ராவணன்
(Raavanan)

திரைவிமர்சனம்: (வித்யாசாகர்)

நடிகர்கள்:   விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருதிவிராஜ், பிரியாமணி, கார்த்திக், பிரபு, ரஞ்சிதா        
இசை:       ஏ.ஆர். ரகுமான்
ஒளிப்பவு:   மணிகண்டன்
இயக்கம்:    மணிரத்னம்

தயாரிப்பு:   மணிரத்னம்

சொல்ல வார்த்தைகளே இல்லாத படைப்பு. யாரையும் விட்டுப் புகழ வாய்ப்பில்லை. மொத்தத்தில் மணிரத்தினம் அவர்களுக்கே அத்தனை பாராட்டுக்களும் என திரும்பினால். இசையிலிருந்து; ஒளிப்பதிவிலிருந்து; இடம் தேர்விலிருந்து; அலங்காரத்திலிருந்து; நடிப்பிலிருந்து; வசனத்திலிருந்து ... அப்பப்பா... காலம் மாறிப் போச்சின்னு சொல்லி குத்துப் பாட்டு போட்டால் தான் படம் ஓடும் என்பவர்களுக்கு புத்தியிலுரைக்கும் படம்.

பெருசா மாடன் படம் எடுத்துவிட்டேனென பீத்திக் கொள்பவர்கள் மணிரத்தினத்திடமிருந்து பாடம் பயின்றுக் கொள்ளலாம். வெளியில் கேட்டிடாத புன்னகையாக ஒருபுறம் புத்தியை பிரண்டாமல் உள்நுழைகிறது படம். மறுபுறம் நம் இன்ப தமிழில் கலப்படமில்லா பிரம்மாண்ட படைப்பாக புருவம் உயர்த்த வைக்கிறது. ஒடுக்கப் பட்ட மக்களின் கர்ஜனையை நடிப்பில் பிரதிபலித்து அம்மக்களுக்காய் இறக்கம் கொள்ள செய்கிறார் விக்ரம்.

அழகான பெண்ணை பார்க்கையில் மதி மயங்கும் மனிதனின் கட்டுப் பட்டிடாத இயல்பு குணமும், அதையும் மீறி தனக்குரியவள் அவளில்லையென ஒதுங்கி நின்று காயப் படுத்தாமல் கொச்சையுறாமல் அன்பினை மட்டுமே தனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் யதார்த்தத்தையும், அதை உணர்ந்து; மறுக்காமலும் ஏற்காமலும் தன்னிலை மாற்றிக் கொண்டிடாமலும் 'அவனை புரிந்து; அனுதாபத்தை அன்பாக மனதில் நிறைத்துக் கொள்ளும், 'ஒரு பெண்ணின் உணர்வும் விக்ரம் ஐஸ்வர்யா ராயினாலும், ஒளிப்பதிவாலும், இசையாலும், இயக்கிய திறனாலும் மிக அழகாக உணர்த்தப் பட்டுள்ளது படத்தில்.

ஒரு பக்க நியாயமாக மண்ணில் புதைந்துள்ள வரலாற்றை; யாரையும் உறுத்தாமல் சொல்கிறது படம். காட்டில் வாழ்ந்த வீரப்பனின் கோபத்திற்கு நியாயத்தையும், உலகிற்கு தெரியாமல் போன அவர் செய்த நல்லவைகளையும் படம் நினைவு படுத்துகிறது. யாரோ ஒரு (காவலாளியை) லட்சிய இளைஞனை அழைத்து அவன் ஒரு குற்றவாளி அவனை பிடிப்பதே நம் தேசத்திற்கு நல்லதென தன் பக்க தவறுகளை மறைத்துஇ 'ஒரு நல்லவனை வைத்தே நல்லவனையும் அழிக்கும் அரசியலை நினைவுறுத்துகிறது படம்.

பாடலை பற்றி நிறைய சொல்லலாம். வைரமுத்துவை இது தான் வைரமுத்து எனும் பாடல் வரிகள். ஆட்டமும் பாட்டமும் கும்மாளமுமாக வாழ்ந்தாலும் இடையே நீதிக்கும் நியாயத்திற்கும் அன்பிற்கும் கட்டுப் பட்டு எதற்குமே குறையாதவன் தமிழன் எனும் பாங்கை ஆங்காங்கே காட்சிகளிலும் நிறைய பாடலிலும் உணர வைக்கிறார்கள் படக் குழுவினர். பாடலும் இசையும் வரியும் படத்தின் முழு பலம். அவசியத்திற்குரிய இடத்தின் பாடல்கள் அல்லது பாடல்களுக்கேற்ற சலிப்பில்லாத கதையமைப்பு ரசனை குறையாமல் படம் பார்க்க வைக்கிறதெனலாம். உசுரே போகுதே.. உசுரே போகுதே.. பாடல் கேட்கையில் உயிர் மென்று தின்கிறது பாடல் வரிகள் அத்தனையும்.

சொல்லவும் பாராட்டவும் வாழ்த்தவும் நிறைய உள்ளது ராவணா படத்தில். குறிப்பாக இசையும், பாடல் வரிகளும், ஒளிப் பதிவும், பாத்திர தேர்வும் சிறப்பு. ஒரு ஆங்கிலக் கலப்பில்லாத ஆங்கிலப் பட தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வு. அந்த 'யாத்தே...' அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டது. படம் பார்த்து விட்டு வெளியேறுகையில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் அளவிற்கு தமிழன் எத்தனை சுத்தமான உயர்வான மனதை கொண்டுள்ளானென,தமிழரை நினைத்து பெருமை கொள்ள வைக்கிறது படம்.

கள்வரே.. கள்வரே.. பாடலில் ஒரு தம்பதியரின் முந்திய வாழ்க்கையை அழகிய பாடலும் நடனமுமாக காட்டி முடிக்கும் உத்திக்கு இயக்குனரை பாராட்டுவதா, ஐஸ்வர்யா ராயை பாராட்டுவதா அல்லது திரைக்கு பின்னால் இயங்கிய இப்பாடலுக்கான நடன ஆசிரிய சொபனாவை பாராட்டுவதா என வியக்க வைக்கிறது.

இசைப்புயல் படத்திற்கென உழைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் அவர் மனதை போலவே படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. இசை இசை இமாலய அளவு உயர்ந்துள்ள ரசனை மிக்க இசையின் நகர்வுகளே படமெங்கும் வியாபித்து நம் இதயம் பிடித்து கசக்கிப் பிழிகிறது. இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொள்கிறது.

ஒளிப்பதிவு பெட்டி திமிறி சுழன்று காட்சிகளை அள்ளி கண்களில் புகுத்தாமல், ரசனையில் மனம் உள்வாங்கிக் கொள்ளும் விதமும், அதை இசையில் கோர்த்தெடுத்த விதமும், அதற்கு முகபாவம் காட்டும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயும்.. பிரபு கார்த்திக் பிரிதிவி இன்னும் பிற அத்தனை பேரும் அப்பப்பா... இது தான் மணிரத்தினமென சொல்லாமல் சொல்கிறது படம்.

ஒவ்வொரு பாத்திரமும் படத்தை இரண்டு மூன்று நாளைக்காக நினைக்க வைக்கும் என்பது உறுதி. மொத்தத்தில்... வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவல் படித்து முடித்து சில நாட்கள் கடலில் கிடந்த கதையாய், ராவணின் ஒழுக்கத்தை ஒரு பக்க நியாயத்தை எண்ணி அத்தனை பேரின் உழைப்பிற்குள்ளும் நனைகிறது மனசு!!

வெளியில் தெரியாமல் திரைக்குப் பின் உழைத்த, இதர பல படைப்பாளிகளுக்கு, இத்திரைப்படக் குழுவிற்கு பாராட்டவும் வாழ்த்தவும்.. உலகளாவி நிறைய பேர் இருப்பார்கள்.. நன்றி சொல்லவே நான் கடமை பட்டேன்!.


 

 

vidhyasagar1976@gmail.com