மூத்த பெண் ஆளுமை காத்தான்குடி பாத்திமா
அவர்களுடனான நேர்காணல்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கேள்வி:-
உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
பதில்:-
எனது பெயர் பாத்திமா முகம்மத். இலங்கையின் கிழக்கு
மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப்
பிறப்பிடமாகக்
கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள்
வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு
ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.
கேள்வி:-
உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக்
குறிப்பிடுங்கள்?
பதில்:-
நான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில்
எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக
கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை செய்து சென்ற வருடம்
ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு,
காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக
அமைந்தன.
கேள்வி:-
நீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம்
பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி
எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?
பதில்:-
நான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள்
எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம்
முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள்.
அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப்,
எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை
மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும்
போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை
ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி
கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும் பாராட்டப்பட்டேன்.
1972ம்
ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள்
வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும்
உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள்,
கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
கேள்வி:-
உங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற
விரும்புவது? சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை
எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?
பதில்:-
நான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன்
கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர்
துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி
அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில்
விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும்
அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது
ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக
கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன்.
முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக
எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக்
கொள்வேன்.
கேள்வி:-
இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்?
பதில்:-
இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.
01. அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003
02. பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004
03. நா இடற வாய் தவறி (கவிதை) 2009
என்பனவே அவையாகும். இன்ஷா அல்லாஹ் நான்காவது நூல் விரைவில் வெளிவரலாம்.
கேள்வி:-
உங்களது முதலாவது நூல் வெளியீட்டின் போது உங்களது மனநிலை
எவ்வாறிருந்தது?
பதில்:-
எனது சிறுகதைகளை நூலுருவாகக் கொண்டு வர வேண்டும் என்ற
எண்ணம் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. எனினும் எனது கணவர், மகன்,
மற்றும் வாசகர்கள், இலக்கிய அன்பர்கள் இந்த எண்ணத்தை எனக்கு
ஊட்டினார்கள். அதிலும் நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர்
சாந்திமுகைதீன் ஹாஜியார் என் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக
இருந்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர்
அல்ஹாஜ் எம்.இஸற். அஹ்மத் முனவ்வர் என் வளர்ச்சியில் பாரிய
பங்களிப்பைச் செய்த என் அன்புச் சகோதரராவார். இந்த எனது முதலாவது நூல்
வெளியீட்டில் பொருளாதாரத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை.
ஆனால் வெளியீட்டின் வெற்றியைப் பற்றியே சிந்தித்தேன். நான் பிறந்தவூரான
காத்தான்குடி, இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு ஊர்.
இஸ்லாமியப் பெண்ணான என்னை இந்தச் சமூகம் அங்கீகரிக்குமா எனப் பயந்தேன்.
இறை உதவியால் நான் எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கான வெற்றியாக எனது
புத்தக வெளியீடு அமைந்தது. ஊர் முழுமையாக ஒத்துழைத்தது.
அல்ஹமதுலில்லாஹ்.
கேள்வி :-
அத்தனையும் முத்துக்கள்' என்ற உங்களது சிறுகதை நூல்
பற்றி என்ன சொல்வீர்கள்?
பதில்:-
இது எனது முதலாவது நூற் பிரசவம். இதிலமைந்த பெரும்பாலான
கதைகள் தேசிய மற்றும் பிரபல்யமான பத்திரிகைகளில் வெளிவந்தவை. பொதுவாக
இதிலுள்ள அநேகமான சிறுகதைகள் என் இளமைக் காலத்தில் அப்போதிருந்த
மனநிலையில் எழுதப்பட்டவை. காதல் தோல்வி, பொதுவாக பெண்கள் சீதனத்தைக்
காரணம் காட்டி ஏமாற்றப்படுதல், பலதார திருமணங்களில் சமூகத்தில்
செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் என்பன போன்ற நிகழ்வுகள் எனது எண்ணக்
கோப்பில் ஏற்படுத்திய தாக்கங்களினால் பிரசவமானவை. என் முழு
உணர்வுகளையும் ஒன்றாய்த் திரட்டி எழுத்துருக்களைத் தாங்கிய நூல் இது.
இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்
துறைப் பேராசிரியை திருமதி றூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் இந்நூலைப் பற்றிப்
பின்வருமாறு கூறுகிறார். "பாத்திமாவின் சிறுகதைகள் சிறுகதை என்ற
வரம்பிற்குள் சட்டமிட்டு மாட்ட முடியாதவை. மன உணர்வுகளால் ஆன
வெளிப்பாடுகளே அவைகள்" என்று. அதேவேளை எனது இன்னுமொரு சிறுகதைத்
தொகுப்பிற்கு வனப்புரை வழங்கிய பிரபல கல்விமானும் சிரேஷ்ட நிர்வாக
அதிகாரியும் நாடறிந்த எழுத்தாளருமான மர்கூம் ஏ.எல்.எம். பளீல் அவர்கள்
தனது வனப்புரையில் "பாத்திமாவின் சிறுகதைகள் ஒரு கைதேர்ந்த திரைப்பட
இயக்குனர் போல கதையின் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் கதையை
விபரித்து முழுக்கதையும் விளங்கும் படியாகும் திரைப்படம் போல
அமைந்துள்ளமை சிறுகதைத் துறையில் அவருக்குள்ள ஆற்றலை
வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு சிறுகதைகளையும் விரிவாக்கினால்
ஒவ்வொரு நாவலாகப் பரிணமிக்கும் சிறந்த கருப் பொருளைக் கொண்டிருக்கிறது'
எனக் கூறியுள்ளார். எனவே "அத்தனையும் முத்துக்கள்" என்ற எனது முதலாவது
நூல் என் உணர்வுகளைப் பொறுத்த வரையில் முத்துக்களே..
கேள்வி:-
நீங்கள் இந்தத் துறையில் பெற்றுக்கொண்ட மறக்க முடியாத
அனுபவமாக எதை முன் வைப்பீர்கள்?
பதில்:-
பல அனுபவங்கள் உள்ளன. அவை இனிப்பாகவும்
அமைந்திருக்கின்றன. கசப்பாகவும் அமைந்தன. ஒரு பெண் எழுத்துத் துறையில்
அல்லது இலக்கியத் துறையில் நிமிர்ந்து நிற்பது என்றால் இலேசுப்பட்ட
விடயமல்ல. சவால்கள் பல ரூபமாகவும் வரலாம். அவற்றைச் சமாளிக்கின்ற
திறமை, விடா முயற்சி, தைரியம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அதுவும்
ஒரு பெண்ணிடம் என்பது இறையருள் என்றே நம்புகின்றேன். இவை என்னிடம்
மிகுதமாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எனக்கு மறக்க முடியாத
அனுபவங்களில் ஒன்றை நான் வாசகர்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும்.
எனது முதலாவது புத்தக வெளியீட்டு விழாவுக்கு எமதூரிலுள்ள பிரபலமான
இரண்டு இலக்கியவாதிகளிடம் எனது விழாவில் அதிதிகளாகக் கலந்து
கொள்ளுமாறும் அவர்களது பெயர்களை அழைப்பிதழில் இடுவதற்கு
சம்மதிக்குமாறும் கேட்டு நின்றேன். அதற்கு அவர்கள் என்னிடம் நேரடியாக
எந்தப் பதிலும் சொல்லாது பிறிதொரு நபரிடம், ''பெண்கள் புத்தகம்
வெளியீடு செய்வது வெற்றி பெறாது'' என்ற பொருட்படப் பேசி தங்களது
விருப்பமின்மையை மறைமுகமாகத் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க எனது
புத்தக வெளியீட்டை அரசியல் கலப்பற்றதாக நடாத்த வேண்டுமென்ற என்
விருப்பத்திற்கிணங்க எனது அழைப்பிதழைத் தயாரித்ததோடு இலங்கை வானொலி
முஸ்லிம் சேவையின் அந்நாள் பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் ஹாஜியாரையே நான்
பிரதம அதிதியாகவும் அழைத்தேன். என் விழாவுக்கு வர மறுப்புத் தெரிவித்த
எனதூர் இரண்டு இலக்கியவாதிகளும் வானொலியில் தங்களுக்கான களந்தேடி
அலைபவர்கள், ஏங்கிக் கிடப்பவர்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே நன்றாகத்
தெரியும். எனவே வானொலியோடு தொடர்புடைய ஒருவர் எனது விழாவுக்கு
வருகிறார் என்பதனால் அந்த இலக்கியவாதிகள் இருவரும் என் வீடு தேடிவந்து
என்னென்னவோ சொல்லி நின்றபோது நான் அழைப்பிதழும் அச்சிட்டாகிவிட்டது
எனக்கூறியபோது அவர்கள் பரவாயில்லை எங்களுக்கு பேச ஒரு சந்தர்ப்பம்
தந்தால் போதுமென்றார்கள். அவர்களது பரிதாபம் கண்டு அச்சந்தர்ப்பத்தை
அவர்களுக்கே வழங்கவேண்டியதாயிற்று. இதுவே எனது எழுத்துலக வாழ்வில்
மறக்க முடியாத சம்பவம். வெட்டுக்குத்தும், குழி பறிப்பும்,
காட்டிக்கொடுப்பும் நிறைந்த இலக்கிய உலகில் நானொரு பீனிக்ஸ்
பறவையானேன்.
கேள்வி:-
முற்போக்குச் சிந்தனை கொண்டு நீங்கள் எழுதிய கதைகளில்
உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது? ஏன்?
பதில்:-
என் கதைகளில் அநேகமாக எனக்கு எல்லாக் கதைகளும்
பிடிக்கும். அதிலும் பெண்களுக்கு சமூகத்தில் இஸ்லாத்தைப் பிழையாக
விளங்கிக்கொண்டு இஸ்லாத்தின் திருமணச் சட்டங்களைப் பிழையாக விளங்கி,
அதனைத் துஷ்பிரயோகம் செய்கின்ற வகையில் ஒரு மனைவி குழந்தைகள்
வாழவைக்கப்பட வேண்டியவர்களாக இருக்க அவர்களைக் கைவிட்டு மறுமணம் என்ற
பெயரில் துரோகம் செய்கின்ற ஆண்கள், இதற்கு உடந்தையாக
இருந்து
செயற்படும் பள்ளிவாயல்களின் பரிபாலன சபைகள் என்பவற்றை என் கருத்துக்கள்
மூலம் விளாசியிருக்கிறேன். அத்தோடு இளவயதில் சந்தர்ப்ப வசத்தால் காதல்
என்ற மாய வலையில் மாட்டிப் பின் முதுகெலும்பற்ற ஆண்களால் சீதனத்துக்காக
ஏமாற்றும் ஆண்களையும் சாடியிருக்கிறேன். மட்டுமல்ல எனது சிறுகதைகளில்
தமிழின் மூவகை நிலையான தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதில் எனது அநேக
கதைகளில் பாதிக்கப்படும் பாத்திரமாக நானே மாறியிருக்கிறேன். அதாவது
கதாபாத்திரமாக தமிழின் தன்மை நிலையாக நான், எனக்கு, என்னை என்றே
கதைகளில் பேசியிருக்கிறேன். எனவே இந்த உணர்வுதான் எனது சிறுகதைகள்.
எனது பிரசவங்கள் எனக்கு மிகவும்; பிடிக்கும்.
கேள்வி:-
உங்களது படைப்புக்கள் அதிகமாகவே பெண்களின்
பிரச்சினைகளைத்தான் பேசியிருக்கின்றதா? என்ன காரணம்?
பதில்:-
வாழ்க்கையின் பல்தரப்பட்ட சுமைகளையும் தூக்குவதற்கும்
கல்லடிபடுவதற்கும், துயரங்களை அனுபவிப்பதற்கும் என்று அகப்படுபவர்கள்
பெண்களே. இது முஸ்லிம் சமுகத்தில் மட்டுமல்ல மற்ற எல்லாச் சமுகத்திலும்
இந்த அவல நிலையுண்டு. எனவே என்னிடம் பல பெண்கள் வருவார்கள். அவர்கள்
தங்களின் பிரச்சினைகளைச் சொல்லி அழுவார்கள். சுற்றுப்புறச் சூழலிலும்
பெண்களின் வாழ்வின் துயரக் கதைகளை மிக அதிகமாகக் கண்டிருக்கிறேன்.
இதுபற்றி நன்கு சிந்தித்திருக்கிறேன். இந்தச் சிந்தனை எனக்கு சிறு
வயதிலிருந்தே என்னோடு தொடர்ந்திருக்கிறது. இஸ்லாமிய திருமணச் சட்டங்களை
துஷ்பிரயோகம் செய்தல், சட்டங்களைத் தங்களுக்கு சார்பாக வளைத்தல்,
பணப்பலம், செல்வாக்கு, ஆணாதிக்கம், சீதனக் கொடுமை, வறுமை போன்ற இத்தகைய
நச்சு விதைகளின் முன்னெடுப்பு அநேகமான பெண்களின் திருமண வாழ்வைக் காவு
கொள்வது என் சிந்தையில் சுழலும்போது பல சிறுகதைக் கருக்கள் உருவாகி
இந்தச் சமுக ஒழுக்கக் கேடுகளை உரக்கக் கூவி ஆவேஷப்படுத்தும். இதனை எனது
இரண்டாவது நூலான பொய்த் தூக்கங்கள் என்பதில் எனது கண்ணியத்துக்குரிய
மர்கூம் பளீல் சேர் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கேள்வி:-
உங்களது சிறுகதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது
வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
பதில்:- எனது படைப்புக்களுக்கு நிறைய வரவேற்புக்கள்
கிடைத்திருக்கிறது. எனது கதைக் கருக்கள் பலராலும்
பாராட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு இப்போதும் என்னால் மிகுந்த
கரிசனையோடு பாதுகாத்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் வாசகர்களின்
பாராட்டுக் கடிங்கள் சாட்சி. அத்தோடு எனது சிறுகதைகளுக்கு மிகவும்
ஆதரவு தந்து ஊக்கப்படுத்திய பெரியார்களில் தினகரன் பிரதம ஆசிரியர்
காலஞ்சென்ற ஆர். சிவகுருநாதன் ஐயா முதன்மையானவர். அத்தோடு புலவர்மணி
ஆ.மு.ஷரிபுத்தீன், மன்னார் எச்.எம்.ஷரீப், எம்.எச்.எம்.ஸம்ஸ்,
எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோரின் பாராட்டுக்கள் எனக்கு உத்வேகம்
தந்தவையாகும். கிடைத்த விருதுகளும், பரிசுகளும், பொன்னாடைகளும் எனது
உற்சாகத்தின் ஊன்று கோல்களாயின.
''கேள்வி :-
நா இடற வாய் தவறி'' என்ற உங்களது கவிதைத் தொகுதி
குறித்து என்ன குறிப்பிடப் போகின்றீர்கள்?
பதில்:-
அது கவிதைத் தொகுப்பு என்று சொல்வதைவிட என் மன
உணர்வுகளின் குவியல்கள் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழை,
உணர்வை, என் உள்ளத்தை, என் விருப்பு வெறுப்புக்களை, என் வேதனைகளை,
வெற்றிகளை அந்தத் தொகுதியில் கொட்டியிருக்கிறேன். அது கவிதைத் தொகுப்பா
அல்லது உணர்வுத் தொகுப்பா என்று வாசிக்கின்ற வாசகர்களையே பெயர்
வைக்குமாறு நான் உரிமை வழங்கியிருக்கிறேன்.
கேள்வி:-
பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறான சிந்தனைகள்
மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எவ்வாறான முன்னெடுப்புகளை
முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:-
இவ்வாறான காட்டுமிராண்டிச் சம்பவங்கள்தான் இன்று உலகைப்
பிடித்துள்ள பெரும் பீடை. இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி தண்டனைகளை மிக
மிகக் கடுமையாக்குவதுதான். தண்டனைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
காலதாமதமின்றி மிகக் குறுகிய காலத்திற்குள் தண்டனைகளை வழங்க வேண்டும்.
இக்குற்றங்களின் கொடுரத்தை சகல தரப்பாரும் உணர்ந்து தண்டனைகளில்
மாற்றங்கள் செய்ய வேண்டும். அத்துடன் பெண்களுக்கு உரிய முறையில்
விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் நடைபெறும்
குற்றச் செயல்கள், அவற்றின் விளைவுகள், அவற்றுக்கான தண்டனைகள் பற்றி
பாடசாலைக் கல்வியிலும் இளம் சந்ததியினருக்குப் பாடம் நடாத்தப்பட
வேண்டும். இவை மூலம் நல்ல பயன் கிட்டுமென எண்ணுகின்றேன்.
கேள்வி:-
உங்கள் எழுத்து முயற்சிகளின் இலக்குகள் என்னவாக
இருக்கிறது?
பதில்:-
நான் இதுவரை காலமும் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு
இலக்கை வைத்தே எழுதப்பட்டிருப்பதாக நம்புகின்றேன். பெண்களுக்கான நீதி
வேண்டும். இஸ்லாமியத் திருமணச் சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது,
சமுகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படக் கூடாது, சீதனம் இழிவானதாக்கப்பட
வேண்டும் என்ற இலக்கோடு சமுக இடர்பாடுகள் என்பன களையப்பட வேண்டும் என்ற
நோக்கோடு சிறுகதைகளில் நான் பயணிக்கின்றேன்.
கேள்வி:-
சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து
வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் எழுதுவதிலும் அக்கரை
காட்டலாமே?
பதில்:-
இதே கேள்வியை என்னிடம் பலர் கேட்கிறார்கள். எனக்கும்
அதில் விருப்பம் உள்ளது. விரைவில் அந்த முயற்சியிலும் இறங்கலாமா என
எனக்குள்ளே நான் கேள்வி கேட்கின்றேன். இன்னும் சில மாதங்களில் "பொய்த்
தூக்கங்கள்" என்ற எனது சிறுகதை நாவலாக விரிவாகி வெளிவரலாம்.
கேள்வி:-
சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்
துறையில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள்,
பரிசுகள், விருதுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
பதில்:-
கலாபூஷண விருது அடங்கலாக எனக்கு முப்பது விருதுகள்
கிடைக்கப் பெற்றுள்ளன. பாராட்டுகள், பொற்கிழிகள் என்பவையும் கிடைக்கப்
பெற்றுள்ளன. ஆனால் நான் எனது எந்த ஆக்கத்தையும் போட்டிகளுக்கு
அனுப்புவதில்லை. எனது ஒவ்வொரு ஆக்கமும் நான் பிரசவித்த குழந்தைகள்.
இவற்றைப் போட்டிக்கு உட்படுத்திப் பெறுமதியிட்டு கொச்சைப்படுத்துவதை
நான் விரும்புவதில்லை.
கேள்வி:-
எதிர்காலச் சந்ததிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள்
யாவை?
பதில்:-
இளம் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் தடம் பதிக்க
வேண்டுமானால் முதலில் தன்னம்பிக்கை அவசியம். தோல்விகளை,
புறக்கணிப்புக்களைச் சகித்து மென்மேலும் முயற்சித்தல் அவசியம். தனது
படைப்புக்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். பெரிய இலக்கியவாதிகளை
மதித்து அவர்களின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஓரிரண்டு
ஆக்கங்களை யாத்துவிட்டு புகழையும் மாலை மரியாதையையும் எதிர்பார்க்கக்
கூடாது. கௌரவங்களை நாங்கள் தேடிப்போகக் கூடாது. இவையே எனது வாழ்வில்
நான் கடைப்பிடித்த விடயங்கள். அதனையே இக்கால இளம் எழுத்தாளர்களுக்கும்
ஆலோசனையாக வழங்குகின்றேன்.
கேள்வி:-
இலக்கியங்களில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் வகிபங்கு
எவ்வாறுள்ளது?
பதில்:-
மிக மிகக் குறைவு. ஒன்றிரெண்று தோன்றினாலும் வந்த
வேகத்தில் அவர்கள் மறைந்து கொள்கிறார்கள். காரணம் குடும்பச் சுமை,
தைரியமின்மை, பெற்றோர்களின் உடன் பிறப்புக்களின் கட்டிய கணவர்மாரின்
ஒத்துழைப்பின்மை, ஊக்குவிப்பின்னை, ஊடகங்களின் புறக்கணிப்புகள் இவையே
காரணிகளாகலாம். எனினும் பாடசாலைகளில உயர் வகுப்புகளில் கல்வி பயிலும்
மாணவிகளில் இத்தகைய இலக்கிய உணர்வுகள் உள்ளவர்களை ஆசிரியர்கள்
ஊக்குவிக்க வேண்டும். பெண்களின் வகிபாகம் குறைந்திருப்பது என்னைப்
பொறுத்தவரை மிகவும் வேதனையான விடயம்.
கேள்வி:-
எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
பதில்:-
நான் தற்சமயம் சற்று சுகவீனமடைந்திருந்த போதிலும்
இடைக்கிடை எனது சில ஆக்கங்களை பிரசுரத்திற்காக ஊடகங்களுக்கு
அனுப்புகிறேன். இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். என் எழுத்து
முயற்சிகளுக்கு எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இறைவனின்
உதவியால் இன்னும் எனது பல படைப்புக்களையும் இலக்கிய உலகிற்கு
அவ்வப்போது வழங்கலாமென்ற நம்பிக்கையுடனுள்ளேன்.
கேள்வி:-
இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?
பதில்:-
இலக்கிய உலகமென்பது பரந்தது விரிந்தது. அங்கே பாசமும்
உண்டு. பயங்கரமும் உண்டு. இதில் காலூன்ற நினைப்பவர்களுக்கு எதையும்
தாங்கும் இதயம் வேண்டும். வெல்லத் துணிந்துவிட்டால் அது வெல்லக்
கிடங்காகிவிடும். நானறிந்தவரை எந்த எழுத்தாளனும் கவலைகளால் ஹார்ட்
அட்டெக்கை அணைக்கவில்லை. கவலைகளைக் காகிதத்தில் இறக்கி வைத்தால்
இதயத்தில் சுமைகள் தேங்குவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கிய தங்கை
ரிம்ஸா முஹம்மத் உட்பட ஆசிரியர் குலாம் அனைவருக்கும் இதயபூர்வமான
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|