என்.கே.ரகுநாதன் என்னும்
படைப்பாளுமை
அகில்
ஈழத்து
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான படைப்பாளிகளுக்குள் என்.கே.ரகுநாதன்
அவர்களும் ஒருவர்.
பேனா தலைகுனியும் போது சமூகம் விழிப்படையும் என்பதில் நம்பிக்கை கொண்ட
ஒரு சமூகப்போராளி.
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப்பகுதியில் உள்ள வராத்துப்பளையில் யூலை 9ம்
திகதி, 1929ம் ஆண்டு பிறந்த இவர், யூன் மாதம் 11ம் திகதி 2018ம் ஆண்டு
இயற்கை எய்தினார்.
முற்போக்கு இலக்கியவாதியான இவர், சிறுகதை, நாவல், நாடகம் என பல்வேறு
துறைகளில் ஆளுமைகொண்ட ஒருவராக விளங்கினார்.
நிலவிலே பேசுவோம், தச மங்களம் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகளையும்,
ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஒரு
பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற நாவல் நாவல் அல்ல இது ஒரு சுய
வரலாற்றுச் சித்திரம் போல இருக்கிறது என்று சொல்கின்றவர்களும் உண்டு.
சாதிய அடக்குமுறையில் மீண்டு எழுச்சிகொள்ளும் ஒரு கிராமத்தைப்பற்றி
இந்நூல் பேசுகிறது.
தனது 20ஆவது வயதில் எழுதத்தொடங்கிய இவர் கனடா வந்த பின்பும் சில
ஆண்டுகள் எழுதினார். இயற்கை எய்வதற்கு முன் சில ஆண்டுகள் இவர்
எழுதவில்லையென்றாலும் வாசகர்கள் மனங்களில் மறக்கமுடியாத ஒரு எழுத்துப்
போராளியாக விளங்குகின்றார்.
என்.கே.ரகுநாதன் பல்வேறு புனைபெயரிலும் எழுதியுள்ளார். எழிலன்,
துன்பச்சுழல், வரையண்ணல், வெண்ணிலா முதலானவை குறிப்பிடத்தக்கன. ஈழகேசரி,
பொன்னி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ஏராளமான
சிறுகதைகளை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய தச மங்களம் சிறுகதைத்தொகுப்புக்கு இலங்கைத் தேசிய
சாகித்திய விருது கிட்டியது. 1996ம் ஆண்டு இவருக்கு சாகித்திய மண்டல
பரிசு கிடைத்தாலும், என்.கே.ரகுநாதன் என்றால் எல்லோர் மனதிலும் உடனே
ஞாபகத்துக்கு வரும் படைப்பாக இருப்பது அவரின் நிலவிலே பேசுவோம்
சிறுகதைத்தொகுப்பாகும். இவரது முதல் சிறுகதைப் படைப்பான நிலவிலே
பேசுவோம் சிறுகதைத்தொகுப்புக்கு கிடைக்கவேண்டிய சாகித்திய மண்டலப்பரிசு
இலக்கிய அரசியல் காரணமாகவே தச மங்களம் சிறுகதைத் தொகுப்புக்குக்
கிடைத்தது என்று சொல்லுகின்ற விமர்சகர்களும் உண்டு. அதற்காக இரண்டு
புத்தகங்களும் ஒன்றுக்கு ஒன்று குறைந்ததென்று இல்லை.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுக்குள் தனித்துவமான ஒருவராக ரகுநாதன்
இருப்பதற்கு காரணம், இவர் சமூக முரண்பாட்டை மட்டும் சொல்லாது தான்
சார்ந்த முற்போக்கு இயக்கத்துக்குள் நிலவிய முரண்பாடுகளை நேர்மையாக
சொன்னவர் என்ற வகையிலும் குறிப்பிடத் தக்கவர். அவற்றை தனது கதையிலும்
வடித்தவர். அக்கதைதான் நிலவிலே பேசுவோம் சிறுகதையாகும்.
நிலவிலே பேசுவோம் என்ற இவரது சிறுகதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு
செய்யப்பட்டுள்ளது.
எழுத்து மட்டும் சமூகமாற்றத்தைக் கொண்டுவராது என்பதை நன்கு அறிந்து
கொண்ட ரகுநாதன், நாடத்துறையிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். கந்தன்
கருணை, ஏகலவன் ஆகிய நாடகங்களை எழுதினார். கந்தன் கருணை நாடகம்
இலங்கையில் பட்டி தொட்டியெல்லாம் போடப்பட்டு சமூதாய விழிப்புணர்வை
ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. ஏகலைவன் நாடகமும் இலங்கையில்
மட்டுமல்லாது சென்னையில் கூட கம்னியூஸ்ட் கட்சித் தலைவர் தோழர்
ஜீவானந்தத்தின் தலைமையில் போடப்பட்டது.
கந்தன் கருணை நாடகத்தை தான் எழுதியதின் பின்புலத்தைப் பற்றி அவர்
விளங்கிய ஒரு நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு சொல்கின்றார்.
'மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள் போவதற்கு எங்கள் சுந்தரலிங்கம்
எம்.பியைத் தடுத்தார்கள், அந்த சம்பவத்தின் காரணமாக எனக்கு ஏற்பட்ட மன
உணர்வுகளையும் பாதிப்பையும் கந்தன் கருணை நாடகத்தில் பதிந்துள்ளேன்'
என்கின்றார். புராண இதிகாச பாத்திரங்கள் வாயிலாக அடித்தட்டு மக்களின்
சமூகப்பிரச்சனைகள் பேசப்படும்போது அவை புதிய தரிசனத்தைக் கொடுப்பதாக
கந்தன் கருணை நாடகம் அமைந்துள்ளது என்கின்றார்.
அதிக படைப்புக்களை இவர் வெளிக்கொண்டுவரவில்லையென்றாலும் வெளிவந்த
படைப்புக்கள் கனதியான படைப்புக்களாக இருக்கிறன.
ஈழத்து முற்போக்குச் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் விளங்கினார்.
இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ;சிய சார்பாக பிளவுபட்ட
காலத்தில் க.கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், செ.கணேசலிங்கம் போன்ற
எழுத்தாளர்களும் யாழ்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும்
சீனச்சார்பு சார்ந்தவர்களாக விளங்கினார்கள். என்.கே.ரகுநாதனும்
அவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
இவர் காதல் திருமணம் செய்துகொண்டவர். தனது காதல் திருமணம் எப்படி
நடந்தது என்று நண்பர்களுடன் சொல்லி மகிழ்கின்ற ஒருவராகவும் இவர் இருந்து
இருக்கிறார். அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த கல்கி இதழில்; இவரது
திருமணப்படம் வெளிவந்திருக்கிறது என்றால் இந்தியாவரையில் இவரது புகழ்
ஓய்கியிருந்தது என்பதற்கு இது சாட்சியம் ஆகும்.
அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை மட்டும் எழுத்தில் கொண்டுவந்தது
மட்டுமல்லாதது. தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்ற
இனப்பிரச்சனையைப்பற்றியும் தனது சிறுகதைகளில் வடித்துள்ளார்.
உதாரணத்துக்கு 'நெருப்பு', 'நானும் நாங்களும்' ஆகிய சிறுகதைகளைச்
சொல்லலாம்.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுக்குள் ஒருவராக விளங்கும்
என்.கே.ரகுநாதன் ஈழத்து சிறுகதை எழுத்தாளர்களுக்குள் தவிர்க்க முடியாத
ஒருவராகவும் காலா காலத்துக்கு மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கிறார்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|