எழுத்தாளர்
ஜெயமோகன்
அவர்களுடன்
ஒரு
நேர்காணல்
தினமணி நிருபர்
மகாபாரதம் கொடுத்த வெளிச்சம்
எழுத்தின்
வியப்பு ஜெயமோகன். சிறுகதை, நாவல், கட்டுரை, பயணக் கட்டுரை என எழுத்தில்
உள்ள அத்தனை வடிவங்களிலும் இடைவெளியற்று தீவிரமாக இயங்கி வருபவர். 'வெள்ளை
யானை' நாவலை அவர் இப்போதுதான் எழுதி முடித்ததுபோல இருந்தது.
அதற்குள் பெரும் வியப்பு கொள்ளுமளவு மகாபாரதத்தை 'வெண்முரசு' என்ற
தலைப்பில் எழுதத் தொடங்கி, அபார வேகத்தில்
22
அத்தியாயங்கள்
வந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து எழுதி வெண்முரசை முடிக்கப்
போவதாக அறிவித்துள்ளார். அவரிடம் பேசினோம்:
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களைத் தாண்டி வேறு வடிவங்கள் வர
வாய்ப்பு உண்டா? நாவலின் எதிர்காலம்?
அச்சு ஊடகங்கள் வழியாக புது வடிவம் வருவதற்கு பெரிய வாய்ப்பு இல்லை.
இணையத்தின் வழியே எல்லோரும் படிக்கத் தொடங்கும்போது, 'ஹைபர் லிங்க்
டெக்ஸ்ட்' என்று சொல்லக்கூடிய வகையிலான பனுவல்கள் வரலாம். ஒரு கதை.
அந்தக் கதைக்குள் சினிமா விஷுவல், இசை என எல்லாம் கலந்த ஒரு பனுவல்.
கற்பனைகள், நாவல்கள், காவியங்கள் என்றைக்கும் இருக்கும். ஆனால் தற்போது
உள்ளதுபோல செறிவாகப் படிக்கக்கூடிய நிலை இருக்காது. எதிர்காலத்தில்
சிலப்பதிகாரம் வேறு வடிவில் இருக்கும். அதாவது ஆடியோ, விடியோ கலந்த
ஒன்றாக இருக்கலாம்.
எந்த வடிவத்தை கலையின் உச்சம் என்று கருதுகிறீர்கள்?
நாவல். அதில் எல்லாமே இருக்கிறது. சிறுகதை, உணர்ச்சிகரமான சிந்தனை என
அனைத்தையும் நாவலில் கொண்டு வர முடியும். போன தலைமுறையின் உச்சம்
என்றால் அது காவியம்தான். இந்த தலைமுறையின் உச்சம் நாவல்.
ஏனெனில் போன தலைமுறையில் கவிதை வடிவில் காவியம் படைத்த கம்பன்தான்
உச்சம் என்றால், இந்த தலைமுறையில் உரைநடையில் ஒரு நாவலாசிரியர்தானே
உச்சமாக இருக்க முடியும்?
ஓர் இலக்கியப் படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி எது? வடிவமா?
கருத்தாக்கமா? வடிவம் என்று எடுத்துப் பார்த்தால், ஜே.ஜே.சில
குறிப்புகள் வந்தபோது, அந்த வடிவம் புதிதாகவும், பரபரப்பாகவும்
பேசப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த வடிவம் வாசகனிடம் எந்தவித
அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அதுவும் அந்த நாவல் வந்து 25
வருடம்கூட ஆகவில்லை. தமிழில் பெரிய வடிவச் சோதனைகள் என்று சொல்லப்பட்ட
புத்தகங்கள் எல்லாமே 15 வருடத்துக்குள் ரொம்ப பழைய புத்தகங்களாகிவிட்டன.
எப்படியிருந்தாலும் வடிவங்கள் பழைமையாகிவிடும். அதுபோலத்தான்
கருத்தியல்ரீதியானவையும். மார்க்ஸிய நோக்கில் எழுதப்பட்ட எந்தப்
புத்தகத்துக்கும் இப்போது பெரிய மதிப்பு இல்லை. மேலும் அந்தந்த கால
கருத்தியல்ரீதியாக எழுதும் புத்தகங்களும் நிற்காது. பிறகு எதுதான்
நிரந்தரமாக நிற்கும் என்று பார்த்தால், வாழ்க்கையினுடைய
யதார்த்தத்தையும் உண்மையையும் மட்டும் பதிவு செய்யும் படைப்புகளே
நிலைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சமகாலத்தில் சர்ச்சைக்குள்ளாகும் ஓர் இலக்கியப் படைப்பின் ஆயுள்
சமகாலத்துடனே முடிந்துவிடுகிறதா?
அப்படி இல்லை. எந்த வகையில் சர்ச்சைக்குள்ளாகிறது என்பதைப் பொருத்துதான்
அதன் ஆயுள். சமகால அரசியலையோ, அற மதிப்பீடுகளையோ பற்றி, ஓர் அதிர்ச்சி
கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யும் படைப்பு நீடிக்காது. அது
அதிர்ச்சியை மட்டுமே கொடுக்கும் படைப்பு. உதாரணம் விதவை மறுமணத்தைப்
பற்றி மட்டுமே எழுதப்பட்ட நாவல்கள் 1800-களில் பெரிய அதிர்ச்சி
கொடுத்தன. ஆனால் இன்றைக்கு அது பெரிய விஷயம் இல்லை. அதேசமயம் அந்தப்
படைப்புகள் ஒரு பெண்ணுடைய ஆளுமை என்ன என்று கேள்வி எழுப்பிச்
சென்றிருந்தால், இன்றைக்கு நிலைத்திருக்கும். எழுபதுகளில் கற்பைப் பற்றி
எழுதப்பட்ட பல படைப்புகள் வந்தன. அதில் ஒன்றுதான் ஜெயகாந்தனின் அக்னி
பிரவேசம். ஆனால் இன்றைக்கும் அக்னி பிரவேசத்தை, புதிய அர்த்தத்தில்,
வேறு பரிமாணத்தில் படிக்கிறோம். அப்போது இருந்த அதிர்ச்சி, பரபரப்பு
இப்போது இல்லாவிட்டாலும், ஓர் அபலை பெண்ணுடைய உண்மையான வாழ்க்கை அதில்
இருக்கிறது. அந்த உண்மையான அம்சம் இருக்கும்பட்சத்தில், அந்தப் படைப்பு
நிலைத்து நிற்கும்.
படைப்பில் சொல்லப்பட்ட கருத்துக்கு மாற்றான கருத்து, ஓர்
எழுத்தாளனுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டால், அதை எழுத்தாளன் மறு ஆக்கம்
செய்யலாமா?
முதல் படைப்பை விட்டு, இன்னொரு படைப்பு எழுத வேண்டியதுதான்.
ஒரு சிறந்த வாக்கிய அமைப்புக்காக காத்திருப்பது உண்டா?
இல்லை. அப்படிக் காத்திருந்து எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
அப்படி எழுத முடியும் என்றும் கருத முடியவில்லை.
வெண்முரசு எழுதுவதற்கு முன்பான உங்களின் தேடல்கள், ஆயத்தங்கள் என்ன?
மகாபாரத்தை 10 வருடம் எழுதப்போவதாகக் கூறியுள்ளேன். ஆனால் அதற்காக 25
வருடங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். 1985-இல்
பி.கெ.பாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். அவர் மலையாளத்தில் 'இனி ஞான்
உறங்ஙட்டே' நாவல் எழுதியிருந்தார். தமிழில் ஆ.மாதவன்
மொழிபெயர்த்திருந்தார். அந்தச் சமயத்தில் அவரை நான் சந்தித்தேன்.
அப்போதுதான் மகாபாரத்தை எழுத வேண்டும் என்ற யோசனை வந்தது. ஆனால்
எழுதவில்லை. கனவு மட்டுமே இருந்தது. என்ன படிக்க வேண்டும் என்று அவரிடம்
கேட்டேன். வித்துவான் பிரகாசத்தின் மலையாளத்தில் எழுதப்பட்ட முழு
மகாபாரதத்தைப் படிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒவ்வொரு நாளுமாக ஒன்றரை வருடத்தில் அதை முழுதாகப் படித்து முடித்தேன்.
அதிலிருந்து 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
அந்த ஆராய்ச்சி இப்போது எழுத்தாக மாறிக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.
வேறவேற சாஸ்திரங்கள், வேறவேற விஷயங்கள் என எல்லாம் எழுதியுள்ளேன்.
விஷ்ணுபுரம் அப்படித்தான் எழுதியுள்ளேன். மகாபாரதம் பற்றி 10-க்கும்
மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனவே இத்தனை வருடங்களாக
மகாபாரத்துக்குள்ளேதான் இருந்து வருகிறேன். வெளியே சென்றதே இல்லை.
காலம் மாறி உள்ள நிலையில் நில விவரணைகளை எப்படிப் படைக்கிறீர்கள்?
காலப்போக்கில் சில நிலங்கள் நகரங்களாக மாறிவிடும். ஆனால், மலைகள்,
ஆறுகள் மாறாது. இந்த விஷயங்களை வைத்து மற்றவற்றை கற்பனை செய்துகொள்ள
முடியும். மேலும் நான் எல்லா இடங்களுக்கும் பயணித்துள்ளேன். தொடர்ந்து
பயணமும் செய்துகொண்டிருக்கிறேன். எல்லா மலைகளையும், ஆறுகளையும்
பார்த்துள்ளேன். அந்தப் பயணத்தையொட்டியே எழுதுகிறேன். எது மாறாமல்
இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டு, மற்றவற்றை கற்பனை செய்துகொண்டு
எழுதுகிறேன்.
வெண்முரசு எழுதும் காலத்திலிருந்து ரப்பர் எழுதும் காலத்தைத் திரும்பிப்
பார்க்கையில் தோன்றுவது?
ரொம்ப முன்னாடி வந்துவிட்டேன் என்று தோன்றுகிறது. அப்போது எழுதும்போது
நிறைய தப்பு, சரிகளைப் பற்றிய கவனம் இருந்தது. ரப்பர் நாவலில் அந்தக்
குரல் இருக்கும். இந்தக் கதாபாத்திரம் தப்பு, இது சரி என்று பார்த்து,
அதற்கு விளக்கம் எல்லாம் கொடுக்கும் நிலை இருந்தது. இந்த வயதில்
எழுதும்போது கதாபாத்திரங்களில் தப்பு, சரிகளைப் பார்ப்பது இல்லை.
உண்மையில் தப்பு, சரி என்பது இல்லை. இதுதான் மகாபாரதம் கொடுத்த
வெளிச்சம் என்று நினைக்கிறேன். மகாபாரத்தில் யார் தப்பு செய்தார்கள்
என்று கேட்டால், யாரும் செய்யவில்லை; அல்லது எல்லோரும் செய்தார்கள்
என்றுதான் கூற வேண்டும்.
நன்றி: தினமணி
|