அழகின் வகை

கி.வா.ஜகந்நாதன்

இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அதிகமாகக் கதைகளைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரு பது வருஷங்களுக்கு முன்பு இவ்வளவு மிகுதியாகச் சிறு கதைகள் தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. உல கத்திலேயே சிறு கதை புதிய இலக்கிய வகையாக விளங்குகிறது. இப்பொழுது தமிழ் நாட்டில் சிறு கதை எழுதாத எழுத்தாளர் அரியர். சிறு கதை வராத பத்திரிகையும் இல்லை.

நாலு வாக்கியங்களை எழுதக் கற்றுக்கொண்ட இளைஞர்கள் சிறு கதை எழுத உட்கார்ந்து விடுகின்ற னர். ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்புகின்ற னர். அது திரும்பி வந்தால் வேறொரு பத்திரிகைக்கு அனுப்பிப் பார்க்கிறார்கள். "யார் யார் கதைகளையோ போடுகிறார்கள். நம் கதையைப்போடமாட்டோம் என் கிறார்கள். எல்லாம் தயவு தாக்ஷிண்யத்தில் நடக்கிற வேலையே ஒழிய மதிப்பறிந்து பத்திரிகை போடுவ தாகத் தோன்றவில்லை." என்று தமக்கு உண்டான சலிப்பில் முடிவு கட்டி விடுகிறார்கள்.

அந்த இளைஞர்கள் சற்றுக் கதைகள் எழுதிப் பழகிய எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்துத் தம் கதையைக் காட்டினால் அதில் உள்ள குறையை உணர்ந்து கொள்ளலாம். சிறு கதை சிறு கதையாவதற்கு ஏதோ ஒரு 'டெக்னிக்' வேண்டுமென்று எழுத்தாளர் சொல்வதைக் கேட்பார்கள்.

சிறு கதையின் இலக்கணத்தைத்தான் 'டெக்னிக்' என்று சொல்லுகிறார்கள். 'உத்தி' என்று தமிழில் அதை இப்போது வழங்குகிறார்கள். "சிறு கதை நன்றாக இருக்கிறது" என்று ரசிக்கும்போது அதனுடைய உத்தியை அவ்வளவாக நினைப்பது இல்லை. அது நன்றாக இல்லை என்ற அபிப்பிராயம் வரும்போது தான் "ஏன்?" என்ற கேள்வி எழுகின்றது. அதன் பிறகு, "உத்தி இல்லை" என்ற சமாதானம் தோன்று கிறது.

இப்படியே இலக்கிய வகைகளில் அறிவினால் அநுபவிப்பதற்குரிய ஒவ்வொன்றிலும் அந்த அநு பவத்துக்குக் காரணமான உத்தி அமைந்திருக்கிறது. காவியமாக இருந்தால் அதன் உத்தியை எடுத்துச் சொல்வதை 'காவிய விமரிசனம்' அல்லது "அலங்கார சாஸ்திரம்" என்று சொல்கிறோம். செய்யுளாக இருந் தால் "யாப்பிலக்கணம்" என்று சொல்கிறோம்.

பொருள் ஒன்று இருந்தால் அதனைப் பிற பொருள்களினின்றும் வேறு பிரித்து அறிவதற்குரிய சில பண்புகள் அதற்கு இருக்கும். அந்தப் பண்மைக் குணம் என்றும் பண்பையுடைய பொருளைக் குணி என் றும் வட மொழியில் கூறுவர். மொழி என்னும் பொருளுக்குக் குணம் உண்டு. அந்தக் குணத்துக்குத் தான் இலக்கணம் என்று பெயர்.

குணியும் குணமும் தனித்தனியே பிரிந்து இருப் பதில்லை. ஆனாலும் பேச்சு நிலையில் குணி இது என்றும், குணம் இதுவென்றும் சொல்கிறோம். ஆராய்ச்சி யில் வேறு பிரிக்கிறோமே யல்லது பொருள் வேறு பண்பு வேறாக வெட்டுவதில்லை.

ஒரு அழகியிருக்கிறாள். "தாமரைமலர் போன்ற முகத்தில் முல்லை யரும்பு போன்ற நகை முகிழ்க்கை யில் தோன்றும் எழில் வெள்ளத்திற்குக் கரை போடு வார் யார்!" என்று ஒருவர் சொல்கிறார். அந்தப் பெண் ணின் அழகிலே அவர் ஈடுபட்டவர் என்பதை அவர் பேச்சே வெளியிடுகிறது. அவர் தாம் அநுபவித்த காட்சியை வார்த்தைகளால் சொல்லும்போது முகத்தை யும், நகையையும், எழிலையும் வேறு வேறாக்கிச் சொல் கிறார். அப்படிச் சொல்வதனால் அவற்றை அந்த லாவண்ய உருவத்திலிருந்து பிய்த்தெடுத்துக் காட்ட வில்லை. பொருளை அப்படியே முழுமையில் அநுபவித் ததில் ஓரளவுதான் இன்பம் உண்டு. தனித் தனியே விரிந்த நிலையில் அழகுப் பகுதிகளை ஆராயும்போது அவருடைய ரசாநுபவம் விரிகிறது. அதைத் தனித் தனியே பிரித்துச் சொல்கிறார். அழகியின் அழகைப் பல பகுதிகளாக்கிச் சொல்கிறார். அவர் அவளுடைய லட் சணத்தைப்பற்றியே சொல்கிறார். அவளைப்பற்றிச் சொல்லவில்லை. 'அவள் என் மனைவி; இன்னார் மகள்; அவள் பெயர் இன்னது' என்று சொல்லவில்லை. பொருளாகிய அழகியின் இலக்கணமாகிய அழகைப் பற்றி அவர் சொல்கிறார். அவர் சொல்லும் இலக் கணம் நமக்கு இனிமையாகத்தான் தோன்றுகிறது.

தமிழ் மகளின் அழகை இலக்கண நூலாசிரியர் கள் சொல்லுகிறார்கள். 'அழகு' என்ற பொருளை யுடைய 'லட்சணம்' என்னும் சொல்லே, 'இலக்கணம்' என வழங்குகிறது. பழைய காலத்தில் இலக்கணம் என்று சொல்வதில்லை. இயல் என்றும் மரபு என்றும் சொல்லி வந்தார்கள். இயல் என்பது இயல்பு; பண்பு என்னும் அர்த்தத்தைக் கொண்டது. மரபு என்பது சம்பிரதாயம் என்ற பொருளை உடையது.

தமிழ் மகளின் இயல்பாகிய அழகைப் பழைய காலமுதல் புலவர்கள் எவ்வாறு கண்டு ரசித்தனர் என்பதையே இலக்கணம் சொல்கின்றது.

அழகைப்பற்றிக் கூறும் நூல் இலக்கணம் என் னும்போது நண்பர்கள் சிரிக்கிறார்கள். 'இலக்கணமா அழகைப்பற்றிய நூல்? வெகு அழகுதான்!' என்று ஏளனம் செய்கிறார்கள். 'அழகையுடைய அழகியினிடம் எனக்குக் காதல் உண்டு. ஆனால் அவளுடைய அழ கைப்பற்றி எனக்குக் கவலை இல்லை' என்று சொல்கிறார் கள். உண்மையில் அவர்களுக்கு அந்த அழகியிடம் காதல் இருந்தால் அவள் அழகைப்பற்றிய செய்தி யிலும் விருப்பம் இருக்கும். ஒன்று, அவர்களுடைய காதல் போலிக் காதலாக இருக்க வேண்டும். அல்லது அழகைப்பற்றிய அந்த விவரணம் போலியாக இருக்க வேண்டும். எது போலி என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

இப்போது ஆங்கிலக் கல்வியின் பயனாக இலக்கிய விமரிசனம், கவிதை ஆராய்ச்சி என்ற துறைகள் வந் திருக்கின்றன. அவற்றிலே தமிழ் அன்பர்கள் ஈடுபடு கிறார்கள். கம்ப ராமாயணத்தை நேரே படிக்க அஞ்சு கிறார்கள்.ஆனால் கம்ப ராமாயணத்தைப் பற்றிய விமரிசனங்களை ரசிக்கிறார்கள். இந்த விஷயத்தில் பொருளைவிடப் பொருளின் பண்பைச் சிந்திப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அந்த விமரிசனம் என்பது என்ன? அதுவும் இலக்கணந்தான்.

எழுத்திலக்கணம் முதலியவை மிகவும் நுணுகி நுணுகிச் சொல்லும் விமரிசனமாக இருப்பதனால், அதற்கு முன் கடக்கவேண்டிய பல படிகளைத் தாண் டாமல் அங்கே வந்தால் கஷ்டமாக இருக்கிறது. இக்காலத்தில் இலக்கணம் என்றால் அருவருப்பு உண்டாவதற்கு அதுவே காரணம்.

மரத்தைக் காண்பதற்கே யோசிக்கிறோம். மரத்தை அதன் அழகிய தோற்றத்தினால் ஒரு விதமாகப் பார்த் தாலும், மேலே கிளையாராய்ச்சியும், கொம்பு ஆராய்ச்சி யும் நிகழ்த்தப் பொறுமை இருப்பதில்லை. மொழியின் இலக்கணத்தை ஆராயும் விஞ்ஞானிகளாகிய புலவர் கள் கொம்புக்கும் போயிருக்கிறார்கள். அதற்கு மேலும் இலை நரம்பு முதலிய பகுதிகளையும் ஆராய்ந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் இலக்கணம் என்றால் எழுத்தையும் சொல்லையும் ஆராய்வதோடு நின்று விடும். இது பிற பாஷைகளில் வழக்கம். தமிழில் பொருள் ஆராய்ச்சி யையும் மொழியிலக்கண வரம்புக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து, சொல் என்ற சப்த உறுப்புகளோடு நின்று விடுவனால் வியாகரணத் துக்கு வடமொழியில் சப்த சாஸ்திரம் என்ற பெயர் வழங்குகிறது. அந்தப்பெயர் தமிழ் இலக்கணத்துக் குப் பொருந்தாது. சப்தத்தைப் பற்றிய ஆராய்ச்சி யோடு சப்தத்தாற் குறிக்கப் பெறும் அர்த்தமாகிய பொருளைப்பற்றியும் தமிழ் இலக்கணம் ஆராய்கிறது.

மொழி விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்ற தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார். அந்த மூன்று பகுதிகளிலும் பல கிளைகள் உண்டு. அவற்ரின் அமைதியும் பெயர்களும் மிகப் பழங்காலந் தொட்டே தமிழில் வழங்கி வருகின்றன. தொல்காப்பியர் புதிய பெயர்களை அமைக்க வில்லை. ஆனாலும் அவற்றை வகுத்துச் சொல்லும் முறைவைப்பிலும் விரிவாகச் சொல்ல வேண்டிய செய்திகளிலுமே அவர் தம் சொந்த அறிவைப் பயன்படுத்தினார்

பழைய காலந் தொடங்கி இலக்கண மரபுகள் இருந்தன என்பதற்கு அவர் தம் நூலில் அங்கங்கே, "என்று புலவர்கள் சொல்வார்கள்" என்னும் பொருள் பட 'என்ப' 'என்மனார்' என்னும் சொற்களை வழங்குவதே தக்க சாட்சியாகும்.

தொல்காப்பியத்தில் ஆரம்பச் சூத்திரத்திலே இந்த "என்ப" வருகின்றது.

 

எழுத்தெனப் படும்

அகரம் முதல னகர இறுவாய்

முப்பஃது என்ப

 

என்பது முதல் சூத்திரம். இது எழுத்திலக்கணத்தைச் சொல்லும் எழுத்ததிகாரத்தின் முதலில் வருவது.

அடுத்தபடியாகச் சொல்லின் இலக்கணத்தைச் சொல்வது சொல்லதிகாரம். அங்கும் முதலில், 'பழம் புலவர்கள் இவ்வாறு கூறுவார்கள்" என்று ஆரம்பிக்கிறார்.

 

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே

 

என்பது ஆரம்பச் சூத்திரம்.

 

பொருளிலக்கணத்தை விரிப்பது பொருள் அதி காரம். அங்கும் 'பண்டையோர் நெறி இது' என்பதை மறவாமல் சொல்லுகிறார்.

 

கைக்கிளை முதலாம் பெருந்திணை இறுவாய்
முற்படக்
கிளந்த எழுதிணை என்ப

என்பது பொருளதிகாரத்தின் முதற் சூத்திரம்.

இவையன்றி அங்கங்கே, "புலவர்கள் இவ்வாறு சொல்வார்கள்" என்று குறிக்கும் சூத்திரங்கள் பல இத்தனையும், தொல்காப்பியர் தான்தோன்றித் தம்பிரானாக நூல் இயற்றியவர் அல்ல என்பதையும், பழைய மரபையும் நூல்களையும் ஆராய்ந்தவர் என்பதையும் தெளிவாக்கும்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுகளை உடையது.

ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது சிறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை இயல் என்று சொல்வர். 'இலக்கணச் செய்திகள் இப்படி ஒன்பது இயல் என்ற கட்டுப்பாட்டில் அடங்குமா?' என்ற கேள்வி எழலாம். இலக்கணச் சூத்திரங்கள், மனனம் செய்வதற்குரியன என்பது அக்காலத்தார் கொள்கை. ஒரு வரையறை இருந்தால் எளிதில் மனனம் செய்யலாமென்பது கருதியே ஒன்பது ஒன்பது இயல்களாக வகுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகி


மொத்தம்
1610 சூத்திரங்கள் அடங்கிய நூல்

தொல்காப்பியம்; 27 இயல்களும் மூன்று அதிகாரங் களும் அமைந்தது.

*

இந்த அரிய பெரிய இலக்கண நூலுக்கு அவ்வக் காலத்தில் இருந்த புலவர்கள் உரை எழுதினார்கள். பழைய உரை இருந்தாலும் தம்முடைய காலத்துக்கு விளக்கம் போதாதென்று கருதிப் பின்னே வந்த புலவர்கள் புதிய உரைகளை எழுதினார்கள். மிகப் பழங்காலத்தில் வழங்கிய உரைகளைப்பற்றிய செய்தி கள் நமக்குக் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கும் உரைகளுள் பழையது இளம்பூரணர் உரை. அவர் மூன்று அதிகாரத்துக்கும் உரை எழுதியிருக்கிறார்.

அவருக்குப்பின் பேராசிரியர் என்பவர் நூல் முழுவதுக்கும் உரை வகுத்தார். அது முழுவதும் இப் போது கிடைக்கவில்லை. சில சில பகுதிகளே கிடைத் திருக்கின்றன. அவருக்குப்பின் நச்சினார்க்கினியர் தொல் காப்பியம் முழுவதற்கும் உரை எழுதினார். அவர் உரையிலும் பொருளதிகாரத்தின் பெரும் பகுதிக்கு உரியது இப்போது கிடைக்கவில்லை.

சொல்லதிகாரத்துக்கு மாத்திரம் தனியே சில புலவர்கள் உரை எழுதியிருக்கின்றனர், சேனாவரையர் என்பவர் எழுதிய உரை புலவர்களால் விரும்பிப் படிக்கப்பெறுவது. கல்லாடர், தெய்வச்சிலையார் என்ற இருவருடைய உரைகளும் உண்டு. இவற்றையன்றி வேறு சில உரைகளும் வழங்கி வந்திருக்க வேண்டு மென்று தெரிகிறது.

தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத் துக்கும் சிவஞான முனிவர் மிக விரிவாக உரையெழுதி யிருக்கிறார். எழுத்ததிகாரத்திற் சில சூத்திரங்களுக்குப் பல வருஷங்களுக்கு முன் இருந்த அரசஞ்சண்முகனார் என்ற புலவர் உரை எழுதியிருக்கிறார்.

**********************

மொழியைப்பற்றிய தத்துவங்களைப் பிறமொழி களோடு ஒப்பிட்டு ஆராயும் மொழிநூல் (பிலாலஜி) என்பது நம் நாட்டில் இல்லை. ஆங்கில அறிவினால் வந்த நன்மைகளுள் மொழி நூலாராய்ச்சி ஒன்று. இலக்கண நூல்களை இயற்றினவர்கள் பரம்பரையாக வந்த மரபை வைத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ற சில மாற்றங்களைப் புகுத்தி நூல் செய்தார்கள். அந்த இலக்கணங்களில் சமாதானம் காணமுடியாத சில பகுதிகள் உண்டு. அவற்றை அப்படியப்படியே கொள் வதையன்றி வேறு வழி இல்லாமல் இருந்தது. ஆனால் மொழி நூலாராய்ச்சியைக் கொண்டு பார்த்தால் அப்படி விளங்காத பகுதிகளுக்கும் விளக்கம் காணலாம்.

இப்போது மொழி நூலறிவு வாய்ந்த சில அறி ஞர்கள் தொல்காப்பியத்துக்கு உரை எழுதி வருகிறார் கள். தமிழிலக்கியத்தில் தேர்ந்த பயிற்சி. தமிழிலக் கணங்களில் ஆழ்ந்த அறிவு. தமிழ் நாட்டு வழக்கில் நல்ல அநுபவம் பிற பாஷைகளில் வேண்டிய அள வுக்குப் பயிற்சி, மொழி நூலில் நுணுகிய ஆராய்ச்சி இத்தனையும் படைத்தவர்கள் தொல்காப்பியத்துக்குப் புத்துரை வகுக்கப் புகுந்தால், 'கண்டறியாதன கண் டோம்' என்று வியப்பதற்குறிய நிலை உண்டாகும்.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)