கவிஞர் வி.மைக்கல்
கொலினுடனான நேர்காணல் .........
ஊடகவியலாளர் பாக்கியராஜா மோகனதாஸ்
காதலும்
அரசியலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அழகியலும் சமூக சிந்தனையுமில்லாமல்
கவிதை இல்லை, எனது கவிதைகள் காதலும் சொல்லும் அரசியலும் பேசும் என
கூறுகிறார்.
கேள்வி :-
கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், இதழியல், பத்தி எழுத்து என்று பல்
துறைகள் சார்ந்து செயற்படும் நீங்கள் எவ்வாறான சூழலில், இலக்கியத்
துறைக்குள் ஐக்கியமானீர்கள்?
பதில் :-
நான் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும்
போதே எழுத ஆரம்பித்து விட்டேன். தீவிரமான தொடர்ச்சியான வாசிப்பு,
சிறுவயதிலேயே மு.வ.வின் கரித்துண்டு, பெற்றமனம் ,நா.பா வின் குறிஞ்சி
மலர், பொன் விலங்கு, தி.ஜானகிராமனின் மோகமுள், அகிலனின் சித்திரப்பாவை
,ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம், போராட்டங்கள், கல்கியின்
சிவகாமியின் சபதம், அலை ஓசை ,சாண்டில்யனின் யவனராணி, கடல் புறா
என எனது வாசிப்பு பன்முகப்பட்டது.
இக்காலப்பகுதியில் எமது தமிழ் ஆசிரியையாகவும்
வகுப்பாசிரியையாகவுமிருந்த திருமதி.கந்தையா ஆசிரியையின் வழிகாட்டலில்
சிறுவர் வைரம் என்ற கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றினை ஆரம்பித்தோம். அதன்
ஆசிரியர் நானே. முதல் இதழ் வெளிவந்தது. தவணைப் பரீட்சை ஆரம்பிக்க
அத்துடன் நின்று போனது.
இதன் தொடர்ச்சியாக நான் தனிப்பட்ட முறையில் தாகம் என்ற பெயரில் ஒரு கலை
இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்தேன். அதன் ஆசிரியர் நானே. இது
அக்காலப்பகுதியில் றோணியோ அச்சு இதழாக வந்தது. இது தொடர்ந்து பத்து
வருடங்கள் எனது பல்கலைக்கழக கல்வியின் இரண்டாம் வருடம் வரை தொடர்ந்தது.
எல்லாவற்றுக்கும் காரணம் எனது தொடர்ச்சியான வாசிப்பே.
கேள்வி :-
மானுடம் சிறக்க உழைப்பது மகுடம் தானதுவாகி தழைப்பதும் மகுடம் எனும்
மகுட வாசகத்தைக் கொண்டுள்ள மகுடம் சஞ்சிகை கடந்த ஆறு ஆண்டு காலமாக
வெளிவருகின்றது. இந்நிலையில் மகுடம் சஞ்சிகை காலக் கிரமத்தில்
வெளிவருவதிலுள்ள முக்கிய பங்கு பற்றி நீங்கள் கூற விழைவது ?
பதில் :-
மகுடம் மட்டக்களப்பிலிருந்து கடந்த 2012ம்
ஆண்டிலிருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியர் நானே. மகுடம் நவீன இலக்கிய
தேடல் நிறைந்த வாசகர்களுக்காக உருவான இதழ். இது காலாண்டு இலக்கிய
இதழாகவே வெளிவருகிறது. ஆனால் மகுடத்தினை காலக்கிரமத்தில் வெளிக்கொணர்வது
சற்று சிரமமானதாகவே இருக்கிறது.
இதற்கு பிரதான காரணம் மகுடம் ஏனைய இதழ்களைப் போல் வெறுமனே கலை இலக்கிய
சஞ்சிகையாக வெளிவருவதல்ல. அதன் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு சிறப்பிதழாக
மலர்கிறது என்பது வாசகர்களுக்குத் தெரியும்.
மகுடம் இதுவரை இரண்டு முறை மலையகச் சிறப்பிதழினையும் , தமிழ்த்தூது
தனிநாயகம் அடிகளார் சிறப்பிதழ், தர்மு சிவராமு (பிரமிள்) சிறப்பிதழ்,
எஸ்.பொ.சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், கனடா சிறப்பிதழ், பேராசிரியர்
சி.மெளனகுரு இரட்டைச் சிறப்பிதழ் என சிறப்பிதழ்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
இம்மாத இறுதியில் மகுடம் மருதூர்க் கொத்தன் சிறப்பிதழ் வெளிவரவுள்ளது
குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இதழையும் முழுமையான சிறப்பிதழாக வெளிக்கொணர
கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இதனால் காலம் தப்புகிறது. இருந்தாலும்
விரைவில் இக் குறையை நிவர்த்தி செய்து விடுவேன்.
கேள்வி :-
சமகால கவிதைகளின் வருகை, போக்கு மற்றும் இருப்பு
தொடர்பாகவும் உங்களது கவிதைப் பயணம் தொடர்பாகவும் கூற விழைவது?
பதில் :-
எனது படைப்புக்களை கவிதைகளாக வெளிக்கொணரவே
விரும்புகிறேன். எனக்குப் பிடித்த இலக்கிய வடிவமும் அதுவே. ஆனால்
அண்மைக்காலமாக சிறுகதைகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றேன். அதிலும்
புதுமையாக செய்ய வேண்டும் என்ற ஆசையில் தொன்மங்களை மறுவாசிப்பு செய்யும்
சிறுகதைகளை முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றேன்.
எனது கவிதைப் பயணம் 1984 இல் இருந்து ஆரம்பிக்கிறது. எனது கவிதைகள்
ஈழத்தின் , மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து வந்த பத்திரிகைகள்
சஞ்சிகைகள் என அனைத்திலும் வெளிவந்துள்ளன. எனது முதல் கவிதைத் தொகுதி
1992இல் எனது இருபத்தி இரண்டாவது வயதில் என் பிரிய ராஜகுமாரிக்கு என்ற
பெயரில் வெளிவந்தது.
என்னைப் பொறுத்தவரை காதலும் அரசியலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
அழகியலும் சமூக சிந்தனையுமில்லாமல் கவிதை இல்லை. எனவே என் கவிதைத்
தொகுப்பின் என் பிரிய என்பது காதலையும் ராஜகுமாரி என்பது பிரபல அரசியல்
தத்துவ ஞானி மாக்கிய வல்லி யின் ( The Prince ) ராஜகுமாரன் என்ற நூலின்
தலைப்பை ஒட்டி ராஜகுமாரிக்கு என பெயரிட்டேன். எனது கவிதைகள்
காதலும் சொல்லும் அரசியலும் பேசும்.
சமகால கவிதைகளின் போக்கு திருப்திகரமானதாக இல்லை. அண்மைக்காலமாக சில
முக நூல் குழுமங்களும் முக நூல் கவிஞர்களும் கவிதைகளை வேறொரு
சேதத்திற்கு நாடு கடத்தி விட்டாலும். என்னைப் போல் ஒரு சில நல்ல
கவிஞர்களும் கவிதைகளும் மிஞ்சி இருக்கின்றன. என் பிரிய ராஜகுமாரிக்கு
என்ற பெயரில் வெளிவந்தது.
என்னைப் பொறுத்தவரை காதலும் அரசியலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
அழகியலும் சமூக சிந்தனையுமில்லாமல் கவிதை இல்லை.
சமகால கவிதைகளின் போக்கு திருப்திகரமானதாக இல்லை. அண்மைக்காலமாக சில
முக நூல் குழுமங்களும் முக நூல் கவிஞர்களும் கவிதைகளை வேறொரு
சேதத்திற்கு நாடு கடத்தி விட்டாலும். என்னைப் போல் ஒரு சில நல்ல
கவிஞர்களும் கவிதைகளும் மிஞ்சி இருக்கின்றன.
கேள்வி :-
கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலாண்டிதழாக
வெளிவரும் மகுடம் சஞ்சிகையின் ஆசிரியரான நீங்கள் ,இவ்வாறான மகுடம்
சஞ்சிகையினை வெளிக்கொணர வேண்டும் என்பதற்கான பின்னணி எவ்வாறு எழுந்தது?
பதில் :-
2012 காலப்பகுதி மட்டக்களப்பில் இருந்து பல
சஞ்சிகைகள் வெளிவந்தாலும் நவீன தமிழ் இலக்கிய தடத்தில் பயணிக்கும்
சஞ்சிகைகள் இருக்கவில்லை. அந்த குறையைப் போக்கவே மகுடத்தினை
ஆரம்பித்தேன். மேலும் ஒரு சஞ்சிகை வெளியீடு என்பது ஒரு குறிப்பிட்ட
பிரதேசத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அதற்கு பரந்த
வாசகர் பலம் தேவை. விரிந்த விநியோக எல்லையை கொண்டிருக்க வேண்டும்.
எனவேதான் மகுடத்தினை மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் ,
பருத்தித்துறை. மலையகம், கொழும்பு,
சாய்ந்தமருது என பல இடங்களில் மகுடத்தினை வெளியீட்டு நிகழ்வின் மூலமும்
அறிமுக நிகழ்வின் மூலமும் பரவலாக்கினேன்.
கனடா சிறப்பிதழ் மூலம் கனடாவிலும் வெளியீட்டு நிகழ்வை நடாத்த முடிந்தது.
புலம் பெயர்ந்த எழுத்தாளர்களை நோக்கியும் மகுடம் செல்கிறது.
மகுடத்திற்கு கனடாவில் முப்பது சந்தாதாரர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் இருந்து வெளிவந்தாலும் மகுடம் முழு தேசத்துக்குமான
இலக்கிய இதழாக நவீன இலக்கியத்தை நேசிப்போரின் இதழாக மாறியுள்ளது.
கேள்வி :-
முழுக்க முழுக்க தொன்மங்களையும் மறைநூல்களையும்
மறுவாசிப்புக்குட்படுத்தும் ஈழத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற
பிரகடனத்துடன் வெளிவந்திருக்கும் உங்களின் பரசுராம பூமி சிறுகதை
தொகுப்பு பற்றி கூற விழைவது ?
பதில் :-
பரசுராம பூமி எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு.
எல்லோரும் நடந்த பாதையில் நடக்காமல் எனக்கென ஒரு தனி பாதையை அமைத்து
அதில் பயணம் போவதையே விரும்புகிறவன் நான். அந்த வகையில் எமது
தொன்மங்களையும் மறைநூல்களையும் மறுவாசிப்புக்குட்படுத்தினேன்.
புராண இதிகாசங்களில் கூறப்படாத அறக்கருத்துக்களையா நாம் எழுதிவிடப்
போகிறோம்? ஆனால் பல தொன்மங்களில் அறக்கருத்துக்கள் என்ற பெயரில்
ஆணாதிக்க கருத்து நிலையும் பெண்அடிமைத்தனமும் சாதி வேறுபாடுகளும்
தெய்வத்தின் பெயரால் வஞ்சகங்களும் நிரம்பிக்கிடக்கின்றன. இவற்றை
கட்டுடைத்து மறுவாசிப்புக்குட்படுத்தினேன்.தொன்மங்களை எமது சமகால
வாழ்வியலுடனும் போராட்ட கால சூழ்நிலைகளுடனும் தொடர்பு படுத்தினேன்.
அதுவே பரசுராம பூமி.
கேள்வி :-
ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கேற்ப
சஞ்சிகைகளை வெளியீடுகின்றார்கள். அவ்வகையில் நீங்கள் ஒரு
சஞ்சிகையாசிரியர் என்ற வகையில் சஞ்சிகைகளின் தேவை மற்றும் பணி என்னவாக
இருக்க வேண்டுமென கருதுகின்றீர்கள்?
பதில் :-
எனது வாழ்வின் அதிகமான காலம் இதழியல் துறையுடன்
கழிந்து விட்டது. தற்போதும் மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டிதழின்
ஆசிரியராக உள்ளேன்.
1984 தொடக்கம் சிறுவர் வைரம், தாகம், என தொடங்கி பல்கலைக்கழகத்தில்
தூதன், தழல்,ஃபீனிக்ஸ், என தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இருந்து
வெளிவந்ததும் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர்
வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியராக தினக்கதிர் நாளிதழின் இணை ஆசிரியராக
கடமையாற்றி இடையில் சில காலம் கனடாவில் இருந்து வெளிவந்த ஆதவன் என்ற
இருவார இதழின் ஆசிரியராக கடமை புரிந்து தற்போது மகுடம் என்ற சிற்றிதழின்
ஆசிரியராக உள்ளேன். எனது இலக்கியப் பணி இதழியலுடன் அதிகம் தொடர்புடையது.
என்னைப் பொறுத்தவரை சிறு சஞ்சிகைகளே தமிழ் இலக்கியத்தினை வளர்ப்பதற்கு
பெரும் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக நவீன தமிழ் இலக்கியத்தின்
தோற்றுவாய் சிற்றிதழ்களே. அந்த வகையில் சிற்றிதழ்கள் தமது பாரிய பணியை
உணர்ந்து செயற்பட வேண்டும். ஒரு சஞ்சிகை வெளிவந்து நின்று போனாலும் அதன்
தேவையும் பணியும் பேசப்பட்ட வேண்டும். அந்த வகையில் மகுடம் தனது பணியை
செவ்வனே செய்து வருகின்றது.
கேள்வி :-
கலையிலக்கியத் துறையில் ,இன்றைய இளைஞர்
யுவதிகளின் பங்களிப்பு எவ்வாறுள்ளதாக கருதுகின்றீர்கள் ?
பதில் :-
கலை இலக்கிய துறையைப் பொறுத்தவரை இன்றைய
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அனைவரும் கவிஞர்களே. இன்று முக நூல் என்ற
சமூக தொடர்பூடகத்தில் இளைஞர்கள் கவிதைகள் எழுதுகின்றார்கள். தாம்
எழுதிய அனைத்தும் கவிதைகள் என நினைக்கின்றார்கள். தங்களுக்குள் கவிதைக்
குழுமங்களை ஆரம்பிக்கிறார்கள். அதில் தம்மைப் போல் பலரை
அங்கத்தினர்களாக இணைக்கிறார்கள். அவர்களுக்கிடையே கவிதைப் போட்டி வைத்து
மாதா மாதம் கவிமணி, கவித்தென்றல் , கவிநதி, என பட்டங்களை
வழங்குகிறார்கள். ஆளுக்காள் பணம் சேர்த்து விழா வைக்கிறார்கள். பொன்னாடை
போர்த்தி நினைவுச் சின்னம், விருதுகள் வழங்குகிறார்கள். இது ஒருவகையினர்.
இன்னுமொருவகையினர் ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறு சிறு குழுவாக
இயங்குகின்றனர். இவர்கள் நிறைய புதிதாக வாசிக்கிறார்கள். நன்றாக
எழுதுகிறார்கள். ஆனால் தமக்கே எல்லாம் தெரியும் என்ற ஒளிவட்டத்துடன்
அலைகிறார்கள். இவ் இரு சாராரையும் இணைத்துக் கொண்டுதான் எம்மைப்
போன்றவர்கள் இயங்கி வேண்டி இருக்கிறது. இதுதான் இன்றைய இலக்கியத்தில்
இளையோரின் பங்களிப்பு
கேள்வி :-
இன்று நீங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை என்ற இரு
மாவட்டங்கள் சார்ந்து கலை இலக்கிய பணி ஆற்றுகிறீர்கள். திருமலையில்
தாகம் பதிப்பகம் மூலமும் மட்டக்களப்பில் மகுடம் பதிப்பகத்தின் மூலமும்
நூல்களை வெளியிடுகிறீர்கள் இது எப்படி சாத்தியமாகிறது?
பதில் :-
திருகோணமலை எனது
பிறந்த மண். மட்டக்களப்பு நான் புகுந்த மண். இரண்டும் எனது சொந்த மண்.
எனவே நான் இரண்டு மாவட்டங்களிலும் இயங்க வேண்டிய அவசியம் உள்ளது.
திருமலையில் எனது பாடசாலை நாட்களில் தாகம் என்ற கலை இலக்கிய இதழை
தொடர்ச்சியாக பத்து வருடங்கள் நடாத்தினேன். தாகம் பதிப்பகம் மூலமாக
இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டுள்ளேன். மட்டக்களப்பில் தற்போது மகுடம்
என்ற காலாண்டு கலை இலக்கிய இதழினை நடாத்தி வருகின்றேன். மகுடம்
பதிப்பகத்தின் மூலம் இதுவரை பதினைந்து நூல்களை வெளியிட்டு உள்ளேன்.
இன்னும் இரு நூல்கள் அச்சில் உள்ளது. இவ் இரு மாவட்டங்களிலும்
தாகத்தினதும் மகுடத்தினதும் தேவை உணரப்பட்டேயுள்ளது என்றார்.
|