இலக்கணங்கள், அதற்குரிய வரையறைகள் உண்டு. அந்த
வரையறைகளையோ, இலக்கணங்களையோ நாம் பின்பற்றமுடியாது. ஒரு சிறு கவிதை
வடிவத்திற்கு தேவையற்ற வேறொரு மொழி வடிவத்தை பெயராகச் சூட்டிக்கொள்வது
என்பது எனக்கு உடன்பாடானது அல்ல. கைக்கூக் கவிதை என்பதை குறுங்கவிதை
என்றோ, சிறுகவிதை என்றோ, துளிப்பா என்றோ அழைக்கலாம். அந்நிய மோகத்தினால்
அடுத்த நாட்டுக்காரன் பெயரால் அழைக்கப்படுவது என்பது என்னால்
ஏற்றுக்கொள்ள இயலாது.
11)
பேராசிரியராகப் பணியாற்றிய நீங்கள்
தற்போது அந்தத் துறையிலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறீர்கள். அதன்பின் தங்களுடைய இலக்கியப் பணி எப்படியிருக்கிறது?
ஒரு பேராசிரியர் என்ற அலுவலகப் பணியிலிருந்து, கல்லூரி மாணவர்களுக்கு
பாடம் நடத்துகின்ற பணியிலிருந்து நான் ஓய்வு பெற்றிருக்கிறேனே தவிர
இந்த சமூகத்திற்கு பாடம் நடத்துகின்ற பணியில் இருந்து நான் எப்போதும்
ஓய்வெடுக்க முடியாது.
12)
தற்போதைய உங்களுடைய புதிய
முயற்சிகள் எப்படியிருக்கிறது?
எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
13)
கவிதையில் படிமம், குறியீடு என்பது
எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன?
எழுதுகிற கவிஞன் படிமம் என்றோ குறியீடு என்றோ
அல்லது அதன் இலக்கணப் பகுதிகளையோ யோசித்துக்கொண்டு அவன் எழுதுவதில்லை.
அவன் எழுதியதில் படிமத்தையும் குறியீட்டையும் வாசகர்களும்
திறனாய்வாளர்களும் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர இந்தப் படிமத்தை
வைத்துக்கொண்டுதான் நான் எழுத வேண்டும் என்றோ அல்லது இந்த உருவகத்தை
வைத்துக்கொண்டுதான் நான் எழுத வேண்டும் என்றோ யாரும் நினைத்துக்கொண்டு
எழுதுவதில்லை. அவன் எழுதும்போது அவனுடைய இயல்பான உணர்வில் தானாக
வரக்கூடிய படிமங்களையும், உருவகங்களையும் திறனாய்வாளன் கண்டு சொல்ல
வேண்டுமே தவிர தனியே அந்தக் கணக்குகளை வைத்துக்கொண்டு கவிதை எழுத
முடியாது. எழுதக் கூடாது.
14) கற்பனை, படிமம் இரண்டுக்கும்
உள்ள வேறுபாடு என்ன?
படிமம் ஒன்றை இன்னொன்றாகச் சொல்வது. கற்பனை ஒவ்வாரு விதமாக அதனைச்
சித்தரிப்பது. படிமத்தைப் பொறுத்தவரை அதற்குச் சுதந்திரம் இல்லை.
கற்பனைக்கு சுதந்திரம் உண்டு.
15)
பொதுவாக நவீன கவிதைகள் புரியவில்லை
என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே.....
வானம்பாடி கவிதை இயக்கம் கவிதையை மக்கள் புரிந்து கொள்வதற்கும், மக்களை
கவிதை புரிந்து கொள்வதற்குமான குறிக்கோளோடு உருவானது. வானம்பாடி கவிதை
இயக்கத்தினுடைய மாபெரும் வெற்றி கவிதையை மக்களுடைய பொதுக்கவிதையாக
மாற்றியதுதான். சமூகச் சிந்தனைகளை, மானுட மேன்மைகளை பாடுவதுதான் கவிதை
என்ற உணர்வை வானம்பாடி இயக்கமும், வானம்பாடிக் கவிஞர்களும்
தோற்றுவித்தார்கள். எப்போதும் தமிழ் சமுகத்தின் மீது அக்கறை
இல்லாதவர்களும், தமிழ் மொழி மீது அக்கறை இல்லாதவர்களும் எம்மோடு
உடனிருந்துகொண்டு இருகிறார்கள். அவர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி
செய்யப்பட்ட கருத்துக்களை எமது இதயங்களிலே திணிப்பதற்கு முயற்சி
செய்துகொண்டு இருக்கிறார்கள். அத்தகையவர்களுடைய முயற்சிகளில் சமுகத்தைப்
பற்றிய அக்கறையும் இருக்காது. மானுட மேன்மையைப் பற்றிய ஒரு
அணுகுமுறையும் இருக்காது. அவர்களிடம் மற்றவர்களைக் குற்றம்சாட்டுகின்ற
ஒரு போக்கு மிகுந்திருக்கும். பிடிக்கும் என்றால் அவர்கள்
கெட்டிக்காரர்கள். அப்படிப்பட்டவர்களினாலே நவீன கவிதை என்பது இன்றைக்கு
புரியாததாக, புதிரானதாக, தனிமைப்பட்டதாக இருக்கிறது. உணர்வினுடைய
வெளிப்பாட்டிற்கு மாறாக அவர்களுடைய அறிவினுடைய விம்பமாக இன்றைக்கு நவீன
கவிதை வந்துகொண்டிருக்கிறது.
16)
வானம்பாடி இயக்கத்தில் நீங்கள் முக்கிய பங்கு வகித்தது எல்லோரும்
அறிந்ததே. இன்றைய சூழலில் இந்தியாவில் கவிதைக்கு என்று தரமான சஞ்சிகைகள்
ஏதாவது வந்துகொண்டு இருக்கிறதா?
வரக்கூடாத கவிதைகளுக்காக பல சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன.
வரவேண்டிய கவிதைகளுக்காக வரவேண்டிய சஞ்சிகை இன்னும் வரவில்லை.
17) கவிதை, உரைநடை இதில்
வசதியாக எதில் செயல்படமுடியும்?
ஆம். இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் கவிதையை அல்லது உரைநடையை நாம்
எப்படி எழுதவேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பது அல்ல. நாம் எழுதக்கூடிய
பொருள் என்ன வடிவத்தில் தான் எழ வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
18)
இன்றைக்கு கவிஞர்களின் நிலை என்னவாக இருக்கிறது?
பலருடைய நிலை கவிஞர்கள் என்ற பெயரில் உலவ
வேண்டும் என்கின்ற ஆசையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. கவிஞனாக வாழ
வேண்டும் என்கின்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
19)
இறுதியாக, இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு
நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?
கவிதை என்பது ஒரு சமூகத்தின் குறுதியோட்டம். அது பூமியினுடைய நதியின்
ஊர்வலம் என்பதை கவிஞர்கள் உணரவேண்டும். தங்களுடைய எழுதுகோளில் இருந்து
பதிக்கப்படுகிற மை என்பது இரத்த ஓட்டமும் நதியோட்டமும் என்பதை உணர்ந்து
சமூகத்தின் மேன்மையை உருவாக்க தம் கவிதை பயன்பட வேண்டுமே அன்றி,
சமூகத்தின் கீழ்மையான உணர்வுகளைத் தூண்டி குளிர்காய்வதற்கு எழுதக்கூடாது
என்பதை அவர்கள் அடிப்படையில் உணரவேண்டும். கவிதை எழுதுவதற்காக கவிதை
எழுதக்கூடாது. வாழ்க்கையை எழுதுவதற்காக கவிதை எழுத வேண்டும். அப்படியான
கவிஞர்களே காலத்தினுடைய பட்டயங்களாக பதியப்படுவார்கள்.
|