வெ.இறையன்பு
ஐ.ஏ.எஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்......
அகில்
1.
வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகளை சேதப்படுத்துவதைக் கண்டித்து நீங்கள்
நடத்திய விழிப்புணர்வுக் கூட்டங்கள் பற்றி......
வரலாற்றுச்
சிறப்புமிக்க சிலைகளை சேதப்படுத்தக்கூடாது என்கிற விழிப்புணர்வை மூன்று
தரப்புக்களிடம் ஏற்படுத்த வேண்டியதாக இருக்கிறது. முதலில்
சுற்றுலாத்துறை பிரயாணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக சுற்றுலாவுக்கு வருகின்றவர்களை அழைத்துவருகின்ற
அலுவலர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவதாக உள்ளூர்
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது அவர்கள்
எப்படிப்பட்ட கலைப் பொக்கிசங்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும்,
அவற்றினால்தான் அவர்களது ஊருக்குப் பெருமை என்பதையும் அவர்களுக்கு
உணர்த்த வேண்டியதாக இருக்கிறது.
இதனால் முதற்கட்டமாக நாங்கள் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்தோம்.
விளம்பரங்களைப் பெருவாரியாக பத்திரிகைகளுக்குக் கொடுத்து இது குறித்த
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினோம்.
அடுத்ததாக கட்டுரைகளை எழுதி அவற்றின் மூலமும் விழிப்புணர்வை
ஏற்படுத்தினோம். மூன்றாவதாக மாநில அளவில் கருத்தரங்கை
நடத்தியிருக்கிறோம். இதுதவிர பல்வேறு துறையினரைச் சேர்ந்த அலுவலர்களை
அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தி அவர்கள் அளவிலே செய்யவேண்டிய
நடவடிக்கைகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். இந்த விழிப்புணர்வு
முகாம்களை மாவட்டம் தோறும் நடத்த இருக்கிறோம். இந்த ஆண்டு செப்டெம்பர்
27 இல் அதாவது உலக சுற்றுலா தினத்தன்று மாநிலங்கள் முழுவதுமே புராதனச்
சிற்பங்களை சேதப்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு
முகாம்களையும், விழாவின் மையக்கருத்தாக வைத்து நடத்த இருக்கிறோம்.
2.
''விருந்தினர் போற்றுதும்'' நட்பு வாகனங்கள் அறிமுகப்படுத்திய
திட்டம் பற்றிக் கூறுங்களேன்?
பொதுவாகவே சுற்றுலாப் பயணிகள் முதலில் எதிர்கொள்வது ஆட்டோ
ஓட்டுநர்களையும், ஊர்தி ஓட்டுநர்களையும் தான். அப்போது அவர்களுக்கு
ஏற்படுகின்ற அனுபவத்தை வைத்துத்தான் அவர்கள் அந்த மாநிலத்தைப் பற்றிய
ஒரு மதிப்பீட்டினை மனத்தயாரிப்புச் செய்துகொள்கிறார்கள். எனவே ஆட்டோ
ஓட்டுநர்களிடம் 'விருந்தினர்கள் போற்றுதும், விருந்தினர்கள் போற்றுதும்'
என்கிற பண்பை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்காக பல்வேறு
முகாம்களை மாநிலம் முழுவதும் நடத்தினோம். அதிலிருந்து ஆட்டோ ஓட்டுநர்களை
காவல்துறையினரின் ஒப்புதலுடன் தேர்வு செய்தோம். சுற்றுலா நட்பு வாகனமாக
செயற்படும் அவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளிடம் தர வேண்டிய
வரைபடங்களையும், ஆங்கிலப்பயிற்சிகளையும் வெளிவாரியாக பழகுவது எப்படி
என்கிற பயிற்சியையும் கொடுத்திருக்கிறோம். அவர்கள் பெயர்களையும்,
முகவரியையும் அவர்களுடைய தொலைபேசி இலக்கத்தையும் இணையத்தளத்தில்
பதிவுசெய்து அவர்களது ஆட்டோக்களை சுற்றுலாத்துறைப் படங்கள் போட்ட
ஆட்டோக்களாக மாற்றி சுற்றுலா நட்பு வாகனமாக அதை ஓடவிட்டிருக்கிறோம்.
இந்த ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் நயமாகவும், இனிமையாகவும் பயணிகளிடம்
பழகுகிற காரணத்தால் இவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது.
இதனால் மின்னஞ்சலிலும், கடித மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும்
இதைப்பற்றிய குறிப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இன்னும் சில
மாவட்டங்களிலும் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை எல்லா ஆட்டோக்களுமே சுற்றுலா நட்பு வாகனமாக மாற
வேண்டும் என்பதுதான் எமது இலக்கு. அப்படி மாறினால் தமிழகத்துக்கு வருகை
தருகின்ற சுற்றுலாப்பயணிகள், இங்கு இருக்கின்ற கோயில்களையும்,
கடற்கரைகளையும், பறவைகளையும், அருவிகளையும் அதிக நாட்கள் தங்கி பார்த்து,
ரசித்து மகிழ்ச்சியோடு செல்லுவார்கள். எவ்வளவு செலவழிக்க வேண்டுமானாலும்
சுற்றுலாப்பயணிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு
ரூபாய்க்கு கூட ஏமாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பது தான் இந்தத்
திட்டத்தின் நோக்கம்.
3.
அரசு செயலர், எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர், கவிஞர் என தங்களுக்கு
பலமுகங்கள் உண்டு. அதில் உங்களுக்குப் பிடித்த முகம் எது?
என்னைப் பொருத்தவரை மக்களுக்கு பணியாற்றுவது என்பது அரசுப்
பணியினால்தான் சாத்தியமாகிறது. அரசுப் பணியில் ஏழைகளோடும், எளியவரோடும்
பழகி அவர்களுக்காக பணியாற்றுகிறபோது கிடைக்கிற அனுபவங்கள்தான் என்னுடைய
எழுத்தாகவும், கவிதையாகவும் பரிமளிக்கின்றன. மக்களுக்குப்
பணியாற்றுகின்ற போதுதான் மனம் முதிர்ச்சியடைகின்றது. இதயம்
விசாலமடைகிறது. என் எழுத்துக்கள் மறைந்துவிடலாம். ஆனல் மக்களுக்கு
பணியாற்றிய நினைவுகள் காலந்தோறும் நினைவைக்கொண்டிருக்கும்.
அதுமட்டுமில்லாமல் அப்படி பணியாற்றுகிற வாய்ப்பு எமக்குக் கிடைத்தது
என்பதுதான் வாழ்க்கையின் பெரும் பேறாகும்.
4.
நீங்கள் எழுதியவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பு எது?
நான் எழுதிய படைப்புக்களில் ஆற்றங்கரை ஓரம் என்கிற என்னுடைய புதினம்
எனக்கு மிகவும் பிடித்த படைப்பு. நர்மதைக் கரையோரம் சில மாதங்கள் தங்கி
அங்கே இருக்கின்ற பழங்குடியினர் அப்புறப்படுத்தப்படுகின்றபோது அவர்கள்
சந்தித்த இன்னல்களை நேரில் கண்டு, அவர்களோடு பழகி, அந்த அணைக்கட்டினால்
ஏற்படுகிற பிரச்சனைகளை ஆராய்ந்து கிடைத்த அனுபவங்களையெல்லாம்
தொகுத்துதான் ஆற்றங்கரை ஓரம் என்ற அந்த நாவலைப் பதிவுசெய்தேன். அந்த
நாவல் எனக்கு நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த படைப்பு.
5.
நீங்கள் விரும்பும் எழுத்தாளர் யார்?
என் சிறுவயது முதல், வறுமை குறித்தும் சாமானிய மக்கள் குறித்தும்
அதிகமாக எழுதிவரும் ஜெயகாந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய
எழுத்துக்கள் மற்றவர்களைப் போலில்லாமல் அனுபவத்தின்பால் விளைந்ததால்
அவற்றை நான் விரும்பிப் படித்ததுண்டு. அத்தோடு 'இன்ன காரணத்தினால் தான்
பிடித்தவர்' என்று ஒரு வரையறை இல்லாமல் நல்ல எழுத்துக்களை எழுதுகிற
அனைவருடைய எழுத்துக்களையுமே நான் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
பாத்திரம் முக்கியம் அல்ல பண்டம் முக்கியம் என்பதால் பல தரப்பட்ட
எழுத்துக்களையும், புதிதாக வருகிற இளைஞர்களுடைய எழுத்துக்களையும்
படிக்கின்ற பக்குவம் எனக்கு வந்திருக்கிறது.
6.
தலைசிறந்த நூல்கள் என்று நீங்கள் கருதக்கூடிய நூல்கள் என்ற வரிசையில்............
Michelle white
என்கின்ற எழுத்தாளருடைய
“Truth of god”
என்கின்ற நூல் ஒரு தலைசிறந்த நூல்.
Kahlil Gibran
எழுதிய
“ The prophet”
என்கின்ற நூலும் ஒரு மிகச்சிறந்த நூல்தான்.
இவற்றைவிட உலக மக்கள் அனைவருமே வாசித்து, ஒவ்வொரு வரியையும் அசைபோட்டு
அதிலிருந்து ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டத்தக்க நூலாக இருப்பது
நமது திருக்குறள் என்னும் உயரிய நூல். அந்தவகையில் திருக்குறளையும்
தலைசிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.
7.
தொலைக்காட்சித் தொடர்களுக்கு மக்கள்
அடிமையாகி வருவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அது ஆரோக்கியமானது அல்ல. அவர்கள் படிக்கும் பழக்கத்தை தின்று விடுவதோடு
சிறிது சிறிதாக அவர்களுக்குள் தேவையில்லாத பழக்கங்களையும்
புகுத்திவிடுகின்றன என்பதுதான் என் கருத்து.
8.
திரைப்படத்துறை பற்றி தங்கள் கருத்து
என்ன?
திரைப்படங்களைப் பொறுத்தவரை தற்சமயம் ஆரோக்கியமான சில திரைப்படங்கள்
வரத்தொடங்கியிருக்கின்றன. அதிக செலவில் திரைப்படம் எடுத்தால்தான்
வெற்றிபெறும் என்று பணத்தை விரையமாக்காமல் குறைந்த செலவில் தரமான
படங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஈரானிய
திரைப்படங்களைப் போல தமிழில் எடுக்கமாட்டார்களா என்ற ஏக்கம் எனக்குள்
உண்டு. தற்சமயம் இளைஞர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு
வருகிறார்கள். அது மறுபடியும் 1975, 80 களில்
பாரதிராஜா மேற்கொண்ட முயற்சியைப் போல நல்ல பலன் அளிக்கும் என்று
நம்புகிறேன்.
9.
வாசிக்கும் பழக்கம் வளர்ந்துள்ளதா?
குறைந்துள்ளதா?
நிச்சயமாக குறைந்துள்ளது. தற்பொழுது பலன் கூர்ந்து வாசிக்கிறார்களே
தவிர நூலின் சுகம் கூர்ந்து யாரும் வாசிப்பதில்லை.
10.
நேர்மையாக நடப்பதில் சில இடர்பாடுகள்
வருவதை தவிர்ப்பது எப்படி?
நேர்மையாக நடப்பதில் ஆரம்பகாலத்தில் இடர்பாடுகள் வரும். நம்முடைய நேர்மை
தெள்ளத்தெளிவாக அடுத்தவர்களுக்கு தெரிந்துவிட்டால் இடர்பாடு செய்பவர்கள்
தாமாகவே விலகிக்கொண்டு விடுவார்கள்.
11. பணிப்பண்பாடு என்ற தங்களின் சிறிய நூல்
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்ற 99 நூல்கள் எப்போது வரும்?
இன்னும் ஓராண்டு காலத்திற்குள் மிகுதி நூல்களை எழுதி முடித்துவிடுவேன்.
12.
உங்கள் வாழ்க்கையின் இலட்சியம், கனவு
என்று எதைக் கருதுகிறீர்கள்?
எனக்கென்று ஒரேயொரு கனவுதான் இருக்கிறது. அந்தக் கனவு இன்றிருக்கும்
இளைஞர்கள் அனைவருமே ஈடுபாட்டுடனும், மகிழ்ச்சியுடனும் தனக்கென்று
வாழாமல் இந்த சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து வாழவேண்டும் என்றும்,
அவர்கள் அனைவரும் போலி மயக்கங்களில் இருந்து விடுபட்டு உண்மையான
மகிழ்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதும் தான் என் கனவு. அது
நிறைவேறும் என்றே நம்புகிறேன்.
|