கவிஞர், பாடலாசிரியர் பொத்துவில்
அஸ்மின் அவர்களுடன் நேர்காணல்-
க.கோகிலவாணி
01.எழுத்துலகில்
மிளிரவேண்டும் என்ற எண்ணம் உங்களுள் எழுந்தது குறித்துக் கூறுங்கள்.
தென்றலே
கவிபாடும் தென்கிழக்குமண் கவிஞர்களின் கலைஞர்களின் கருவறையாக
இருக்கின்றது. அதிலும் தேனொழுகும் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில்
ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில் மண்ணின் வித்தாக இருக்கும் நான்
கவிஞனாக விளங்குவதில் வியப்பேதுமில்லை.
ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு
கருவிலே திருவாக வேண்டும். தான் வாழும் காலத்தின்கோலத்தை வார்த்தைக்
கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே,
கற்பனைத் தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில்
அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்கவேண்டும்.
எனக்குள் பந்தலிடும் பாட்டுப்பூக்களுக்குள் இருந்து என் பாட்டன்
முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள்.
மேலும்இசிறிய வயதிலிருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை
வளப்படுத்தியிருக்கின்றது.இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.
அத்தோடு பாடசாலைக்காலத்தில் என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன
பாராட்டுதல்கள், பெரிய பெரிய விமர்சனங்கள், தேசிய மட்ட
கவிதைப்போட்டிகளில் கலந்துகொண்டபோது எனக்கு கிடைத்த ஜனாதிபதி விருது,
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்
போன்ற இத்தகைய அங்கீகாரங்கள் என்படைப்பு நிலத்தில் நம்பிக்கை விதைகளை
நட்டுவைத்தன. அதன் பின்பே ஈழத்து இலக்கியத்தை நோக்கி என் பாதம்
எட்டுவைத்தது. அதனால்தான் எழுத்துலகில் என்பெயரும் மொட்டுவைத்தது.
02.
இன்னும் உங்களது கவிதையில் மரபின் தாக்கமே காணப்படுகிறது மரபுக்கவிதைகள்
என்னும் தளத்தில் நின்றுக்கொண்டுதான் கவிதைகளை எழுதவிரும்புகின்றீர்களா?
மரபு என்றால் என்ன மட்டமா? மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின்
எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது. எட்டயபுரத்து கவிஞன்
தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாமல்
புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் தம்முன்னோர்களைக் கற்று
முத்துக்குளித்தவர்கள். அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க
முடிந்தது. இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது.
வார்த்தைகள் நடந்தால் வசனம். நடனமாடினால் கவிதை. நான் நொண்டி விளையாட
விரும்பவில்லை. நடனமாடவே விரும்புகின்றேன். என் கவிதையில் கவிதை
இருக்கவேண்டும், அது வாசகர் நெஞ்சை உருக்கவேண்டும், காலம் ஈழத்து
இலக்கிய வரலாற்றிலும் என்பெயரையும் கிறுக்கவேண்டும் என்றே
ஆசைப்படுகின்றேன்.
அதைவிடுத்து நவீனம் பின் நவீனம் என்ற பெயரில் கவிதையுலகில் கலவரத்தை
ஏற்படுத்தி பின் காலச்சுனாமியில் காணமல் போகின்ற வரட்டு எண்ணம் எனக்கோ
என் படைப்புகளுக்கோ கடுகளவும் இல்லை.
03.
சமூகத்தில் இளம் சந்ததியினரிடம் புதுக் கவிதைக் குறித்த ஆர்வமே அதிகமாய்
இருக்கிறது. இப்படியிருக்கும் போது நீங்கள் மரபிற்குள் நின்று உங்கள்
திறமையை இனங்காட்ட நினைத்தமைக்கான காரணம் என்ன?
இன்று கணிதத்தை விட கவிதையை விளங்குவது கடினமாய் இருக்கின்றது.
புதுக்கவிதை என்ற பெயரில் சிலர் புலம்பல்களை அவிழ்க்கின்றார்கள்.
கேட்டால் உலகத்தரம் வாய்ந்த படைப்பு அப்படித்தான் இருக்குமென்று
பீற்றுகின்றார்கள்.
வாய்க்கு வரும் வார்த்தைகளை ஓன்றன்பின ஒன்றாக ஒடித்துப்போட்டால் அதை
கவிதை என்று இளையதலைமுறையினரில் ஒரு சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
தெருவுக்கு தெரு இருக்கும் இத்தகைய போலிக் கவிஞர்களால் நல்ல கவிஞர்களின்
பெயரும் நாறிக் கிடக்கின்றது.
எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை. அதனால்தான்
புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை
கையிலெடுத்தேன். நான் மரபோடு கைகுலுக்கிக்கொள்வதால்தான் இன்று
இருக்கின்ற இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு
நிற்கமுடிகின்றது.
04. இவ்வாறு இனங்காட்டும்போது
அது தற்போதைய சந்ததியினரிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று
எண்ணுகின்றீர்களா?
எனக்கு கிடைத்த வரவேற்புக்கள்தான் நான் எழுத்துலகில் எழுந்து நடப்பதற்கு
கால்களை கொடுத்தன.என் கவிதைக்கான வரவேற்பிற்கு கடல்கடந்து வந்த எத்தனையோ
கடிதங்களும், மின்னஞ்சல்களும் இற்றைவரையும் கட்டியம் கூறுகின்றன.
காகிதச்சோலைகளில் மலரும் கவிதைப்பூக்களுக்கு காலம் கல்மாரி பொழிவதும்
கல்வெட்டு செய்வதும் அவரவர் கவித்துவ ஆளுமையிலே அடங்கி இருக்கின்றது.
மரபெனும் மகுடத்தை, பழந்தமிழ் கவிதைகளை, பழஞ்சோற்றைப்போல்
பார்ப்பவர்களின் படைப்புக்களுக்கு எதிர்காலம்; நல்ல சவப்பெட்டிகளை
செய்துவைத்து காத்திருக்கின்றது.
05.
புதுக் கவிதைகள் மரபுக் கவிதைகளை
நீங்கள் பார்க்கும் விதம் குறித்துக் கூறுங்கள்
நீங்கள் இதைக்கேட்கும் போது 'பழமை கிடந்து மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி அழகும் பொழிந்து அறமும்
புதைந்து கலையாகி இளமைக்கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்'.
'கவிதை' என்ற தலைப்பில் அமைந்த கவிஞர் நீலாவணன் புனைந்த இந்தக்
கவிதைதான் எனக்கு நினைவில் வருகின்றது. என்னைப் பொறுத்தவரையில் மரபிலே
புதுமையை விதைக்கவேண்டும். புதுமையுள் மரபினை புதைக்கவேண்டும். இரண்டும்
கெட்டு கவிதை போல் அரிதாரம்பூசி நடிக்கின்றவற்றை ஓடஓட உதைக்கவேண்டும்.
எனினும் மரபுக்கவிதையை சிறுபிள்ளைத்தனமாக எழுதுகின்ற மூத்த கவிஞர்களும்
புதுக்கவிதையை காத்திரமாக படைக்கின்ற இளைய கவிஞர்களும் இங்கு
இல்லாமலில்லை. மரபு என்பது கவிதையின் ஆணிவேர் புதுக்கவிதை என்பது
அதில் தோன்றும் பூக்கள்தான். ஆணிவேர் இல்லாமல் பூக்கள் பூக்குமா
சொல்லுங்கள்..?
06.
உங்கள் கவிதைத் தொகுப்புகளுக்கு எழுந்த விமர்சனங்கள் குறித்துக்
கூறுங்கள்? அதில் நேரெதிராய் அமைந்த விமர்சனம் எது?,
நாம் எதையாவது எழுதினால் நாலுபேர் பாராட்ட வேண்டும் இல்லாவிட்டால்
திட்டவாவது வேண்டும். இரண்டும் இல்லையென்றால் எழுதாமலே இருந்துவிடலாம்.
என் கவிதை தொகுப்புக்களுக்கு விமர்சனங்களை விட பாராட்டுதல்கள்தான்
அதிகம் கிடைத்திருக்கின்றன.
ஒவ்வாரு கவிதையிலும் ஏதாவது புதுமை இருக்கவேண்டும் என்றே
நினைத்துக்கொண்டிருப்பேன். அதற்காக என்னை புதிது புதிதாக
தயார்படுத்துவேன். எனினும் நான் பாராட்டுக்களை கேட்டு மயங்கி
நின்றதில்லை. அவைகளை தாலாட்டுகளாகவே கருதி வந்திருக்கின்றேன். அவை என்
திறமைகளை உறங்கவைக்கும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். விமர்சனங்களை
நான் என்றும் ஏற்றுக்கொள்பவன். விஷமங்களை ஏற்காமலே கொல்பவன். என்றும்
உண்மை விமர்சனங்களால் என்னைநான் செதுக்கிக்கொள்வேன். மற்றையவைகளை
ஒதுக்கிக்கொள்வேன்.
07..உங்கள்
வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது சக்தி 'இசை இளவரசர்களில்'
பாடலாசிரியராக தெரிவு செய்யப்பட்டதா?
ஒரு படைப்பாளியாக பத்திரிகைவாயிலாக மட்டும் அறியப்பட்டு வந்த என்னை
பட்டிதொட்டியெங்கும் பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய பெருமை சக்திக்கும்
உண்டு. அதை நான் மறுப்பதற்கில்லை. எனினும் என் வாழ்வில் திருப்புமுனை
என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு அதன் மூலம் நான் எந்த பயனையும்
பெற்றுக்கொள்ளவில்லை.
அந்த 'அடையாளத்தை' வைத்துக்கொண்டு இங்கே எதுவும் செய்ய முடியாது என்பதை
நான் சொல்லித்தான் நம்மவர்கள் தெரிந்து கொள்ளவேண்டுமா என்ன? எனினும்
தென்னிந்திய பாடலாசிரியர்களை சந்திக்கும் வாய்பை ஏற்படுத்தி, அவர்களது
ஆலோசனைகளையும் ஆசிகளையும் பெறுவதற்கு வழிசமைத்தது பாராட்டப் படவேண்டிய
விடயம்தான். ஒன்றை மட்டும் என்னால் குறிப்பிட முடியும் வைரங்களை
எவராலும் உருவாக்க முடியாது. பட்டை தீட்டி காட்சிப்படுத்த மட்டுமே
முடியும். அந்த வேலையைத்தான் சக்தி மேற்கொண்டிருந்தது. என்னை
ஒருபாடலாசிரியராக நாடறியச் செய்த சக்திக்கு எனது மனமார்ந்த
வாழ்த்துக்களை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
08.
நீங்கள் வாசித்தவையும் வாசித்தவற்றில் கவர்ந்த படைப்பாளிகள் குறித்துக்
கூறுங்கள்.
தனக்கு முன்வாழ்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களை வாசிக்க, நேசிக்க
முடியாத ஒருவரால் நல்ல படைப்பாளியாக மிளிர முடியாது.
ஒரு கவிஞன் முதலில் நல்ல வாசகனாக இருக்கவேண்டும். ஒரு கலைஞன் முதலில்
நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்.வாசிப்பு உள்ளவர்களுக்கு வார்த்தை
வாலாயப்பட்டுவிடும். வார்த்தை வாலாயப்பட்டால் வாவென்று அழைக்கு முன்பே
கவிதைகள் வந்து வாலாட்டி நிற்கும். நான் ஒன்றிரண்டு அல்ல எண்ணற்ற
நூல்களை வாசித்திருக்கின்றேன். இன்னும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
அனைத்தையும் இதற்குள் அடக்க முடியாது. எனக்கு நல்ல நண்பர்கள்
புத்தகங்களாக இருப்பதைப்போல் நல்ல புத்தகங்களும் எனக்கு நண்பர்களாய்
இருக்கின்றன. என்னை மிகவும் கவர்ந்த படைப்பாளிகளாக உணர்ச்சி கவிஞர்
காசியானந்தன், மஹாகவி, நீலாவணன், கவிப்பேரரசு வைரமுத்து, மு.மேத்தா,
சுஜாதா, கவிக்கோ அப்துல்ரஹ்மான்; சுபத்திரன், யுவன், எம்.ஏ.நுஹ்மான்,
சில்லையூர் செல்வராசன், அண்ணல், புரட்சிக்கமால் ,அன்பு முகைதீன்,
அல்-அஸமத், பாவலர் பஸீல்காரியப்பர், முத்துமீரான், ஜின்னாஹ்சரிபுதீன்,
சோலைக்கிளி, அனலக்தர், சிரிதர் பிச்சையப்பா, அஸ்ரப் சிஹாப்தீன்,
ஆத்மா, கிண்ணியா அமிர் அலி போன்றோர்களை குறிப்பிட முடியும்.
vtvasmin@gmail.com
|