தமிழ் இலக்கியச் சாலை

கி.வா.ஜகந்நாதன்

"அவனைப் பார்: தானே எல்லாம் சம்பாதித்து இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறான். ஒரு பத்து வருஷ காலத்துக்குள்ளே வீடென்ன, நில மென்ன, சொத்தென்ன, சுதந்தரமென்ன - எல்லாம் சம்பாதித்துக் கொண்டான். எனக்கு நன்றாகத் தெரியும்: எங்கள் அப்பாவிடம் ஐந்து ரூபாய் வேண்டு மென்று கெஞ்சிக் கேட்டு நின்றது. எல்லாம் அதிருஷ்டம் ஐயா! அதிருஷ்டம்!"

"அதிருஷ்டத்தை நான் நம்பமாட்டேன். அவ னுக்குப் பிழைக்கிற வழி தெரியும். பணம் சம்பாதித்துச் சேர்க்க வழி தெரியும். ஒவ்வொரு கணமும் எடுத்த காரியத்தைச் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையிலே அவன் மூழ்கியிருந்தான். இடை விடாமல் உழைத்தான். அந்த உழைப்பினுடைய பலனை இப்போது அநுபவிக்கிறான்."

இந்த மாதிரியாகப் புதுப் பணம் படைத்த செல்வனைப்பற்றிப் பொது ஜனங்கள் விமரிசனம் செய்வது நம் காதில் எத்தனையோ தடவை விழுந்திருக்கின்றது வேறு ஒருவகை மனிதனைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்கிறோம். மேலே சொன்ன பணக்காரனுக்கு நேர்விரோதமான நிலை படைத்தவன் அவன்.

"அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் இருபது எருமை கறக்கும். முப்பது பசுமாடு பால் வெள்ளம் பொழியும். தேனாறு பாலாறு என்று பேச் சுக்குச் சொல்கிறோமே; உண்மையாக அப்படித்தான் இருந்ததாம். அந்த ஜமீந்தாருக்குத் திடீரென்று ஆயிரம் இரண்டாயிரம் வேண்டுமென்றால், இரண்டாம் பேருக்குத் தெரியாமல் எங்கள் தாத்தாவிடம் வருவார். கணீரென்று சப்திக்கும் வெள்ளி ரூபாய் ஆயிரம் வாங்கிக் கொண்டு போவார். ஒரு சீட்டு நாட்டு வேண்டுமே. ஒன்றும் இல்லை. வேளைக்கு நூறு இலை விழுமாம். எங்கள் வீட்டுச் சமையலறையைப் பார்த்தாலே அவர் காலத்து அன்னதானச் சிறப்புத் தெரிய வருமே! கொடியடுப்பு எங்கள் வீட்டில் இல்லை; எல்லாம் கோட்டை யடுப்புத்தான் !"

"அப்படி இருந்த குடும்பமா இப்படி ஆயிற்று? உங்களுக்கு இப்போது நாலு குழந்தைகளை வைத்துக் கொண்டு காப்பாற்றும் சக்தி இல்லையே!"

"அதற்கு என்ன செய்கிறது? நான் பண்ணின பாவம். இன்று கோடீசுவரனாக இருக்கிறானே. அவன் எங்கள் வீட்டுக் காரியக்காரனாக இருந்தவனுடைய பேரன்; தெரியுமா?"

புதிய பணக்காரன், பழைய பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவன் என்று இரண்டு வகையினர்களையே அதிகமாக உலகத்தில் பார்க்கிறோம். எங்கோ சில பேர் மாத்திரம் பரம்பரையாகப் பொருளைப் போற்றிப் பணக்காரன் மகன் பணக்காரனாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

புதுப் பணக்காரனைவிடப் பழம் பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவனை யாராவது கவனிப்பார்களா? மாட்டார்கள். புதுப்பணக்காரனுடைய ஊக்கமும் உழைப்பும் உலகத்தில் பாராட்டப்படுகின்றன. பழம் பணக்காரனோ, தன் தாத்தா காலத்துக் கதையைப் பேசிக் கொண்டு காலங்கழிக்கிறான். புதிய செல்வம் சேர்ப்பதிலோ, பழைய செல்வமோ பூமியோ தனக்குத் தெரியாமல் மறைந்திருந்தால் அவற்றைக் கண்டெடுப் பதிலோ நாட்டம் செல்வதில்லை. அவனால் யாருக்கு என்ன பிரயோசனம்?

மேல் நாட்டாருடைய இலக்கியச் செல்வத்தையும் நம் நாட்டு இலக்கியச் செல்வத்தையும் நோக்கும் பொழுது இந்த இருவகை மனிதர் நிலைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன. சில நூறு ஆண்டுகளுக் குள்ளே அவர்கள் பெரு முயற்சியினால் பலபல துறைகளில் முன்னேறி விட்டார்கள். கலைச் செல்வத்தைக் குவித்து விட்டார்கள். நாமோ பழம் பெருமை பேசிக் கொண்டு,மேல்நாட்டினர் மரத்திலே தொத்திக் கொண்டுதொங்கிய காலத்தில் நாம் மாளிகையிலே மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தோம் என்று பெருமிதம் அடைகிறோம். இன்று கட்டாந் தரையில் கல்லும் முள்ளும் உறுத்தப் புரளுவதை அப்போதைக்கு மறந்து விடுகிறோம்.

செல்வம் பழையதானாலும் புதியதானாலும் செல்வந்தான். மேல் நாட்டினர் குவித்த கலைச் செல்வத்துக்கு உலகமே பெருமதிப்பை அளிக்கிறது. நாமும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிறர் செல்வத்தைக் குறை கூறுவது தவறு; அவர்கள் செல்வத்தைக் கண்டு மகிழ்வதோடு நின்று, நம் செல்வத்தை அடியோடு மறப்பது அதைவிடத் தவறு. "நமக்குச் செல்வம் இருந்தது. இப்போதும் புதையலாக இருக்கிறது" என்று சொல்லும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். அந்தப் புதையல்களை அகழ்ந் தெடுத்துக் கொணர்ந்து, "இதோ பாருங்கள் தங்கக் கட்டி; இதோ பாருங்கள் நவ மணிகள்" என்று எடுத்துக்காட்டும் ஆண்மையும் ஆர்வமும் நமக்கு வேண்டும்.

 

மனிதனுடைய சரித்திரத்தை ஆராயும் ஆராய்ச்சிக்காரர்கள் உலகத்தில் முதல் மனிதன் இன்ன இடத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கூறுகிறார்கள். எல்லோரும் ஒரே இடத்தைக் கூறவில்லை. ஒருவர் மத்திய ஆசியாவில்தான் முதல் மனிதன் வாழ்ந்தான் என்றால், மற்றொருவர் வேறோரிடத்தைக் குறிக்கிறார். இப்படித் தீர்மானித்துள்ள இடங்களில் தமிழ் நாடும் ஒன்று. சில அறிஞர்களுக்குப் பழங்கால மனிதன் தமிழ்நாட்டில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது. எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியாக ஒரு முடிவு. ஆராய்ச்சியில் இலேசிலே வராது. ஆகவே, தமிழ் நாட்டில் முதல் மனிதன் வாழ்ந்தான் என்பது சந்தேகமில்லாமல் நிச்சயமாகவில்லை என்று வைத்துக்கொண்டாலும், முதல் மனிதன் வாழ்க்கையைக் குறிக்கும் பழைய சின்னங்கள் இங்கே உள்ளன என்ற உண்மைய ஒப்புக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் மிகப் பழங்கால முதலே மனிதர் வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி இந்த ஆராய்ச்சியினால் வெளியாகிறது.

இலக்கியம் மனிதனுடைய சிருஷ்டி. அறிவின் எல்லை ஓரளவு உயரத்தை எட்டினால், தினந்தோறும் வாழ்க்கைக்கு உதவுகிற வெறும் பேச்சாக நின்ற பாஷையில் இலக்கியம் மலர்கிறது. சரித்திரத்துக்கு எட்டாத காலம் முதல் மனிதன் வாழ்ந்து வநத தமிழ் நாட்டில், அவனது வாழ்க்கை பேச்சு நிலையினும் உயர்ந்து, இலக்கியச் செல்வத்தைச் சேமிக்கும் நிலைக்கு வந்த காலமும் மிகப் பழங்காலமாகத்தான் இருக்க வேண்டும். அக்கால முதல் இலக்கியம் தோன்றி வளரந்து வருகிறது. அந்த இலக்கியச் செல்வங்களில் பல அழிந்தும் விடுகின்றன.

இப்போது நமக்குக் கியைக்கும் சாட்சிகளை வைத்துக்கொண்டு பார்த்தாலே தமிழன் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான் என்று தெரிய வரும். தமிழ்ச் சமுதாயப் பிரயாணத்தில் அவன் வகுத்துக்கொண்டே வரும் இலக்கியப் பெருவழியை நாம் கவனித்தோமானால் எத்தனையோ வகையாக அது படர்ந்து வருவதைக் காணலாம்.

முதற்சங்கம், இடைச் சங்கம் என்ற பகுதிகளில் இலக்கியச் சாலை நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ஏதோ ஓர் அழகிய செல்வ மாளிகை மாத்திரம் புலனா கிறது. அதற்குத் தொல்காப்பியம் எந்று பெயர். அப்பால் கடைச் சங்கம் என்ற பகுதியில் தமிழ் இலக்கியப் பாதையின் இருமருங்கும் இயற்கை யெழில் தவழும் சோலைகளைப் பார்க்கின்றோம். ஆணும் பெண்ணும் காதல் புரிவதைக் காண்கின்றோம். பிரிவில்லாமல் மக்கள் வாழும் ஒற்றுமைக் காட்சிகள் தெரிகின்றன. வீர இளைஞர்கள் அறத்தைக் காக்கப் போர் செய்வதைக் காண்கிறோம். அந்தப் பகுதியின் இறுதியிலே சில காவியமாளிகைகள் வானை நோக்கி நிமிர்ந்து நிற்கின்றன.

பிறகு கோயிலகளைக் காண்கிறோம். திருமாலும் சிவபெருமானும் அன்பும் அறிவுமுடையவர்களுடைய தோத்திரங்களில் மகிழ்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். ஜைன பௌத்தப் புலவர்கள் கட்டிய மாளிகைகளும் கண்ணில் படுகின்றன. சில சில காவியங்களாகிய மாளிகைகளில் ஒருசார் கோயிலும் இணைந்து காணப் படுகின்றன.

கம்பன் கட்டிய பெருமாளிகை அதோ இன்றும் மாசுமறுவின்றி ஐம்புலனுக்கும் விருந்தளித்துக் கொண்டு நிற்கிறது. சிறு சிறு கட்டிடங்கள், இடிந் தும், புகையடைந்தும் நிற்கின்றன. பிற மதத்தினரை அடித்த ஆயுதங்களை உள்ளே மறைத்து வைத்திருக் கும் சில கட்டிடங்கள், புராணங்கள் என்ற பெயரோடு விளங்குகின்றன.

இதற்குமேல் பாதை கரடுமுரடாக இருக்கிறது. சில இடங்களில் குழிகள் யமகமென்றும் திரிபென்றும் பச்சைச் சிங்காரமென்றும் பணக்காரன் புகழென்றும் பேர் படைத்த கல்லும் முள்ளும் காலை உறுத்துகின்றன. எப்படியோ பொறுமையோடு இந்தப்பகுதியைக் கடந்து வந்து விட்டோம். இதோ பாரதி மண்டபம் கண்ணைக் குளிர்விக்கிறது. வெறிச்சென்று கண்ணைத் துன்புறுத்திக் காலைப் புண்ணாக்கும் இடத்தைத் தாண்டி வந்த நமக்கு இந்த மண்டபம் எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. இதில் உட்கார்ந்து பார்ப்போம். இப்போதுதான் கடந்து வந்தோமே, அந்தப் பகுதிதான் நமக்குத் தென்படுகிறது.

முதலிலிருந்தே பிரயாணம் செய்தவர்களுக்கு இந்த இடைவெளிக்குப் பின்னாலே கலை மாளிகைகளும் தென்றல் வீசும் பொழில்களும் இருப்பது தெரியும். திடீரென்று இந்த மண்டபத்தில் அமர்ந்து பார்க்கிறவர்களுக்கு முன்பாதை முழுவதும் கல்லும் முள்ளுமாகவே தோற்றும். அந்தக் கல்லு முள்ளுப் பாதைக்கு முன்னால் நல்ல வழி, அழகிய வழி இருக்கிறதென்று சொன்னால்கூட அவர்கள் நம்புவதில்லை. "அதெல்லாம் பழங்கதை!" என்று அடித்துப் பேசுகிறார்கள்.அவர்களுக்குப் பொறுமையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் தமிழ் இலக்கியச் சாலையின் அடிமுதல் எத்தனை வளங்கள் குலுங்குகின்றன என்பதை அறிய முடியும். தமிழன் சரித்திரம் எவ்வளவுக்கு எவ்வளவு பழமை யென்று தெரிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவனது இலக்கியச் செல்வமும் சிறந்ததென்பது தெரியவரும்.

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)