திருமதி. மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான
நேர்காணல்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கேள்வி:-
உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப்
பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?
பதில்:-
இலங்கையில் தென்னகத் தலைநகர் காலியில் கட்டுக்கொடை
கிராமம் எனது பிறப்பிடம். பாலர் கல்வி முதல் உயர்தரம் வரை கல்விப்
பயணத்தில் தென்னகமே கைகொடுத்தது. வசதி வாய்ப்புகள்
குறைந்திருந்தாலும் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் முன்னின்ற
குடும்பமொன்றில் பத்துப் பேரில் நான் ஆறாவது பிள்ளையாகப்
பிறந்தேன்.
கேள்வி:-
உங்களது இலக்கியப் பின்னணி குறித்து கூறுங்கள்?
பதில்:-
சிறுவயது முதல் வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவள்.
தந்தையார் வாங்கி வரும் புதினப் பத்திரிகைகளின் முதல் வாசகி நானே.
வகுப்பறைக் கற்றலில் கட்டுரை எழுதி தமிழ்ப் பாட ஆசிரியரிடம்
பாராட்டு பலமுறை பெற்றுள்ளேன். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில்
கற்கையில் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற எம்.எஸ்.ஏ. மஜீத் அவர்கள் என்
எழுத்தாற்றலை இனங்கண்டு, 'தென்றல்' என்ற காலாண்டுச் சஞ்சிகைக்குப்
பத்திராதிபராக்கினார். அவரது காலப் பிரிவிலேயே இலங்கை ஹிஜ்ரா
கவுன்ஸில் பாடசாலை மாணவரிடையே அகில இலங்கை ரீதியில் நடத்திய
கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் எனக்குக் கிடைத்தது. எனது
பௌதிகவியல் பாட ஆசிரியர், பிற்காலத்தில் தென்மாகாண விஞ்ஞானப்
பிரிவின் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற
ஏ.ஆர்.எம்.எம். நாஸிம் அவர்கள் பத்திரிகைகளில் அவ்வப்போது
பிரசுரமான எனது ஆக்கங்களைப் படித்துவிட்டு ஊக்கம் தந்தார்.
கேள்வி:-
இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு
இருந்தது?
பதில்:-
1980
களில் இலக்கிய வானில் புதுக்கவிதை வடிவம் சிறகடித்துப் பறந்த காலம்
எல்லோரையும் போல நானும் எழுதிய கிறுக்கல்களின் சில அச்சில் வராமலே
போயின. என் இலக்கிய முயற்சிகளின் தொடர்ச்சி
1980
களில் தினகரன் பத்திரிகையின் கவிதைப் பூங்கா பகுதியில்
'பெருமூச்சு' என்ற தலைப்பில் என் புதுக் கவிதையைப் பிரசுரித்து
ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு சிந்தாமணியும் எனது புதுக்
கவிதைகளை அங்கீகரித்து அரங்கேற்றியது. அந்நாளில் தினகரன் ஆசிரியர்
பீடத்தை அலங்கரித்த சகோதரர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் எனது புதுக்
கவிதைகளை மெருகூட்டி, பிரசுரமாகக் களமமைத்துத் தந்தவர் என்பதனை
நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். எனது தந்தையின் பெயர் ஹம்ஸா. எனது
ஆரம்ப கால எழுத்துலகப் பிரவேசம் கட்டுகொடை மஸீதா ஹம்ஸா என்ற
பெயரிலேயே நிகழ்ந்த வண்ணமிருந்தது.
கேள்வி:-
நீங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக்
குறிப்பிடுவீர்கள்?
பதில்:-
சாதனை என்பது பிறர் பிரமிக்கத்தக்க வகையில், பயன்பெறும்
வகையில் ஒருவரால் ஆற்றப்படும் ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடு அல்லது
சேவை என்பதே என் கருத்து. என்னைப் பொருத்தமட்டில் இலக்கியத்
துறையில் நான் சாதித்தது என்ன? என்னுடைய செயற்பாடுகள் எதனையும்
நான் சாதனையாக கருதியதில்லை.
கேள்வி:-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் நூல்கள் பலதை வெளியிட்ட
அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
பதில்:-
நானும் என் துணைவர் புன்னியாமீனும் ஆசிரியர்கள்.
கணிதமும் விஞ்ஞானமும் என் துறையாக இருக்க, வரலாறும் அரசறிவியலும்
அவர் துறையாக இருந்தது. கணவரது இலக்கிய நூல்களோடு,
இளந்தலைமுறையினருக்கும் களமமைக்கும் நோக்கில் புதிய மொட்டுகள்,
அரும்புகள், பாலங்கள் என கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுக்
கொண்டிருந்தார். கூடவே வரலாறு நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு தனது
பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முனைந்தார். எனது முதல் நூல்கூட
'விஞ்ஞான வினாச் சரம்' என்று என் தொழிற்றுறை சார்பாகவே
உருவாக்கப்பட்டது.
ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே நாமிருவரும் தரம் ஐந்து
மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை ஆரம்பித்தோம்.
1994
ஆம் ஆண்டு வரை தமிழ், கணிதம் என்ற இரு பாடங்களோடு மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
1995
ஆம் ஆண்டிலிருந்து பாட அறிவுடன் நுண்ணறிவு, பொது அறிவு என
விரிவடைந்து இரு பாகங்களாக நடைபெறத் தொடங்கியது. அதன் பிற்பாடுதான்
நாம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் நூல்கள் பலவற்றை எழுதி
வெளியிட்டோம். நாமே எதிர்பாராத அளவுக்கு அவை எமக்கு அமோக ஆதரவை
வழங்கின. இதன் காரணமாக
93
நூல்கள் எம்மால் வெளியிடப்பட்டுள்ளன.
கேள்வி:-
இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப்
போக்கு பற்றி யாது கூறுவீர்கள்?
பதில்:-
ஒரு காலமிருந்தது. பெண் எழுத்தாளர்கள் புற்றீசல் போல
பெருகி வந்து, அதில் பலர் காலப் போக்கில் காணாமற் போனோர்
பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். திருமணம், குடும்பச் சுமை,
தொழில் வாய்ப்பு போன்ற இன்னோரன்ன காரணங்கள் இவர்களை இந்த நிலைக்கு
ஆளாக்கியிருக்கலாம். முன்பெல்லாம் ஒரு ஆக்கத்தை எழுதி அதனை
தபாலிட்டுவிட்டு பிரசுரமாகியிருக்குமோ எனக் காத்திருந்து ஏமாந்து,
நாட்கள் கழிந்து பிரசுரமான பின் மிக்க மகிழ்ந்த அந்த
சந்தர்ப்பங்கள்.. இப்போது அப்படியல்ல. இன்று இலத்திரனியல்
யுகத்தில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே
இருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வெளியுலகம் சென்றடைவதற்கு
இருக்கின்ற தடைகள் மிகக் குறைவு. தரமான ஆக்கங்களை படைக்கும் பெண்
எழுத்தாளர்கள் இன்னும் உருவாக வேண்டும்.
கேள்வி:-
எழுத்துத் துறை சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று
சொல்லுங்கள்?
பதில்:-
எழுத்தாற்றல் இறைவன் கொடுத்த வரம். போர்வாளின் முனையைவிட
பேனா முனை வலிமையானது என்பார்கள். எழுதுவதற்கு விரும்பும் ஒருவர்
முதலில் எழுத்தை நேசிக்க வேண்டும். சமூகத்தை நேசிக்க வேண்டும்.
எழுதப்படும் ஆக்கங்களின் கனதியும் காத்திரமும் ஏதேனும் வகையில்
ஊடுருவி சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும்.
கேள்வி:-
உங்கள் எழுத்துக்களினூடாக எதைச் சாதிக்க வேண்டும் என்று
விரும்புகிறீர்கள்?
பதில்:-
எனது இலக்கியப் பயணத்தின் பின்னூட்டமாக என் துணைவர்
புன்னியாமீன் இருந்தார். அவரது எழுத்துக்களும் சமூக நோக்கும்
உலகின் பல பாகங்களிலும் பேசப்பட, நான் என்னால் இயன்றதைச்
செய்துள்ளேன். நான் சாதிக்க நாடியதைவிட அவரது எழுத்துலக சாதனைகளால்
நான் திருப்தியடைகிறேன்.
கேள்வி:-
இன்றைய புதிய கவிஞர்களின் வருகை பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
பதில்:-
முகநூல் - இலக்கியப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.
நூல்களை வாசிக்க விரும்பாதவர்கள்கூட முகநூலில் முகம்
புதைக்கின்றார்கள். அதி இலகுவாக களமமைத்துக் கொடுப்பதனால் முகநூல்
கவிஞர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இதனால் கவிதை என்று
ஏதோ எழுதித் தலையைச் சுற்ற வைக்கும் கவிதைகளுக்குத் தட்டுப்பாடு
இல்லை. இப்படியும் இவர்களால் எழுத முடியுமா என்று உண்மையில்
சிலருடைய கவிதைகள் பிரமிக்க வைக்கும்.
கேள்வி:-
மரபுக்கவிதை, புதுக்கவிதை குறித்த உங்கள் பார்வை என்ன?
பதில்:-
கவிதை எழுதுவது என்பது எளிமையான காரியமல்ல. நாலே
வரிகளில் நல்லதைச சொல்வதற்கு எவ்வளவோ பிரயத்தனப்பட வேண்டும்.
அதிலும் மரபுக் கவிதை படைப்போரிடம் இலக்கிய ஆளுமை அதிகமாக இருக்க
வேண்டும். நயம், நளினம் போன்றே அர்த்தமும் நிறைந்ததே மரபுக் கவிதை.
வெறும் வார்த்தைக் கோலங்கள் புதுக்கவிதையாவதில்லை. மிகவும்
எளிமையான வார்த்தைகளை மெல்லிய உணர்வுகளின் பின்னலாக வாசிப்போரைக்
கவரும் வகையில் கோர்த்துக் கருத்துச் சிக்கனமாக முன்வைப்பது
புதுக்கவிதை என்பது எனது கருத்து.
கேள்வி:-
நீங்கள் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய
புத்தகங்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? என்ன காரணம்?
பதில்:-
ஓர் எழுத்தாளன் உருவாவதே வாசிப்பில் காட்டும் தீவிர
ஆர்வத்தினால்தான். நான் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பதில்
நாட்டம் கொண்டிருக்கின்றேன். கற்கும் காலத்தில் பாடசாலை
நூலகத்திலிருந்து நாவல்களை எடுத்துச் சென்று வாசிப்பேன்.
மு.வரதராசன், அகிலன், ரமணி சந்திரன் என்று இந்தப் பட்டியல் நீளும்.
இந்திய நாவலாசிரியர்களின் நூல்களுக்கு அமோக வரவேற்பு இருந்த
காலமல்லவா? புதுக்கவிதையின் முன்னோடி மு.மேத்தா அவர்களின் கவிதைகள்
என்னை வெகுவாக ஈர்த்தவை. திக்குவல்லைக் கமால், திக்குவல்லை ஸப்வான்
இவர்களுடைய சிறுகதைகளை எப்போதும் விருப்புடன் வாசிக்கின்றேன்.
திக்குவல்லை கமால் அவர்களின் பிரதேசப் பேச்சுவழக்கு நடை எனக்கு
மிகவும் பிடிக்கும். மலையகத்தில் வாழ்ந்தாலும் நான் தென்னகத்தைச்
சேர்ந்தவளாயிருப்பது அந்த ஈர்ப்புக்குக் காரணமாகலாம். நான் எழுத
ஆரம்பித்த காலங்களில் என் துணைவர் புன்னியாமீன் சிறுகதைககள்
வாயிலாகத்தான் இலக்கியத்தில் இடம்பிடித்து வந்தார். அவரது சிறுகதை
நடை என்னை மிகவும் கவர்ந்தது. பின்னாளில் அவரது சிறுகதைகளின் நடையே
எனது சிறுகதைகளிலும் மருவியிருந்ததை மறுக்க முடியாது.
கேள்வி:-
நீங்கள் இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக்
குறிப்பிடுங்கள்?
பதில்:-
காலஞ்சென்ற புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டத்தினால்
நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் நூல்கள் அச்சுருப்பெற்றன.
அதன் நூறாவது வெளியீடான 'ஒற்றைத்தாயின் இரட்டைக் குழந்தை' கவிநூல்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியினதும், எனதும் கவிதைகள் கலந்ததொரு கூட்டு
முயற்சியாகியது. அதன் பின்னர் பாட ரீதியிலான 'விஞ்ஞான வினாச்சரம்'
எனும் வினா விடைத் தொகுப்பு ஒன்று என்னால் உருவாக்கம் பெற்றது.
துணைவருடன் இணைந்ததாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பாட
விளக்கமாகவும், பயிற்சி நூல்களாகவும்
93
நூல்கள் வெளியிடப்பட்டன. 'மூடுதிரை' என்ற சிறுகதைத் தொகுதியே எனது
தனியானதொரு இலக்கிய நூலாக அமைந்தது. அதனையடுத்து 'நல்லவனாவேன்'
என்ற சிறுவர் பாடல் நூல் கல்வியமைச்சின் கல்வி நூல் வெளியீட்டு
ஆலோசனை சபையின் அங்கீகாரத்துடன் அச்சுறுப் பெற்றது.
மற்றுமொரு சிறுகதைத் தொகுதிக்கும், சிறுவர் இலக்கியத்துக்கும்
ஆயத்தமான நிலையில்தான் என் துணைவரின் இழப்பு நேர்ந்தது. என்
துணைவரின் கடைசி இரண்டரை மாத வாழ்க்கையினை என் அனுபவங்களை ஒரு
நூலில் வடிக்க மனதில் சின்னதாயொரு தேக்கமும் குடிகொண்டிருக்கிறது.
கேள்வி:-
இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள்,
விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?
பதில்:-
பாராட்டு ஒரு மனிதனை பாராளும் அளவுக்கு இட்டுச் செல்லக்
கூடியது. எந்தவொரு சராசரி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர்
எழுத்தாக்கத்திற்கு, நூலுக்கு, இலக்கிய முயற்சிக்கு பாரபட்சமின்றி
செய்யப்படும் விமர்சனங்கள் அந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரனை
வளம் படுத்த வேண்டும். குறைகளோடு நிறைகளும் சுட்டிக்காட்டப்படுவதன்
மூலம் படைப்பாளி தன்னை புடம் போட்டுக்கொள்ள முடியும்.
விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டுமேயன்றி நாம் விருதுகளை தேடிப்
போகக் கூடாது. ஒரு படைப்பாளியில் ஏதோவொரு திறமையை இனங்கண்டதால்தான்
விருதுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. ஒரு விருதுக்காக ஒருவர்
தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தொடர்பான அத்தனை விபரங்களையும்
கொடுத்துதவுவது உரியவர் கடமை. அதற்காக தம்மைத் தாமே பீற்றிக்
கொள்ளல், விருதினைக் கேட்டுப் பெறல் என்ற குற்றச்சாட்டுக்கள்
உருவாகின்ற நிலைமை மாற வேண்டும்.
கேள்வி:-
இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக்
குறிப்பிடுவீர்கள்?
பதில்:-
கலாசார அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் அகில இலங்கை
அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் 'மரிக்க
மறுக்கும் மனிதம்' என்ற எனது சிறுகதைத் தொகுதிக்கு முதலாமிடம்
கிடைத்தது. அதன் பரிசேற்பு வைபவத்திற்கு நானும் என் துணைவரும்
சென்றிருந்தோம். அந்த வைபவத்தில் மாற்றமான ஒரு நிகழ்வு
நடந்தேறியது. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெவ்வேறாக
நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற தமிழ் சிறுகதை
சிங்களத்திலும், சிங்கள சிறுகதை தமிழிலும் விமர்சனம்
செய்யப்பட்டது. மட்டுமன்றி ஒப்பிட்டும் நோக்கப்பட்டது. இந்த
விமர்சனத்தை செய்தவர் வேறு யாருமல்ல. நாடறிந்த சிங்கள
எழுத்தாளரும், தமிழை நன்றாகப் பேசி எழுதக்கூடிய விசேட ஆற்றல்
கொண்டவருமான திருவாளர் மடுளுகிரிய விஜேரத்ன ஆவார். அவரும் எனது
துணைவரும் நெருங்கிய நண்பர்கள். எனது 'முடுதிரை' நூல் வெளியீட்டு
விழாவின் போது, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டவர். புன்னியாமீனின்
துணைவியார்தான் இந்தச் சிறுகதைக்குச் சொந்தக்காரர் என்ற விபரம்
அவருக்குத் தெரியாது. விழாவின் இடைவேளையின் போதுதான் அவர்கள்
சந்தித்து முகமன் கூறிக் கொண்டார்கள். அதன்பிறகுதான் அவருக்கு எனது
சிறுகதை அது என்பது தெரியவர மிகவும் சந்தோஷப்பட்டார். எனது சிறுகதை
மாற்றுமொழியில் விமர்சனம் செய்யப்பட்ட அந்த சம்பவம் எனக்குக்
கிடைத்த விருதினையும், பொற்கிழியையும்விட மனதுக்கு மிக்க
மகிழ்ச்சியைத் தந்தது.
கேள்வி:-
இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில்:-
வயது வித்தியாசமின்றி அலைபேசிகளை அணைத்துக் கொண்டு அலை
பாயும் எண்ணங்களோடு மக்கள் அலையும் கவியுலகத்தில் நூல்களை
வாசிப்போரின் எண்ணிக்கை அருகி வருவதை கண்கூடாகப் காண்கின்றோம்.
எதிர்காலத்தில் நூலகங்களில் பத்திரப்படுத்தப்பட்ட நூல்கள் வெறும்
காட்சிப் பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
வாசிப்பு வாழ்க்கையின் மூச்சாக வேண்டும். விலைமதிப்பற்ற
புத்தகங்கள் தூசுதட்டப்படாமல் தேக்கமடையும் நிலைமை மாற்றமடைய
வேண்டும். எனவே நல்ல நூல்களை வாசியுங்கள். நல்ல விடயங்களை
குறிப்பில் எடுங்கள். மனதிலும், அலைபேசியிலும் தரவேற்றம் செய்து
பகிருங்கள். தமது தரம் உயர வேண்டுமென விரும்பும் பெண்
எழுத்தாளர்கள் நல்ல நூல்களை அவசியம் வாசிக்க வேண்டும்.





உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|