இந்த பிரபஞ்சத்தை ஆண்ட பிரபஞ்சன்!

அகில்

 

மிழ் இலக்கிய உலகம், பல இலக்கிய ஆளுமைகளைத் தந்திருக்கிறது. அத்தகைய ஆளுமைகளுள் ஒருவர் தான் எழுத்தாளர் பிரபஞ்சன்.

புதுவையில் பிறந்து தனது எழுத்தாளுமையினால் உலகெங்கிலும் உள்ள பல இலட்சம் தமிழ் வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

ஒரு மரத்தின் வேர் மண்ணுக்குள்ளே எவ்வளவு தூரம் செல்லுமோ அதைப்போலத்தான் பிரபஞ்சன் தான் எடுக்கின்ற கருவின் இயல்பை முடிந்தவரை வாசகர்களுக்கு கொண்டுசெல்வதில் ஏனைய படைப்பாளிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார். சகமனிதர்களின் வாழ்வியல் யதார்த்தத்தை எளிமையாகவும் ஆழமாகவும் தனது கதைகளில் வடிப்பதில் வல்லவர். எழுத்தாளராக மட்டுமல்லாது மனித நேயம் மிக்க ஒரு மனிதராகவும் பலராலும் மதிக்கப்பட்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்திலிங்கம். கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூரில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் ஆசிரியர் பணியை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளரானார். இந்த ஆசிரிய அனுபவமே இவருள் மென்மைத் தன்மையை விதைத்தது என்பது பலரதும் கருத்து. பெண்மையை மதிப்பவராக, பெண்களுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் பேசுபவராக பிரபஞ்சனின் கதைகள் அவரை அடையாளப்படுத்துகின்றன.

முழுநேர எழுத்தாளராக இருப்பதில் இருக்கும் சிரமங்களை புன்னகையுடன் எதிர்கொண்டவர். குமுதம், ஆனந்தவீகடன், குங்குமம் ஆகிய இதழ்களில் பணிபுரிந்தவர். இவரது முதல் சிறுகதையான 'என்ன உலகமடா' 1961ம் ஆண்டு பரணி இதழில் வெளிவந்தது. கவிதை எழுதுவதில் ஆரம்பித்த இவரது எழுத்துப் பயணம் சிறுகதை, நாவல் என்ற எழுத்துப் பரப்பிலேயே காலூன்றி நிலைத்தது.

சுயமரியாதை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவர். இவர் எழுதிய 'வானம் வசப்படும்' நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளை இவர் தனதாக்கிக்கொண்டவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட படைப்புக்கள் வெளியாகியுள்ளன. வானம் வசப்படும், மானுடம் வெல்லும், மகாநதி போன்ற நாவல்களும், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் என்ற சிறுகதைத்தொகுப்பும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவை.

எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தாது இளம் படைப்பாளிகளை ஊக்கிவிக்கும் முகமாக பல பயிலரங்குகளையும் இவர் நடத்தியுள்ளார்.

மாணவர்கள் பலர் இவரைப்பற்றியும், இவரது படைப்புக்களைப்பற்றியும் ஆய்வு செய்துள்ளார்கள்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபஞ்சன் தனது 74வது வயதில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி 2018ம் ஆண்டு காலமானார் என்ற செய்தி பெரிய இடி என என் இதயத்துக்குள் இறங்கியது. என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுக்குள் ஒருவர் பிரபஞ்சன் என்பது மட்டுமல்லாது என்னை செதுக்கிய எழுத்தாளரும் அவரே!.

பிரபஞ்சனுடனான சந்திப்பு:

எட்டு வருடங்களுக்கு முன், தமிழ்ஆதர்ஸ்.கொம்மின் சார்பாக நேர்காணல் ஒன்றுக்காக அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பயம்வேறு என்னை தொத்திக்கொண்டது. காரணம் பெரிய எழுத்தாளராயிற்றே நேர்காணல் தருவரா? என்பதே அது.

மாறாக அவர் நேர்காணல் தந்தது மட்டுமல்லாது, அன்பாகவும் பேசினார். சிறிய அளவில் செய்துவிட்டு கர்வத்தோடு இருக்கின்ற எழுத்தாளர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். அவர் என்னை யாரோ ஒரு சிறிய எழுத்தாளர் என்று தட்டிக்கழிக்காது நேர்காணலைத்தந்தார்.

பிரபஞ்சனை நேரடியாக சந்தித்தது, 2010ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கனடா எழுத்தாளர் இணையம் நடத்திய இலக்கியச்சந்திப்பில் ஒரு உணவகத்தில் வைத்து அவரை முதல் முதல் சந்தித்தேன். அமைதியும் ஒரு புன்னகையும் எப்போதும் அவர் முகத்தில் குடிகொண்டிருந்தது. சிறுகதைகள் பற்றி நிறைய விடயங்களை அன்று எம்முடன் அவர் பகிர்ந்துகொண்டார். அந்தக் கூட்டத்தின் மத்தியிலும் என்னை அடையாளம் கண்டு தனியே அழைத்துப் பேசினார். எனது நலனை அக்கறையோடு விசாரித்து அறிந்துகொண்டது மட்டுமன்றி தனது அன்றைய நாளின் துயர்நிறைந்த செய்திகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டார். இந்தப் பயணத்தின் பிரிவில் தான் பிரபஞ்சனுக்கு தனது மனைவியின் மரணச் செய்தியும் காத்திருந்தது.

2011ம் ஆண்டு நான் எழுதிய கூடுகள் சிதைந்தபோது சிறகதைத்தொகுப்பு சென்னையில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டபோது எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்புபேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிரபஞ்சன்: என் வாழ்வில் சந்தித்த உன்னதமான மனிதர்களுக்குள் ஒருவர். இன்று நாம் அவரை இழந்தாலும் அவருடைய படைப்புக்களில் அவர் எப்போதும் எம்மோடு வாழந்துகொண்டே இருப்பார்.
அவருடைய ஆம்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

அகில்.
 

 

 


 

 

                  
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்




 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)