எழுத்தாளர் முல்லைஅமுதன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

அகில்

(எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர்.  வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கான கண்காட்சி ஒன்றினை நடத்திவருவதோடு, காற்றுவெளி என்ற சஞ்சிகையையும் வெளியீட்டு வருகிறார். நித்ய கல்யாணி, புதிய அடிமைகள், விடியத்துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா உட்பட பல நாவல்கள் எழுதியுள்ளார்.)

1) புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றி?

நாட்டுச் சூழல் காரணமாக நாட்டிலிருந்து புலம்பெயர வேண்டிய நிலை  ஏற்பட்டது. அதனால் என்னை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. இந்த நிலையில் என்னை நான் வேர் அறுத்து எறியப்பட்டவனாகவே கருதுகிறேன். சூழலுடன் ஒத்துப்போக முடியாத என்னிடமிருந்து வேரடி மண் தொட்டு எழுதும் எழுத்தாளனாகவே வலம் வருகிறேன். இது வரை 13 நூல்கள் வரை எழுதினாலும் மண்ணின் வலி பற்றி சரியாக எழுதாத வரை இலக்கை இன்னும் தொடாதவனாகத் தான் எழுதுகிறேன்.
 
2)நீங்கள் எப்பொழுது எழுத ஆரம்பித்தீர்கள்?
 
70இற்குப் பிறகு நம்மூர் வாசிகசாலை ஆண்டுவிழாவிற்கு கவிதைகள்-நாடகங்கள் எழுதியதின் தொடர்ச்சியாக சிரித்திரன் ஆசிரியரின் ஆசிர்வாதத்துடன் நித்தியகல்யாணி (1981) கவிதை நூல் வெளி வந்தது. அன்று முதல் என் எழுத்து முயற்சி தொடர்கிறது.
 
3)உங்களை வாசகர்களுக்கு தெரியப்படுத்திய படைப்பு எது?
 
'வாழு வாழவிடு'  என்று என்னுடைய நாடகம் ஒன்று முதல் முதல் மேடையேறியது. சந்தியில் நில்லாதே, சந்தி சிரிக்கிறது, நல்லமுடிவு, மலராத வாழ்வு போன்ற நாடகங்கள் பலரைச் சென்றடைந்தாலும் கவிதைகள் மூலமே பலரிடம் செல்ல வழி ஏற்பட்டதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
 
 4)புலம்பெயர் நாட்டில் இருந்துகொண்டு 'காற்றுவெளி' என்ற சஞ்சிகையை நடத்தி வருகிறீர்கள். இந்த சஞ்சிகைக்கான ஆதரவும் வரவேற்பும் எப்படி இருக்கிறது?
 
நினைத்த போது வரும் இதழாக வந்து  கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், படிப்பாளர்கள் மாத்திரம் வாசிக்கும் படியாக வெளி வரும் 'காற்றுவெளி' இதழ் சரியான தளத்தில் பயணிப்பதாக வாசகர் கடிதம் மூலம் தெரிய வருகிறது. இப்போது 14ஆவது இதழ் வெளிவந்துள்ளது.
 
 5)உங்களுடைய எழுத்து முயற்சிக்கு குடும்பத்தாரின் ஆதரவு எப்படியிருக்கிறது?

என் தந்தை தீவிர வாசகன். அந்நாட்களில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகளையும் அவர் வாங்கி வாசித்ததின் விளைவு வீட்டில் எல்லோரும் வாசிக்கப் பழகினார்கள். நான் எழுதப் பழகினேன். நாடகங்கள் பலரிடம் சென்றடைந்த அதே வேளையில் சிலர் அங்கீகரிக்க மறுத்தார்கள். அச்சுறுத்தினார்கள். அதனால் புனைபெயரில் உருமறைப்புச் செய்யப் போய் இன்று முல்லையமுதன் என்ற அந்தப்பெயர் தான் பலருக்கும் தெரிந்த பெயருமாயிற்று. இன்று வரை குடும்பத்தின் ஒத்துழைப்பு தொடர்வதால் தான் என்னாலும் எழுத்தாளனாக, நூல் சேகரிப்பாளனாக, சஞ்சிகையாளனாக வலம் வர முடிகிறது.
 
 6)பல வருடங்களாக புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறீர்கள். அவ்வாறு ஒரு புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
 
எமது ஈழத்து இலக்கியம் ஒரு வழிப் பாதையாகவே இருந்து வந்தது. போராட்டம், இனப்படுகொலை, இடப்பெயர்வு என்பவற்றால் புலம் பெயர்வு நம் தமிழர்க்கு ஏற்பட்டது. குளிரில் இரவு பகல் பாராது உழைத்தார்கள். உறவுகளுக்கு கை கொடுத்த அதே சமாந்திரமாக தம் வலிகளை, வடுக்களை எழுதினார்கள். சஞ்சிகைகள், பத்திரிகைகள், நூல்கள் வெளி வந்து பிரபல்யம் பெறத் தொடங்கின. இதை தமிழகப் பதிப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சிலர் அதை வியாபாரமாக்கியதுடன், ஈழத்து இலக்கியம் பற்றி கொச்சையாக்கவும் பார்த்தார்கள். (அவர்களுக்குள் உயர முனைகின்ற ஈழத்து இலக்கியம் பற்றியதான பயம்) நம்மவர்க்கும் நமது இலக்கியம் பற்றிய தேடலுக்கான ஒரு பரப்பை தராத உலகம் பற்றியும் சமூகப்பணியாகவும் எமது தேசியம் சார்ந்து சிந்திக்கவும் வேண்டிய நினைப்புமே என்னை ஈழத்து நூல்களை சேகரிக்கவும், அதனை ஆவணப்படுத்தவும், வருடாவருடம் பாரிய மண்டபத்தில் பலரின் பார்வைக்கு காட்சியாக வைத்து இன்று உலகம் பூராகவும் வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் நூல்களை சேகரிக்க முடிந்திருக்கிறது. ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், 'இரவல் புடவையில் கொய்யாரம் கட்டுகின்ற' நம்மவர்களின் செயல்பாடுகள் தான்.
 
7)நீங்கள் ஈழத்துப் படைப்புக்களை காட்சிப்படுத்துபவர் என்றவகையில் ஈழத்துப் படைப்புகளுக்கான தேடல் புலம்பெயர்ந்த வாசகர்கள் மத்தியில் எப்படியிருக்கிறது?
 
புலம் பெயந்த தமிழரிடையே எழுத்தாளர்கள், வாசகர்கள்  அதிகம். நம்மிடையே வந்து குவிகின்ற நம்மவர் சார்ந்து அல்லது தமிழகம் சார்ந்து  குவிகின்ற சஞ்சிகைகள், பத்திரிகைள், நூல்கள், கூடவே கணணி மயப்படுத்தப்பட்டுள்ள ஒலி, ஒளி ஊடகங்களின் பரம்பலும் எழுதுபவர்களின், படிப்பவர்களின் வருகை அதிகம் என்பதைக் காட்டுகிறது. நமக்கென வாய்த்தது போல ஏகலைவர்கள் புதியவர்களுக்கு வாய்க்கவில்லை. புற்றீசல் போல புறப்பட்டுவிட்ட பதிப்பாளர்களின் (மலிவுவிலை பொருட்கள்போல) ஊடுருவல் காரணமாக பல நூல்கள் வந்தாலும் அவற்றின் தரம் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. காலம் அவர்களுக்கு உணர்த்தட்டும்.
 
 8)பல நாவல்கள் படைத்திருக்கிறீர்கள். புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் நாவல்கள் பற்றி குறிப்பிடுங்களேன்?
 
சோபாஷக்தி, விமல்குழந்தைவேல், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அ.பாலமனோகரன், தியாகலிங்கம், அகில், ராஜலிங்கம், மா.கீ.கிறிஸ்டியன், ஜீவகுமாரன், குரு அரவிந்தன், முருகபூபதி என தொடர்கிறது. எனினும் பலரையும் திரும்பி பார்க்க வைத்த எழுத்தை தந்தவர்களில் சோபாஷக்தி  முன்னிலை வகிக்கிறார். கவிதைகளில் காட்டிய தீவிரம் இதர இலக்கியங்களில் காட்டப்பட வில்லை. முள்ளிவாய்க்கால் முடிச்சுகள், வலிகள் பற்றிய இலக்கியங்களை இன்று உலகம் எதிர்பார்த்து நிற்கிறது.
 
 8)புலம்பெயர் எழுத்துக்களில் உங்களைக் கவர்ந்தவை?
 
விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல், சோபாஷக்தியின் கெரில்லா நாவல், ஏ.ரி.நித்யகீர்த்தியின் தொப்புள்கொடி நாவல், மா.கீ.கிரிஷ்டியனின் புயலுக்குப் பின் நாவலும், தேவகாந்தனுடைய நாவல் என்பனவும்  புஷ்பராஜன், பாலகணேசன், சேரன், இளைய அப்துல்லா, திருமாவளவன், டி.சே.தமிழன், செழியன் கவிதைகளும், வண்ணை தெய்வம், அகில், கல்லாறுசதீஷ், இந்து மகேஷ், சந்திரவதனா, சந்திரா, ஷாந்தி ரமேஷ், வவுனியன், இரவி அருனாசலம் போன்றவர்களின் சிறுகதைகளும்,  என்பனவும் என்னை ஆகர்சித்தவைகள். சக எழுத்தாளர்களை நேசிப்பதன் மூலம் ஈழத்து இலக்கியம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும்.
 
9)இங்கிலாந்து நாட்டில் பல வருடங்களாக வசித்து வருகிறீர்கள். அங்கு ஆக்க இலக்கியங்களுக்கான முயற்சி எப்படி இருக்கிறது?
 
நான் வாழும் இங்கிலாந்தில் இராஜேஷ்வரி பாலசுப்பிரமணியம், விமல்குழந்தைவேல், நிலா, நவாஜோதி, இராஜமனோகரன், எம்.ரி.செல்வராஜா, மு.புஷ்பராஜன், த.சு.மணியம், இளைய அப்துல்லா, பாலரவி, சிறிஸ்கந்தராஜா, இரவி அருணாசலம் போன்ற பலர் ஆக்க இலக்கியத்தில் ஓரளவிற்கு பங்களிக்கிறார்கள். இன்னும் வலிகள் நிறைந்த, வடுக்கள் நிறைந்த வாழ்க்கைகளை, அவலங்களை எழுதுகிற  போதுதான் நம் இலக்கியம் சரியான தடத்தில் செல்லும் என்பதை உணரலாம். அரசபயங்கரவாத செயல்படுகளின் விளைவாக நடந்தேறிய மனிதப்படு கொலைகள் பற்றியும் எழுதுகிற எழுத்தாளர்களையும் எதிர்பார்க்கிறது. மாறாக,செம்மொழி மாநாட்டுச் சந்தோசத்தில் கலந்து கொள்கிற படைப்பாளர்களையும் இனம் காணுதல் நம்மவர்க்குத் தரப்பட்டுள்ள பணியுமாகும்.
 
ஒரு வேண்டுதலாக - முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி, அங்கு மரணித்த மானுடம்  பற்றியும் எழுதுகின்ற பொறுப்பு புலம்பெயர் எழுத்தாளர்களுக்குத் தரப்பட்டுள்ளதை மறந்து விடாதீர்கள்.

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.