கலாநிதி கே.எம்.எம். இக்பால்  அவர்களுடன் ஒரு நேர்காணல்:

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

1) திருகோணமலை மாவட்டத்தில் அதிக நூல்களை எழுதியவர் என்று பேசப்படுகின்றீர்கள். நீங்கள் இதுவரை எழுதிய நூல்கள் எவை என்று கூறமுடியுமா?

நான் இதுவரை 35 நூல்களை எழுதியுள்ளேன். அவற்றுள் 12 நூல்கள் இலக்கியம் சார்ந்தவை ஏனையன கல்விசார்ந்தவை.

2)  உங்கள் இலக்கியநூல் எவ்வகையைச் சேர்ந்தன என்று கூறமுடியுமா?

விடிவெள்ளி, தாமரையின் ஆட்டம், காட்டுராஜா, தாய்மை, மரணத்தின் விளிம்பில், பாட்டிசொன்ன நீதிக்கதைகள்,  புதுமனிதன் ஆகிய 7நூல்களும் சிறுவர் இலக்கியங்களாகும். எனது முதலாவது இலக்கிய வெளியீடான இதயஒலி ஒரு கவிதை நூலாகும். 'தியாகி', 'நடுக்கடல்' ஆகிய இரண்டும் சிறுகதைத் தொகுப்புக்களாகும். கடலின் நடுவில்' மீனவர்களின் கடல் அனுபவங்களை விளக்கும் ஒரு நாவலாகும். நான் பிறந்த ஊராகிய மூதூரில் வாழ்ந்து பல கவிதைகளைப் படைத்த உமறுநெய்னாப் புலவரின் கவிச்சிறப்புக்களை விளக்கி நான் எழுதிய இலக்கிய ஆய்வு நூலே 'கவிநயம்' ஆகும்.

3) கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் என பல்துறை சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளீர்கள். இவற்றை எமுதுவதற்கான பன்முக ஆற்றலை நீங்கள் எவ்வாறு வளர்த்துக்கொண்டீர்கள்?

சிறுவயதிலிருந்தே தமிழில் எனக்கு ஆர்வம், ஆற்றல் இருந்தன. 1968.69ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் படிக்கும்போதே அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் தமிழால் கவரப்பட்டேன். நான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர வகுப்புக்களில் தமிழைக் கற்பித்ததும் எனது எழுத்தாற்றல் வளர வாய்ப்பாக இருந்தது.

4) உங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு பத்திரிகைகள் எவ்வளவு தூரம் பங்காற்றியுள்ளன?

எனது கவிதை முதலில் வெளிவந்தது தினகரன் பத்திரிகையிலாகும். 'ஒழிந்திடுவாய்' என்பது அக்கவிதையின் தலைப்பாகும். முன்பு வெளிவந்த சிந்தாமணியில் எனது அதிகமான கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. எனது ஆக்கங்களை அதிகமாக வெளியிட்டது நவமணி பத்திரிகையாகும். தினக்குரல், வீரகேசரி முதலிய பத்திரிகைகளிலும் எனது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. எனது 4 கதைகள் தொடர்கதைகளாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. எனது நேர்காணல்கள் 3 பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

5) நீங்கள் தேசியரீதியில் இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டீர்களா?

2004 இல் கிழக்கு மாகாணசபை மீலாதுந்நதி விழாவை கிண்ணியாவில் கொண்டாடியது. இவ்விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலருக்கு நான் ஆசிரியாகக் கடமையாற்றினேன். மேலும் 2002 இல் பண்டாரநாயக்கா மண்டபத்தில் அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிலே இலங்கை முஸ்லிம்கள் குழந்தை இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன். அங்கு வெளியிடப்பட்ட 'சிறப்புமலர்' 'ஆய்வரங்குக்கோவை' இரண்டிலும் எனது ஆக்கங்கள் இடம் பெற்றன.

6) இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பரிசுகள் பற்றி கூறமுடியுமா?

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சிறுவர் கதை ஆக்கப் போட்டியில் எனது 'விடிவெள்ளி' முதலிடத்தைப் பெற்றது. சர்வோதய அமைப்பு இந்தநூலை 2005 இல் பண்டாரநாயக்கா மண்டபத்தில் வெளியிட்டது. எனது தாமரையின் ஆட்டம் என்ற நூலை இலங்கை இலக்கியப் பேரவை 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுவர் இலக்கியமாக தெரிவுசெய்து விருதும், பரிசும் வழங்கியது. கலாசார மரபுரிமை அமைச்சு தாய்மை, புதுமனிதன் ஆகிய  இருநூல்களையும் பரிசுக்குரிய நூல்களாகத் தெரிவு செய்தது.

ஒபேட் நிறுவனம் நடத்திய அ
ஷ்ரப் நினைவுதினக் கட்டுரைப் போட்டியில் எனக்கு முதற் பரிசுகிடைத்தது. 2005இல் கிண்ணியா சாகித்திய விழா போட்டியில் சிறுகதைக்கான முதற்பரிசு எனக்குக் கிடைத்தது. அதிகநூல்களை எழுதியமைக்காகவும், பரிசுகள் பல பெற்றமைக்காகவும் மார்சல் ஆட்ஸ் சர்வதேசப்பல்கலைக்கழகம் 2007இல் கௌரவ கலாநிதிப்பட்டத்தை எனக்கு வழங்கியது. 2008 சாகித்திய விழாவில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் சாகித்திய விழாக்குழு 'இலக்கியப்பரிதி' என்ற பட்டத்தை வழங்கியது.

கிண்ணியா நகரசபை, மூதூர் எம்.எம்.கே.பவுண்டேசன், திருகோணமலை மாவட்ட நூலக அபிவிருத்திசபை ஆகியன எனக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளன.

7)  உங்களது இலக்கியங்கள் உங்களது இலட்சியத்தை எவ்வளவுதூரம் நிறைவேற்றியுள்ளன?

மக்கள் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்ட இயன்றளவு எனது இலக்கியங்களைப் பயன்படுத்தியுள்ளேன். பெரும்பாலும் எனது இலக்கியங்களில் வாழ்வின் அவலங்களும் இன ஒற்றுமையும் சிறப்பாக இடம்பெற்றிருக்கும். எனது நாவலாகிய 'கடலின் நடுவில்' கதையில் முஸ்லிம் இருவரும் தமிழர் ஒருவரும் ஒன்றாகக் கடலுக்குச் செல்கின்றார்கள். 'தியாகி' சிறுகதைத் தொகுதியில் முஸ்லிம்களுக்கு தமிழர்கள் உதவும் சந்தர்ப்பங்கள் இருகதைகளில் உள்ளன. நடுக்கடலில் சிறுகதைகள் சுனாமியால் நிகழ்ந்த அவலங்களை விபரிக்கின்றன. எனது இக் கதைகள் மக்களுக்கு சுனாமியின் கொடுமைகளை என்றும் கூறிக்கொண்டிருக்கும்.

8)  தற்போது எவ்வாறான இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

தற்போது 'மகே புதா' என்ற தலைப்பில் ஒரு சிறுவர் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். வன்னியிலிருந்து மக்கள்வெளியேறும்போது மாணவன் ஒருவன் தன் தாயிடமிருந்து பிரிந்து விடுகிறான். அவன் தன் தாயை தேடும்போது ஏற்படும் அனுபவங்களை இந்நாவல் விளக்குகிறது. இது இன உறவை வளர்க்கும் நாவல். அத்துடன் ஒருசிங்கள நாவலை தமிழில்மொழி பெயர்க்கும் முயற்சியிலும் நான் இறங்கியுள்ளேன். சிங்களமக்களின் கலாசாரம் பழக்கவழக்கங்களைப்பற்றி தமிழ்மக்கள் அறியும்போதுதான் நிலையான சமாதானம் இலங்கையில் ஏற்படும்.

9)  உங்கள் தொழில் உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் கூறமுடியுமா?

நான் மூதூரில் கச்சுமுகம்மது - கமீதும்மா தம்பதிகளுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தேன். எனது தந்தை மூதூர் மத்தியகல்லூரியின் அதிபராகவும், வட்டாரக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றியவர் சிறந்த கவிஞர். எனது சகோதர சகோதரிகள் வைத்தியர்களாகவும் கணக்காளராகவும் ஆசிரியர்களாகவம் பணியாற்றுகின்றனர். நான் தற்போது கிண்ணியா கல்விவலயத்தில் ஆசிரியஆலோசகராகப் பணியாற்றுகின்றேன். நான் 1982 இல் ஜாஹிறா என்பவரை திருமணம் செய்தேன். தற்போது எனக்கு நிசாத், ஜீனத்பானு, அகீலாபானு ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

10)  இறுதியாக தங்களிடத்தில் ஒரு கேள்வி. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள்.
கூறும் செய்தி என்ன?


இன்று படைப்பாளிகள் குறைவடைந்தமைக்கு 'வாசித்தல்' குறைந்தமையே காரணமாகும். எனவே ஒருவர் சிறந்த படைப்பாளியாக மாறுவதற்கு இலக்கியம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிக்கவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்து மக்களின் சிந்தனையைத்தூண்டும் வலிமை பெற்றதாக அமையவேண்டும்- என்பதே இளம் எழுத்தாளர்களுக்கு நான் கூறும் செய்தியாகும்.



sfmali@kinniyans.net

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.